ADVERTISEMENT

பாசிச பாஜக ஒழிக என்றால் தேசத்துரோக குற்றமா?

06:47 PM Sep 04, 2018 | Anonymous (not verified)

பாஜகவுக்கு எதிராக கருத்துத் தெரிவித்தாலே கைது செய்ய வேண்டும் என்று பாஜகவினர் கூறுவது வழக்கமான காரியமாகிவிட்டது. தமிழ்நாடு அரசாங்கமும் மத்திய பாஜக அரசாங்கமும் மக்களின் விருப்பங்களுக்கு மாறான பல காரியங்களை தொடர்ந்து செயல்படுத்துகிறது. மக்களுடைய எதிர்ப்பை காவல்துறையைக் கொண்டு ஒடுக்கும் நடவடிக்கையை தொடர்கிறது.

ADVERTISEMENT



சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாஜக தலைவர் தமிழிசை பயணித்திருக்கிறார். அவருடன் பயணித்த சோபியா என்ற ஆராய்ச்சி மாணவி, 'பாசிச பாஜக ஒழிக' என்று கோஷமிட்டிருக்கிறார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இறங்கிய தமிழிசை அந்த மாணவியுடன் படு மோசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அந்த மாணவி தனது பேச்சுரிமை என்று கூறியதையே தவறு என்று கூறுகிறார்.

பேச்சுரிமை என்றதால்தான் அந்த மாணவியின் பின்புலம் குறித்து சந்தகேம் வருவதாக தமிழிசை கூறியிருப்பதால், உரிமைக்காக போராடுகிறவர்கள் அனைவரும் தீவிரவாத பின்னணி கொண்டவர்கள் என்ற முடிவுக்கு பாஜக போயிருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. சமீபத்தில்தான் மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் சதி செய்ததாக ஹைதராபாத்தைச் சேர்ந்த வரவர ராவ் உள்ளிட்ட 5 இடதுசாரிச் சிந்தனையாளர்களை மத்திய அரசு கைது செய்தது. அவர்களை சிறையில் அடைக்க நீதிமன்றமே மறுத்து விளக்கம் கேட்டிருக்கிறது.

இந்நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ஒருவர் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷம் போட்டிருக்கிறார் என்றால், அவருடைய ஆத்திரத்துக்கு பின்னணி என்ன என்று தமிழிசை பார்த்திருக்க வேண்டுமே தவிர பள்ளிக்கூட பிள்ளைகளைப் போல சின்ன விஷயத்தை பூதாகரமாக்கி, போலீஸ் கைது என்கிற அளவுக்கு போயிருக்க வேண்டியதில்லை.

ADVERTISEMENT



தனது ஊரை நாசப்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமூகவிரோதிகள் என்று கூறி கேவலப்படுத்திய பாஜகவை பாசிச பாஜக என்று சோபியா கோஷம் போட்டிருக்கிறார். இதை எளிதில் கடந்து சென்றிருக்கலாம். அல்லது, இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று அறிவுரை கூறி பிரச்சனையை முடித்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் தமிழிசையின் சகிப்புத் தன்மையை பாராட்டியிருப்பார்கள். ஆனால், ஒரு மாணவிக்கு எதிரான தமிழிசையின் இந்த நடவடிக்கை அவருடைய பதற்றமா, மத்திய அரசு இருக்கிறது என்ற ஆணவமா? என்று விவாதிக்கிற நிலையை உருவாக்கிவிட்டது.

2011 தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாகக் கூட வரமுடியவில்லை. தேர்தல் முடிவுகளை கொண்டாடிய அதிமுகவினர் கலைஞர் வீட்டு முன் வெடி போடுகிறார்கள். கலைஞருக்கு இனிப்புத் தரவேண்டும் என்கிறார்கள். கீழே சத்தத்தைக் கேட்டு இண்டர்காமில் விசாரித்த கலைஞர், நான்கு பேரை மட்டும் மேலே வரச்சொல்லி, அவர்களை உட்காரவைத்து, லட்டு எடுத்துக் கொள்கிறார். பிறகு, அந்தப் பகுதியில் உள்ள பழைய அதிமுகவினர் சிலரை விசாரிக்கிறார். கடைசியாக, அந்த அம்மாவைப் பார்த்தீங்கன்னா என்னோட வாழ்த்துக்களையும் சொல்லிருங்கய்யா என்று அனுப்பி வைக்கிறார்.

இதுதான் அரசியலில் சகிப்புத்தன்மை என்பதற்கு உதாரணம். கலைஞரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள தமிழிசை முன்வர வேண்டும். தமிழிசையோ அந்த மாணவியை கைதுசெய்யும்படி புகார் கொடுக்கிறார். பாஜகவின் இன்னொரு தலைவரோ, அந்த மாணவிக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்கிறார். அவர்களுடைய பதற்றம் மக்களுக்கு வெளிப்படையாகவே தெரிகிறது.



ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வாட்ஸாப்பில் பேசிய துணை நடிகை நிலானியை நீலகிரி வரை தேடிச்சென்று கைது செய்கிறார்கள். மக்கள் அதிகாரம் என்ற அமைப்பின் உறுப்பினர்கள் என்பதை மட்டுமே காரணமாகக் கொண்டு, திருநெல்வேலியைச் சேர்ந்த தந்தை மற்றும் 2 மகன்களை தேசப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தனர். மீத்தேன் வாயு எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற வளர்மதியை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஒரு ஆவணப்படம் எடுத்ததற்காக வழக்கறிஞர் திவ்யபாரதியை கொடூரமாக மிரட்டினார்கள். அவருடைய வீட்டை ரெய்டு செய்தனர். பாஜகவுக்கு எதிராக பேசுகிறவர்கள் அனைவரையும் ஆண்ட்டி இண்டியன் என்கிற அளவுக்கு மோசமான நிலையை உருவாக்கினார்கள்.

சமீபத்தில் சேலம் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வழியில் குறுக்கிட்டதற்காக 7 பேரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். எட்டுவழிச் சாலை என்ற ஏழை விவசாயிகளின் நிலத்தை அபகரிக்கும் திட்டத்துக்கு எதிராக குரல் கொடுக்கிற எல்லோரையும் கைதுசெய்து சிறையில் அடைத்து மிரட்டும் போக்கு நீடிக்கிறது.

அதேசமயம், ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்களில் பணிபுரியும் பெண்களை படுமோசமாக விமர்சனம் செய்துவிட்டு, நீதிமன்றத்தின் கண்டனங்களை அலட்சியம் செய்துவிட்டு, போலீஸ் பாதுகாப்பிலேயே சுற்றிய எஸ்.வீ.சேகரையும், பெரியார் சிலை குறித்தும், கவிஞர் கனிமொழி குறித்தும் கடுமையான கருத்தை தெரிவித்த எச்.ராஜாவுக்கு எதிராக பல்வேறு காவல்நிலையங்களில் புகார் கொடுத்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் தவிர்த்ததை மக்கள் மறக்கவில்லை. நாட்டில் கலவரத்தை தூண்டும் வகையில் தனிப்பட்ட வகையிலும், அரசியல்ரீதியாகவும் கருத்துத் தெரிவிக்க பாஜகவினருக்கு மட்டும்தான் உரிமை இருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி நீண்டகாலம் நீடிக்காது என்பதை பாஜகவினர் எப்போது உணர்வார்களோ தெரியவில்லை.

மத்திய பாஜக அரசு மீது டெல்லியிலிருந்து சென்னை வரை மக்கள் கோபம் அதிகரித்து வருகிறது. அடுத்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. அந்த தோற்றத்தை மாற்ற மோடியை கொல்ல யாரோ சதித்திட்டம் தீட்டியிருப்பதாக ஒரு செய்தியை வெளியிட்டார்கள். தமிழ்நாட்டிலோ அரசாங்கத்தைக் கவிழ்க்க சமூகவிரோதிகள் சதி செய்வதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

ஆனால், மொத்தத்தில் மத்திய பாஜக மற்றும் மாநில அதிமுக அரசுகளுக்கு எதிராக மக்களின் கோபம் நீருபூத்த நெருப்பாக இருக்கிறது. அதன் சாட்சியே சோபியாக்களின் முழக்கம் என்பதை பாஜகவும் அதிமுக அரசும் புரிந்துகொள்ள வேண்டும். அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஒரு மாணவியே கைது நடவடிக்கைக்கு பயப்படாத நிலை இருக்கிறது. உண்மையை உணராமல் மக்களை அடக்கி ஆண்டுவிடலாம் என்றால், மிகப்பெரிய எழுச்சியாக வெடித்தே தீரும்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT