Skip to main content

சாத்தான்குளம் சம்பவம்... அன்று முதல் இன்றுவரை....!!!

ஜூன் 19:

சாத்தான்குளம் அரசடி தெருவை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ்(58), அவரது மகன் பென்னிக்ஸ்(31) ஆகியோரை, விசாரணைக்கு அழைத்து செல்கின்றனர் சாத்தான்குளம் போலீஸார். (கடையை அடைக்க சொல்லும்போது வாக்குவாதம் செய்தனர் என்பது புகார்) ஆனால், அவர்கள் இருவரும் போலீஸார் அழைத்தபோது, எவ்வித வாக்குவாதமும் செய்யவில்லை. ஜெயராஜ் போலீஸ் வாகனத்தில் ஏறிச் சென்றார். அவரது மகன் கடையை அடைத்துவிட்டு, பின்னர் இருசக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு செல்கிறார். பக்கத்து கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் தெளிவாக பதிவாகி உள்ளது.

 

 The Sattankulam incident ...

 

ஜூன் 20:

நள்ளிரவில் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையின் மருத்துவர் வெண்ணிலாவிடம் மருத்துவச் சான்று வாங்கிய போலீஸார், சாத்தான்குளம் நீதிபதியிடம் ஆஜர்படுத்தி, பின்னர் கோவில்பட்டி சிறையில் அடைத்துள்ளனர்.

ஜூன் 22:

கோவில்பட்டி கிளைச்சிறையிலிருந்த பென்னிக்ஸுக்கு இரவு 1 மணியளவில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக சிறைக்காவலர்கள், உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர் மாடசாமியின் உதவியுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அன்றைய தினத்திலே மருத்துவ சிகிச்சையின்போது உயிரிழந்துவிட்டார். அன்றிரவே பென்னிக்ஸின் தந்தை ஜெயராஜிற்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகக்கூறி, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

 

 The Sattankulam incident ...

 

ஜூன் 23:

அதிகாலை அதாவது ஜூன் 23-ந்தேதி தந்தை ஜெயராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார். விசாரணைக் கைதிகளாக இருந்த தந்தை, மகன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இருவருடைய சடலமும் பிரேத பரிசோதனைக்காக நெல்லை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தனது கணவர் மற்றும் மகனின் உடலை மருத்துவ நிபுணர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடக்கோரி, ஜெயராஜின் மனைவி ஜெயராணி தொடர்ந்த வழக்கில் மூன்று மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யவும் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசனை நேரில் சென்று விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் ஐகோர்ட் மாண்பமை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு உத்தரவிட்டது. பின்பு இந்த அமர்வே தாமாகவே முன்வந்து, இந்த வழக்கை விசாரிப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. வழக்கு மறுநாள் விசாரணைக்கு வந்தது.

ஜூன் 24:

கடையை அடைக்க சொல்லும்போது போலீஸாருடன் “வாக்குவாதம் செய்து ஜெயராஜூவும், அவரது மகன் பென்னீக்ஸூம் கீழே விழுந்து புரண்டதால் ஊமைக்காயம் ஏற்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் 2 பேரும் இறந்துவிட்டதாக” அறிக்கை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டார். முதல்வரின் நிவாரணத் தொகை தங்களுக்கு வேண்டாம் என ஜெயராஜின் குடும்பத்தினர் மறுத்ததோடு, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

 

 The Sattankulam incident ...

 

ஜூன் 25:

3 மருத்துவர்களின் முன்னிலையில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரின் உடல்களும், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்றைய தினம் மாலை சொந்த ஊரில் இருவரது உடல்களும் அடக்கம் செய்யப்பட்டது. திமுக எம்.பி.கனிமொழி, திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர், ஜெயராஜ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். திமுக சார்பில் ஸ்டாலின் அறிவித்த ரூ.25 லட்சத்திற்கான காசோலையை அப்போது அவர்கள் வழங்கினர். அன்றைய தினம் அதிமுகவும் தங்கள் தரப்பில் ரூ.25 லட்சம் தருவதாக அறிவித்தது. அரசு சார்பில் அறிவித்த ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று குடும்பத்தினரிடம் வழங்கினார்.

ஜூன் 26:

ஜெயராஜ், பென்னிக்ஸ் தம்பதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு செய்தனர். கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

ஜூன் 27:

சாத்தான்குளம் வியாபாரிகள் இருவரும் காவல்நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டனர் என்பதை உறுதி செய்யும் வகையில், அந்த காவல் நிலையத்தின் போலீஸ் நண்பர் குழுவில் பணியாற்றும் நபர், அவரது நண்பருடன் பேசும் தொலைபேசி உரையாடல் சமூக வலைதளங்களில் வெளியானது. இருவரையும் கோவில்பட்டி சிறைக்கு அழைத்து சென்ற வாகன ஓட்டுனரும் இதை உறுதிபடுத்தினர். இருக்கை முழுவதும் ரத்தம் உறைந்திருந்தது என அவர் கூறியது, ஊடகங்களில் செய்தியாக வெளியானது.

 

 The Sattankulam incident ...

 

ஜூன் 28:

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பான வழக்கை, உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரிக்கிறது. நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ஜூன் 29:

ஜூன் 29-ந்தேதி திங்கட்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. “அரசு கொள்கை முடிவு எடுத்துவிட்டு, எங்களிடம் அனுமதி கேட்க தேவையில்லை என்று கடிந்துகொண்ட நீதிபதிகள், சிபிஐ இந்த வழக்கை பொறுப்பில் எடுக்கும் முன்னர், தடயங்களை அழிக்கும் ஆபத்து இருப்பதாக தெரிவித்தனர். சிபிஐ பொறுப்பேற்கும் வரை, சிபிசிஐடி போலீசுக்கு இந்த வழக்கை மாற்றுவதாக அறிவித்தனர். சிபிசிஐடிக்கு மாற்றினாலும், இந்த வழக்கின் புலன் விசாரணையை கண்டிப்புடன் கண்காணிப்போம்” என்றும் தெரிவித்தனர்.

இதுஒருபுறம் இருக்க, சாத்தான்குளத்தில் விசாரணை நடத்திட சென்ற கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கு, அங்குள்ள போலீஸார் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. “குறிப்பாக கூடுதல் காவல் துணை காவல் கண்காணிப்பாளர் குமார், சாத்தான்குளம் டிஎஸ்பி பிரதாபன், மாஜிஸ்திரேட்டுக்கு குறைந்த பட்ச மரியாதை கூட செலுத்தாமல், விசாரணைக்கு இடையூறு செய்துள்ளனர். ஜி.டி எனப்படும் பொது நாட்குறிப்பை கேட்டபோது, சக காவலர்களை ஒருமையில் அழைத்து, ‘அதைக் கொண்டுவா, இதைக் கொண்டு வா...’ என்று அதட்டும் தொனியில் கூறிக் கொண்டு இருந்தார். அங்கிருந்த காவலர் மகாராஜன் ‘உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுடா’ என என் காதுக்கும் கேட்கும் வகையில் என் முதுகிற்கு பேசினார். தலைமை காவலர் ரேவதி, வியாபாரிகள் இருவரையும் விடிய விடிய லத்தியால் அடித்தது உண்மை என வாக்குமூலம் அளித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் போலீஸார் செய்த இடையூறு காரணமாக என்னால் விசாரணையை தொடமுடியவில்லை” என்று ஐகோர்ட் பதிவாளருக்கு இ-மெயில் மூலம் புகார் அளித்தார்.

இதை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக பதிவு செய்து விசாரித்த மாண்பமை நீதிபதிகள், சாத்தான்குளம் காவல் நிலையத்தை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தனது கட்டுப்பாட்டில் எடுக்க உத்தரவிட்டனர். சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் குமார், பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோரை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டதோடு, 3 பேரையும் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டனர். சாத்தான்குளம் சமூக திட்ட பாதுகாப்பு தனி தாசில்தார் செந்தூர் ராஜன், சாத்தான்குளம் காவல் நிலையத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டார்.

ஜூன் 30:

மறுநாள் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, குமார், பிரதாபன் ஆகியோர் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்தனர். மகாராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர். “மன அழுத்தத்தில் நீதிபதியிடம் அப்படி பேசிவிட்டதாக...” காவல்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அதை ஏற்காத நீதிபதிகள், தனித்தனியாக வழக்கறிஞரை நியமித்து வழக்கை எதிர்கொள்ள உத்தரவிட்டனர். இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பால அருண்கோபலன் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டார். அவருக்கு பதிலாக விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார் தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டார். (இவர் ஏற்கனவே குட்கா முறைகேடு வழக்கில் சிக்கியவர்) இதற்கிடையே, காலையில் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்த குமார் நீலகிரி மாவட்டத்திற்கும், பிரதாபன் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டனர். சாத்தான்குளம் டிஎஸ்பியாக கள்ளக்குறிச்சியில் பணியாற்றிய ராமநாதன் நியமிக்கப்பட்டார்.

 

 The Sattankulam incident ...

 

ஜூன் 30-ந்தேதி மாலை மீண்டும் சாத்தான்குளம் சென்ற மாஜிஸ்திரேட் பாரதிதாசன், தலைமை காவலர் ரேவதி, நிலைய எழுத்தர் பியூலாவிடம் 3 மணிநேரம் விசாரணை நடத்தினார். இதற்கிடையே, உயர்நிதிமன்ற உத்தரவுப்படி வழக்கு, சிபிசிஐடி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. டிஎஸ்பி அனில்குமார் வழக்கின் கோப்புகளை பெற்றுக் கொண்டார்.

 

 The Sattankulam incident ...

 

ஜூலை 01:

சிபிசிஐடி ஐஜி சங்கர் சாத்தான்குளம் சென்று விசாரணை நடத்தினார். ஜெயராஜின் மனைவி மற்றும் மகளிடம் நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்த அவர், வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் மாற்றம் செய்யப்படும் என்றார். அதன்படி, கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கையில் மாற்றம் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள். ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் தலைமை காவலர்கள் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதுஒருபுறம் இருக்க மாஜிஸ்திரேட் பாரதிதாசனும் தனது விசாரணையை தொடர்ந்து வருகிறார். ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோரை சிறைக்கு அனுப்ப உடல் தகுதி சான்று வழங்கிய மருத்துவர் வெண்ணிலாவை நேரில் அழைத்து விசாரித்தார். இவர், 15 நாளில் மருத்துவ விடுப்பில் சென்றார். இருந்தாலும் சம்மன் அனுப்பி அழைத்து விசாரித்தார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்