Skip to main content

“காவல்துறைக்கு பெருமை சேர்த்த காவலர் ரேவதி! நியாயம் பிழைக்க, நீதிதேவதை தான் கதி!” -எஸ்.எஸ்.சிவசங்கர்

sathankulam lockup death

 

“சாத்தான்குளம் கொலை வழக்கின் குற்றவாளிகள் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்ற முறையில் ஒரு புறம் அவமானம் என்றாலும், காவலர் ரேவதி தைரியமாக வழக்கில் அளித்துள்ள சாட்சியம் காவல்துறைக்கு பெருமை சேர்க்கிறது.

தைரியமாக சாட்சி சொல்லி இருந்தாலும், பெரும் பயத்தோடே இருக்கிறார் ரேவதி. அதை சாட்சி சொன்ன அன்றே நீதிபதி பாரதிதாசன் அவர்களிடம் தெரிவித்துள்ளார். அது நீதிபதியின் விசாரணை அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. பயத்தின் காரணமாக, தன் பெயரை பொது வெளியில் தெரிவிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் அவர். 

ஆனால் முக்கிய வழக்கின் சாட்சி என்ற முறையில், அவர் பெயர் நீதிமன்ற ஆவணங்களில் இடம் பெற வேண்டிய சூழல். நீதிமன்ற ஆவணம் பொது ஆவணம் என்ற வகையில் வெளிவந்து விட்டது. பெயர் வெளியில் தெரிந்தது அவரது பாதுகாப்புக்கு ஆபத்து, இருப்பினும் நீதிமன்ற ஆணைப்படி அவரது வீட்டிற்கு காவல் போடப்பட்டுள்ளது.

அவரது கணவர் சந்தோசம், தன் மனைவியின் நிலைபாட்டிற்கு ஆதரவாக நிற்பது ஆறுதல். வேலை போனாலும் பரவாயில்லை, உண்மையை சொல்வோம் என உறுதியாக தெரிவிக்கிறார். உயர்நீதிமன்ற நீதிபதிகளும், காவலர் ரேவதியை அலைபேசியில் தொடர்பு கொண்டு, தைரியம் அளித்துள்ளனர்.

காவலர் ரேவதி, ஒரு மாத விடுப்பு கோரி, அதுவும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கிய சாட்சி காவலர் ரேவதிதான் என்பதால், அவருக்கு எல்லாவிதமான பிரச்சனைகளும் வரும். நேரடியாக இல்லை என்றாலும் கடும் நெருக்கடிகள் வரும். அவரை பாதுகாப்பது நீதிமன்றத்தின் கடமை.

காவலர் ரேவதியின்  நேர்மையான நிலைபாட்டிற்காக, அவரது விருப்பம் அறிந்து, காவல்துறையிலிருந்து வேறு துறைக்கு மாற்றி அவருக்கு பணி அளிக்க வேண்டும். பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட அலுவலகத்தில், (உதாரணத்திற்கு மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் போல) பணி வழங்கி பாதுகாக்க வேண்டும்.

இது வழக்கு முடியும் வரை அல்ல, அவரது பணி காலம் முழுமைக்கும். வழக்கு முடிந்த பிறகும், அவருக்கு அச்சுறுத்தல்கள் தொடரலாம். காரணம், வழக்கில் குற்றவாளிகளாக உள்ள ஒவ்வொருவரின் முன்வரலாறும் அப்படி இருக்கிறது.

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தன் சொந்த மருமகளை வரதட்சணைக்காக கொலை செய்ய முயற்சித்தார் என்று தேனி, வைகை அணை காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதாம். அவரது துறை அனுபவத்திற்கு, வழக்கை எப்படியும் திசை திருப்பும் ஆற்றல் உள்ளவராக இருப்பார்.

எஸ்.அய். ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் இருவரது கடந்தகால காவல்நிலைய தாக்குதல் வரலாறுகள் அச்சமூட்டுகின்றன. தினம், தினம் புதிதாக செய்திகள் வருகின்றன.

உலகமே உற்று நோக்கும் நேரத்திலேயே டி.எஸ்.பி., நீதிபதியை மிரட்டும் உடல்மொழியை வெளிப்படுத்தினார். ஒரு காவலர் அவமானப்படுத்தினார் என்றால், மற்ற பிரச்சனைகள் தலைதூக்கி, ஊடக கவனம் இந்த வழக்கின் மீது குறையும் நேரத்தில், இவர்கள் தங்கள் திறமையை காட்டுவார்கள். வழக்கை தோற்கடிக்க எல்லா முயற்சியையும் எடுப்பார்கள். 

இந்த இரட்டை கொலை வழக்கில் உயர்நீதிமன்ற அழுத்தத்தாலும், எதிர்கட்சிகள் நெருக்கடியாலும், மக்கள் கொந்தளிப்பாலும், தற்போது கொலைக் குற்றவாளிகள்  கைது நடைபெற்றுள்ளது.

இனிதான் முக்கிய கட்டம். பரபரப்பான வழக்குகளில், துவக்கத்தில் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மக்கள் உணர்வுகளுக்கு ஒத்தடம் கொடுக்கப்படும். பின்னர், படிப்படியாக வழக்கை நீர்த்து போக செய்ய வழிவகைக் காணப்படும்.

இந்த வழக்கில் குற்றவாளிகளே காவல்துறையில் பணிபுரிபவர்கள். வழக்கு காவல்துறைக்கு அவமானம் ஏற்படுத்தக் கூடியது என துறையினர் நினைக்க வாய்ப்பு உண்டு. வழக்கின் போக்கு அரசுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடியது. எனவே வழக்கை திசை திருப்ப, குற்றவாளிகளை தப்ப செய்ய ஒரு தரப்பு முயற்சி எடுக்க வாய்ப்பு உண்டு.

வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்தாலும், சி.பி.ஐ. விசாரித்தாலும், இந்த வழக்கை சிறப்பு வழக்காக கருதி, உயர்நீதிமன்ற மதுரை கிளை தனது கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

குற்றவாளிகள் யார் என்பதை, இனி தேடி கண்டுபிடிக்க வேண்டிய வழக்கல்ல இது.  பட்டியல் தயாராக உள்ளது. வழக்கை நிரூபிக்க தேவையான குறைந்தபட்ச சாட்சியங்கள் இப்போதே தயார். எல்லாவற்றையும் இணைத்து சட்டப்பூர்வமாக வழக்கை நடத்த வேண்டும். அவ்வளவே.

எனவே வழக்கை நடத்த ஒரு கால நிர்ணயம் செய்து, விரைவாக வழக்கை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க ஆவன செய்ய வேண்டும். அது கொலை செய்யப்பட்ட அப்பாவிகள் ஜெயராஜ், பென்னிக்ஸுக்கு வழங்கும் நீதி மட்டுமல்ல, குற்றவாளிகளை தப்ப விடாமல் செய்யும் வழிமுறையும் ஆகும். காவலர் ரேவதி போன்ற சாட்சிகளுக்கு வழங்கும் பாதுகாப்பும் ஆகும்.

# நியாயம் பிழைக்க, நீதிதேவதை தான் கதி !”

எஸ்.எஸ்.சிவசங்கர்
அரியலூர் மாவட்ட திமுக செயலாளர்


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்