Skip to main content

சாத்தான்குளம்:அமித்ஷா கையில் நெகட்டிவ் ரிப்போர்ட்! சி.பி.ஐ. விசாரணை பின்னணி!

sasathankulam

 

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் சாத்தான் குளம் காவல் நிலைய இரட்டைக் கொலை தொடர்பாக தமிழக உள்துறையிடம் விளக்கம் கேட்டிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

 


இருவரின் மரணத்துக்கும் நீதி கேட்டு தூத்துக்குடி மாவட்ட வியாபாரிகள் சங்கமும், திமுக எம்.எல்.ஏ. அனிதாகிருஷ்ணனும் நடத்திய போராட்டத்தின் மூலம்தான் சாத்தான்குளத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி. உளவுத் துறையோ காவல்துறை அதிகாரிகளோ எடப்பாடிக்கு முன்கூட்டி தகவல் தெரிவிக்கவில்லை. டி.ஜி.பி. திரிபாதியிடம் எடப்பாடி கேட்ட போது, இப்போதுதான் நானும் கேள்விப்படுகிறேன் என மழுப்பியிருக்கிறார் திரிபாதி. அதன்பின் உளவுத்துறையினரிடம் விசாரித்து தகவலறிந்துள்ளார் எடப்பாடி.

 

இதனையடுத்து, தலைமைச் செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் பிரபாகர், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோரிடம் எடப்பாடி விவாதிக்க, ஜூடி சியல் கஸ்டடியில் மூச்சுத் திணறலால் அவர்கள் இறந்துள்ளனர். வியாபாரிகளை தூண்டிவிட்டு பிரச்சனையை திமுக பெரி தாக்குகிறது என தூத்துக்குடி போலீஸ் எஸ்.பி.அருண்பால கோபாலன் தம்மிடம் சொன்னதை எடப்பாடியிடம் விவரித்திருக்கிறார் திரிபாதி. அப்போது, லாக்-அப் மரணத்தை விட, ஜுடிசியல் மரணங்கிறது மிக ஆபத்தானது. இதில் பல உண்மைகளை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மறைக்கிறது என குற்றம்சாட்டியிருக்கிறார் தலைமைச் செயலாளர் சண்முகம்.

 

பதட்டமடைந்த எடப்பாடி, ""பல விசயங்களை என்னிடமிருந்து காவல்துறை மறைக்கிறது. இது பெரிய தலைவலியை கொடுக்கப் போகிறது. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு நான் என்ன பதில் சொல்வது?'' என ஆதங்கப் பட்டுச் சொல்ல, ""மாவட்ட எஸ்.பி. சொன்ன தகவலையே அரசு தரப்பு விளக்கமாக நீங்கள் சொல்லலாம். போஸ்ட்மார்ட்டம் நடக்கட்டும். உடலை அடக்கம் செய்து விட்டால் பெரிதாக பிரச்சனை வெடிக்காது என எடப்பாடியிடம் அதிகாரிகள் விவரித்திருக்கிறார்கள். அதன் படியே, மூச்சு திணறலால்தான் அவர்கள் இறந்தனர் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு சார்பில் 20 லட்சம் நிதி உதவியும் அறிவித்தார் எடப்பாடி'' என்கின்றனர் ஐ.பி.எஸ். அதிகாரிகள்.

 


நெல்லை அரசு மருத்துவமனையில் போஸ்ட்மார்ட்டம் நடப்பதால், அரசின் கருத்துக்கேற்பதான் ரிப்போர்ட் கொடுக்கப்படும் என்கிற நம்பிக்கையில் இருந்தார் எடப்பாடி. அதற்கேற்ப, அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசியிருக்கிறார் எஸ்.பி. அருண்பால கோபாலன். ஆனால், பிரச்சனை பூதாகரமாகி, சாத்தான்குளம் போலீஸாருக்கு ஆதரவாக ஜுடிசியல் கஸ்டடிக்கு அனுப்பிய நீதிபதி, சர்ட் டிஃபை பண்ணிய அரசு டாக்டர், மிக கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் கொண்டு வரப் பட்டவர்களை சிறைக்குள் அனுமதித்த சிறை சூப்பிர டெண்ட் என பலர் மீதும் குற்றச்சாட்டுகள் எதிரொலித்ததும், உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்ததும் அரசு மருத்துவமனை நிர்வாகத்தை யோசிக்க வைத்தது. உண்மைக்கு மாறாக ரிப்போர்ட் தர வற்புறுத்து முடியாது என எஸ்.பி.யிடம் தெரிவித்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.

 

dmk

 

""ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினரை எப்படியாவது சமாதானப்படுத்தி, உடலை அடக்கம் செய்யும் பொறுப்பை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் முதல்வர் எடப்பாடி ஒப்படைத்தார். அமைச்சரின் முயற்சியில், சிறப்பு இ-பாஸ் மூலம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஒருவர் சாத்தான்குளத்திற்கு வரவழைக்கப்பட்டு, கிருஸ்துவ மதபோதகர் ஒருவரை சந்தித்து பேசுகிறார். இருவரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேசி, அரசு மீதும் நீதி மீதும் நம்பிக்கை வைத்து உடலை பெற்றுக் கொள்ள சம்மதித்து, நல்லடக்கம் செய்கின்றனர் ஜெயராஜ் குடும்பத்தினர். குடும்பத்தினர் மூலமாக உருவாகும் நெருக்கடி நீர்த்துப் போனதில் எடப்பாடி ஹேப்பி'' என்கிறார்கள் உளவுத்துறையினர்.

 


காவல்துறையினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீர்த்துப் போக வைக்கவும் எடப்பாடி அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சொல்லி வரும் நிலையில், போராட்டக் களத்தில் இருந்த திமுக எம்.எல்.ஏ. மனோதங்கராஜ் நம்மிடம் பேசினார். ""இரட்டை கொலை செய்திருக்கும் சாத்தான் குளம் போலீஸார் அனைவரும் இந்நேரம் கைது செய்யப் பட்டிருக்க வேண்டும். அவர்களுக்கு உறுதுணையாக இருந்த மாவட்ட எஸ்.பி.யின் பதவியை பறித்திருக்க வேண்டும். அவர்களில் பலரைக் காப்பாற்ற துடிக்கும் எடப்பாடிதான் முதல் குற்றவாளி. குற்றம் நிகழ்ந்ததன் உண்மை காரணங்களை அறியாமல், போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் வராமல், மூச்சு திணறலால்தான் இருவரும் இறந்துள்ளனர் என எடப்பாடி எதை வைத்து சொன்னார்? மூச்சு திணறலில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு எதற்கு அவசரம் அவசரமாக நிதி உதவியும் அரசு வேலையும் கொடுக்க முன் வர வேண்டும்? பாதிக்கப்பட்ட குடும்பத் தினருக்கு நிதி உதவியும் அரசு வேலையும் தருவதில் எங்களுக்கு மாற்று கருத்தில்லை. ஆனால், இந்த சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் தான் குற்றவாளிகள். அவர்களின் அரா ஜகத்துக்கு இரண்டு உயிர் பலியாகியிருக்கிறது.

 

am

 

போலீஸ் செய்த கொலைக் காக மக்கள் பணமான முதல்வரின் பொது நிவாரணத்திலிருந்து வழங்குவது எந்த வகையில் நியாயம்? கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு நிதி உதவி அளிக்க எடப்பாடியால் முடியவில்லை. ஆனால், தனது இலாகா வின் கீழ் வரும் போலீஸ் செய்த கொலை குற்றத்தை மறைக்க பொது நிதியை செலவிடுவாரா எடப்பாடி? அதனால், அரசு நிதி உதவி அளித்த 20 லட்சத்தையும் போலீசிடமிருந்து வசூலிக்க வேண்டும்; தவிர எஸ்.பி. முதல் சாத்தான்குளம் போலீஸார் வரை தலா 25 லட்ச ரூபாய் வசூலித்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தர வேண்டும்'' என்கிறார் ஆவேசமாக!

 

இந்த நிலையில், ""கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் சரகத்திற்குட்பட்ட வடசேரி காவல்நிலைய இன்ஸ் பெக்டர் ஃபெர்னாண்டஸ் சேவியரை, சாத்தான் குளத்தின் புதிய இன்ஸ்பெக்டராக நியமித்திருக்கிறது மாவட்ட காவல்துறை. சாத்தான்குளம் போலீஸார் போல இவரும் அராஜகத்தில் கொடிகட்டி பறப்பவர் என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. உயரதிகாரி என்ன சொல்கிறாரோ அதன்படி தேர்ட் டிகிரி ட்ரீட் மெண்டில் இவர் செம கில்லாடியாம். அரசியல் ரவுடிகள், தெரு ரவுடிகளுக்காக மட்டுமே இவரது காக்கிச்சட்டை சேவை செய்யும்'' என்கிறார்கள் தென்மாவட்ட போலீஸார்.

 

mla

                                                                     மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ

கன்னியாகுமரியில் ஊரடங்கு காலத்தில் தனது அம்மாவுடன் பைக்கில் வந்த இளம்பெண்ணை மறித்து தகாத வார்த்தைகளால் ஆபாசமாக அர்ச்சித்திருக்கிறார் இன்ஸ்பெக்டர் சேவியர். அதன் வீடியோவை காவல் துறை உயரதிகாரிகள் பலருக்கும் சமூக சேகவர்கள் புகாராக அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அந்த வீடியோவை அவருக்கே அனுப்பி வைத்திருக்கிறார் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.

 

சேவியரின் அராஜகத்தை முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய தமிழ் நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் புகார் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை. இவர் மீது கன்னியாகுமரி டாக்டர் ஜெயகுமார் என்பவர் எஸ்.பி.யிடம் கனமான புகார்களை கொடுத்துள்ளார். டாக்டர் ஜெயகுமாரின் வழக்கறிஞர் அருள்ஜார்ஜிடம் நாம் பேசியபோது, ""மாவட்டத்திலுள்ள அதிமுக அரசியல்வாதிகளுக்கும் நாகர்கோவிலிலுள்ள கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, வழிப்பறி ரவுடிகளுக்கும் இன்ஸ்பெக்டர் சேவியர்தான் காட்ஃபாதர். கிரிமினல்களுக்கு எதிராக யார் புகார் கொடுத்தாலும் அதனை கிழித்தெறிந்துவிட்டு புகார் கொடுக்க வந்தவர்களையே குற்றவாளியாக்கி வழக்கு பதிவு செய்வார். வடசேரி காவல் நிலையத் தில் பல கட்டப்பஞ்சாயத்துகள் நடத்தியவர். ரவுடிகளுக்கு ஆதரவாக பேசி மிரட்டி புகாரை வாபஸ் பெற வைத்து விடுவார். இவரை பற்றி மேலதிகாரிகளுக்கு எந்த புகார் போனாலும் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். சாத்தான்குளம் போலீஸாருக்கு இணையானவர் சேவியர். அவரை சாத்தான்குளத்தின் இன்ஸ்பெக்டராக நியமித்திருப்பது அந்த ஏரியா மக்களின் துரதிர்ஷ்டம்'' என்கிறார்.

 

இந்த நிலையில், ஜெயராஜ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, தி.மு.க. சார்பிலான 25 லட்ச ரூபாய் நிதியை வழங்கிய தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, சாத்தான்குளத்தில் நடந்துள்ள இரட்டை கொலை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் எடப்பாடி அரசு மற்றும் தமிழக காவல்துறைக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மீது தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா. அதேசமயம், சாத்தான்குளம் சம்பவம் குறித்தும், கனிமொழிக்கு கொடுக் கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு விலக்கப் பட்டு, பிறகு கொடுக்கப்பட்டது குறித்தும் மத்திய உளவுத்துறையிடம் ரிப்போர்ட் கேட்டுள்ளது உள்துறை அமைச்சகம். இதுகுறித்து உளவுத்துறையினர் அனுப்பி யுள்ள ரிப்போர்ட், எடப்பாடிக்கும் காவல்துறைக்குக்கும் நெகட்டிவ்வாகவே உள்ளது என்கிறார்கள் உளவுத்துறை போலீஸார்.

 

தனக்கு எதிராக பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, தனது ஆட்சியைக் காப்பாற்றும் மோடி அரசும் இருப்பதை உணர்ந்தே, சாத்தான் குளம் போலீசாரின் இரட்டைப் படுகொலையை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்க முன்வந்திருக்கிறது எடப்பாடி அரசு.