Skip to main content

"ஐயா வலிக்குது அடிக்காதீங்க...'' கையெடுத்துக் கும்பிட்ட ஜெயராஜ்... -''ஐயாயிரம் ரூவா குடு...'' அடித்து கந்தலாக்கி பணம் கறந்த கொடுமை!

 jayaraj fenix

 

இரட்டை படுகொலையில் போலீசின் வண்டவாளங்கள் அம்பலப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பென்னிக்ஸுக்காக சாத்தான்குளம் ஸ்டேஷனுக்கு அவரது வக்கீல் நண்பர் சென்றபோது, விசாரிச்சிட்டு அனுப்பி வைக்கிறோம்னு சொன்னவர் டி.எஸ்.பி. பிரதாபன். அந்த டி.எஸ்.பி. ஸ்பாட்டில் இருந்தது கவனமாக மறைக்கப்படுகிறது என்கிறார்கள். வக்கீலும், பென்னிக்ஸ் தாய்மாமாவும் ஜன்னல் வழியே பார்த்தபோது, போலீசார் அடித்துத் துவைப்பது தெரிந்துள்ளது. பதறிப் போய் அலறியிருக்கிறார்கள்.

 

"ஐயா வலிக்குது அடிக்காதீங்க'' என்று ஜெயராஜ் எஸ்.ஐ.க்களை கையெடுத்துக் கும்பிட்டிருக்கிறார். சரி, "ஐயாயிரம் ரூவா குடு, ஒரு சின்னக் கேசாப் போட்டு ஒன்னய வெளியே அனுப்புறேன்'' என்று எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் சொன்னதும், வெளியே நின்றிருந்து பென்னிக்ஸின் தாய்மாமன் உடனே வீட்டுக்குப் போய் ஐந்தாயிரம் ரூபாயைக் கொண்டு வந்து எஸ்.ஐ.யிடம் கொடுத்திருக்கிறார். பணத்தை வாங்கிக்கொண்டு சொன்னதை செய்யாத எஸ்.ஐ.பாலகிருஷ்ணனும், ரகுகணேசும் கூட்டணி போட்டுச் சளைக்காமல் லத்தியால் இருவரது புட்டங்களையும் மாட்டை அடிப்பது போன்று வெறியைக் காட்டியிருக்கிறார்கள்.

 

போலீசார் முரட்டு அடியால், புட்டங்கள், வயிற்றுப் பகுதி ஊதிப் போய் மரண வேதனையில் கோவில்பட்டி கிளைச் சிறையிலடைக்கப்பட்ட பென்னிக்ஸை, அவரது நண்பர்கள் நான்கு பேர் ஜூன் 22 அன்று மனு போட்டு முறையாக பார்த்திருக்கிறார்கள். வலியால் தள்ளாடியபடி வந்த பென்னிக்ஸைப் பார்த்து நண்பர்கள் கண்ணீர் விட்டுள்ளனர்.

 

"போலீஸ்காரங்க நகழவிடாம மிதிச்சிக்கிட்டு லட்டியால தொடர்ந்து அடிச்சிக்கிட்டேயிருந்தாங்க. கம்புல எண்ணைத் தடவி ஆசனவாயில் உள்ளாற சொருவுனதால கடுமையான வலியப்பா, ரத்த ஒழுகல் நிக்கல்ல, உடம்புக்கு முடியல, நா பொழைக்க மாட்டேன் போலருக்குப்பான்னு'' பென்னிக்ஸ் கதறியதை பார்த்து நண்பர்கள் துடித்திருக்கிறார்கள். அன்று இரவு 9 மணிக்கு பென்னிக்ஸ் இறந்த தகவல், நண்பர்களை எட்டியதும் உறைந்துவிட்டார்களாம். இவைகளெல்லாம் சாட்சியமாக்கப்படலாம்.

 

எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், பணகுடியில் எஸ்.ஐ.ஆக இருந்தபோது, பெண் ஒருவருக்கு, தனக்கு பாலியலில் பிடித்தமானதை வெளிப்படுத்தி, லாட்ஜ் போகலாமா என்று உடம்பு கூசுகிற லெவலுக்கான வார்த்தைகளை எஸ்.எம்.எஸ். பண்ணியிருக்கிறார்.

 

கொதித்துப்போன அந்த பெண், எஸ்.பி. வரை ஆதாரத்துடன் அவரது வக்ர உணர்வைக் கொண்டு செல்ல, விவகாரமாகி பின் அங்கிருந்து வீரவநல்லூருக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அங்கேயும் பிரச்சனையாக, திசையன்விளை மாற்றப்பட்டவர், அங்குள்ள வசதிபடைத்தவர்கள் தொடர்பான புகார்கள் வரும்போது நடவடிக்கை எடுக்காமலிருப்பதற்காக லம்பான தொகையை வெட்டிவிடுவாராம். இந்த லம்ப் கொள்ளை தொடரவே அதுவே அவருக்கு வினையாகி, சாத்தான்குளத்திற்குத் தூக்கியடித்திருக்கிறது. விசாரணையில் களமிறங்கியிருக்கும் சி.பி.சி.ஐ.டி. டீம் படுகொலையான இருவரின் வீடு, கடை, அக்கம்பக்க பகுதிகளிலும் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளது.