Skip to main content

அடி வாங்கி மயக்கத்துல இருந்த 2 பேருக்கும் காஃபி கொடுத்தப்ப தட்டிவிட்ட சைகோ இன்ஸ்பெக்டர்! சேடிஸ்ட் எஸ்.ஐ.கள்! -சாத்தான்குளம் காவல்நிலைய ஹிஸ்டரி!

 

jayaraj bennix

                                      ஜெயராஜ்                                         பென்னிக்ஸ்

 

"எங்களுடைய சகோதரர் மற்றும் தந்தையின்மீது படிந்துள்ள கைரேகைகள் மற்றும் காயம்பட்ட தடயங்கள் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தரும் வகையில் இருப்பதாலும், அதனை நீதிமன்றம் உறுதி செய்து உரிய நீதி வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாலும், எங்கள் அம்மாவின் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாலும் இருவரின் உடலையும் நாங்கள் பெற்று கொள்கிறோம்'' என நீதியின் மேல் நம்பிக்கை வைத்து, சாத்தான்குளம் போலீசாரால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ்- பென்னிக்ஸ் உடல்களைப் பெற்றுச் சென்றார் ஜெயராஜின் மகளான பெர்சி.

 

உறவினர் மற்றும் சொந்த சமூகத்தார் மட்டுமின்றி விவகாரம் கேள்விப்பட்டு காவல்துறையின் எதேச்சதிகார மனப்போக்கு மாற்றப்பட வேண்டும் என்கின்ற போக்குடைய மாற்று சமூகத்தினரும் பெருமளவில் கலந்துகொள்ள தந்தை, மகனின் நல்லடக்கம் நடைப்பெற்றது. இதே வேளையில், "சாத்தான்குளத்தில் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணமடைந்த துயர நிகழ்வு துரதிருஷ்டவசமானதும், மிகவும் வேதனைக்குரியதுமாகும். இத்தகைய வேதனை அளிக்கும் சம்பவங்களை அ.தி.மு.க. ஒருபோதும் அனுமதிக்காது. இதற்காக அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது'' எனக் கூட்டாக அறிக்கைவிட்டனர் இ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சும். தொகுதியின் எம்.பியும், தி.மு.க. மகளிரணித் தலைவியுமான கனிமொழியோ, "உடல் கூராய்வு அறிக்கை வருமுன்னே விசாரணையைத் திசை திருப்பும் வகையில், நெஞ்சு வலியால் தான் இருவரும் இறந்துள்ளனர் என முதல்வர் கூறுகிறார். அவரின் பேச்சால் விசாரணை திசை திரும்பிவிடக்கூடாது'' என்றார் அவர்.

 

இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், தலைமைக் காவலர்கள், ஆண் மற்றும் பெண் காவலர்கள் என சாத்தான்குள காவல் நிலையத்தின் மொத்த நபர்களின் எண்ணிக்கை 30 பேர். இதில் 12 நபர்களுக்கும் அதிகமானோர் இங்கு வருகைப் பதிவேடு கொண்டு மற்றைய டூட்டிகளில் பணியாற்றுவார்கள். சம்பவத்தின்போது ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் சிறப்புச் சார்பு ஆய்வாளர் பால் துரை, தலைமைக் காவலர் முருகன், வேலுமுத்து, சாமத்துரை, ஜேசுராஜ், பாலா முத்துராஜ், பியூலா செல்வகுமாரி, ரேவதி உள்ளிட்ட காவலர்களும் இருந்துள்ளனர்.

 

"7 மணி இருக்கும் சார்.! அப்பத்தான் அந்தப் பையனும், அவங்க அப்பாவும் வந்தாங்க. வந்தவுடனே அங்க பிரச்சனை ஆரம்பிச்சுடுச்சு. இன்ஸ்பெக்டர் தான் அனைவரையும் தூண்டி விட்டுக்கிட்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அடிச்சவங்க சோர்வாகவும், அடி வாங்கினவங்களும் அரை மயக்கத்துல இருக்க, அங்கே நிசப்தம் நிலவியது. அந்த நேரத்துல நான்தான் ஜெயராஜை நோக்கி, "உங்களுக்கு ஏதும் வேண்டுமா அப்பா'ன்னு கேட்டேன். இரண்டு பேரும் காஃபி வேண்டுமென்பதுபோல் சைகை காண்பிக்க காஃபி வாங்கி வரப்பட்டது. அடிச்சவங்க குடிக்கும் நேரத்துல அவங்களுக்கும் கொடுக்கப்பட்டது. இதை எங்கிருந்து பார்த்தானோ தெரியவில்லை, அந்த சைக்கோ இன்ஸ்பெக்டர். வெறுகு பூனை மாதிரி வேகமாக வந்து காஃபியைத் தட்டிவிட்டான். அவம் பக்கா சைக்கோ சார்'' என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத அந்தப் பெண் காவலர்.

 

சாத்தான்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பழனியப்பாபுரக் கிராமத்தில் தேவசபை எனும் பெயரில் நற்செய்திகள் வழங்கும் தேவாலயம் உள்ளது. பழனியப்பாபுரம் மற்றும் அதனின் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்களிடம் "இயேசு நேசிக்கின்றார்' எனும் செய்தியினை துண்டு பிரசுரமாக விநியோகிக்க கடந்த பிப்ரவரியில் சபை ஊழியர்கள் 8 நபர்கள் பழனியப்பாபுரம் வந்து சுற்றுவட்டார கிராம மக்களிடம் சுவிசேஷ பிரார்த்தனையும், துண்டு பிரசுரங்களையும் வழங்கி வந்த நிலையில். அங்குள்ள இந்து முன்னணி அமைப்பினர் பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

 

inspector sridhar sub inspector balakrishna - raghu ganesh

                    ஆய்வாளர் ஸ்ரீதர்,       எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன்,      ரகுகணேஷ்

 

"உண்மையில் நாங்கள் எவ்வித மதமாற்ற நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. விசாரித்துக் கொண்டிருந்த எஸ்.ஐ.ரகு கணேசனும், ஏட்டையா முருகேசனும் திடுமென கண்மண் தெரியாமல் தாக்கத் தொடங்கினர். எங்களை குனிய வைத்து முதுகில் லத்தியைக் கொண்டு அடித்தும், கையால் குத்தியும் காயப்படுத்த ஆரம்பித்தனர். பின் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. லாக்கப்பின் உள்ளே அழைத்துச் சென்று அங்கேயும் தாக்க தொடங்கி, "இப்பொழுது கூப்பிடுடா உங்கள் இயேசுவை... காப்பாற்றுவாரா எனப் பார்ப்போம்'' என்றார்.

 

அவர்கள் அடித்துக் காயம் பட்டதில் ஊனமுற்ற சபை ஊழியர்களும் அடக்கம். நாங்கள் தவறு செய்தால் விசாரணை செய்து முறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே.? இதுகுறித்து காவல்துறையின் அனைத்து உயரதி காரிகளுக்கும் அனுப்பினேன். நடவடிக்கை இல்லை. இப்பொழுது உயிர்பலியாகியுள்ளது. முன்னமே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தப் பிரச்சனை ஏற்பட்டிருக்காது'' என ஆதங்கப்படுகின்றார் இத்தேவாலயத்தின் சபை ஊழியர்களில் ஒருவர்.

 

தற்பொழுது சர்ச்சைக்குள்ளாகி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள சாத்தான்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டரான ஸ்ரீதரின் பூர்வீகம் தேனிமாவட்டம் வைகை அணை பகுதி. 1997 பேட்ஜ் அதிகாரியான சென்னையிலுள்ள வீர்புரத்தில் எஸ்.ஐ.பயிற்சியில் இருக்கும் போதே சர்ச்சையில் சிக்கியவர்.

 

"தேவர்குளம், மானூர், சுசீந்திரம் போன்ற பல பகுதிகளில் பணியாற்றிய அவரின் மனநிலையை யாராலும் புரிந்துகொள்ள முடியாது! அவருடைய மனைவியே அவர் மீது புகார் கொடுத்துள்ளதால், குடும்பப் பிரச்சனைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார். அதுபற்றியே நாள் முழுவதும் சிந்தித்துக் கொண்டு இறுக்கமான மனநிலையில் இருப்பார். குடும்பம் வேறு! பணி வேறு என்பதனை அவரால் புரிந்து கொள்ளமுடியவில்லை. குடும்பத்தின் இறுக்கத்தைப் பணியில் காட்டுவார். அது தான் இரு வணிகர்கள் விஷயத்திலும் நடந்திருக்க வேண்டும். தண்டனை என அவருக்குக் கொடுப்பதாக இருந்தால் அவருக்கு இப்போது தேவை மனநல சிகிச்சையே'' என்கிறார் அவரோடு பயிற்சி முடித்து இன்று டி.எஸ்.பி.-யாகப் பணியாற்றும் ஒருவர்.

 

சாத்தான்குளம் இரட்டைக் கொலை விவகாரத்தில் தொடக்கம் முதலே எஸ்.ஐ.க் கள் மீது காட்டிய வெளிச்சத்தை இன்ஸ்பெக்டர் மீது காட்டவில்லை மீடியாக்கள். ஆனால், விதிவிலக்காய் 'நக்கீரன்' மட்டும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் குறித்தும், அவரைத் தொடர்பு கொண்டதையும் பதிவு செய்திருந்தது. இரண்டு எஸ்.ஐ.க்களை பணி நீக்கம் செய்த காவல்துறை அனைவரும் வெவ்வேறு ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்த நிலையில் இவரை மட்டும் காத்திருப்போர் பட்டியலில் வைத்தது.

 

"1997 பேட்ஜின் 8 ஆவது ஸ்கோரைப் பெற்றிருக்கும் அதிகாரியான இவர் ஓரிரு மாதங்களில் டி.எஸ்.பி.-யாக தகுதி உயர்வு பெறவேண்டியவர். அந்தச் சூழலில் அவரைக் காப்பாற்ற சாதி லாபி நடக்கின்றது. இதில் தெலுங்கு பேசும் உயரதிகாரிகள் பலர் இவருக்கு ஆதரவு கொடுத்த நிலையில், அவர்களுடைய உத்தரவின் பேரில் ஊடகம் இவரைக் கண்டுகொள்ளவில்லை. இன்னொன்று குறிப்பிட்ட அமைச்சர் ஒருவரும் தெலுங்கு பேசும் லாபி என்ற அடிப்படையில் இவரைக் காப்பாற்ற நினைக்கின்றார். அதனால்தான் சாத்தான்குளம் வணிகர் போராட்டத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. விவகாரம் பெரிதாகிவிடாமல் இருக்க அங்கேயே இருந்து மக்களின் அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டது தெரியாதா என்ன?'' எனக் கேள்வி எழுப்புகிறார் காவல் துறையில் இருக்கும் முக்கிய அதிகாரி ஒருவர்.

 

http://onelink.to/nknapp

 

பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், "காயங்களின் தன்மை என்ன..? காயங்களின் அடிப்பகுதியில் ரத்தக்கட்டு, ரத்தக் கசிவு உள்ளிட்ட பல சோதனை களும், எந்தக் காயத்தில் உயிர் போனது..? என்பது குறித்தும் நடத்தப்பெற்று பிரேதப் பரிசோதனை முடிவுப்பெற்ற போது நேரம் நள்ளிரவு 12.30 மணி. இதே வேளையில், அத்தனை ஆவணங்ளும் இரண்டு எஸ்.ஐ.-க்களுக்கு எதிரான நிலையில் பிரேதப் பரிசோதனை ஆவணமும் எதிராக திரும்பவுள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்த நிலையில், நீதிமன்ற ஆணைக்கு முன்னதாகவே இரண்டு எஸ்.ஐ.க்கள் மீது கொலை வழக்குகள் விரைவில் பதியப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படலாம். சம்பந்தப்பட்ட போலீசார் அனைவர் மீதும் நட வடிக்கை இருக்கும் என்கின்றது காவல்துறை வட்டாரம்.

 

இந்த விவகாரத்தில் போலீஸ் டார்ச்சரால் கொல்லப்பட்டோர், அவர்களுக்காக குரல் கொடுப்போர், காவல்துறை அதிகாரிகளான இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.கள், அவர்களுக்கு உதவிடுவோர் என அனைத்துத் தரப்பின் சாதிரீதியாகவும் பிரச்சினைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் குளிர்காயும் சக்திகள், ஏதேனும் விபரீதத்தை நிகழ்த்திவிட்டு, அதனை இன்னொரு சாதி மீதான பழியாக மாற்றவும் திட்டமிடுவதை ஸ்மெல் செய்துள்ளது உளவுத்துறை.

 

 

 

Brandspot

Brandspot 1

Brandspot 2

Brandspot 3

Brandspot 4

Brandspot 5