Skip to main content

டேபிள் மேல் குப்புறப் படுக்க வைத்து ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் துணைக்கொண்டு கை, காலை கட்டி அவரோட அப்பாவிற்கு முன்னாடியே... தலைமைக் காவலர் ரேவதி..!

Published on 10/07/2020 | Edited on 10/07/2020

 

jayaraj and fenix

 

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகிலுள்ள புளியநகரில் மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரியுடன் பிறந்த கடைக்குட்டியான ரேவதிதான் இன்று, தேசியளவில் மனித உரிமை சர்ச்சையாகியுள்ள இரட்டைக் கொலையின் நேரடி சாட்சியம். 2005 ஆம் ஆண்டு திருச்சியில் பயிற்சி முடித்து காவலராக பயணத்தைத் தொடர்ந்த ரேவதி, மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றிய பிறகு, தற்பொழுது சாத்தான்குளத்தில் பணியாற்றி, அருகில் அரிவான் மொழி கிராமத்தில் வசித்து வருகின்றார்.

 

"ரோட்டில் அடிபட்டுக் கிடக்கும் ஓணான் பல்லிக்கே பரிதாபம் பார்ப்பாங்க. கண்ணுக்கு எதிரே இந்த விஷயத்தில் கோபம் வராமலா போகும்..?'' என்கின்றனர் ஊர்க்காரர்களும் காவல்துறையினரும்.

 

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சாத்தான்குளத்தில் காவல்துறை நடத்திய இரட்டைக் கொலையினை விசாரித்துவரும் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்பு ஆஜராகி மூடிய அறையில் முழுமையாக வாக்குமூலம் கொடுத்துவிட்டு வெளியே வந்த தலைமைக் காவலர் ரேவதி, கண்ணிமைக்கும் நேரத்தில் வெளியேறினார். அவரது சாட்சியம், நாடு முழுக்க ட்ரெண்ட் ஆனது.

 

மாஜிஸ்திரேட்டிடம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வாக்குமூலத்திலே "எனக்கு இரண்டு பொட்டபுள்ளைக. எனக்குப் பாதுகாப்பு கொடுக்கிறீர்கள் என்றால் கண்டிப்பாகப் பேசுறேன். சமபவத்தன்னைக்கு நான்தான் நைட் பாரா.! இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், முருகன், முத்துராஜ், குமார் உள்ளிட்ட பல போலீஸ்காரங்க இருந்தாங்க. ஈவு இரக்கமேயில்லாமல் அங்கிருந்த அத்தனை பேரும் அடிச்சாங்க. முதலில் அடிக்க ஆரம்பிச்சது எஸ்.ஐ.பாலகிருஷ்ணன்தான். இரண்டாவது மற்றைய போலீஸ்காரங்க. இடையிடையில் வந்து அடிச்சது இன்ஸ்பெக்டரும், எஸ்.ஐ .ரகுகணேஷுமே.

 

தரையில் உட்கார வைச்சு கையில் கிடச்ச லத்தியினை வைச்சு அடிக்க ஆரம்பிச்சவங்க ஷூ காலால் பிறப்புறப்பு உள்பட கண்ட இடத்திலும் மிதிக்கவும் ஆரம்பிச்சாங்க. வலி வேதனை பொறுக்க முடியாமல் அவங்க கத்தவே, நான்தான் அவங்களுக்குத் தேவையான தண்ணீர் உள்ளிட்டவைகளைக் கொடுத்தேன்.

 

இடையில் முருகனை வைச்சு அவங்களுக்கு சாரம் மாற்ற வைச்சாங்க. சரியாக 9 மணிக்கு மேல இருக்கும். திரும்ப வந்தாரு எஸ்.ஐ.ரகு கணேஷ். வந்த வேகத்திலேயே கீழே உட்கார வைக்கப்பட்ட பென்னிக்ஸை டேபிள் மேல் குப்புறப் படுக்க வைத்து ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் துணைக் கொண்டு கையையும் காலையும் தனித்தனி கயிற்றால கட்டி அவரோட அப்பாவிற்கு முன்னாடியே லாடம் கட்ட ஆரம்பிச்சாங்க..

 

வலியில் கத்திக்கதறி கூப்பாடு போட்டும் அவனுகளுக்கு விட மனசில்லை. எனக்கும் மனசு கேட்காததால் அங்கிருந்து வெளியே வந்துட்டேன். ஆனால் அப்போதைக்கு மட்டும் அடிச்சது எஸ்.ஐ.யையும் சேர்த்து ஆறு பேர். இதில் 5 பேரு ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பசங்க. இரண்டாவது கட்டமாக அடிக்கப் பயன்படுத்தியது லத்தி இல்லை. இரும்புக்குழாயே'' எனத் தெரிவித்திருப்பது புதிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

 

http://onelink.to/nknapp

 

போலீஸ் நடத்திய இரட்டைப் படுகொலைக்குத் தலைமைக் காவலரின் வாக்குமூலம் வலுவான சாட்சியமாகியிருக்கிறது. ரேவதிக்கான பாதுகாப்பை அரசு பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

 

 

Next Story

ராஜேஸ் தாஷுக்கு சிறைத்தண்டனையை உறுதிசெய்த நீதிமன்றம்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Former DGP Rajesh Das gets 3 jail sentence

தமிழக சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி, அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 16/06/2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்கத் தடையில்லை. நீதிமன்றத்தை மாற்றக் கோரிய ராஜேஷ்தாஸ் மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை” எனக் குறிப்பிட்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு மீதான் விசாரணை விழுப்புரம் முதன்மை நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல் முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 12 ஆம் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பூர்ணிமா தெரிவித்திருந்தார். 

அதன்படி இன்று, ராஜேஷ்தாஸின் மேல்முறையீட்டு வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறைத்தண்டனையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

Next Story

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு தள்ளுபடி

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Satankulam father, son case; Inspector dismisses bail plea

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் நேரம் கடந்து கடையைத் திறந்து வைத்ததாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில், காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை மற்றும் தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்ட 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை அமர்வு முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரி 5 வது முறையாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பு வழக்கறிஞர், “சாட்சிகளில் ஒருவரான மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளதால், வழக்கின் விசாரணை தாமதமாகிறது” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தினால், அவர் தன்னுடைய பணிகளை செய்வாரா அல்லது தினசரி நீதிமன்றம் வந்து சாட்சியம் அளிப்பாரா?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனையடுத்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனுவை 5 வது முறையாக தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு 4 முறை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.