Skip to main content

தூத்துக்குடி போலீசாரின் காலடியில் மிதிபட்டு கிடக்கிறதா தமிழகம்?  நீதிதேவதையே கொதித்தெழு, காலிகளைத் துடைத்தெறி! சிவசங்கர் ஆவேசம்!

 

sathankulam police station

 

தூத்துக்குடி ஸ்டெர்லை ஆலை எதிர்ப்பு ஊர்வலத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார் துணை வட்டாட்சியர் சேகர். 13 அப்பாவி உயிர்கள் பலியானது. அன்று, தொலைக்காட்சி பார்த்து தான், துப்பாக்கிச் சூடு குறித்து அறிந்தேன் என்றார் முதலமைச்சர் பழனிசாமி.

 

சாத்தான்குளம் காவல்நிலையத்தில், அப்பாவிகள் ஜெயராஜ் - பெனிக்ஸ் கொலை குறித்து உயர்நீதிமன்ற ஆணைப்படி விசாரணை நடத்திய நீதித்துறையை நோக்கி, "உன்னால் ஒன்னும் புடுங்க முடியாதுடா", என்றார் காவலர் மகராஜன். நீதிதேவதை முகத்தில் காறி உமிழ்ந்துள்ளார் மகராஜன்.

 

தமிழக முதல்வரை விட அதிகாரம் வாய்ந்தவரா தூத்துக்குடி துணை வட்டாட்சியர் சேகர்? உயர்நீதிமன்ற நீதிபதிகளை விட சக்தி வாய்ந்தவரா சாத்தான்குளம் காவலர் மகாராஜன்? இவர்கள் காலடியில் தமிழகம் மிதிபட்டு கிடக்கிறதா? 

 

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ரத்த வெறி பிடித்த, வக்கிர மனம் கொண்ட மிருகங்கள் ஆய்வாளர் ஸ்ரீதர், துணை ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் , காவலர்கள் மற்றும் காவல் நண்பர்கள் ஆடிய கோர, கொலை தாண்டவம் குறித்த எழுந்த எதிர்ப்பு குரலில் இன்னும் சூடு அடங்கவில்லை.


அதற்குள்ளாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் தங்கள் சகாக்களை காக்க செய்யும் செயல்கள் நீதியின் செவிளில் அறைகின்றன. இந்த "அறை"க்கும் விழிக்காவிட்டால் நம் குரல் வளை மீதும் பாய்வார்கள் இவர்கள்.


ஜெயராஜ், பெணிக்ஸ் கொலை சம்பவம் தமிழகம் தாண்டி இந்திய அளவில் கவனம் பெற்றிருக்கிறது. இந்திய அளவில் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், திரைத்துறையினர், விளையாட்டுத் துறையினர் எனப் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். அடுத்தக்கட்டமாக உலக கவனத்தை ஈர்க்கும் விஷயமாகவும் மாறி விட்டது.

 

S. S. Sivasankar


அமெரிக்காவில் காவலர்கள் சிலரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவருக்கு நீதி கேட்டுத் துவங்கிய, உலகளாவிய போராட்டம் இன்னும் தொடர்கிறது. அதற்கு அடுத்து ஜெயராஜ், பெணிக்ஸ் கொலை உலகளவில் கவனம் பெற்று வருகிறது. எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகின்றன.


உலகமே உற்று நோக்கும் ஜெயராஜ் - பெனிக்ஸ் கொலை வழக்கை,  ஊற்றி மூட நினைக்கிறது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை.


ஜெயராஜ், பெணிக்ஸ் கொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்த, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தன்னிச்சையாக அதனை வழக்காக எடுத்துக் கொண்டது. கோவில்பட்டி ஜுடிசியல் நீதிபதியை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்கள். நீதிபதி பாரதிதாசன் காவல் நிலையம் சென்று விசாரணை மேற்கொண்டார்.


அப்போது தூத்துக்குடி  மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் குமார், தூத்துக்குடி துணை கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் அங்கு வந்திருக்கின்றனர். இவர்கள் முன்னிலையில் அங்கிருந்த காவலர்கள் சிலர் நீதிபதியின் நடவடிக்கைகளை வீடியோ எடுத்துள்ளனர். உயர்நீதிமன்ற ஆணைப்படி காவல் நிலைய ஆவணங்களை நீதிபதி கேட்டுள்ளார். அதனைத் தர மறுத்திருக்கிறார்கள். அப்போது தான் காவலர் மகராஜன் அந்த வார்த்தைகளைப் பேசி இருக்கிறார். 


இமெயில் மூலமாக இதனை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கவனத்திற்குக் கொண்டு சென்றார். இந்தத் தகவலைக் கேட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை, "தூத்துக்குடி மாவட்ட காவல் நிர்வாகம், நீதிபதியின் விசாரணயைத் தடுக்க தன்னாலான எல்லாவற்றையும் செய்திருக்கிறது", என்று தெரிவித்திருக்கிறது.


உலகமே பார்த்துக் காறி துப்பிக் கொண்டிருக்கும் ஒரு கொலை வழக்கில், முதலமைச்சரின் அனுமதி இல்லாமல் மாவட்ட காவல் நிர்வாகம் இவ்வளவு தைரியமாக நீதிமன்றத்தோடு மோத முடியாது. எதற்கும் துணிந்து விட்டார்கள் இந்த ஆட்சியாளர்களும், தூத்துக்குடி மாவட்ட காவல் நிர்வாகத்தினரும் என்றே தோன்றுகிறது.

 

சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், "காவலர்கள் கைதிகளைத் தாக்கக் கூடாது" என வெளிப்படையாகச் சொல்கிறார். காவல் துறை ஏ.டி.ஜி.பி. ரவி சாத்தான்குளம் விஷயத்தைத் தொடாமல், காவலர்கள் எப்படிக் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என வீடியோவில் தெரிவிக்கிறார். காவல்துறை துணை ஆணையர் சரவணன், சாத்தான்குளம் கொலை தொடர்பாக தன் வருத்தத்தைக் கவிதையாக வெளியிட்டுள்ளார். இப்படித் தமிழக காவல்துறையே, சாத்தான்குளம் கொலைக் கும்பலின் செயலால் அவமானத்தில் தலை தாழ்ந்து இருக்கும் போது, தூத்துக்குடி நிர்வாகம் மட்டும் இந்த வக்கிரபுத்தி கொலைக்காரர்களை காக்க துடிக்கிறது.


சாத்தான்குளம் காவல் நிலைய நிர்வாகத்தை, மாவட்ட ஆட்சியர் வருவாய்த்துறை மூலம் எடுத்துக் கொள்ள மதுரை உயர்நீதிமன்றம் வற்புறுத்தியுள்ளது. அந்த அளவிற்குத் தூத்துக்குடி மாவட்ட காவல் நிர்வாகத்தின் மீது உயர்நீதிமன்றம் உச்சபட்ச கோபத்தில் உள்ளது.


கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குமார், துணை கண்காணிப்பாளர் பிரதாபன் காவலர் மகராஜன் ஆகியோரை மாற்றம் செய்யாமல் இந்த வழக்கில் விசாரணையைத் தொடர முடியாது என நீதிமன்றம் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. 

 

http://onelink.to/nknapp


ஆனால் 12 மணி நேரமாகியும் காவல்துறைக்கு அமைச்சரான முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாய் திறக்கவில்லை. சொந்த ஊரில் விழா எடுத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.


நீதித்துறை நெருப்பில் தகிக்கிறது. எடப்பாடி பிடில் வாசித்துக் கொண்டிருக்கிறார்.


கொலைக் கும்பலை காக்க நினைக்கும் மாவட்ட காவல் நிர்வாகமும், எடப்பாடியும் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.


கொலைக்கும்பல் கைது செய்யப்பட வேண்டும். எடப்பாடி பதவி விலக வேண்டும். அப்போது தான் நேர்மையான விசாரணையை நடத்த முடியும்.


நீதிதேவதையே கொதித்தெழு, காலிகளைத் துடைத்தெறி!

 

எஸ்.எஸ்.சிவசங்கர்
அரியலூர் மாவட்ட திமுக செயலாளர்.