Skip to main content

பா.ஜ.க.வுக்கு சசிகலா கடிதம்! டென்ஷனில் இ.பி.எஸ்.! 

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

Sasikala letter to BJP! EPS in tension!

 

பா.ஜ.க.வுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று அ.தி.மு.க. தரப்பிலிருந்து சொன்னதிலிருந்தே பா.ஜ.க. அண்ணாமலை பெருத்த சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டார். அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டால், 'பாத யாத்திரையில் நான் ரொம்ப பிஸி' என்பதாகக் காட்டிக் கொள்கிறார். 'பா.ஜ.க. தலைமையை மாற்றப் போகிறார்களாமே?' என்று ஒரு பெண் நிருபர் அண்ணாமலையிடம் கேட்க, அவரையே பதிலுக்கு மிரட்டுமளவுக்கு உச்சகட்ட வெறுப்பிலிருக்கிறார். அண்ணாமலையின் விரக்திக்கு என்ன காரணமென்று விசாரித்ததில், தற்போது பல் பிடுங்கப்பட்ட பாம்பாக அண்ணாமலை இருப்பதாகவும், கூட்டணி குறித்தோ, அ.தி.மு.க. குறித்தோ எதுவுமே பேசக்கூடாதென பா.ஜ.க. தலைமை அவருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள். அந்த பக்கம் அ.தி.மு.க.விலோ, எடப்பாடியைத் தவிர மற்ற தலைவர்கள் அனைவரும் கூட்டணி முறிவு குறித்து பேசினார்கள். எடப்பாடி மட்டும் வாய் திறக்கவில்லை. இதுகுறித்து வாய் திறந்தால் எடப்பாடிக்கு வில்லங்கமாகிவிடும் என்று அவரும் கப்சிப்!

 

எடப்பாடி அடக்கி வாசிப்பதற்கு, சசிகலாவின் கடிதம் அ.தி.மு.க.வில் கிளப்பிய பூகம்பத்தையும் ஒரு காரணமாகச் சொல்கிறார்கள். அதாவது, வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், வீரமணி உட்பட 6 முன்னாள் அமைச்சர்கள் வரை தனக்கு ஆதரவாக அணி திரண்டிருப்பதாகவும், எனவே அ.தி.மு.க.வுக்கு தலைமையேற்க, தான் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டு, பா.ஜ.க. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சசிகலா கடிதம் எழுதியிருக்கிறார். 

 

Sasikala letter to BJP! EPS in tension!

 

அதோடு, தனது தலைமையை ஓ.பி.எஸ். தரப்பும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். தனது தலைமையிலான அ.தி.மு.க.வோடு பா.ஜ.க. கூட்டணி வைத்துக்கொண்டால் தமிழ் நாட்டில் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்குமென்று விரிவாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறாராம். சசிகலாவின் கடிதத்துக்கு இதுவரை பா.ஜ.க. தரப்பிலிருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், சசிகலா கடிதம் குறித்த சாதக, பாதகங்கள், உண்மை நிலவரம் குறித்து ஆய்வுசெய்ய உத்தரவிட்டிருக்கிறது.

 

Sasikala letter to BJP! EPS in tension!

 

இதற்கிடையே எடப்பாடிக்கு அடுத்த அதிர்ச்சி வைத்தியமாக, அவரது வலது கரமாக நம்பப்படும் வேலுமணி, அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனை ரகசியமாகச் சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பின்போது, “எடப்பாடி பழனிசாமி, ஏற்கெனவே முதல்வராக நான்காண்டுகளுக்கு மேல் இருந்துவிட்டார். அ.தி.மு.க.வைப் பொறுத்த வரை அனைவரும் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வர முடியும். அந்த வகையில், கட்சிக்காகப் பெரிதும் செலவழித்துள்ள நான் அடுத்து வரவுள்ள தேர்தலில் வென்று முதல்வராக விரும்புகிறேன். எனக்கு ஆதரவாக 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். எனக்கு உங்களின் ஆதரவும் தேவை” என்று கூறியிருக்கிறார். திண்டுக்கல் சீனிவாசனோ அனைத்தையும் கேட்டுக் கொண்டு அப்படியே எடப்பாடியிடம் போட்டுக்கொடுத்து விட்டார். உடனே டென்ஷனான எடப்பாடி, வேலுமணியை அழைத்துக் கடுமையாகக் கத்தியிருக்கிறார். இருவருக்குமிடையே மிகப்பெரிய வார்த்தைத்தகராறு நடந்திருக்கிறது. எடப்பாடிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவன் தான் இடையில் புகுந்து இருவருக்கிடையே சமாதானம் செய்து வைத்துள்ளார்.

 

Sasikala letter to BJP! EPS in tension!

 

இந்நிலையில், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்குள் நடக்கும் குஸ்தி குறித்து ஆய்வு செய்ய நிர்மலா சீதாராமனை பா.ஜ.க. தலைமை கேட்டுக்கொண்டது. அதன்படி ஆய்வு நடத்திய நிர்மலா, அ.தி.மு.க. கூட்டணியில்லாமல் பாராளுமன்றத் தேர்தலை நாம் எதிர்கொள்வது சரியில்லை. வரவுள்ள 5 மாநிலத் தேர்தல்களில் நாம் அமோக வெற்றிபெற்றால், அ.தி.மு.க. கூட்டணி குறித்து நாம் வலுவாக அடித்துப் பேசலாமென்றும், ஒருவேளை தோல்வியடைந்தால், அதற்கேற்ப அ.தி.மு.க.வை அனுசரித்துப் போக வேண்டுமென்றும் கூறியிருக்கிறார். இதில் குறிப்பாக, பா.ஜ.க. தலைமைப் பொறுப்பிலிருந்து அண்ணாமலையை மாற்றியாக வேண்டும் என்பதை அழுத்தமாகக் கூறியிருக்கிறார்.

 

Sasikala letter to BJP! EPS in tension!

 

இச்சூழலில் அண்ணாமலையை டெல்லி தலைமை அழைத்திருப்பது பரபரப்பாகப் பேசப்படுகிறது. இந்த அழைப்பு, அமலாக்கத்துறை ரெய்டு குறித்து விசாரிப்பதற்காகத்தான் என்கிறார்கள் பா.ஜ.க. தரப்பினர். பா.ஜ.க. அலுவலகத்தில் பணியாற்றும் ஜோதி என்பவரும், அவரது உதவியாளர் செல்வகுமார் என்பவரும் பா.ஜ.க. அலுவலகத்தின் ஃபைனான்ஸ் விவகாரங்களைக் கவனித்துக்கொள்கிறார்கள். இவர்கள் பா.ஜ.க. கேசவவிநாயகத்துக்கும் நெருக்கமானவர்கள். சமீபத்தில் எஸ்.பி.ஆர். பில்டர்ஸ் என்ற நிறுவனம் பா.ஜ.க.வுக்கு 10 கோடி ரூபாய் அன்பளிப்பு கொடுத்ததாகவும், அதில் 2 கோடி மட்டுமே கணக்கு வைக்கப்பட்டு, 8 கோடி ரூபாயை அமுக்கிவிட்டார்களென்றும் இந்நிறுவனம் புகாரளித்துள்ளது. அதுபோக, அமலாக்கத்துறை ரெய்டிலிருந்து தப்புவதற்காக மணல் மாஃபியா கரிகாலன் தரப்பினர், ஜோதி - செல்வகுமாருக்கு 5 கோடி ரூபாய் கொடுத்ததாகவும், மேலும், மாதாமாதம் 50 லட்ச ரூபாய் தரப்படுவதாகவும் கண்டறிந்த அமலாக்கத்துறையினர், இதுகுறித்து ரெய்டுக்கு சென்றபோதுதான் இருவரும் பா.ஜ.க. நிர்வாகிகள் என்பதும் தெரிய வந்திருக்கிறது. மேலிடத்திலிருந்து பிரஷர் வரவும் ரெய்டை கேன்சல் செய்துவிட்டு கிளம்பினர்.

 

அந்த ரெய்டு குறித்து அமலாக்கத்துறையிடம் நிர்மலா சீதாராமன் விசாரிக்க, அனைத்து பண வசூல் விவரங்களையும் புட்டுப்புட்டு வைத்துவிட்டனர். இந்த விவகாரங்கள் குறித்தும், அ.தி.மு.க.வுக்கு எதிராக யாரும் பேசக்கூடாதென பி.எல்.சந்தோஷ் உத்தரவிட்டது தொடர்பாகவும் விளக்குவதற்காக அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். டெல்லியில், ஓ.பி.எஸ்., சசிகலா ஆதரவுடன் தேர்தலைச் சந்திக்கலாமென அண்ணாமலை கூறிய யோசனைக்கு நோ சொல்லியிருக்கிறது தலைமை. எனவே, தற்போது விரக்தியின் உச்சத்திலிருக்கிறார் அண்ணாமலை.