Skip to main content

ஜெ. மரணத்தில் சிக்கும் சசிகலா; பரபரப்பை கிளம்பிய ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

Sasikala involved jayalalitha Arumugasamy Commission report

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்துள்ள ஆறுமுகசாமி ஆணையத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியில் இருந்தபோதே கடந்த 2016ஆம் ஆண்டு அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் அவர் மறைந்துவிட்டதாக சொல்லப்பட்டது. இருப்பினும், அவரது மரணம் தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா மீது சந்தேக ரேகைகள் விழுந்தது.

 

இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆணையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து, ஆணையம் தீவிர விசாரணையில் இறங்கினாலும், ஜவ்வாக இழுத்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக ஆட்சி நிறைவடைந்து திமுக ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து, சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி அளித்தார்.

 

இதையடுத்து, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. இதில், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சசிகலாவின் உறவினரான டாக்டர் கே.எஸ். சிவகுமார், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய மருத்துவத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும், ஜெயலலிதா சுய நினைவுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை எனக் கூறும் இந்த அறிக்கை, ஜெயலலிதா மயக்கமடைந்த பின்னர் அனைத்து நிகழ்வுகளும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என பகீர் கிளப்பியுள்ளது.

 

மேலும், 2012-க்குப் பிறகு ஜெயலலிதா சசிகலா இடையே சுமூகமான உறவு இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுடன் சசிகலா மீண்டும் இணைந்த பிறகும் கூட, இருவருக்கும் இடையே சுமூகமான உறவு நிலவவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என பொய்யான அறிக்கையை அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது எனவும் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையே அளிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள ஆணையம்., ஜெயலலிதா இறந்த நேரத்திலும் முரண்பாடு இருப்பதாக அதிர்ச்சி கொடுத்துள்ளது.

 

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் இந்த விசாரணை ஆணையம் தொடங்கப்பட்டாலும் திமுக ஆட்சிக் காலத்திலும் நீடித்தது. பல முறை இந்த ஆணையம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மிகவும் சீக்ரெட்டாக வைக்கப்பட்டுள்ள இந்த அதிர்ச்சிகர அறிக்கை தற்போது வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

 

 

Next Story

‘திருச்சி மாநாட்டில் சசிகலா’ - ஓ.பி.எஸ்ஸின் சூசக பதில்

Published on 09/04/2023 | Edited on 09/04/2023

 

o panneerselvam answer Sasikala will be invited to the conference in Trichy

 

திருச்சியில் நடக்கவிருக்கும் மாநாட்டிற்கு சசிகலாவிற்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விக்கு ஓ. பன்னீர்செல்வம் சூசகமாகப் பதிலளித்துள்ளார். 

 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், “திருச்சியில் ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் அதிமுகவின் 51 ஆம் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழாவாக மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் அதிமுகவின் தொண்டர்கள் கலந்துகொண்டு வலிமையை நிரூபிப்பார்கள். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அனைவருக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்படும்” என்றார்.

 

இதனைத் தொடர்ந்து திருச்சி மாநாட்டிற்கு சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “முறைப்படி அறிவிப்பு வரும். அதில் அனைவரும் கலந்துகொள்வார்கள்” என்று சூசகமாகப் பதிலளித்தார். 

 

 

Next Story

சுகாதாரத்துறை ஆய்வில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை - தமிழக அரசு பதில்

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

'Arumugasamy Commission Report on Health Sector Survey'-Tamil Government Response

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கை சுகாதாரத்துறை ஆய்வில் உள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் அதிமுக ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட ஆணையமானது திமுக ஆட்சியில் இறுதிக்கட்ட பணிகளை முடித்து அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு வெளிநாட்டுக்கு அனுப்பி சிகிச்சைகளை அளிக்க அப்போதைய அரசு இயந்திரம் முன்வராதது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்ததோடு, முன்னாள் அமைச்சர்களின் பெயர்களும் இடம் பெற்றது.

 

இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆர்.ஆர்.கோபால்ஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் பரதன் சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசு சார்பில் ஆஜராகியிருந்த அரசின் தலைமை வழக்கறிஞர் சார்பில், 'மறைந்த முன்னாள் முதல்வர் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்திலும் அமைச்சரவையிலும் வைக்கப்பட்டு தற்பொழுது மருத்துவ குறிப்புகளுக்காக சுகாதாரத் துறையின் அறிக்கை ஆய்வில் உள்ளது. ஆய்வறிக்கை கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டது.

 

அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் இனி அறிக்கையின் அடிப்படையில் என்னென்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது குறித்தும் அடுத்த வாரம் திங்கட்கிழமை பதில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் 27 ஆம் தேதி ஒத்தி வைத்தது நீதிமன்றம்.