Skip to main content

பாஜகவிடம் வசமாக சிக்கிய சசிகலா... ரகசியத்தை கூறிய கிருஷ்ணப்ரியா... அதிர்ச்சியில் சசிகலா தரப்பு!

பணமதிப்பிழப்பு நேரத்தில் தொழிலதிபர்களை மிரட்டி சசிகலா 1674 கோடியே 50 லட்சத்துக்கு சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார் என விவரமாக வருமானவரித்துறை தாக்கல் செய்த அறிக்கை சசிகலா குடும்பத்தில் மிகப் பெரிய மோதலை உருவாக்கியுள்ளது. அதன் எதிரொலியாக மன்னார்குடி குடும்பத்தின் வாரிசு ஒன்று பா.ஜ.க.வில் சேர்வதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது என்கிறது மன்னார்குடி வட்டாரம்.

 

sasikalaசசிகலாவின் பெயர், கணவர் நடராஜன் பெயருடன் இல்லை. அவரது தந்தை விவேகானந்தன் தாயார் கிருஷ்ணவேணி ஆகிய பெயர்களுடன் இணைந்து வி.கே.சசிகலா என்றுதான் சிறைச்சாலை பதிவுகளில் காணப்படுகிறது. தனது தாயின் பெயரை சேர்த்து ஹைதராபாத் திராட்சை தோட்டத்தில் மின்சார ஷாக் அடித்து இறந்த ஜெயராமனின் மகளுக்கு சசிகலா சொல்லி ஜெ. வைத்த பெயர்தான் கிருஷ்ணப்ரியா.

 

nakkheeranஇவரது செல்போனை ஆராய்ந்தபோது, சில கம்பெனிகளின் பெயர் அடங்கிய பட்டியல் ஒன்றை அதன் மெமரியில் வைத்திருந்தார். அந்த துருப்புச் சீட்டை வைத்துதான் புலனாய்வு செய்தோம் என்கிறது வருமானவரித்துறை. "அதெல்லாம் பொய் கிருஷ்ணப்ரியா துருப்புச் சீட்டாகவே மாறி சசிகலாவை காட்டிக் கொடுத்து விட்டார்' என சொல்லும் மன்னார்குடி வகையறாக்கள் அதற்கு ஒரு தெளிவான வரலாறையும் சொல்கிறார்கள்.
 

ammkசசிகலாவின் சொத்து பல லட்சம் கோடிகள். மணல் வியாபாரம் மூலமாகவே பல லட்சம் கோடிகளை சம்பாதித்தவர் சசிகலா. 91-96 கால கட்டத்திலேயே அவர் மீது வருமானவரித்துறையும் அமலாக்கத்துறையும் கண்காணித்து வழக்கு போட்டிருக்கின்றன. ஜெ.வின் மறைவுக்குப் பிறகு அவரது சொத்து மதிப்பை ஆராய்ந்த வருமான வரித்துறை 2.5 லட்சம் கோடி என மதிப்பிட்டது. (இந்த மதிப்பீடு நவ.17-19 நக்கீரன் இதழில் அட்டைப்படக் கட்டுரையாக வெளிவந்தது). தற்பொழுது 1674 கோடியே 50 லட்சத்துக்கு பணமதிப்பிழப்பின் போது சசி சொத்து வாங்கினார் என கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்கிறது. இது ஜெ.வின் உடல்நிலை மோசமானபோது நடந்த விவகாரத்தை மட்டும் அறிந்தவர் அளித்த தகவல். அது வேறு யாருமில்லை கிருஷ்ண ப்ரியாதான் என அடித்துச் சொல்கின்றன மன்னார்குடி சொந்தங்கள்.

கிருஷ்ணப்ரியா அவரது சகோதரர் விவேக்கை போலவே ஜெ.-சசி, இளவரசி ஆகிய மூன்று பெண்களால் வளர்க்கப்பட்ட பெண். அவரது கணவர் கார்த்திகேயனை சசிகலா நடத்திய மிடாஸ் கம்பெனி டைரக்டராக மறைந்த பத்திரிகையாளர் சோவுக்கு முன்பும், பின்பும் நியமித்து அழகு பார்த்தார் ஜெ. அப்பொழுதே மிடாசில் தயாரிக்கப்படும் பாட்டில்களுக்கு மூடி தயாரிக்கும் கம்பெனி ஒன்றை நடத்தி எல்லா மதுபான கம்பெனிகளும் என்னிடம்தான் மூடி வாங்க வேண்டும் என உத்தரவை போட்டு கோடிக்கணக்கில் பணம் பார்த்தார் கிருஷ்ணப்ரியா. மதன் என்கிற சினிமா பைனான்சியரோடு சேர்ந்து சினிமாவுக்கு பைனான்ஸ் செய்ததில் 80 கோடி ரூபாய் நஷ்டம் என சசிகலாவிடம் கதறிய கிருஷ்ணப்ரியா, சசிகலா சென்னை தி.நகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் ஒரு கிரவுண்ட் 8 கோடி மதிப்பில் எட்டு கிரவுண்ட் வைத்திருந்தார். அதில் 7.5 கோடி மதிப்புள்ள வீட்டை கட்டிக் கொண்டார். கிருஷ்ணப்ரியா பவுண்டேஷன் என்ற பெயரில் புயல் பாதிப்பு நேரங்களில் சமூக சேவைகளை செய்வதாக காட்டிக் கொள்வது கிருஷ்ணப்ரியாவின் வழக்கம்.


இவர் வீட்டில் ரெய்டு நடந்த 2017 நவம்பர் அன்றே வருமானவரித்துறையின் வலையிலும் அதன் தொடர்ச்சியாக பா.ஜ.க.வின் வலையிலும் வீழ்ந்து விட்டார். 2017 டிசம்பரில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஓட்டுப் பதிவுக்கு முன்னதாக ஜெ. அப்பல்லோவில் சிகிச்சை பெறும் போது எடுத்த வீடியோ ஒன்றை டி.டி.வி.தினகரன் சொல்லி வெற்றிவேல் வெளியிட்டார். அதை கடுமையாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் டி.டி.வி.யை கிண்டலடித்தார். அதன்பிறகு அதை மாற்றிக் கொண்டார். "வெற்றிவேல்தான் வீடியோவை வெளியிட்டு துரோகம் செய்துவிட்டார். அந்த வீடியோவை ஜெ.வின் அனுமதியுடன் சசிகலாதான் எடுத்தார்' என ஊடகங்களிடம் பேசினார். அவரது பேச்சை வெளியிட வேண்டாமென சசிகலா உத்தரவிட்டதால் அவரது சகோதரர் விவேக் நிர்வகிக்கும் ஜெயா டி.வி.யில் மட்டும் அது வரவில்லை.


"எனக்கு டெல்லியில் தொடர்பு இருக்கிறது. பா.ஜ.க.வினர் நம்முடன் சமரசமாக போக தயாராக இருக்கிறார்கள். அவர்கள் என்னுடன் பேசி இருக்கிறார்கள்' என கிருஷ்ணப்ரியா தனது அம்மா இளவரசியை நம்ப வைத்திருக்கிறார். அதனால்தான் டெல்லி பா.ஜ.க. சசிகலாவிடம் பேசி வருகிறது என்கிற செய்திகள் மன்னார்குடி வகையறாக்களிடமிருந்தே பறந்து கொண்டிருந்தன. அதற்கேற்றாற் போல் கிருஷ்ணப்ரியாவிற்கும் அவரது கணவருக்கும் ராஜ மரியாதை கொடுத்தது வருமானவரித்துறை. விவேக், ஜெய் ஆனந்த், திவாகரன் போன்றோர் சென்னைக்கும் டெல்லிக்கும் விசாரணை என அலைக்கழிக்கப்பட்டனர். இவர்களிடம் பல மணி நேரம் நடக்கும் விசாரணை கிருஷ்ணப்ரியாவிடம் பத்து நிமிடத்தில் முடிந்துவிடும். ஒருமுறை கூட கிருஷ்ணப்ரியாவை டெல்லிக்கு அழைத்து வருமானவரித்துறை விசாரிக்கவில்லை.

இந்த நேரத்தில்தான் சசிகலாவுக்கு சொந்தமான பினாமி சொத்துக்களை பற்றி கடந்த மாதம் ஒரு அறிக்கை வெளியிட்டது வருமான வரித்துறை. ஒரு பக்கம் பேசிக் கொண்டிருப்பதாகவும் பேரம் நடப்பதாகவும் கிருஷ்ணப்ரியா சொல்வதற்கு நேர்மாறாக வருமான வரித்துறை செயல்படுகிறதே என சந்தேகப்பட்ட சசிகலா, அந்த வழக்கில் சாட்சியங்கள் மீது சந்தேகம் உள்ளது. வருமானவரித்துறை எப்படி எனது சொத்துக்கள் பினாமி சொத்துகள் என முடிவுக்கு வந்தது என வழக்கறிஞர் மூலம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு கோர்ட்டில் பதிலளித்த வருமான வரித்துறை, சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்பு கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கியிருந்தார். அப்பொழுது பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது, புதுவை ஸ்ரீலட்சுமி ஜுவல்லரி உரிமையாளர் நவீன் பாலாஜிக்கு சொந்தமான ஓசேன் பிரே பீச் ரிசார்ட்டை வழக்கறிஞர் நாமக்கல் செந்தில் மற்றும் அமைச்சர் சம்பத்தின் உதவியாளர் குமாருக்கு புரோக்கர் கமிஷன் 12 கோடி கொடுத்து 168 கோடி ரூபாயில் வாங்கப்பட்டது. அதற்கான பணம் மூன்று குட்டி யானை வண்டிகளில் அனுப்பப்பட்டது. கோவையைச் சேர்ந்த செந்தில் பேப்பர் மில்லை 400 கோடிக்கு வாங்கினார். கிருஷ்ண ப்ரியாவின் சகோதரர் விவேக் சென்னை பின்னி மில் வளாகத்தில் கட்டப்பட்டு வரும் ஸ்பெக்ட்ரம் மாலினை வெறும் 247 கோடி ரூபாய்க்கு கேட்டார். அந்த மாலின் உரிமையாளர் விவேக்கிற்கு விற்க முன்வரவில்லை. மாநகராட்சி, எம்.எம்.டி.ஏ.வை வைத்து மிரட்டி 130 கோடி செல்லாத நோட்டுகளாகவும், 117 கோடி ரூபாய் நல்ல பணமாகவும் தரப்பட்டது. அதேபோல் மதுரை மில்லினியம் மால், பத்மாவதி சர்க்கரை ஆலை, காற்றாலைகள், பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள வணிக வளாகம் ஆகியவற்றை வழக்கறிஞர் நாமக்கல் செந்தில், கொடநாடு மேனேஜர் நடராஜன் ஆகியோர் மூலமாக 1674.50 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது என தெளிவாக அறிக்கை கொடுத்துள்ளது வருமானவரித்துறை. (மேற்கண்ட சொத்துக்கள் பற்றிய பெரும்பான்மையான விவரங்கள் புகைப்படத்துடன் நக்கீரனில் நவ.2017 அன்றே வெளியிடப்பட்டது).

2017 நவம்பரில் நடந்த ரெய்டில் 185 இடங்கள் ஆராயப்பட்டன. அதில் கிருஷ்ண ப்ரியா வீட்டில் கைப்பற்றப்பட்டவை மட்டும் தான் வருமானவரித்துறையிடம் சிக்கியுள்ளது. மற்ற யாரும் சிக்கவில்லை. ஏன் என விசாரித்த போதுதான், கிருஷ்ணப்ரியா அப்ரூவர் ஆன விவரம் தெரிய வந்தது. விரைவில் அவர் பா.ஜ.க. வில் சேருவார் என்கிறது மன்னார்குடி வட்டாரம்.

இதுபற்றி சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியை தொடர்பு கொண்டோம். அவர் கர்நாடகத்தில் இருப்பதாக தொலைபேசி சொன்னது. கிருஷ்ணப்ரியாவின் கருத்தறிய அவரது அறக்கட்டளையின் எண்ணில் தொடர்பு கொண்டோம்.

பிரசாத் என்பவர் பேசினார். நாம் சொன்ன தகவல்களை கிருஷ்ணப்ரியாவிடம் சொல்வதாக சொன்னார். அவரது கருத்து கிடைத்தால் வெளியிட நக்கீரன் தயாராக உள்ளது. அதேநேரத்தில், இன்னும் என்ன தகவல்களை கிருஷ்ணப்ரியா பா.ஜ.க. வசம் சொன்னார் என்பது தான் தற்பொழுது மன்னார்குடி வட்டாரத்தில் எதிரொலிக்கும் பெரிய கேள்வி.


 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்