Advertisment

டெல்லிக்கு போன தகவல்... மோடி அதிரடி! சசிகலா பினாமி சொத்து முடக்கம்!

s

Advertisment

சசிகலாவிற்கு எதிரான வருமானவரித் துறையின் பிடி மீண்டும் இறுகதுவங்கியிருக்கிறது. சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்ததும் ஜெயலலிதா இல்லத்திற்கு எதிரே புதிதாக கட்டப்பட்டு வரும் பங்களாவில் அவர் குடியேறத் திட்டமிருந்த நிலையில், 24 ஆயிரம் சதுர அடி கொண்ட அந்த பங்களா உட்பட 400 கோடி ரூபாய் மதிப்பிலான புதிதாக வாங்கப்பட்ட சொத்துக்களை முடக்கியிருக்கிறது மத்திய அரசின் வருமானவரித்துறை. இந்த அதிரடி நடவடிக்கை தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதன் பின்னணியில் பல வில்லங்கங்கள் இருப்பதாக சுட்டிக் காட்டுகின்றது வருமானவரித்துறை வட்டாரம்.

சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட பிறகு கடந்த 2017 நவம்பரில் தமிழகம் முழுவதும் சசிகலாவின் குடும்ப உறவினர் மற்றும் அவரது பினாமிகளின் வீடுகள், அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தியது வருமானவரித்துறை. தமிழகம், புதுச்சேரி மற்றும் கர்நாடகா என சுமார் 187 இடங்களில் நடத்தப்பட்ட அந்த ரெய்டு 5 நாட்கள் நீடித்தது. அந்த சோதனையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்ட காலத்தில் 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் மூலம் பினாமிகளின் பெயர்களில் 1,674 கோடிக்கு சசிகலா வாங்கிய சொத்துக்களுக்கான ஆவணங்களைக் கைப்பற்றினர். மேலும், 1,900 கோடி ரூபாய் பணபரிமாற்றம் செய்திருப்பதையும், 247 கோடி ரூபாயை கடனாக கொடுத்திருப்பதையும் கண்டறிந்தது வருமானவரித்துறை.

இதுதொடர்பாக, பினாமிகள் பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகளை செய்துவந்த வருமானவரித்துறை, சசிகலாவுக்கும் நோட்டீஸ் அனுப்பியதுடன் சம்மந்தப்பட்ட சொத்துகளை முடக்கியது. அதேசமயம், பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட காலத்தில் 1900 கோடி ரூபாய் பணபரிமாற்றம் செய்ததாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து பதில் அனுப்பினார் சசிகலா. இதனை வருமானவரித்துறையினர் ஏற்கவில்லை.

Advertisment

ssss

பல மாதங்களாக கிடப்பில் வைக்கப்பட்டிருந்த இந்த விவகாரத்தை மீண்டும் தூசு தட்டியுள்ள வருமானவரித் துறை அதிகாரிகள், போயஸ்கார்டனில் ஜெயலலிதா இல்லத்துக்கு எதிரே சசிகலா புதிதாக பங்களா கட்டி வரும் 24 ஆயிரம் சதுர அடி கொண்ட நிலம், தாம்பரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் வாங்கப்பட்ட 200 ஏக்கர் நிலங்கள், பெரம்பூரிலுள்ள சினிமா தியேட்டர், கிழக்கு கடற்கரை சாலையில் வாங்கப்பட்டுள்ள ரிசார்ட்ஸ், ஹைதராபாத்தில் அரிச்சந்திரா எஸ்டேட் நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டுள்ள 60 சொத்துகள் என சுமார் 400 கோடி மதிப்பிலான சொத்துகளை தற்போது முடக்கி யிருக்கிறார்கள். இதுகுறித்து சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது வருமானவரித்துறை. அந்த நோட்டீஸைகண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார் சசிகலா. பாஜக தலைமையுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் கர்நாடக ஆர்.எஸ்.எஸ்.காரரும் தொழிலதிபருமான வெங்கடேஸ்வரன் மூலம் தனது அதிர்ச்சியை கோபமாக பாஜக தலைமைக்கு சசிகலா தெரிவித்திருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ss

"சசிகலாவின் பினாமிகள் சொத்துகள் குறித்து வருவானவரித் துறையின் புலனாய்வு தரப்பில் விசாரித்தபோது, ‘அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அட்மிட்டாகியிருந்த காலகட்டத்தில் செல்லாத நோட்டுகளை பயன்படுத்தி குடும்ப உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் ஏராளமான சொத்துகளை சசிகலா வாங்கி குவித்திருப்பதாக எங்களுக்கு கிடைத்த தகவல்களை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு, "க்ளீன் மணி ஆப்ரேசன்' மூலம் அதிரடி வேட்டையை 2017 நவம்பரில் நடத்தினோம்.

அந்த வேட்டையில் நாங்களே எதிர்பார்க்காத சொத்து விபரங்களெல்லாம் கிடைத்தன. சொத்துகளை வாங்குவதற்கும், பணத்தை மாற்றுவதற்கும் சுமார் 4,500 கோடி ரூபாய் பழைய நோட்டுக்களை பயன்படுத்தியிருக்கிறார் சசிகலா. அதாவது, சொத்துகளை வாங்க 1,674 கோடியே 50 லட்சமும், பணத்தை மாற்றுவதற்காக 1,900 கோடியே 20 லட்சமும் மற்ற வெவ்வேறு வகையில் 1500 கோடியும் என செல்லாதாக்கப்பட்ட நோட்டு களை பயன்படுத்தியுள்ளார். 1,674 கோடிக்கு வாங்கப்பட்ட சொத்துகளை அவருடைய பெயரில் பதிவு செய்யாமல் சொத்துகள் யாருடையதோ அவர்களது பெயரிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் பினாமிகள் பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகளை பதிவு செய்தோம்.

உதாரணமாக, பாண்டிச்சேரி லக்ஷ்மி ஜூவல்லரி நிறுவனத்துக்கு ஓசியன் ஸ்பிரே கடற்கரை ரிசார்ட் இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் பாண்டிச்சேரி பார்டரில் இருக்கும் அந்த ரிசார்ட்டை 168 கோடிக்கு வாங்கியிருக்கிறார் சசிகலா. இதற்காக, தற்போதைய அமைச்சர் ஒருவரும், சொத்துக்குவிப்பு வழக்கினை கவனித்துகொண்ட வக்கீல் ஒருவரும் லக்ஷ்மி ஜுவல்லரி உரிமையாளரிடம் டீலிங் பேசி முடித்தனர். உடனடியாக, 148 கோடி கைமாறியிருக்கிறது. ஆதார ஆவணங்களின் அடிப்படையில் பினாமி சொத்துகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அந்த ரிசார்ட்டை கொண்டு வந்தோம். ஆனால், ரிசார்ட்டின் இயக்குநர் நவீன்பாலாஜி, இது பினாமி சொத்துகிடையாது; எங்கள் ரிசார்ட்டை விற்க சசிகலாவிடம் ஒப்பந்தம் செய்திருந்தோம். ஆனால், அது நிறைவேறவில்லை. ஒப்பந்தம் ரத்தாகி விட்டது என எங்களது விசாரணையில் சொன்னார்.

இதனை நாங்கள் ஏற்க மறுத்ததால் எங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். அதன் விசாரணையின்போது, ஒப்பந்தத்தின்படி ரிசார்ட்டின் பங்குகள் சசிகலா தரப்புக்கு மாற்றப்பட்டு அதற்குரிய பணத்தையும் ஹோட்டல் நிர்வாகம் பெற்றுக்கொண்டு விட்டது. எங்களின் ஆவணங்களின்படி ஹோட்டல் விற்பனை முடிந்துவிட்டதால் சொத்து சசிகலாவுக்கானது. பங்குகள் சசிகலா தரப்பினரிடமும் ஹோட்டல் நிர்வாகம் சம்மந்தப்பட்டவரிடமும் இருப்பதால் இதில் பினாமி சொத்து பணபரிமாற்றம் உறுதியாகியிருக்கிறது என வாதிட்டிருக்கிறோம்.

இப்படி பினாமிகள் பெயரில் சசிகலா வாங்கிய ஒவ்வொரு சொத்துக்கும் ஒவ்வொரு பின்னணி இருக்கிறது. பெரும்பாலான சொத்துக்கள், நிறுவனங்கள் பெயரில் வாங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 8 நிறுவனங்கள் இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா மரணமடைந்து விட்டால், மத்திய அரசு எப்படி வேண்டுமானாலும் தமக்கு எதிராக திரும்பலாம் என யோசித்தே, புதிதாக வாங்கிய இந்த சொத்துக்களை தனது பெயரில் மாற்றி பதிவு செய்துகொள்ளாமல், சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களின் பெயரிலேயே தொடர அனுமதித்தார் சசிகலா.

அதனடிப்படையில், புதுச்சேரி ரிசார்ட் தவிர, பெரம்பூர் ஸ்பெக்ட்ரம் மால், மதுரையில் மில்லேனியம் மால், சென்னை ஒரகடத்தில் தனியார் சர்க்கரை ஆலைகள், கோவையில் பேப்பர் மில், சென்னை ராஜீவ்காந்தி சாலையிலுள்ள சாப்ட்வேர் நிறுவனம், சுரானா குருப்பின் 54 காற்றாலைகள், கோவை மேகலா குரூப்பிடமிருந்து 5 காற்றாலைகள் என கண்டறிந்துள்ளோம்.

அதிரடி சோதனைகளில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் நாங்கள் இயங்கியபோது ஒரு கட்டத்தில், மேற்கொண்டு நடவடிக்கை வேண்டாம் என டெல்லியிலிருந்து உத்தரவு வந்ததால் அமைதியானோம். இந்த நிலையில், கடந்த வாரம், சசிகலா சொத்து விவரங்களில் கவனம் செலுத்தலாம் என மேலிடத்திலிருந்து மீண்டும் உத்தரவு வந்ததால் மறுபடியும் சுறுசுறுப்பாகி, போயஸ்கார்டன் புது பங்களா உட்பட 400 கோடி மதிப்பிலான சொத்துக்களை தற்போது முடக்கியிருக்கிறோம்'' என்று விவரித்தனர்.

பல மாதங்களாக கிடப்பில் வைக்கப்பட்ட சசிகலாவுக்கு எதிரான பினாமி சொத்து வில்லங்கங்கள் திடீரென பூதாகரமாகியிருப் பதன் பின்னணி குறித்து சசிகலா தரப்பு டெல்லி மீடியேட்டர்களிடம் விசாரித்தபோது, "சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அதாவது அடுத்த வருட ஜனவரியில் சட்டப்படி சசிகலா விடுதலையாவார். ஆனால், தேர்தலுக்கு முன்பாக அவர் விடுதலையாவதையும், விடுதலையாகும்போது அவர் போயஸ்கார்டன் புது பங்களாவில் குடியேறுவதையும் எடப்பாடி உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் விரும்பவில்லை. ஜெயலலிதா நினைவில்லத்துக்கு எதிரே இன்னொரு அதிகார மையம் உருவாகக்கூடாது என அவர்கள் நினைக்கின்றனர்.

சசிகலாவின் போயஸ்கார்டன் சொத்தும் வருமானவரித்துறையிடம் சிக்கியிருப்பது எடப்பாடிக்குதெரியும். அதனால் சசிகலாவின் புது பங்களாவும் முடக்கப்பட வேண்டும் என திட்டமிட்டு, சமீபத்தில் டெல்லி சென்ற தனது அரசின் மூத்த உயரதிகாரிகள் மூலம் காய்களை நகர்த்தியிருக்கிறார் எடப்பாடி. நிதித்துறை உயரதிகாரிகளை ரகசியமாக சந்தித்த தமிழக அதிகாரிகள் இருவர், இது குறித்து பேசியுள்ளனர். அந்த சந்திப்பின்போதே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனிடமும் விவாதித்துள்ளனர். அந்த சந்திப்பு சுமுகமாக முடிந்திருக்கிறது. அதனடிப்படையிலேயே வருமான வரித்துறைக்கு டெல்லியிலிருந்து உத்தரவு வர, தற்போது புதிய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன'' என்கிறார்கள்.

ssss

இதற்கிடையே உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "சசிகலாவுக்கு ஆதரவாக இருக்கும் சுப்பிரமணியசாமி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வாய்ப்புகிடைக்கும் போதெல்லாம் சீண்டிய படியே இருக்கிறார். அதனால் சாமி மீது தீராத பகை நிர்மலாவுக்கு இருக்கிறது. நவம்பர் மாதத்திற்குள் சசிகலாவை வெளியே கொண்டு வந்து போயஸ் கார்டனிலிருந்தே அவர் அரசியல் செய்ய வேண்டும் என பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார் சாமி. அதனை தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, வருமான வரித்துறையிடம் சிக்கிய சொத்துகள் மிக மிக குறைவுதான். ஆனால், 1 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு அதிகமான சொத்துகள் சசிகலா தரப்பிடம் இருப்பதாக கண்டறியப் பட்ட நிலையில், அதில் 50 சத வீதத்தை ஒப்படைக்குமாறு அதிகார பீடம் பேரம் பேசியிருக்கிறது. அதற்கு சசிகலா ஒப்புக்கொள்ளாததாலேயே மீண்டும் அதிரடி காட்டுகிறது வருமானவரித்துறை'' என்கிறார்கள்.

vv

அதிமுகவுடன் சசிகலா- தினகரனை இணைத்து அதிமுகவை வலிமையாக்க மத்திய மோடி அரசு திட்டமிட்டுள்ளது என்ற எதிர்பார்ப்பு, அ.தி.மு.க தரப்பினராலேயே இருந்த நிலையில், அதற்கு நேர்மாறாக வருமான வரித்துறையின் தற்போதைய நடவடிக்கை அமைந்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையால் சசிகலாவின் விடுதலைக்கு பின்னடைவு என சொல்லப்படுவது குறித்து அ.ம.மு.க.வின் தலைவர்களில் ஒருவரும் டி.டி.வி.தினகரனின் மனசாட்சி என சொந்தகட்சியினரால் சொல்லப்படுபவருமான வெற்றிவேலிடம் கேட்டபோது, "வருமானவரித்துறை நடவடிக்கை என்பது வழக்கமானதுதான். இதற்கும் சசிகலாவின் விடுதலைக்கும் சம்பந்தமில்லை. விரைவில் அவர் விடுதலையாவார். எங்களின் அரசியலில் எந்த பின்னடைவும் இல்லை'' என்கிறார் அழுத்தமாக.

poes garden Chennai property sasikala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe