Skip to main content

போயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை! - விரைவில் அரசியல் எண்ட்ரி?

 

ddd

 

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, அங்கு உள்ள தனியார் சொகுசு விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். பின்னர் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி காலை, கார் மூலம் சென்னை புறப்பட்டு வந்தார். வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர். 

 

சென்னை வரும் வழியில் வாணியம்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ''தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன், அதிமுக அலுவலகத்துக்குச் செல்வீர்களா என நிறைய பேர் கேட்கின்றனர். பொறுத்திருந்து பாருங்கள், என்ன நடக்கப்போகிறது என்று.

 

தொண்டர்களின் உற்சாக வரவேற்பைக் கண்டு நெகிழ்ச்சி அடைகிறேன். தொண்டர்களின் அன்புக்கும், மக்களின் அன்புக்கும் நான் எப்போதுமே அடிமை. எம்ஜிஆர் கூறியதைப்போல, ‘அன்புக்கு நான் அடிமை, தமிழ்ப் பண்புக்கும் நான் அடிமை, கொண்ட கொள்கைக்கும் நான் அடிமை’, தமிழ் மக்களுக்கும், தொண்டர்களுக்கும் என்றுமே நான் அடிமை.

 

அடக்குமுறைக்கு என்றுமே நான் அடிபணிய மாட்டேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அவசர, அவசரமாகத் திறக்கப்பட்டது, அதன்பிறகு அதே அவசர கதியில் மூடப்பட்டது ஏன்? என்பது தமிழக மக்களுக்குத் தெரியும். என் வாகனத்தில் அதிமுக கொடியைப் பயன்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்திருப்பது அவர்களது பயத்தைக் காட்டுக்கிறது.

 

அதிமுகவைக் கைப்பற்றுவீர்களா? எனச் சிலர் கேட்கின்றனர். மிக விரைவில் உங்களையும் (செய்தியாளர்கள்) மக்களையும் நேரில் சந்திப்பேன். அப்போது சொல்கிறேன், அதுவரை பொறுத்திருங்கள்.

 

அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும். எத்தனையோ முறை அதிமுக சோதனைகளைச் சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் ஃபீனிக்ஸ் பறவைபோல மீண்டு எழுந்து வந்துள்ளது கட்சி. ஜெயலலிதா வழி வந்த பிள்ளைகளாகிய நாம் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பமாகும்.

 

மீண்டும் ஆட்சியில் அமரக்கூடாது என ஒரு கூட்டம் தனியாகச் செயல்படுகிறது. அதை முறியடிக்க வேண்டும். மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும். வளர்க அதிமுக, எம்ஜிஆர் நாமம் வாழ்க, ஜெயலலிதா நாமம் வாழ்க'' என தெரிவித்தார். 

 

அதனைத் தொடர்ந்து சென்னை நோக்கி வந்த சசிகலா, சென்னை ராமாபுரத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம், ஜானகி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அவரது வாரிசுகளிடம் நலம் விசாரித்தார்.

 

பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பிய சசிகலா மௌனமாகவே இருந்தார். இனி அவர் அதிமுக பக்கம் வரமாட்டார்; அவர் வேறு, அதிமுக வேறு என்று முடிவாகிவிட்டது என அதிமுகவின் இ.பி.எஸ். தரப்பினர் பேசிவந்தனர். இந்நிலையில், ஜெயலலிதா பிறந்தநாள் அன்று ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு, மௌனத்தைக் கலைத்தார் சசிகலா. “உண்மை தொண்டர்கள் இந்த ஆட்சி நீடிக்க பாடுபட வேண்டும்” என பேசினார் சசிகலா. அந்தப் பேச்சு முடிந்ததற்குப் பிறகு சசிகலா சந்தித்த முதல் நபர் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார். அதன்பிறகு, திரை உலகைச் சேர்ந்த பாரதிராஜா, அமீர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் சந்தித்தனர்.  

 

சசிகலாவை சந்தித்த அனைவரும், “இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு” எனத் தெரிவித்தனர். ஆனால், இதில் ஒரு அரசியல் பின்னணியும் எதிரொலியும் இருக்கிறது என்றும் கருதப்பட்டது. 

 

இதனிடையே விசுவாசத்தில் நிகழ்கால பரதன் என ஓ.பன்னீர்செல்வம் விளம்பரம் செய்திருந்தார். அதில், ''ஒருவருக்கு முதலமைச்சர் அரியாசனத்தை வழங்கிவிட்டு, மீண்டும் அது திரும்பப் பெறப்பட்டதாக வரலாறே இல்லை. அந்தப் புதிய வரலாற்றை படைத்துக் காட்டியவர் அன்பு சகோதரர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்'' என ஜெயலலிதா பேசியதை குறிப்பிட்டிருந்தார். எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தீர்கள், அவர் உங்களை அதிமுக கொடியையே கட்டவிடவில்லை என்று சசிகலாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார் என்று விவாதங்கள் நடந்து வந்தன.

 

இந்த பரபரப்பான சூழ்நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தல் தேதி நெருங்கி வந்தது. டிடிவி தினகரன் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பு பட்டியலில் படிப்படியாக வெளியிட்ட நிலையில், சசிகலா திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டார். 

 

அதில், “நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியின் எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் புரட்சித் தலைவர் மற்றும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.

 

நம்முடைய பொது எதிரி, தீயசக்தி என்று அம்மா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து விவேகமாக இருந்து, அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும். 

 

என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள். அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன்.

 

நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. புரட்சித் தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். 

 

நான் அரசியலைவிட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியிடமும் எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இனி சசிகலா அரசியலில் ஈடுபடமாட்டார் என்றும், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அவர் அரசியலில் ஈடுபடுவார் என்றும் விவாதங்கள் நடந்து வந்தன. 

 

சென்னையில் உள்ள கிருஷ்ணப்பிரியாவின் தி.நகர் இல்லத்தில் தங்கியிருந்த அவர், கடந்த மாதம் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்தவாறே ஒருமாத காலமாக தமிழகம் முழுவதும் கோயில்களுக்குச் சென்று சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த வாரம் சென்னை திரும்பிய சசிகலா, தி.நகரில் உள்ள கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கியுள்ளார்.

 

ddd

 

இந்தநிலையில்தான், நீண்ட நாட்களாக போயஸ் கார்டனில் தனக்காக கட்டப்பட்டு வரும் வீட்டை நேற்று (09.04.2021) சசிகலா நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, விவேக் ஜெயராமன் மற்றும் சசிகலாவின் உறவினர்கள் உடனிருந்தனர். வேதா நிலையம் போன்ற அமைப்பிலேயே இந்த வீடு கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஊரடங்கு காரணமாக கட்டட பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதனால், சுமார் 2 மணி நேரமாக அங்கேயே இருந்து கட்டட பணிகளை விரைவில் முடிக்க சசிகலா அறிவுறுத்தியதாக தெரிகிறது.

 

தேர்தல் முடிவு அதிமுகவுக்கு சாதகமாக வராது என தெரிந்த சசிகலா, அதனால்தான் தேர்தலுக்கு முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டு கோயில் கோயிலாக சென்றதாகவும், தேர்தல் முடிவுக்குப் பின்னர் தனது தலைமையில் அதிமுக ஒன்றிணையும் என்றும் அவர் நம்புவதாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் தன் தோழி ஜெயலலிதா அரசியல் பயணம் தொடங்கிய போயஸ் கார்டனிலேயே தானும் அரசியல் பயணத்தை தொடங்க திட்டமிட்டு, விரைவில் போயஸ்கார்டன் இல்லப் பணிகளை முடிக்கச் சொல்லி இரண்டு மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.