Advertisment

சசிபெருமாளை நினைவிருக்கிறதா 'குடி'மக்களே..!

மது ஒழிப்புக்காக போராடி உயிர் விட்ட சசிபெருமாள் இறந்து இன்றோடு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஆனால், அவர் எந்த நோக்கத்துக்காக உயிரிழந்தாரோ அந்த எண்ணம் நிறைவேறியதா என்றால், இல்லை என்பதே எல்லோருடைய பதிலாக இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அங்கிருந்த செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார் சசி பெருமாள். 6 மணி நேரத்திற்கு மேலாக செல்போன் டவரில் இருந்த அவர், ரத்தவாந்தி எடுத்து அங்கேயே உயிரிழந்தார். அதுவரை அவரின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருந்த தமிழக ஊடகங்களும், அரசியல்கட்சிகளும் அவருடைய இறப்புக்கு பிறகு அடுத்த சில தினங்களுக்கு மது விலக்கு பற்றிய விவாதங்களை தொலைக்காட்சிகளும், அரசியல் கட்சிகள் மதுவிலக்கு பற்றிய உறுதி மொழிகளையும் மறக்காமல் அளித்தனர். ஆனால், சில தினங்களிலேயே அந்த உறுதிமொழிகள் காற்றில் பறந்தது.

Advertisment

Sasi Perumal Memorial Day

தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை வைக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையே துச்சமாக மதித்த மாநில அரசு, ஒரு தனிப்பட்ட மனிதரின் உயிரிழப்பை பெரிதுபடுத்துமா என்று நமக்கு நாமே கேள்வி எழுப்பி கொள்ளலாமே தவிர, இதை ஆள்பவரிடம் நிச்சயம் எதிர்பார்க்க முடியாது. இல்லை என்றால், தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை அமைக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த சில நாட்களில், அத்தகைய நெடுஞ்சாலைகளை எல்லாம் மாநில சாலைகளாக மாற்றி 'வரலாறு படைக்க' நிச்சயம் அவர்களுக்கு மனது வந்திருக்காது. ஆனால், வரவை மட்டும் எதிர்பார்க்கும் அவர்களிடம் மனிதத்தையும், உயிர்களின் மதிப்புகளை பற்றி பேசினால் நிச்சயம் தவறு கேட்பவர்களையே சாரும். அந்த வகையில் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி வருவாயை தரும் அந்த தொழிலை கடந்த 40 ஆண்டுகளாக எதோ ஒரு வகையில் நடத்த மாநில அரசுகள் அனுமதி தந்துள்ளது. தற்போது, மாநில அரசே அதனை நடத்தி வருவதுதான் வேதனையின் உச்சமாக இருகிறது என்கிறார்கள் மதுவை எதிர்த்து போராட்டம் நடத்தும் சமூக ஆர்வலர்கள். இதுதொடர்பாக பல்வேறு வினாக்களை அவர்கள் எழுப்பினாலும், அது ஆள்பவர்களின் கவனத்தை பெறவில்லை. அப்படி பெற்றாலும் அடுத்த சில தினங்களில் அவர்கள் வேலூருக்கோ, பாளையங்கோட்டைக்கோ அனுப்பபடுகிறார்கள்.

Advertisment

 Sasi Perumal Memorial Day

அரசியல் கட்சிகள் மதுவுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதாக கூறினாலும், எந்த அரசியல் கட்சிகளும் மது குடிப்பவர்களை தங்கள் கட்சியில் சேர்க்க மாட்டோம் என்று கூறவில்லை. அல்லது குறைந்தபட்சம் தங்கள் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்று கூட சொல்லவில்லை. கட்சி ஆரம்பித்ததில் இருந்து மதுவுக்காக போராடும் கட்சி நாங்கள் தான் என்று கூறும் கட்சிகள் கூட, மாநாடுகளுக்கு தொண்டர்களை அழைத்து வரும்போது பிரியாணியும், பாட்டிலும் உண்டு என்ற உறுதிமொழியை கொடுத்தே அவர்களை வாகனங்களில் ஏற்றுகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மதுவை ஒழித்துவிடும் என்பதெல்லாம் தண்ணீரில் கோலம் போடுவதை போன்றுதான். அதிமுக ஆட்சியை பாஜக கலைப்பது கூட நடக்கலாம், ஆனால், ஒரு காலும் மதுவை புறந்தள்ள அரசியல் கட்சிகள் முயற்சிக்காது என்பதே கடந்த கால வரலாறு சொல்லும் உண்மை. கட்சிகள் அந்த நிலைக்கு வந்தது உண்மை என்றாலும், அவ்வாறு வருவதற்கு வாய்ப்புகளை யார் உருவாக்கி கொடுத்தார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

ஒட்டுக்கு பணம் கொடுப்பதை போலத்தான் இதுவும். முதல் முறை மக்களுக்கு பழக்கம் காட்டியதால்தான் இன்று பணம் கொடுக்கவில்லை என்றால் வேட்பாளர்களின் வீட்டுக்கு வந்து பொதுமக்கள் வசூல் செய்துவிட்டு போகும் நிலைக்கு ஜனநாயகம் அதள பாதாளத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசாங்கம் இதுகுறித்து தீர்க்கமான முடிவை எடுக்காவிட்டால் தமிழகத்தின் எதிர்காலம் சூனியமாகும் என்பதே உண்மை. மதுவால் வரும் வருமானத்தை வைத்து என்ன பெரிய மக்கள் நலத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்களிடம் வாங்கும் பணத்தை வைத்து குடிகாரர்கள் மறுவாழ்வு மையங்களை வேண்டுமானால் அதிகரிக்கலாமே அன்றி, மக்களின் உயிரை எடுத்து, அதில் வரும் வருவாயை வைத்து எந்த காரியத்தையும் செய்ய இயலாது என்பதை அரசுகள் உணர வேண்டும். அருகில் இருக்கும் கேரளா அதனை சாதித்து காட்டியுள்ளது. இந்தியாவிலேயே படிப்பறிவு குறைவாக உள்ள பிகாரில் கூட அதனை அரசுகள் சாதித்துக்காட்டியுள்ளது. மிகப்பெரிய இளைஞர் படையை வைத்துள்ள தமிழகம், கடந்த சில வருடங்களாக மதுவின் படியில் சிக்கி சீரழிவதை அரசாங்கம் தடுக்க வேண்டும். இதற்கான முன் முயற்சிகளை இப்போதே எடுக்காவிட்டால், சில ஆண்டுகளில் மதுகடைகள் இருக்கும், ஆனால் மது குடிக்க ஆட்கள் இல்லாமல் போவார்கள்.

மதுக்குடிப்பதை நாங்கள் எப்படி தடுக்க முடியும் என்று ஆளும் தரப்பை சேர்ந்த மக்கள் பிரதிநிதி ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலாக கூறினார். பொதுமக்கள் லாட்டரி சீட்டு வாங்குவதை எப்படி தடுத்தீர்களோ அப்படிதான் இதையும் தடுக்க வேண்டும் என்பதை அவருக்கு யாராவது ஞாபகப்படுத்த வேண்டும். ஏனென்றால் தெருவுக்கு தெரு டாஸ்மாக்கை திறந்து வைத்துவிட்டு, மது குடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கூறுவது எந்த வகையிலும் நியாயமாக இருக்காது. அரசாங்கங்கள் நெறி தவறும்போது பொதுமக்களிடம் அந்த நெறியை எதிர்பார்த்து பயனில்லை. ஆனால், உயிர் நம்முடையது என்ற எண்ணம் அவர்களுக்கு வரும் வரையில் டாஸ்மாக் வருமானம் விண்ணைத்தொடும் என்பதே உண்மை. ஒரு சசி பெருமாளோ அல்லது நந்தினியோ மதுவை எதிர்த்து போராடினால் மட்டுமே போதாது. ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் அந்த எண்ணம் வரும் போதே பூரண மதுவிலக்கு சாத்தியப்படும். அதுவே சசிபெருமாளுக்கு நாம் செய்யும் நியாயமாக இருக்கும்.

admk liquor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe