Advertisment

சர்வோதய சங்க ஊழல்! சிக்குகிறார் சிவக்குமார்! -'அதிகாரிகளின் அந்த தேவைகளை பூர்த்தி செய்தது அம்பலம்'

Sarvodaya Sangh scandal! Sivakumar gets caught!!

கோவை ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கத்தில் நடந்துள்ள பல கோடி ரூபாய் ஊழலை மத்திய அரசின் கேவிஐசி துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்க, அவர்களுக்கு சர்வோதய சங்க செயலாளர் சிவக்குமார் மது மற்றும் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்து குஷிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisment

கோவை மாவட்டம் ரெட் ஃபீல்ட்ஸ் பகுதியில் ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் 28 கிளைகள் உள்ளன. கிராமப்புற கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில், அவர்களுக்கு பட்டு பாவு, ஊடு நூல் கொடுத்து, அதன்மூலம் பட்டுச்சேலைகள் நெய்து, விற்பனை செய்வதுதான் சர்வோதய சங்கங்களின் முதன்மைப் பணி ஆகும்.

Advertisment

மத்திய அரசின் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் எனப்படும் கேவிஐசி துறையின் கண்காணிப்பின் கீழ் இந்த சங்கங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில், கோவை ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கம், மத்திய, மாநில அரசுகள் வழங்கிய பல கோடி ரூபாய் ஊக்கத்தொகையை போலி நெசவாளர்கள் பெயரில் வரவு வைத்து, மோசடி செய்ததாக புகார்கள் கிளம்பின.

இதுகுறித்து சிபிஐ போலீசார், கடந்த இரண்டு ஆண்டாக நடத்திய தீவிர விசாரணையில், ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கத்தின் ஜக்கம்பட்டி கிளையில் மட்டும் முதல்கட்டமாக 3 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

ஆவாரம்பாளையம் சர்வோதய சங்க செயலாளர் சிவக்குமார்தான் இந்த ஊழலுக்கு மூளையாகச் செயல்பட்டிருப்பதும், ஜக்கம்பட்டி கிளை முன்னாள் மேலாளர் பாலாஜி, சேலம் மாவட்டம் தாரமங்கலம் அத்தராம்பட்டியைச் சேர்ந்த பட்டுச்சேலை புரோக்கர்கள் சதாசிவம், கவுதமன், இளையராஜா ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்துள்ளது. தற்போது, இந்த விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Sarvodaya Sangh scandal! Sivakumar gets caught!!

இதுகுறித்து 2023, டிச. 12 - 15 மற்றும் டிச. 20 - 22 நாளிட்ட நக்கீரன் இதழ்களில் விரிவாக எழுதியிருக்கிறோம். ஊழல் புகாரில் சிக்கிய சிவக்குமார், சிபிஐ போலீசாருக்கே விபூதி அடிக்கப் பார்த்தது, ஊழலை மறைக்க அதிகாரிகளை மது மற்றும் பாலியல் தேவைகளை கொடுத்து குளிப்பாட்டியது உள்ளிட்ட மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் நக்கீரன் கள விசாரணையில் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக சிபிஐ போலீசார் வட்டாரங்களில் விசாரித்தோம்.

''மோசடி புகார்கள் குறித்து விசாரிப்பதற்காக சிபிஐ இன்ஸ்பெக்டர் மாணிக்கவேல், எஸ்ஐ சீனிவாசன் ஆகியோர், ஆவாரம்பாளையம் சர்வோதய சங்க செயலாளர் சிவக்குமாரை சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும்படி கூறியுள்ளனர். அவரோ, சங்க பொருளாளர் பழனிசாமி, மேலாளர் சுருளிநாதன் ஆகியோரை அனுப்பி வைத்துள்ளார்.

இதனால் உஷ்ணம் அடைந்த சிபிஐ, 'என்ன செய்வீர்களோ தெரியாது. ஆகஸ்ட் 16ம் தேதி காலை 10:00 மணிக்கெல்லாம் நீங்களே நேரில் ஆஜராக வேண்டும். நீங்கள் வராவிட்டாலோ, மீண்டும் வேறு யாரையாவது அனுப்பி வைத்தாலோ அடுத்த 10 நிமிடத்தில் உள்ளூர் போலீசார் மூலம் உங்களை தூக்கி 'உள்ளே' வெச்சிடுவோம்,' என சிவக்குமாரிடம் செல்போனிலேயே காய்ச்சி எடுத்துள்ளது.

இதனால் 'டரியல்' ஆன சிவக்குமார், கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்துள்ளார். சொன்ன தேதி, சொன்ன நேரத்தில் ஆஜரானார். அன்று மாலை 5:45 மணி வரை துருவி துருவி விசாரித்ததில், அந்த ஏ.சி., அறையிலும் அவருக்கு 'குப்'பென்று வியர்த்துப் போனதாம். சிவக்குமார் யாரையும் தன் இடத்திற்கு வரவழைத்துதான் பேசுவாராம். அவரே நேரில் சென்றது இதுதான் முதல்முறை என்கிறார்கள்.

மோசடிகள் குறித்து சிபிஐ கேட்டதற்கு, 'ஒவ்வொரு ஊழியரும் என்ன செய்கிறார்கள் என நான் தனித்தனியாக கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது,' எனக்கூறி உள்ளார். போலி நெசவாளர்களைச் சேர்த்துவிட்ட தாரமங்கலம் சதாசிவத்தை, 'மாஸ்டர் வீவர்' என்று சொல்லி இருக்கிறார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பலரும் சோத்துக்கே வழியில்லாமல் திண்டாடிய நிலையில், ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கத்தில் மட்டும் எப்படி 58 கோடி ரூபாய்க்கு பட்டுப்புடவை விற்பனை செய்தீர்கள்? எனக்கேட்டு, அவரை சிபிஐ 'லாக்' செய்தது.

அதற்கு சிவக்குமார், கலெக்டரிடம் சிறப்பு அனுமதி பெற்று விற்பனை செய்தோம் எனக்கூறவே, அதற்கான அனுமதி கடிதத்தை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கு உதட்டைப் பிதுக்கியுள்ளார் சிவக்குமார்.

பட்டு பாவு நூல், ஊடை நூல் சப்ளை இல்லாதபோது, ஜக்கம்பட்டி கிளையில் 160 தறிக்காரர்களுக்கும் மாதம் 6 முதல் 9 பாவு கொடுக்கப்பட்டதாக பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம் ஆகும்? என்ற கேள்விக்கும் அவரிடம் பதில் இல்லை.

ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கத்தின் தலைமையகம் மற்றும் கிளைகளில் இருக்கும் 1000 நெசவாளர்களுமே போலிதான் என்பதை உறுதி செய்திருக்கிறோம். ஜக்கம்பட்டி கிளைக்குத் தேவையான பட்டுக்கூடுகளை எங்கிருந்து வாங்கினீர்கள்? என்று கேட்டதற்கு, அந்தக் கிளை மேலாளர் பாலாஜி வாங்கியதாக சிவக்குமார் கூறியுள்ளார்.

நீங்கள் சொன்னது அனைத்தும் பொய். உண்மையை ஒப்புக்கொண்டால் தண்டனை குறையும் என சிபிஐ குரலை உயர்த்தியபோது, 'சார்... மேலாளர் தப்பு செய்திருந்தால் அவரை கைது செய்து கொள்ளுங்கள்,' என்று பவ்யமாக சொல்லி இருக்கிறார் சிவக்குமார்.

அத்தராம்பட்டி புரோக்கர் சதாசிவம்தான், சிவக்குமாருக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்துள்ளார். ஜக்கம்பட்டி கிளையில், ஒரே ஆண்டில் 16 கோடிக்கு விற்பனை நடந்ததாக போலி கணக்கு காட்டியுள்ளார் மேலாளர் பாலாஜி. இந்த விவகாரம் பூதாகரமாக கிளம்பவும் அவர் வேலையை ராஜிநாமா செய்துவிட்டு ஓடிவிட்டார்.

Sarvodaya Sangh scandal! Sivakumar gets caught!!

கேவிஐசி துறையின் உதவி இயக்குநர்கள் சந்திரபால், சித்தார்த்தன், சதீஸ்குமார், ஹூப்ளி சித்தார்த், கணக்காளர் ஏ.ஜி.சுப்ரமணியன், முன்னாள் மாநில இயக்குநர்கள் தனபால், தன்ராஜ், ஜவஹர், டி.எம்.பாண்டியன், லட்சுமி நாராயணன், நல்லமுத்து, சின்னதம்பி, கணேசன் மற்றும் தற்போதைய மாநில இயக்குநர் பி.என்.சுரேஷ் ஆகியோரும் சிவக்குமாரால் 'பலாப்பலன்களை' அனுபவித்தவர்கள்தான். இதனால் இவர்கள் அனைவருமே, சிபிஐ நெருக்கிப் பிடித்தபோதும் கூட சிவக்குமாருக்கு ஆதரவாகவே செயல்படுவதாகச் சொல்கின்றனர்.

ஒரு கைத்தறி நெசவாளரால் வாரத்திற்கு அதிகபட்சமாக இரண்டு பட்டுப்புடவைகள்தான் நெய்து முடிக்க முடியும். ஆனால் ஒவ்வொருவரும் வாரம் 10 புடவைகளை நெய்ததாகவும், நெசவுக்கூலியாக புடவைக்கு 3300 ரூபாய் வீதம் வழங்கியதாகவும் போலி கணக்கு எழுதியிருப்பதையும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது,'' என்கிறது சிபிஐ வட்டாரம்.

விசாரணையின்போது, 2021, செப். 11 - 14 நாளிட்ட நக்கீரன் இதழில், சர்வோதய சங்க ஊழல் குறித்து முதன்முதலில் வெளியான கட்டுரையில் இருந்தும் குறிப்புகள் எடுத்துக் கொண்டதாக சோர்ஸ் தரப்பில் நமக்குச் சொல்லப்பட்டது.

சர்வோதய சங்க முன்னாள் ஊழியர்களிடம் பேசினோம்.

Sarvodaya Sangh scandal! Sivakumar gets caught!!

'ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கத்தில் இருந்து 2012 முதல் 2022 வரையிலான அனைத்து 'கேஷ் வவுச்சர்', எடை ஏடு, டே புக், தணிக்கை ஆவணங்களை சிபிஐ போலீசார் விடிய விடிய ஆய்வு செய்தனர். 2012-2013ம் ஆண்டில் மட்டும், கேவிஐசி அலுவலக கணக்காளர்கள் மனோகரன், சுப்ரமணி ஆகிய இருவரும் தணிக்கைப் பணிக்காக ஆவாரம்பாளையம் சங்கத்திற்கு வந்து சென்ற வகையில் 13 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக பதிவு செய்திருந்ததைப் பார்த்து சிபிஐ டீம் அதிர்ந்து போனது. அவர்கள் இருவரையும் சொகுசு விடுதிகளில் தங்க வைத்து, உயர் ரக மதுபானங்கள், பாலியல் தேவைகளை பூர்த்தி செய்துள்ளார் சிவக்குமார்.

தணிக்கைக்கு வரும் அதிகாரிகளை சொகுசு கார்களில் மூணார், ஊட்டி, கொடைக்கானல், ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று குளிர வைத்து விடுவார் சிவக்குமார். மும்பையில் இருந்து வரும் கேவிஐசி அதிகாரிகளையும் இதேபோல 'கவனித்து' கவிழ்த்தி இருக்கிறார். இந்த 'கவனிப்புகளால்' கேவிஐசி அதிகாரிகள், ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கத்தில் நடந்து வரும் ஊழல்களை கண்டுகொள்வதில்லை.

இது ஒருபுறம் இருக்க, ஜக்கம்பட்டி கிளை மேலாளர் பாலாஜி பட்டுச்சேலைகளை கொள்முதல் செய்ததற்காக சேலம் தாரமங்கலம் சதாசிவத்துக்கு 7 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ள விவரங்களையும் சேகரித்துள்ளது சிபிஐ. பாலாஜியால் ஜக்கம்பட்டி கிளைக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அவரை சிவக்குமார் சிக்க வைக்கப் பார்க்கிறார்,'' என்கிறார்கள் முன்னாள் ஊழியர்கள்.

Sarvodaya Sangh scandal! Sivakumar gets caught!!

ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கம், சொசைட்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்க விதிகளின்படி செயலாளர் பதவியில் ஒருவர் அதிகபட்சம் 60 வயது வரை மட்டுமே இருக்க முடியும். ஆனால் சிவக்குமாரோ, சங்க விதிகளை திருத்தம் செய்து, 65 வயது ஆகியும் தன்னை நிரந்தர செயலாளராக அறிவித்துக் கொண்டார்.

தற்போது அவர் 1.80 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார். இதே சங்கத்தில் அவருடைய மனைவி மல்லிகா, மகள் திவ்யபிரபா ஆகியோரையும் பணிக்கு அமர்த்தியுள்ளார். இப்படி மொத்த குடும்பமுமே இந்த சங்கத்தை சுரண்டிப் பிழைக்கிறது.

கோவையில் பல இடங்களில் வீடுகள், நிலபுலன்களை வாங்கிப் போட்டுள்ள சிவக்குமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகளை பினாமி பெயர்களில் வாங்கிக் குவித்துள்ளதாகவும், வட்டித்தொழில் செய்து வருவதாகவும் சொல்கின்றார்கள்.

இதுகுறித்து ஆவாரம்பாளையம் சர்வோதய சங்க செயலாளர் சிவக்குமாரிடம் கேட்டபோது ஜாலியாக சிரித்துக் கொண்டே பேசினார்.

''சேலம் தாரமங்கலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்ஐ மாரிமுத்து, சங்கத்தின் முன்னாள் ஊழியர் முருகேசன் ஆகியோர் என் மீது பொய் புகார் அளித்துள்ளனர். சிபிஐ விசாரணை முடியட்டும் பார்த்துக்கலாம். என்னிடம் பல கோடி ரூபாய் சொத்துகள் இருப்பதாகச் சொல்வோர் தாராளமாக பங்கு போட்டுக் கொள்ளலாம்.

என் மனைவி, மகள் ஆகியோர் சங்க விதிகளின்படிதான் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். எல்லாமே டிஜிட்டல் பரிவர்த்தனை ஆகிவிட்ட பிறகு, எப்படி ஊழல் செய்ய முடியும்? பெரிய அளவில் பைனான்ஸ் தொழில் பண்ணுவதில்லை. சங்கத்தில் யாராவது கேட்டால் கடன் கொடுப்பேன். நேரம் இருந்தால் ஒருமுறை நேரில் வாங்களேன்,'' என்றார் சிரித்துக் கொண்டே.

சிபிஐ அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'சிக்கிக் கொண்டார் சிவக்குமார்' என்று மூன்றே சொற்களில் முடித்துக் கொண்டார். இந்த விவகாரம், சர்வோதய சங்க வட்டாரங்களில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

weavers Scam Salem police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe