Skip to main content

ஓட்டலில் முறுக்குப் போட வந்த ஊழியரின் மனைவிதான் கிருத்திகா... அவருடைய அழகில் கிறங்கிப்போன ராஜகோபால்...

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

உழைப்பால் உயர்ந்து உணவக சாம்ராஜ்ஜியத்தை கட்டியவர், உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளியாகி, சிறைக்குப் பதில் மருத்துவமனையில் உயிரிழந்திருப்பது எல்லா தரப்பிலும் அதிர்வை ஏற்படுத்த தவறவில்லை. சென்னையிலும் பிற பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்திய மற்ற மாநிலத்தவரின் ஓட்டல்களிலிருந்து மாறுபட்டு, சரவணபவன் எனும் உணவகத்தைத் தொடங்கியவர் அண்ணாச்சி ராஜகோபால். பக்தியை தன் நெற்றியில் மட்டுமின்றி தொழிலும் பளிச்சிட வைத்தவர். சாப்பிட வருபவர்கள் முகம் சுளிக்காத வகையில் பரிமாறும் ஊழியர்களை வேலைக்கு வைத்து, அவர்களின் உடை, முடிதிருத்தம், சப்ளை செய்யும் முறை எல்லாவற்றிலும் புதுமை செய்தார். தண்ணீர் டம்ளருக்குள் விரல் நுழைக்க வரும் ஆரோக்கியமற்ற நெடுங்கால சப்ளை கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர் இவர்தான். பனை ஓலை கொழுக்கட்டை தொடங்கி தென்தமிழகத்தில் உணவு வகைகளே தமிழகத் தலைநகரில் கிடைக்கச் செய்ததில் இவர் முன்னோடி.

 

hotel



அப்படிப்பட்ட சாதனையாளர், ஒரு சபலத்தில் சறுக்கிவிட, அதுவே அவரை சட்டத்தின் முன் குற்றவாளியாக்கியது. சென்னை உயர்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துவிட, சரணடைந்த சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு இதயம், நுரையீரல், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தபோது, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு, ராஜகோபால் உயிருக்குப் போராடிய நிலையில்... நீதிமன்ற உத்தரவு பெற்று தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்குதான் சிகிச்சை பலனின்றி மரணித்தார்.

 

saravana bhavan

கடும் உழைப்பினால் உலகம் முழுவதும் சரவணபவன் ஓட்டல்களை நிறுவி, பல்லாயிரம் கோடிகளுக்கு சொத்துக்களைச் சேர்த்த ராஜகோபால், வயது 72 ஆகிவிட்ட நிலையில் அதனை அனுபவிக்க முடியாமல், ஆயுள் தண்டனைக்கு ஆளாகி மரணத்தை எட்டியது காலத்தின் கோலம்தான். வாடிக்கையாளர்களுக்கு தரத்துடன் சுவையான உணவு என்பதை லட்சியமாகக் கொண்டு வியாபாரத்தில் வெற்றியை ஈட்டிய அண்ணாச்சி, சொந்த வாழ்க்கையில் ருசிகண்ட பூனையாக, தன்னிடம் பணிபுரிந்தவர்களின் வீடுகளிலேயே, தன் இஷ்டத்துக்குப் புகுந்து விளையாடியதன் பலனை, தனது அந்திமக் காலத்தில் அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

 

saravana bhavan



உழைப்பால் எத்தனை உயர்வு பெற்றாலும், சபலம் அதனைச் சரித்துவிடும் என்பதற்கு உதாரணமாகிவிட்ட ராஜகோபால் பலருக்கும் பாடமாகி இருக்கிறார். அவரது இருண்ட பக்கங்களை அப்போதே நக்கீரன் தனித்தன்மையுடன் புலனாய்வு செய்து வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதனை இன்றைய தலைமுறையினரும் தெரிந்துகொள்ள, கடந்த 18 ஆண்டுகளைப் பின்னோக்கிப் புரட்டுவோம்! ஏற்கனவே, தான் கண் வைத்திருந்த ஜீவஜோதியை, பிரின்ஸ் சாந்தகுமார் காதலித்துத் திருமணம் செய்துகொள்ள, கணவரிடமிருந்து பிரித்து, அவரைத் தனது மூன்றாவது மனைவியாக்கிக்கொள்வதற்காக எடுத்த முயற்சிதான் பிரின்ஸ் கடத்தல், கொடைக்கானல் மலையில் கொலை என முடிந்து, வழக்கில் சிக்க வைத்து, ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து, மரணத்தில் தள்ளிவிட்டது.

 

saravana bhavan



என் இதயத்தில் வெற்றியை நிர்ணயித்தேன்...'' என்று வெளிப்படையாகச் சொல்லிவந்த அண்ணாச்சியின் இதயத்தில் எத்தனை பெண்கள் குடியேறினர் என்பதை அவராலேயே கணக்கிட்டுச் சொல்ல முடியாது. குடும்பப் பாங்கான மனைவி, மகன்கள் மற்றும் கொடிகட்டிப் பறக்கும் ஓட்டல் தொழில் என அவர் வணங்கிவரும் முருகன், வாழ்க்கையில் ராஜகோபாலுக்கு வெளிப்படையாக ஒரு குறையும் வைக்கவில்லை. இளம் வயதில் உழைப்பதற்கே நேரம் போதாமல் இருந்ததால், பணக்காரர்களுக்கே உரிய சுகபோகத்தை அவரால் அனுபவிக்க முடிந்ததில்லை. அது பாறாங்கல்லாக மனதை அழுத்திக்கொண்டிருக்க, எங்கே இறக்கி வைப்பது என்ற தேடலில் இறங்கினார். பணத்தை விட்டெறிந்தால் ‘அழகிகள்’ வரிசை கட்டி நிற்பார்கள் என்றாலும், குடும்பப் பெண்கள் மட்டுமே அவரது குறியாக இருந்தனர். இதற்காக எங்கோ செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற கணக்கோடு, தன் ஊழியர்களின் வீடுகளுக்குள்ளே வேட்டையாடினார்.

சரவணபவன் ஓட்டலில் முறுக்குப் போட வந்த ஊழியரின் மனைவிதான் கிருத்திகா. அவருடைய அழகில் கிறங்கிப்போன ராஜகோபால், கணவர் கணேஷை கவனித்துவிட்டு’ கிருத்திகாவைக் கபளீகரம் செய்து, 1993-ல் இரண்டாவது மனைவி ஆக்கிக்கொண்டார். "அழுக்கு தீர குளித்தவனும் இல்லை; ஆசை தீர அனுபவித்தவனும் இல்லை'’என்ற சொல்வழக்கு ராஜகோபாலுக்கு முற்றிலும் பொருந்தும். கிருத்திகாவோடு அவர் நின்றுவிடவில்லை. "சித்திரக் கிண்ணத்தில் பேதமில்லை; உன் சிந்தையிலேதான் பேதமடா'’என்ற கூற்றுப்படி தேடலில் இறங்கினார். வேதாரண்யத்திலிருந்து சென்னை வந்த ராமசாமியை அந்த வகையில்தான் அவருக்குப் பிடித்துப்போனது. ராமசாமியின் வீட்டுக்கும் போனார். அவருடைய மனைவி தவமணி விருந்து வைத்தார். தவமணியின் புதல்விதான் ஜீவஜோதி. தன் மகள் வயதிலுள்ள ஜீவஜோதி மீது ராஜகோபாலுக்கு ஐம்பதிலும் ஆசை வந்தது.

ஜீவஜோதியின் மீதான ராஜகோபாலின் ஆர்வம் குறித்து அப்போது நக்கீரனுக்குப் பேட்டியளித்த கிருத்திகா, ""நல்லா போய்க்கிட்டிருந்த என் வாழ்க்கைல ஜீவஜோதி குறுக்கிட ஆரம்பிச்சா. அவளுக்கு ஏராளமான பணத்தை அண்ணாச்சி வாரிக் கொடுத்தார். இதைப்பத்தி அவர்ட்ட நான் கேட்டப்ப... "பாவம் அந்தப் பொண்ணு. டிராவல் பிசினஸ் பண்ண உதவி செஞ்சேன்'னார். ஆனா நாளாக.. நாளாக.. அண்ணாச்சியை ஜீவஜோதி வளைச்சிப்போட முயற்சி பண்ற விஷயம் என் காதுக்கு வந்துச்சு. சொல்ல வெக்கமாத்தான் இருக்கு. அந்தப் பொண்ணு ரொம்ப சின்னப் பொண்ணு. அப்படிப்பட்டவ, சினிமா நடிகைங்க போட்டுக்குவாங்களாமே.. அதுமாதிரி ஹார்மோன் ஊசிகளைப் போட்டுக்கிட்டு... அண்ணாச்சியை மயக்கப் பார்த்தா. ஆனா... விஷயம் இப்ப வேறமாதிரி போய்க்கிட்டிருக்கு. அண்ணாச்சிகிட்டயும் ஜீவஜோதிகிட்டயும் காசு வாங்கிய டேனியல்.. ஏதோ ஏடாகூடமா செய்ய.. இப்ப கொலையில் முடிஞ்சிருக்கு'' என்றார்.


அப்போது, கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை செய்யப்பட்ட கோபத்தில் இருந்த ஜீவஜோதி, கிருத்திகாவின் குற்றச்சாட்டை மறுத்தார். அவங்க சொல்றது எல்லாமே பொய்... அபாண்டம். பணம்தான் முக்கியம்னு நினைச்சிருந்தா.. எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டு அண்ணாச்சியையே கல்யாணம் பண்ணிக்கிட்டிருந்திருப்பேன். கொலை வழக்கை திசை திருப்புறதுக்காக ஆளாளுக்கு ஒவ்வொரு ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறாங்க. புருஷனைப் பறிகொடுத்த என்னை மேலும் நோகடிக்கிறாங்க'' என்று ஆவேசமானார். பரபரப்பான இந்த வழக்கில் அப்போது துப்பு துலக்கிய நக்கீரன், ரூ.3 கோடி பெறுமான சொத்துப் பத்திரத்தை ஜீவஜோதியிடம் தந்து, கன்வின்ஸ்’செய்து அழைத்து வருவதற்கு, அவருடைய பெற்றோரையே அண்ணாச்சி அனுப்பியதை விவரித்தது. சாந்தகுமாரைக் கடத்திய காரை ஓட்டிய டிரைவர், சென்னையிலிருந்து ராஜகோபால் காரை ஓட்டி வந்த டிரைவர், ஃபாலோ பண்ணிய காரை ஓட்டிய டிரைவர் என, மூன்று டிரைவர்களிடம்தான் பரம ரகசியம் அடங்கியிருக்கிறது’ என காவல்துறையின் நம்பிக்கையைப் பதிவு செய்தது. மேலும், டிரைவர் பட்டூர்ராஜன் கோர்ட்டில் சரணடைய.. டிரைவரின் வாக்குமூலம் பற்றிய பயத்தில் ராஜகோபால் இருந்ததையும் சுட்டிக்காட்டியது.

சபலம் மட்டுமல்ல. ஜோதிட நம்பிக்கையும் சேர்ந்துதான் அண்ணாச்சியை ஜீவஜோதி மீது தீவிரம் கொள்ள வைத்தது’ என்பதை அப்போது அடித்துச் சொன்ன நக்கீரன், ஆந்திர ஜோதிடர் ராஜகோபால் மனதில் விதைத்த விஷ விதையை, ‘""ஏற்கனவே ஒரு கல்யாணமான பெண்ணை நீங்க மூன்றாவது சம்சாரமா ஆக்கிக்கிட்டா... உங்க வாழ்க்கை இன்னும் மேம்படும். உங்க மூணாவது சம்சாரத்தின் வயித்தில் பிறக்க... அந்த கிருபானந்த வாரியாரே காத்துக்கிட்டிருக்கார்''’என்று, அந்த ஜோதிடரின் வாய்ஸை அப்படியே ரிபீட் செய்தது. வியாபாரத்தில் நாலும் தெரிந்த ராஜகோபாலுக்கு "சரின்னா யாரா இருந்தாலும் விடக்கூடாது. வேண்டாம்னா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது'’என்று "வசந்த மாளிகை'யில் சிவாஜி பேசிய வசனம் ஏனோ தெரியாமல் போய்விட்டது. அப்படி நடந்திருந்தால்... ஜீவஜோதி இணங்க மறுத்தும், அவரை அடைவதற்காக வெறிபிடித்து, பிரின்ஸ் சாந்தகுமாரைக் கொலை செய்வதற்கு ஆட்களை ஏவியிருக்கமாட்டார்.

கொலை செய்யும் அளவுக்கு ராஜகோபால் என்ன பெரிய தாதாவா? அந்த தைரியம் எப்படி வந்தது? சரவணபவன் கிளை எங்கெங்கு உள்ளதோ, அந்த லிமிட்டில் உள்ள காவல் நிலையங்களுக்கு, மாதம்தோறும் 100 சாப்பாட்டு டோக்கன் கொடுத்து கவனித்து வந்ததால், ‘போலீஸ் தன் பாக்கெட்டில்’ என்ற நினைப்பு அவருக்கு வந்துவிட்டது. கொலையே செய்தாலும், போலீஸ் அதிகாரிகளுக்குப் பணத்தை விட்டெறிந்து வழக்கிலிருந்து தப்பிவிடலாம் என்று அவர் போட்ட கணக்கு தப்பானது. ஏன் தெரியுமா? இதற்கான பதில் ஜீவஜோதியிடமிருந்தே வெளிப்பட்டிருக்கிறது. உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததும்... ஜீவஜோதி, ""இந்த நேரத்தில் நீதிபதிகளுக்கு மட்டுமல்ல... மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ராஜகோபால் தந்த தொந்தரவை ஜெயலலிதாவிடம் நேரில் விளக்கினேன். அதனாலேயே, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஜெயலலிதா தற்போது உயிரோடு இருந்திருந்தால், அவர் காலில் விழுந்து வணங்கியிருப்பேன். இறுதியில் நீதியே வென்றது'' என்று கூறியிருக்கிறார்.

"மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தளைக்காது' என்று உபதேசித்தவர் கிருபானந்த வாரியார். காங்கேயநல்லூரில் உள்ள வாரியார் சமாதியை (ஞானத் திருவளாகம்) பராமரித்து வருகிறார்கள் ஓட்டல் சரவணபவன் குடும்பத்தினர். பிறன்மனை நோக்கா ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்காமல் ஒன்றல்ல.. இரண்டு மனைவிகளை ராஜகோபால் கதறவிட்டார். சென்னையில் பிற மாநிலத்தவர்களின் ஓட்டல்களே பெருகியிருந்த காலத்தில் உடுப்பி, ஆரிய பவன் சாம்ராஜ்ஜியங்களை தன் உழைப்பாலும் வணிக வியூகத்தாலும் பின்தள்ளி, "சரவண பவன்' எனும் புதிய ஹோட்டல் சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய சாதனைத் தமிழராகக் கொண்டாடப்பட்டவர் ராஜகோபால். சென்னையில் மட்டுமின்றி வெளிநாடுகள் வரை அவரது ஓட்டல் சாம்ராஜ்ஜியம் தரமானதாகவும் சுவையானதாகவும் கொடிகட்டிப் பறக்கிறது. புகழ்க்கொடி பறந்த நேரத்தில்தான் தனிப்பட்ட ஆசைகளின் எல்லை மீறலால், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, நீதியின் கரங்களால் தண்டிக்கப்பட்டு, காலத்தின் கரங்களால் மரணத்தில் தள்ளப்பட்டிருக்கிறார் ராஜகோபால்.
 

Next Story

விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; போலீசார் தீவிர விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
woman lost their life in trichy

திருச்சி கீழ தேவதானம் எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் கர்ணன் (வயது 46. ). இவரது மனைவி நித்யா (வயது 34). இவர் கடந்த ஆறு வருடங்களாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் இவருக்கு கடந்த 3 வருடங்களாக தோல்நோய் தொடர்பான பிரச்சனையும் இருந்து வந்துள்ளது. இதற்காக நித்யா சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் வாழ்க்கையில் விரக்திடைந்த நித்யா சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

திருமணமான பெண்ணுக்கு கத்தி குத்து; முன்னாள் காதலன் வெறிச்செயல்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 married woman has been stabbed by her ex-boyfriend

திருப்பத்தூர் எல்ஐசி பில்டிங் பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகள் இந்துமதி. அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ஆட்டோ ஓட்டுநரான அஜித்குமார்.

இந்துமதி - அஜித்குமார் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. எனவே இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர ‌ இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் இந்துமதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு தற்போது ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்துமதிக்கும் கணவர் கார்த்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடியை விட்டு திருப்பத்தூர்  ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார் இந்துமதி. இந்த நிலையில் மீண்டும் இந்துமதி மற்றும் அஜித்குமார் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில் திடீரென இந்துமதி  அஜித் குமாரிடம் பேச மறுத்து விலகியதாக தெரிகிறது.

 married woman has been stabbed by her ex-boyfriend

அதனைத் தொடர்ந்து விரக்தியில் இருந்த அஜித்குமார்  திருப்பத்தூர்   பழைய பேருந்து நிலையம் அருகே அஜித்குமார் ஆட்டோ ஓட்டிச் சென்றபோது இந்துமதி அவ்வழியாக  சென்றுள்ளார். அப்போது அஜித்குமார் இந்துமதியை பார்த்து பேசி உள்ளார். அங்கே இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அஜித்குமார் ஆத்திரமடைந்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்துமதியின் முகம் மற்றும்  உடம்பின் பல்வேறு பகுதிகளில் குத்தியும்,வெட்டியும் விட்டு  தப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இந்துமதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். இந்துமதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஜித்குமார் திருப்பத்தூர் நகரகாவல் நிலையத்தில் தானாக  சரணடைந்தார்.