ADVERTISEMENT

சரத்பவாருடன் ஆலோசனை? சிவசேனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக... மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு திருப்பங்கள்? 

11:01 AM Nov 20, 2019 | rajavel

ADVERTISEMENT

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105 தொகுதிகளையும், சிவசேனா 56 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளையும், காங்கிரஸ் 44 தொகுதிகளையும் பெற்றது. இதில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைப்பதற்கு பெரும்பாண்மைக்கான 145 இடங்களை பெறவில்லை.

ADVERTISEMENT

இந்தத் தேர்தலில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தல் முடிவுக்கு பின்னர் சிவசேனா தங்கள் கட்சிக்கு இரண்டரை வருடங்கள் முதல் அமைச்சர் பதவி வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இதற்கு பாஜக சம்மதிக்கவில்லை. மேலும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரிடம் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்றும் பாஜக தெரிவித்துவிட்டது. சிவசேனா ஆட்சி அமைக்க 48 மணி நேரம் கால அவகாசம் கேட்டது. ஆனால் அதற்குள் ஆளுநர் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார் குடியரசுத் தலைவர்.


இதையடுத்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களுடன் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் முதல் அமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தலா ஒரு துணை முதலமைச்சர் பதவி என்றும், சிவசேனா கட்சிக்கு 14 அமைச்சர்கள் பதவி, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 14 அமைச்சர்கள் பதவி, காங்கிரஸ் கட்சிக்கு 12 அமைச்சர்கள் பதவி என பிரித்துக்கொள்வதாக கூறப்பட்டது.

சிவசேனா தலைமையிலான புதிய கூட்டணி விரைவில் ஆளுநரை சந்தித்து தாங்கள் ஆட்சி அமைப்பது தொடர்பாக பேசுவார்கள் என்று செய்திகள் வெளியானது. ஆனால் ஆளுநருடனான சந்திப்பு திடீரென தள்ளிப்போனது. தொடர்ந்து இந்த புதிய கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தியை சரத்பவார் சந்தித்துப் பேசினார். அப்போது, சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.


இதனிடையே மகாராஷ்டிரா மாநில பாஜக மூத்த தலைவர் நாராயன் ரானே, தங்களிடம் ஆட்சி அமைக்க போதுமான 145 எம்எல்ஏக்கள் ஆதரவு கொண்ட பட்டியல் இருக்கிறது. எப்போது வேண்டுமானலும் ஆட்சி அமைக்க தயாராக உள்ளோம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, சரத்பவார் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து நாம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் விசாரித்தபோது, தேர்தல் முடிவுக்குப் பின்னர் நிபந்தனை என்ற பெயரில் ஆட்சி அமைக்க விடாமல் முட்டுக்கட்டை போட்டு வரும் சிவசேனாவுக்கு பாடம் புகட்ட பாஜக தலைவர்கள் திட்டமிட்டனர். அதற்காக அவர்கள் சரத்பவாரை சந்தித்து ஆட்சி அமைப்பது தொடர்பாக பேச முடிவு எடுத்தனர். அதன்படி சரத்பவாரை பாஜக மூத்த தலைவர்கள் சிலர் சந்தித்துப் பேசியுள்ளனர்.


அப்போது, நீங்கள் சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க உள்ளதாகவும், அந்தக் கட்சி உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் கிடைத்தது. வாழ்த்துக்கள். அதற்கு முன்பு நாங்கள் சொல்வதையும் ஆலோசனை நடத்துங்கள். சிவசேனா, எங்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. தேர்தலுக்கு பின்னர் நிபந்தனை என்ற பெயரில் ஆட்சி அமைக்க விடாமல் முட்டுக்கட்டை போடுகிறது. எங்களுக்கு செய்த துரோகத்தைப்போல, நாளை உங்களுக்கும் துரோகம் செய்யாதா? காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மூன்று கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துவது சாத்தியமாகுமா?

எங்களிடம் 105 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். உங்களிடம் 54 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். நாம் இருவரும் இணைந்து ஏன் ஆட்சி அமைக்கக்கூடாது?. நாம் ஏன் புதிய முயற்சி எடுக்கக்கூடாது?. உங்கள் கட்சிக்கு துணை முதல் அமைச்சர் பதவி உள்பட அமைச்சரவையில் கணிசமான பதவிகளும் தர தயாராக இருக்கிறோம். இல்லையென்றால் வேறு ஏதேனும் திட்டமிருந்தாலும் சொல்லுங்கள். சிவசேனாவுக்கு பாடம் புகட்ட நாங்கள் சில அரசியல்களை முன்னெடுக்க வேண்டியதாகியிருக்கிறது. அதனால் பாஜகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் முதல் அமைச்சர் பதவியை இரண்டரை ஆண்டுகாலம் பகிர்ந்து கொள்ளலாம். ஒருவேளை முதல் இரண்டரை ஆண்டு காலம் முதலமைச்சர் பதவியில் இருக்க நீங்கள் விரும்பினால் அதனை விட்டுக்கொடுக்க பாஜக தலைமை தயாராக உள்ளது என்கிற ரீதியில் சரத்பவாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. இதையடுத்து தங்கள் கட்சி எம்எல்ஏக்களுடன் சரத்பவார் ஆலோசனை நடத்தி சொல்வதாக தெரிவித்திருக்கிறாராம்.

சரத்பவார் இதுபற்றி தங்களது கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். எந்த நேரத்திலும் பரபரப்பு திருப்பங்கள் மகாராஷ்டிரா மாநில அரசியலில் ஏற்படலாம் என்கிறார்கள்.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களிடம் விசாரித்தபோது, பிரதமர் மோடியை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பும், அதற்கு பின்னரும் மகாராஷ்டி மாநில மக்களின் நலனுக்காக சரத்பவார் சந்தித்துப் பேசியிருக்கிறார். இப்போதைய சந்திப்பில் எந்த அரசியலும் கிடையாது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அளிப்பது தொடர்பாகவும், மகாராஷ்டி மாநில மக்களின் நலனுக்காகவும் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. மற்றப்படி எந்த அரசியலும் இதில் கிடையாது என்றனர்.




ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT