
சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையால் காவல்துறையின் கோர முகம் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்க, புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை எஸ்.பி. அருண்சக்திகுமாரை மத்திய அரசுப் பணிக்கு எடப்பாடி அரசு அனுப்பி வைப்பதை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்துகிறார்கள் மக்கள். இந்த மாற்றத்தினால் அதிர்ச்சியடைந்துள்ள தமிழக ஐ.பி.எஸ்.அதிகாரிகள், ‘இதன் பின்னணியில் மணல் மாஃபியாக்களின் கைகள் உயர்ந்திருக்கிறது எனப் பகீரூட்டுகிறார்கள்.
ஐ.பி.எஸ். அதிகாரிகளை மட்டுமே உள்ளடக்கிய வாட்ஸ் ஆப் குரூப்புகளில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்த விவகாரம் குறித்து விசாரித்தபோது, ’’தமிழக காவல்துறைக்கு பல்வேறு பணிகளில் உதவி செய்ய ஊர்க்காவல் படை (ஹோம் கார்ட்) இயங்கி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏரியா காமண்டர் என்பவரின் தலைமையில் இந்தப் படை இயங்கும். புதுக்கோட்டை மாவட்ட ஏரியா கமாண்டராக மணிவண்ணனும், உதவி ஏரியா கமாண்டராக செல்வராஜும் இருந்தனர். ஊர்க்காவல் படை கமாண்டர்கள் மணல் மாஃபியாக்களோடு இணைந்து மணல் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள் என்றும், ஊர்க்காவல் படையில் ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் நடக்கின்றன என்றும் எஸ்.பி. அருண்சக்திகுமாரிடம் புகார்கள் குவிந்தன.
இதனை விசாரித்து பல ஆதாரங்களைத் திரட்டியிருக்கிறார் அருண்சக்திகுமார். குறிப்பாக, ஏரியா கமாண்டர் மணிவண்ணனை பற்றிய ஆதாரங்கள் அவை. புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்திருந்த மணிவண்ணன், தனது தொழிலுக்கு பாதுகாப்புத் தேடி ஊர்க் காவல்படையில் இணைந்துகொண்டார். போலீஸ் அதிகாரிகளுக்கு செய்ய வேண்டியதைச் செய்ததன் மூலம் ஏரியா கமாண்டர் பதவியையும் கைப்பற்றினார். இந்தப் பதவியின் பாதுகாப்பில் மணிவண்ணனின் மணல் பிஸ்னெஸ் கொடி கட்டியது.
தமிழகத்தின் மணல் பிஸ்னெஸ் சேகர் ரெட்டி, புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் கைகளுக்கு மாற, ராமச்சந்திரனோடு கைக்கோர்த்த மணிவண்ணன், மணல் கொள்ளையின் சூட்சமங்களை ராமச்சந்திரனுக்கு கற்றுக்கொடுத்தார். ராமச்சந்திரன்- மணிவண்ணன் கூட்டணி மணல் பிஸ்னெஸ்சில் உச்சத்துக்குப் போனது. வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் மணல் கொள்ளையைக் கண்டுகொள்ளாமலிருக்க, காவல்துறையின் உயரதிகாரிகளை இயல்பாகவும் எளிதாகவும் சந்திப்பதற்குத் தனது ஊர்க்காவல் படையின் பதவியைப் பயன்படுத்தினார் மணிவண்ணன். புதுக் கோட்டை, திருச்சி, கரூர் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் பலரும் மணிவண்ணனின் ரகசிய நண்பர்களானார்கள். முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் இவர்களின் நட்பைக் கொண்டுபோனது அப்போதைய உளவுத்துறை. அதிர்ச்சியடைந்த ஜெயலலிதா, மணிவண்ணனை பற்றியும் அவருக்கு உதவும் அதிகாரிகளைப் பற்றியும் கூடுதல் விபரங்கள் கேட்டிருந்தார். ஜெ.வுக்கு உடல்நலன் குன்றிய நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சிக்கிய மணல் மாஃபியாக்களோடு இவரும் சிக்க வேண்டியவர். ஆனால், அவர்களைப் பற்றி போட்டுக்கொடுத்ததால் தப்பித்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடியின் அலுவலக அதிகாரிகள் சிலரின் நட்பு கிடைக்க, அதனை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டார் மணிவண்ணன். இதன்மூலம், கோட்டையில் அரசு எடுக்கும் பல ரகசிய முடிவுகள் மணிவண்ணனுக்கு முன்கூட்டித் தெரிந்துவிடும். இதனைப் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் கசிய விட்டுத் தனது செல்வாக்கைக் காட்டிக்கொள்வார். புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.பி.க்களாக வருபவர்கள் மணிவண்ணனுக்குத் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள். பெரும்பாலும் கன்ஃபர்டு ஐ.பி.எஸ். அதிகாரிகள்.
இதில் தப்பித்தவறிய, நேரடி ஐ.ஏ.எஸ் அதிகாரிதான் எஸ்.பி.அருண் சக்திகுமார். இவரிடம் கிரிமினல்களின் அதிகாரம் செல்லுபடியாகவில்லை. புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து, மக்களுக்கான போலீஸ் அதிகாரி எனப் பெயரெடுத்தார். அந்த வகையில், ஊர்க்காவல் படையை வைத்துக்கொண்டு மணிவண்ணன் நடத்தும் மணல் ராஜ்ஜியத்தைக் கண்டுபிடித்த அருண் சக்திகுமார், மணிவண்ணனை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து, "மணல் கொள்ளையில் நீங்கள் ஈடுபட்டு வருவதற்கும், மணல் மாஃபியாக்களுக்கு நீங்கள் உதவியாக இருப்பதற்கும் என்னிடம் ஆதாரங்கள் இருக்கிறது. ஊர்க்காவல் படையில் இருந்து கொண்டு நீங்கள் செய்யும் தவறுகள் மிகக் கடுமையானவை'' என எச்சரித்தார். மிரண்டுபோன மணிவண்ணன், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே, ஊர்க்காவல்படையிலுள்ள பணியாளர்களுக்கான சம்பளத்தில், 13 கோடியே 27 லட்ச ரூபாய் ஊழல் நடந்துள்ளதைக் கண்டுபிடித்த அருண்சக்திகுமார், மணிவண்ணனின் தோஸ்தான, உதவி ஏரியா கமாண்டர் செல்வராஜை வரவழைத்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார். அத்துடன், பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட உதவி ஏரியா கமாண்டர் பதவியை செல்வராஜ் ஆக்ரமித்திருப்பது பற்றியும் கடுமைகாட்ட, ஊழல் நடந்திருப்பதை ஒப்புக்கொண்ட செல்வராஜ், தனது பதவியையும் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், புதுக்கோட்டையில் நடக்கும் மணல் கொள்ளை குறித்து முதல்வர் எடப்பாடிக்கு ரிப்போர்ட் அனுப்பியபடியே இருந்து வந்தார் அருண்சக்திகுமார். மணல் மாஃபியாக்களுக்கு எதிராக இவர் எடுத்த நடவடிக்கைத்தான் மாற்றலுக்கு காரணமாக இருக்கிறது என விவரிக்கிறார்கள் உள்துறை அதிகாரிகள்.
மணிவண்ணன் மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடமே கேட்டபோது, "குற்றச்சாட்டுகள் தவறானவை. என் சொந்தக் காரணங்களுக்காகத்தான் பதவியை ராஜினாமா செய்தேன்'' என்கிறார். எஸ்.பி. அருண்சக்திகுமாரிடம் நாம் பேசிய போது, "மத்திய அரசுப் பணிக்குச் செல்ல வேண்டுமென அரசிடம் விருப்பம் தெரிவித்திருந்தேன். அதன்படியான மாற்றம்தான்'' என்கிறார் பட்டும் படாமலும்.
மணல் மாஃபியாக்களின் கைகள் ஆட்சி அதிகாரத்தில் அதிகரித்திருப்பதால் இந்த விவகாரத்தை மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர் நேர்மையான ஐ.பி.எஸ். அதிகாரிகள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
