ADVERTISEMENT

ஏசியில் வேலை செய்பவர்களுக்கு வரப்பிரசாதம் 'புற்று மண் குளியல்'-நம்மாழ்வார் பிறந்தநாளில் நடைபெற்ற கலாச்சார நிகழ்வு!!

12:54 PM Apr 08, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நம்மாழ்வார் பிறந்த தினத்தை முன்னிட்டு புற்றுமண் குளியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடியில், வைத்தியநாத சுவாமி கோவில் எதிரே உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் நடைபெற்றது. இதில் இயற்கை மருத்துவ ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு மண் குளியல் சிகிச்சை எடுத்துக்கொண்டனர்.

இதுகுறித்து கிராம வாழ்வியல் இயற்கை மருத்துவச் சங்க செயலாளர் தங்க சண்முக சுந்தரம் கூறுகையில், “இந்த வெயிலுக்கு, உடலுக்கு நல்ல சிகிச்சையாகவும், மேலும் எளிமையான மருத்துவமும் கூட. எல்லோரும் செய்து பலன் பெறலாம். கரையான் புற்றுமண், களிமண் அல்லது செம்மண் எதுவாக இருந்தாலும் எடுத்துக்கொள்ளலாம். மேலும் முதல் நாளே தண்ணீர் விட்டு கொழ கொழப்பாக இருப்பதுபோல பக்குவமாக தயார் செய்து காலை இளம் வெயிலில் உடல் முழுவதும் பூசிக்கொள்ள, உடலில் இறந்த செல்கள் வெளியேறும். புதிய செல்கள் உருவாகும்” என்றார்.

மேலும், “புற்றுமண் குளியலில் உள்ள நன்மைகள், புற்றுமண் மருத்துவம் - பயன்கள், புற்றுமண் மருத்துவம் என இயற்கை நமக்கு கொடுத்த மருந்துகள் ஏராளம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நாம் முழுமையாக இயற்கை வைத்தியத்தை சார்ந்து இருக்க முடியாது. முழுமையாக ஆங்கில மருத்துவத்தையும் சார்ந்து இருக்க முடியாது. தேவைப்படும்போது இயற்கை மருத்துவத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்று நாம் பார்க்க இருப்பது மண் குளியலைப் பற்றித்தான். நாம் அனேக இடங்களில் கரையான் புற்றுகளைப் பார்த்திருப்போம். இந்த கரையான் புற்றுமண் உடலுக்கு மிகவும் நல்லது.

இடிந்துபோன புற்றில் உள்ள அந்த மண்ணை எடுத்து வைத்து, இரவு நேரத்தில் ஒரு பாட்டிலில் அந்த மண்ணை சேகரித்து, தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் அந்த மண்ணை உடலில் பூசிக்கொண்டு, இளம் சூடான வெயிலில் 45 நிமிடங்கள் உடலைக் காட்ட வேண்டும். இவ்வாறு செய்தால் தோலுக்குப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. ஏசி அறையில் வேலை செய்பவர்களுக்கு இது ஒரு நல்ல வரப்பிரசாதம். உடலில் தேங்கியிருக்கும் இறந்துபோன செல்களை அகற்றுகிறது. உடலில் பல நாட்களாக தங்கியுள்ள அழுக்குகளை நீக்குகிறது.

வியர்வை வெளியேறுவது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் சிலருக்கு வியர்வை என்பதே இருக்காது. இப்படிப்பட்ட நபர்களுக்கு இந்த மண் குளியல் மிகவும் சிறந்தது. வியர்வை மூலம் தேவையற்ற அழுக்குகளை வெளியேற்ற முடியும். உடலில் உள்ள யூரியா அளவை சரி செய்கிறது. உடலுக்குப் புத்துணர்ச்சி தரும் இந்தக் குளியலை அவ்வப்போது எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கரையான் புற்றுமண்ணை சேகரித்துக்கொண்டு, இதனுடன் சிறிது பூண்டு, சிறிது கல் உப்பு சேர்த்து மை போல அரைக்க வேண்டும். அரைத்து வைத்த இந்தக் கலவையை இளம் சூடாக காய்ச்ச வேண்டும். இளம் சூடாக இருக்கும் இந்தக் கலவையை மூட்டுவலி உள்ளவர்கள் தங்களது மூட்டில் வைத்து பற்று போடலாம். 3 நாட்கள் இவ்வாறு செய்து வந்தால் மூட்டு வலி முற்றிலுமாக நீங்கிவிடும். உடலில் எந்தப் பகுதியில் அடிபட்டாலும் இந்த வைத்தியத்தை மேற்கொள்ளலாம்” என்றார். இந்நிகழ்ச்சியில் இயற்கை மருத்துவர் பழனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT