Skip to main content

கரோனா களத்தில் திமுக! ஆளுங்கட்சியினர் அப்பீட்டு! கைக்காசை செலவழிக்கும் உடன்பிறப்புகள்... உள்ளாட்சிகளை கைவிட்ட தமிழக அரசு!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020


கரோனா வைரஸால் நாடே விழி பிதுங்கி திக்கற்று நிற்கும் நிலையிலும்கூட களத்தில், விளிம்புநிலை மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் என அத்தியாவசியப் பொருள்களை இன்முகத்துடன் வழங்கி திமுகவினர் சுழன்றடித்து வேலை செய்து வருகின்றனர்.ஆனால், ஆளுங்கட்சியினரோ வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால், தொகுதி மக்களிடம் கடும் அதிருப்தி கிளம்பியிருக்கின்றன. 

இப்போதைக்கு ஊரடங்கும்,சமூக விலகல் மட்டுமே நோய்த் தொற்றில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான ஒரே வழியாக இந்தியா அரசு கடைப்பிடிக்கச் சொல்கிறது.இந்த ஊரடங்கால் வழக்கம்போல் உயிருக்கும் வயிறுக்குமான போராட்டத்தில் விளிம்பு நிலை மக்களே பெருந்துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். கூடுமான வரை தன்னார்வலர்கள் பலர் ஆதரவற்றவர்களை த் தேடித்தேடி உணவளித்து வருகின்றனர். 
 

தமிழகத்தைப் பொருத்தவரையில்,'தானே', 'கஜா', சென்னை 'பெருவெள்ளம்' போன்ற இயற்கை பேரிடர்களின் போது மட்டுமின்றி,தற்போது 'கரோனா' ஊரடங்கின்போதும் கூட திமுகவினர் விளிம்பு நிலை மக்களை நோக்கி பயணிக்கிறார்கள்.அவர்களுக்கு உணவளிப்பதும்,அரிசி, பருப்பு, காய்கறிகள் என வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதிலும் தீவிரமாகக் களப்பணியாற்றி வருகின்றனர். 

தமிழக அரசு நிவாரண நிதி கேட்பதற்கு முன்பே,அனைத்து திமுக எம்.பி.,க்களும் தொகுதி நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் கொடுத்தனர்.கட்சி சார்பிலும் நிவாரண நிதி கொடுக்கப்பட்டது.ஆனால், 2011 முதல் தொடர்ச்சியாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் அதிமுக சம்பிரதாயத்திற்கு கட்சி சார்பில் ஒரு கோடி ரூபாய் கொடுத்துவிட்டு சைலண்ட் ஆகிவிட்டது.அதுவும் திமுகவின் முன்னெடுப்புகளைப் பார்த்த பிறகே, அதிமுக சார்பில் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

 


முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க அரசு மருத்துவமனைகள்,பேருந்து நிலையங்கள்,மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிப்பு மருந்து அடிக்கப்படுகிறது.மாதத்தில் நான்கு நாள்கள் சொந்த ஊரில் முகாமிடும் எடப்பாடி பழனிசாமி,கரோனா தாக்கம் காரணமாக சொந்த ஊர் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. 

http://onelink.to/nknapp


துப்புரவுப் பணிகளில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்குக் கூட முகக்கவசம், கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை.ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் நிதி ஒதுக்கப்படாததால்,பேரிடர் காலப்பணிகளை முடுக்கி விடுவதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள் பஞ்சாயத்து தலைவர்கள்.


அதேநேரம், சேலம் எம்.பி.யான எஸ்.ஆர்.பார்த்திபன், பனமரத்துப்பட்டி, நாழிக்கல்பட்டி, முதல்வரின் சொந்தத் தொகுதியான எடப்பாடி,கொங்கணாபுரம், ஓமலூர், வீரபாண்டி என நகர்ப்புறத்தைக் காட்டிலும் கிராமப்புற மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதில் முனைப்பு காட்டுகிறார்.மார்ச் 22ம் தேதி முதல்முறையாக ஊரடங்கு வந்தபோதிலிருந்தே நிவாரணப் பணிகளை துவங்கி இருந்தார் அவர்.விளிம்புநிலை மக்களுக்கு குடும்பத்திற்கு 5 கிலோ அரிசி, காய்கறிகள்,ஒரு கிலோ பருப்பு,ஒரு கிலோ எண்ணெய் எனத் தேவையறிந்து வழங்கி வருகிறார்.பொதுமக்கள் மட்டுமின்றி, சொந்தக் கட்சியினருக்கும் 25 கிலோ கொண்ட 300 மூட்டை அரிசியை வழங்கி இருக்கிறார்.  

 

salem dmk and admk parties serve the peoples coronavirus



எஸ்.ஆர்.பார்த்திபன் கூறுகையில், ''எங்கள் கட்சித் தலைவரே களத்தில் நேரடியாக இறங்கிச்சென்று தொகுதி மக்களைச் சந்திக்கிறார்.மேலும்,கடைநிலையில் உள்ள மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதில் கவனம் செலுத்தும்படியும் கூறியுள்ளார்.அதனால் நானும் மக்களைத் தேடித்தேடிச் சென்று கரோனா நிவாரண உதவிகளை வழங்கி வருகிறேன்.இதுவரை 7 ஆயிரம் பயனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருள்களை நிவாரணமாக வழங்கி இருக்கிறேன்.தூய்மைப் பணியாளர்களுக்கு மட்டும் 10 ஆயிரம் முகக்கவசங்கள், 2000 கையுறைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுவரை 10 லட்சம் ரூபாய்க்கு மேல் சொந்தப்பணத்தை செலவு செய்துதான் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறேன். வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12ம் தேதி) 2000 பேருக்கு 25 கிலோ அரிசி மூட்டைகள் கொடுக்க முடிவு செய்திருக்கிறேன்.

 

salem dmk and admk parties serve the peoples coronavirus


ஒரு கிராமத்திற்குப் போயிருந்தேன். அங்கே நான்கு பெண் குழந்தைகளுடன் நெசவுத்தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன், வெறும் ராகி களி கிண்டி, தொடர்ந்து நாலைந்து நாள்களாக அதையே கூழாகக் கரைத்துக் குடித்து வந்தது தெரிய வந்தது.அதைக் கேட்டு நெஞ்சமே பதறியது.வேலைக்குப் போய் கூலி வாங்கினால்தான் அவர் வீட்டில் அடுப்பெரியும். நிவாரணப் பொருள்களை வழங்கிவிட்டு வீடு திரும்பும் வழியில் அவர் எதிர்ப்பட்டதால், அப்போது கொடுப்பதற்கு என்னிடம் அரிசியோ, காய்கறிகளோ இல்லை. அதனால் அவருக்கு கையில் இருந்த 3 ஆயிரம் ரூபாயைப் பணமாகக் கொடுத்துவிட்டு வீடு திரும்பினேன். 
 

salem dmk and admk parties serve the peoples coronavirus

 

கரோனா நோய்த்தொற்று நேரத்தில் திமுகவினர் அரசியல் செய்ய விரும்பவில்லை. நாங்கள் இப்போதைக்கு மக்களின் தேவையறிந்து உதவவே விரும்புகிறோம். அதேநேரம், எந்த ஒரு கிராமத்திலும் ஆளுங்கட்சி எம்எல்ஏக்களோ, அக்கட்சிக்காரர்களோ தென்படவில்லை. அவர்களும் களத்திற்கு வர வேண்டும்,'' என்றார்.
 

 

salem dmk and admk parties serve the peoples coronavirus


சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் உள்ள 32 பஞ்சாயத்துகளில் 22 பஞ்சாயத்துகள் திமுக வசம் உள்ளன. அவ்வொன்றிய திமுக பொறுப்பாளர் விஜயகுமார் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் சேர்ந்து இதுவரை 15 லட்சம் ரூபாய்க்கு நிவாரண உதவிகளை நேரடியாக வீடு தேடிச்சென்று வழங்கி இருக்கிறார்கள். தேர்தல் காலத்தில்கூட இப்படி சுழன்றடித்து வேலை செய்திருக்க மாட்டார்கள் எனும் அளவுக்கு கொரோனா நிவாரணப் பொருள்களை வீடு வீடாகக் கொண்டு சேர்க்கின்றனர்.
 

salem dmk and admk parties serve the peoples coronavirus


சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கமும் கட்சியினர் அழைக்கும் இடங்களுக்கு எல்லாம் சளைக்காமல் சென்று, நிவாரண உதவிகளை முன்னின்று வழங்கி வருகிறார். 

அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய திமுக பொறுப்பாளர் விஜயகுமாரிடம் பேசினோம். ''எங்கள் ஒன்றியம், பட்டியல் சமூகத்தினர் மற்றும் கூலித்தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. ஒரு நாள் வேலைக்குச் செல்லாவிட்டாலும், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். ஒருபுறம் விளிம்புநிலை மக்கள் இருந்தாலும், மற்றொருபுறம் நமக்காக ரிஸ்க் எடுத்து பணியாற்றுபவர்கள் தூய்மைப் பணியாளர்கள்தான். அதனால் முதலில் அவர்களுக்கு மாஸ்க், முழு நீள கையுறைகள், சானிட்டைஸர்கள் வழங்கினோம். தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தமாக 4000 மாஸ்க்குகள், 8000 கையுறைகள், 2000 சோப்புகள் வழங்கி இருக்கிறோம். மாஸ்க்குகளை நாங்களே ஆர்டர் கொடுத்து தைத்துக் கொடுத்தோம்.
 

salem dmk and admk parties serve the peoples coronavirus

 

http://onelink.to/nknapp


இந்த ஒன்றியத்தில் உணவின்றி தவிக்கும் அத்தனை பேருக்குமே உணவுப்பொருள்களை வழங்க இருக்கிறோம். முதல்கட்டமாக 4000 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, இரண்டு கிலோ காய்கறிகள், தலா ஒரு கிலோ பருப்பு, எண்ணெய் வழங்கி இருக்கிறோம். இதற்காகவே கருமந்துறை மலைப்பகுதியில் இருந்து தக்காளி, கத்தரிக்காய், முட்டைக்கோஸ் ஆகிய காய்கறிகளை 2 லாரிகள் நிறைய கொள்முதல் செய்தோம். 5 டன் அரிசியை மொத்தமாக வாங்கினோம். தர்பூசணி பழங்கள்கூட வழங்கினோம்.

இந்த நேரத்தில் தூய்மைப் பணியாளர்கள் மட்டும் இல்லாவிட்டால் தமிழ்நாடே நாறிப்போய் விடும். அவர்களுக்குதான் முதலில் நன்றி சொல்ல வேண்டும் என்று தளபதி சொல்லி இருக்கிறார். அதனால் அவர்கள் எந்த உதவி கேட்டாலும் திமுக சார்பில் செய்யத் தயாராக இருக்கிறோம். என் சொந்தப் பங்களிப்பு 7.50 லட்சம், திமுக பஞ்சாயத்துத் தலைவர்களின் சொந்த நிதி 7.50 லட்சம் என இதுவரை 15 லட்சம் ரூபாய்க்கு நிவாரண உதவிகளை வழங்கி இருக்கிறோம். அதிமுகவினர் பஞ்சாயத்து தலைவர்களாக உள்ள கிராமங்களிலும் நிவாரண உதவிகளை வழங்க இருக்கிறோம். உள்ளாட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருந்தால், இன்னும் நிவாரணப் பணிகளை நிறைவாகச் செய்யலாம்,'' என்றார் விஜயகுமார்.

சேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தளவாய்ப்பட்டி பஞ்சாயத்துத் தலைவரான திமுகவை சேர்ந்த ராஜா, ''எங்கள் பஞ்சாயத்திற்கு கிருமிநாசினி என்ற பெயரில் 60 லிட்டர் பிளீச்சிங் வாட்டர் கொடுத்திருக்கிறார்கள். அது மட்டும்தான் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொடுக்கப்பட்ட கரோனா நிவாரணம். பஞ்சாயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை உள்ளாட்சித் தேர்தலில் செலவு செய்து விட்டனர். தூய்மைப் பணியாளர்களுக்குக் கூட மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை. எல்லாவற்றுக்கும் தன்னார்வலர்களையே சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது,'' என்று புலம்பினார்.

''கரோனா நிவாரண களத்தில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் கண்ணில் படவில்லையே ஏன்?,'' என சேலம் மாவட்ட அதிமுக செயலாளரும், எம்எல்ஏவுமான வெங்கடாசலத்திடம் கேட்டோம்.

 

salem dmk and admk parties serve the peoples coronavirus



''ஆளுங்கட்சியினர் சார்பிலும் மக்களுக்கு கரோனா நிவாரண உதவிகளைச் செய்து கொண்டுதான் வருகிறோம். சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை உழவர் சந்தைகள் மற்றும் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் பகுதிகளில் மக்களுக்குத் தலா 1000 மாஸ்க்குகள் வழங்கி இருக்கிறோம். என்னுடைய தொகுதி நிதியில் இருந்து கரோனா தடுப்பு மருந்துகள் வாங்க சேலம் மாநகராட்சிக்கு 30 லட்சம் ரூபாய் வழங்கினேன். அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர், சானிடைஸர் தெளிப்பு வாகனம் வாங்குவதற்காகத் தொகுதி நிதியில் இருந்து 40 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறேன். 
 

தினமும் எந்தெந்த இடங்களில் கிருமி நாசினி மருந்து அடிக்கிறார்கள் என்பதை கலெக்டர், மாநகராட்சி கமிஷனருடன் நேரில் சென்று பார்க்கிறேன். இப்போதுகூட தூய்மை பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அதிமுக கட்சி சார்பில் 2400 பணியாளர்களுக்குப் பேண்ட், சட்டை, சேலைகள் வாங்கித் தர இருக்கிறோம். 144 தடை உத்தரவு போட்ட மறுநாளே கட்சி சார்பில் 12 லட்சம் ரூபாய் நிவாரணப் பணிக்காகக் கலெக்டரிடம் கொடுத்திருக்கிறோம். முதலமைச்சரும் ஒருநாள் விட்டு ஒருநாள் சேலத்தில் என்ன நடக்கிறது என்று எங்களிடம் விசாரித்து தெரிந்து கொள்கிறார். அதிமுகவினரும் கரோனா நிவாரணப் பணிகளில் தான் இருக்கிறார்கள்,'' என்றார் பெருமையாக.

உள்ளாட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, ''உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில நிதிக்குழுதான் (எஸ்எப்சி) நிதி ஒதுக்கும். சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு இன்னும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இப்போதைக்கு, கரோனா நிவாரணப் பணிகளுக்காக ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் தொலைத்து நிற்கும் சாமானியனுக்குப் பிரதான எதிர்க்கட்சியாக திமுகவும், பல தன்னார்வலர்களும், அமைப்புகளும் தேடித்தேடிச் சென்று லட்சக்கணக்கில் நிவாரண உதவிகளைச் செய்து கொண்டிருக்கையில், ஆயிரம் மாஸ்க்குகளும், தொகுதி நிதியை ஒதுக்கியதையும் பெருமையாகச் சொல்கிறார்கள் 9 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருக்கும் ஆளுங்கட்சியினர். 


 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்