Advertisment

கள்ள லாட்டரி, சாராயம், போதை பவுடர் நடமாட்டம்! கிரிமினல்களுடன் கரம் கோக்கும் காவல்துறை! புட்டு புட்டு வைத்தார் 'சஸ்பெண்ட்' அதிகாரி!!

inspector rama andavar

இன்ஸ்பெக்டர் ராம.ஆண்டவர்

சேலம் மாவட்டம் வீரகனூர் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர், ராம.ஆண்டவர் (57). வீரகனூரைச் சேர்ந்த மணல் மாஃபியா பன்னீர்செல்வமும், ஆய்வாளர் ராம.ஆண்டவரும் மாமூல் பேரம் குறித்து பேசும் ஓர் உரையாடல், சமூக ஊடகங்களில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் பன்னீர்செல்வம், 'ஏற்கனவே மாதந்தோறும் மாமூல் கொடுத்து வருகிறேன். அப்படி இருந்தும் ஏன் வண்டியை மடக்கினீர்கள்?,' என்று கேட்கிறார். அதற்கு ராம.ஆண்டவர், 'இப்போது கடும் நெருக்கடி இருக்கிறது. கொஞ்ச காலம் அமைதியாக இருங்கள்,' என்று பதில் கூறி இருந்தார்.

Advertisment

சர்ச்சையை ஏற்படுத்திய இந்த உரையாடல் குறித்து விசாரித்து அறிக்கை அனுப்புமாறு வாழப்பாடி டிஎஸ்பிக்கு, எஸ்பி தீபா கனிகர் உத்தரவிட்டார். கரோனா ஊரடங்கில் இதுவும் கடந்து போகும் என்று அசால்ட்டாக இருந்த ஆய்வாளர் ராம.ஆண்டவரை, மே 8ம் தேதி திடீரென்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார் சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார். தமிழ்நாடு காவல்துறை துணைசேவைகள் விதிகள் பிரிவு 3 (இ)-ன் கீழ் பொதுநலன் கருதி அவர் பணியிடைநீக்கம் செய்யப்படுவதாக, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisment

ஓய்வு பெறும் வயதை நெருங்கிய நிலையில், திடீரென்று பணியிடைநீக்கம் செய்யப்பட்டதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ராம.ஆண்டவர், மாவட்ட எஸ்பிக்கு அனுப்பிய விளக்கத்தில், சேலம் மாவட்ட காவல்துறையில் மலிந்து கிடக்கும் ஊழல்களை புட்டு புட்டு வைத்திருந்தார். அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பத்து நாள்கள் கழித்து, அவருடைய குண்டக்க மண்டக்க விளக்கக் கடிதமும் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்வர் எடப்பாடி மாவட்டத்தில் லாட்டரி, கள்ளச்சாராயம், போதை பவுடர் என சகலவிதமான இத்யாதிகளும் தாராளமாக புழங்குவதும், குற்றவாளிகளும் காவல்துறையும் கைகோத்து செயல்படுவதும் அவருடைய குற்றச்சாட்டின் சாராம்சம்.

inspector rama andavar letter

ஆய்வாளர் ராம.ஆண்டவர் உயர் அதிகாரிகளுக்கு அளித்துள்ள விளக்கக் கடிதத்திலிருந்து...

''கூலிக்காரன், போலீஸ்காரனாக இருக்கலாம். அதிகாரியாக ஆசைப்படக்கூடாது. சேலம் மாவட்டம் மட்டுமல்ல. தமிழ்நாடு போலீஸ் முழுவதும் கிளப், லாட்டரி, மணல், மண், ஜல்லி, சந்துக்கடை, சூதாட்டக்காரர்களிடம் வசூல் செய்வதும், இரவு ரோந்து செல்லும் எஸ்.ஐ., பீட் காவலர்கள் வாகனத்தை வழிமறித்து பணம் வாங்குவதும் உலகத்திற்கே தெரிந்ததுதான்.

வீரகனூர் லத்துவாடி பன்னீர்செல்வம் என்பவர், எனக்குப் மாமூல் கொடுத்து இருந்தார் எனில், அவர் ஏன் என்னிடம் பலமுறை பணம் கொடுப்பது தொடர்பாக பேச வேண்டும்? மணல் கடத்தல்காரர் ஒருவர் மீது குண்டாஸ் வழக்கு போட, கடத்தல் வாகனத்தைப் பிடிக்க முயன்றபோது சேலம் மாவட்ட தனிப்பிரிவு ஏட்டு மல்லப்பனும், தனிப்பிரிவு ஆய்வாளர் முத்தமிழ் செல்வராஜனும் தடுத்தார்கள்.

மாவட்ட தனிப்பிரிவில் பணியாற்றும் ஒவ்வொருவரும் கையூட்டின் ஆணிவேராக இருக்கிறார்கள். பனை மரத்தில் கள் இறக்குவோரிடம்கூட தனிப்பிரிவு ஆய்வாளர், ஆத்தூர் டிஎஸ்பி வரை மாமூல் வசூலித்துக் கொள்கின்றனர். கள் இறக்கி, போதை மாத்திரை, போதை பவுடரை கலந்து குடித்து, யாருக்காவது உயிர்ச்சேதம் ஏற்பட்டால் என் மீது எப்ஐஆர் ஆகி விடுமோ என்று நான் பயந்து கிடந்தேன்.

என் குடும்பத்தாருக்கு நான் வாங்கும் சம்பளப் பணத்தைத் தவிர வேறு எந்த வித பணமும் தெரியாது. ஆனால், மற்ற காவல்நிலையங்களில் பெட்டிஷன் விசாரணை முதல் சிஎஸ்ஆர் பதிவு செய்வது வரை பணம் வாங்கப்படுவதை அதிகாரிகள் கண்டுகொள்ளாதது வேடிக்கையாக இருக்கிறது. தனிப்பிரிவு ஆய்வாளர், டிஎஸ்பி ஆகியோர் தனிப்பிரிவு காவலர்கள் மூலம் மாதந்தோறும் பணம் வசூலிப்பது மேலிடத்திற்கு எப்படி தெரியாமல் போனது?

காவல்துறையில் கையூட்டு கலாச்சாரம் இருப்பதால்தான் டிஎஸ்பி முதல் பலரும் நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுகிறார்கள். கரோனாவால் கையூட்டு தடைபட்டபோதும் தனிப்பிரிவு ஏட்டு சீனிவாசன், அண்ணாமலை போன்றவர்களை கண்டுகொள்ளாமல் விட்டதன் உண்மை புரியவில்லை.

கையூட்டுக்கார டிஎஸ்பி, தனிப்பிரிவு ஆய்வாளர், தனிப்பிரிவு காவலர்களை கட்டுப்படுத்தாமல், பினாமி பெயரில் எந்த சொத்தும் வாங்காத என்னை புறமுதுகு காட்டி ஓடச்செய்யும் இந்த அவல நிலை கண்டு, மனம் குமுறி வெளியேறுகிறேன். பென்ஷன் தொகை, உள்பட என் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட எந்த தொகையும் எனக்கு வேண்டவே வேண்டாம். கையூட்டு இல்லாத மாவட்டம் எனத் தெரிய வரும்போது என் மீது நடவடிக்கை எடுங்கள்,'' என்று மனம் நொந்து போய் விளக்கக் கடிதத்தில் எழுதியிருந்தார் ராம.ஆண்டவர்.

பணிக்காலத்தில் இவருடைய செயல்பாடுகள் குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்திருப்பது தெரிய வந்தது. தேனி மாவட்டம்தான் சொந்த ஊர். ஆனால், தென் தமிழகத்தைவிட கடலூர், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் என வட மாவட்டங்களில்தான் நீண்ட காலம் பணியாற்றி வந்திருக்கிறார்.

கடந்த 2017ல், தர்மபுரி மாவட்டம் மத்தூரில் பணியாற்றி வந்தபோது உதவி ஆய்வாளர் ஒருவருடன் ஏற்பட்ட கைகலப்பில் காவல்நிலையத்திலேயே அவரை சரமாரியாக தாக்கியிருக்கிறார் ராம.ஆண்டவர். அச்சம்பவத்திற்குப் பிறகு அவர் மாவட்ட ஆயுதப்படைக்கு இரண்டாம் முறையாக இடமாற்றம் செய்யப்பட்டார். 2016ல் பொம்மிடியில் ஆய்வாளராக இருந்தபோது சொந்த உபயோகத்திற்காக காவல்துறை ஜீப்பை நாமக்கல் மாவட்டத்திற்கு அவரே ஓட்டிச்சென்றிருக்கிறார். திரும்பி வரும் வழியில் சேலத்தை அடுத்த மல்லூரில் ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பெண் ஒருவர் பலியாகியிருக்கிறார். சாலை மறியல், காவல் வாகனம் உடைப்பு வரை பரபரப்பை ஏற்படுத்தியது. நெருக்கடிகள் அதிகரிக்கவே, அவர் கைது செய்யப்பட்டதுடன், பணியிடைநீக்கமும் செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு, கன மழையால் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது பந்தோபஸ்து பணிக்காக செல்லுமாறு ராம.ஆண்டவரிடம் மாவட்டக் காவல் அலுவலகத்தில் இருந்து தகவல் சொல்லப்பட்டபோது, 'ஏன் என்னை விட்டால் இங்கே வேறு யாரும் இன்ஸ்பெக்டர்களே கிடையாதா? அதெல்லாம் போக முடியாது,' என்று திறந்த மைக்கிலேயே அலட்சியமாக கூறியிருக்கிறார்.

இப்படி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வந்த ராம.ஆண்டவர், ஓய்வு பெறும் காலம் நெருங்கியதை அடுத்து, புதிதாக வரும் சர்ச்சைக்குரிய எந்த புகார் மனுக்களையும் விசாரிக்காமல் கவனமாக தவிர்த்து வந்திருக்கிறார் என்கிறார்கள் உளவுப்பிரிவினர். அதேநேரம், பெரிய அளவில் லஞ்ச வேட்டை புகார்களில் சிக்காவிட்டாலும், கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்றும் சொல்லி விடமுடியாது என்கிறார்கள் தனிப்பிரிவினர்.

காவல்துறை மீது விமர்சனம் செய்து எழுதப்பட்ட கடிதம் சமூக ஊடங்களில் வெளியானதன் பின்னணியில் ஐஜேகே கட்சி பிரமுகர் ஒருவர் இருப்பதாகவும், அவர்தான் இப்போதைக்கு ராம.ஆண்டவருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் ஒருதரப்பு சொல்கிறது.

இதுபற்றி ராம.ஆண்டவரிடம் பேசினோம்.

''எங்க எஸ்பி, டிஐஜி, ஐஜி அய்யா எல்லாரும் தங்கமான அதிகாரிங்கதான். கொழந்த மனசுக்காரங்க. போலீசை கெடுக்கணும்னு நினைக்க மாட்டாங்க. மேடம் கூட, பெரிய தப்பு பண்ணினாலும் டிரான்ஸ்பர்தான் பண்ணுவாங்க. மக்கள்கிட்டயும் எனக்கு நல்ல பேரு இருக்கு. இத்தனைக்கும் ரிட்டயர்மென்ட் ஸ்டேஜ் என்பதால் கெட்டப்பெயர் வந்துடும்னு பெட்டிஷன்கூட விசாரிக்க மாட்டேன். அப்படி இருந்தும் சஸ்பெண்ட் செய்துவிட்டனர்.

DIG pradeep kumar

டிஐஜி பிரதீப்குமார்

சஸ்பெண்ட் செய்த பிறகு எஸ்பியையும், டிஐஜியையும் பார்த்து பேசியிருக்கணும். ரெண்டையும் கைவிட்டுட்டேன். அப்படி செய்திருந்தால் ஒருவேளை என்னை மன்னிச்சிக்கூட விட்டிருப்பாங்க. ஐஜி அய்யாகிட்ட கூட நான் எஸ்ஐ ஆக மூன்று வருஷம் வேலை செய்திருக்கேன். மாமூல் புகார் தொடர்பாக பேசிய பன்னீர்செல்வமும் நானும் அதற்கு முன்பு பேசியதில்லை. ஐஜேகே கட்சி பிரமுகர் பற்றி கேட்கிறீர்கள். அவர் என் மீதுள்ள மரியாதைக்காக உதவி செய்கிறார்,'' என்று மேலோட்டமாக பதில் சொன்னார் ராம.ஆண்டவர்.

salem district sp  deepa ganiger

சேலம் மாவட்ட எஸ்பி தீபா கனிகர்

இதுகுறித்து சேலம் மாவட்ட எஸ்பி தீபா கனிகரின் கருத்தறிய பலமுறை முயற்சித்தோம். பலமுறை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோதும் 'கன்மேன்' ஒருவரே அழைப்பை எடுத்துப் பேசினார். எதுவாக இருந்தாலும் தனிப்பிரிவு ஆய்வாளரை தொடர்பு கொள்ளுமாறு நமக்குச் சொல்லப்பட்டது.

அதையடுத்து தனிப்பிரிவு ஆய்வாளர் முத்தமிழ் செல்வராஜிடம் கேட்டபோது, ''ராம.ஆண்டவர் மீது எத்தனையோ முறை புகார்கள் வந்துள்ளன. அவர் மீது பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றி இருக்கிறோம். இப்போதுகூட மாமூல் ஆடியோ குறித்து புகார் வந்து மூன்று மாதங்கள் கழித்துதான் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஒருமுறைகூட அவர் நேரில் வந்து பார்க்கவில்லை. அவர் இஷ்டத்திற்கு இருந்தால் நாம் என்ன செய்ய முடியும்? அவர் தன்னுடைய பணிக்காலத்தில் எந்த ஸ்டேஷனிலும் ஒரு வருடத்திற்கு மேல் தொடர்ந்து பணியாற்றியது கிடையாது. எல்லா இடத்திலும் புகாரின்பேரில்தான் நடவடிக்கைக்கு ஆளாகி இருக்கிறார்,'' என்றார்.

மாமூல் புகாரில் பணியிடைநீக்க நடவடிக்கை என்பது காவல்துறையில் சகஜம் என்பது ஒருபுறம் இருந்தாலும், முன்மாதிரியாக இருக்க வேண்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்திலேயே கள்ளச்சாராயம், லாட்டரி, சூதாட்ட கிளப், போதை குற்றங்கள் தலைவிரித்தாடுவதும், கிரிமினல்களுடன் காவல்துறையினர் கரம் கோத்து செயல்படுவதும் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதையும் மேலிடம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

letter salem district Inspector
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe