/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/team3333_0.jpg)
சேலத்தில், பாஜக சார்பில் ஏழைகள், ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யும் முகாமில், மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக விலகலைக் கடைப்பிடிக்காமலும் முண்டியடித்து நின்றதால் நோய்த்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்குத் தற்போது வரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதேநேரம் மலேரியா பாதிப்புக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் மாத்திரைகள், கரோனா நோய்த்தொற்றில் இருந்து மீள நல்ல பலன் தருவதாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். எனினும், வரும் முன் காக்கும் நடவடிக்கையாகப் பொதுவெளிகளில் ஒருவருக்கொருவர் மூன்று அடி தூரம் சமூக விலகலைக் கடைப்பிடிப்பதும், தனித்திருத்தலும் அவசியம் என்கிறது சுகாதாரத்துறை.
இது ஒருபுறம் இருக்க, கரோனாவால் விளிம்பு நிலை மக்கள் பலர் ஊரடங்கு உத்தரவால் வேலை மற்றும் வருவாய் இழந்துள்ளதால், அன்றாட உணவும் கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக வீடற்ற, சாலையோரவாசிகளின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறி இருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளும், தன்னார்வ அமைப்பினரும் இவர்களைத் தேடிச் சென்று இலவசமாக உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/agend 89999.jpg)
சேலத்தில் பாஜகவினர், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஏழை மக்களுக்கு நாள்தோறும் உணவுப்பொட்டலங்களை வழங்கி வருகின்றனர். இதற்காக தினமும் 7 ஆயிரம் பேருக்கான உணவுப்பொட்டலங்களைத் தயார் செய்கின்றனர். தக்காளி சோறு, வெஜிடேபிள் பிரியாணி, நெய் சோறு எனப் பெரும்பாலும் கலவை வகையறாக்களே வழங்குகின்றனர். பொன்னம்மாபேட்டை, புத்துமாரியம்மன் கோயில் பகுதி, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பாஜகவினர் வருகைக்காகவே மக்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
ஆரம்பத்தில் பாக்குமட்டை தட்டுகளில் உணவுப்பொருள்களை வழங்கி வந்தனர். பாக்குமட்டை தட்டுகளால் சுகாதாரக்கேடு ஏற்படும் என்று சுகாதாரத்துறை எச்சரித்ததை அடுத்து, ஃபாயில் பைகளில் உணவுகளை வழங்குகின்றனர். இதில், ஆர்எஸ்எஸ்ஸின் அங்கமான தேசிய சேவா சமிதி இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, உணவுப்பொட்டலங்களை வழங்கினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/FOOD 9999.jpg)
இந்நிலையில், வியாழனன்று (ஏப். 30) சேலம் பொன்னம்மாபேட்டை கேட் அருகில் வீராணம் முதன்மைச் சாலையில் பாஜகவினர் கொண்டு வரும் உணவுப் பொட்டலங்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வரிசையில் நீண்ட நேரமாக வெயிலில் காத்திருத்தனர். பாஜகவினர் சிலர் அவர்களிடம், மற்றொரு பகுதியில் உணவு விநியோகம் நடந்து வருவதால், அங்குப் பணிகளை முடித்து விட்டு விரைவில் வந்து விடுவார்கள் எனக் கூறிக்கொண்டிருந்தனர்.
பின்னர் தண்ணீர்த் தொட்டி பேருந்து நிறுத்தம் அருகில் உணவுப் பொட்டலங்களுடன் பாஜகவினர் ஜீப் ஒன்று வருவதைப் பார்த்ததும் பலர் திவ்ய தரிசனம் கிடைத்துவிட்ட பரவசத்தில் 'ஹே... வண்டி வந்துடுச்சு... வண்டி வந்துடுச்சு...' என்று உரக்கக் கத்திக்கொண்டே, அதுவரை சாலையில் அங்கும் இங்கும் நின்றவர்கள்கூட வரிசையில் ஓடிச்சென்று நின்றனர். இதனால் வரிசையில் நிற்பவர்களும் ஒருவருக்கொருவர் நெருக்கியடித்துக் கொண்டு நின்றனர். பலர் முகக்கவசங்களையும் அணிந்திருக்கவில்லை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/FOOD 8999.jpg)
ஆனால் ஜீப்பில் இருந்து இறங்கிய இளைஞர்களோ, 25- க்கும் குறைவான உணவுப்பொட்டலங்களை மட்டுமே கொண்டு வந்திருந்ததால் ஏழை மக்கள் பலரும் கடும் ஏமாற்றம் அடைந்தனர். அந்தப் பொட்டலங்களும் ஒரு நிமிடத்திற்குள் கொடுத்து முடிக்கப்பட அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். வரிசையில் வெயிலில் காத்துநின்ற மக்களும் காய்ந்த வயிறுடன் வீடு திரும்பினர்.
இதற்கிடையே, நாம் அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில், தலையில் சுமையுடன் நடந்து வந்த ஒரு மூதாட்டி கையை நீட்டியபடி 'சாப்பாடு...' என்று கேட்டு அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது பரிதாபமாக இருந்தது. பின்னர் அவர்களில் ஒருவர் ஓடிச்சென்று யாரிடம் இருந்தோ ஒரே ஒரு பொட்டலம் மட்டும் வாங்கி வந்து அந்த மூதாட்டிக்கு கொடுத்து பசியாற்றினர். அதன்பிறகும் ஒரு மூதாட்டி கையில் தடி ஊன்றியபடி வந்து பார்த்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.
இயலாதோர்க்கும், இல்லாதோருக்கும் உணவளிப்பதில் தவறேதும் இல்லை. ஆனாலும், ஒரு மாதத்திற்கு மேலாக இந்தச் சேவையைத் தொடர்ந்து வரும் பாஜகவினர், போதிய எண்ணிக்கையில் உணவுப்பொட்டலங்களை கொண்டு வந்திருந்தால், பலர் பட்டினியுடன் திரும்பிச் செல்வதை தடுத்திருக்க முடியும். அவர்களுக்கு கொடுத்து பழக்கி விட்டார்கள். மக்களும் வாங்கிப் பழகிவிட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/TEAM 8999.jpg)
இது ஒருபுறம் இருப்பினும், கடந்த சில நாள்களாக கரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற எந்த வித அறிகுறிகளும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இப்படியொரு அபாயமான சூழலில், சேலம் பொன்னம்மாபேட்டை மக்களோ சமூக விலகல் பற்றிய புரிதலோ அல்லது நோய்த்தொற்று குறித்த எச்சரிக்கை உணர்வோ இல்லாமல்தான் வரிசையில் ஒருவர் மீது ஒருவர் தொற்றிக்கொண்டு நின்றனர். இத்தனைக்கும் பாதுகாப்புக்கு வந்த காவலர் ஒருவர் கையில் லட்டியை வைத்துக்கொண்டு வெறுமனே நின்றாரே தவிர, சமூக விலகலுடன் மக்களை நிற்கும்படி வலியுறுத்தவோ அல்லது உணவு வழங்கும் பாஜகவினர் அவ்விதியைப் பின்பற்றவோ சொல்லவில்லை.
இப்படியான சம்பவங்கள் ஒருநாள் இருநாள் அல்ல. பொன்னம்மாபேட்டை பகுதிகளில் ஒவ்வொரு நாளும் சமூக விலகலின்றிதான் மக்களும் உணவுப்பொட்டலத்தை வாங்கிச் செல்கின்றனர். உணவு விநியோகம் செய்வோரும் அவர்களை ஒழுங்குபடுத்துவதில்லை. அதேநேரம், இந்தச் சேவையை வழங்கி வரும் பாஜகவினர் முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் வருகின்றனர்.
இதுபற்றி பாஜகவின் சேலம் நகர மண்டலத் தலைவர் வினோத்திடம் கேட்டபோது, ''என்றைக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்களோ அதற்கு அடுத்த நாளில் இருந்தே ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் பணிகளைத் தொடங்கி விட்டோம். ஒவ்வொரு நாளும் 7 ஆயிரம் பேருக்கு இந்தச் சேவையை வழங்குகிறோம். உணவுப் பொட்டலம் வாங்க வரும் மக்களிடம் முகக்கவசம் அணியுமாறும், 3 அடி தூரத்தில் வரிசையில் நின்று உணவை வாங்கிச் செல்லும்படியும் சொல்லி வருகிறோம். ஆனாலும், மக்கள் காது கொடுத்துக் கேட்காமல் போனால் நாங்கள் என்ன செய்ய முடியும்? காவல்துறையினர் சொன்னாலும் அவர்கள் கேட்பதில்லை. எங்கே உணவுப் பொட்டலம் நமக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பதற்றத்தில் அவர்கள் இப்படிக் கூட்டமாக நிற்கிறார்கள்,'' என்றார் அந்த இளைஞர்.
இறைச்சிக்கடையில் வாடிக்கையாளர்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் போனால் உடனடியாக அந்தக் கடையைப் பூட்டி சீல் வைக்கும் மாநகராட்சி நிர்வாகம், இப்பிரச்னையில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? உணவளிக்கும் நோக்கத்தில் பழுதில்லை என்றாலும், உயிரா? வயிறா? என்ற போராட்டத்தில் வயிற்றுக்கே முன்னுரிமை கொடுப்பதால், ஒட்டுமொத்த சமூகமும் பெருந்துயரத்தை நோக்கிச்செல்லும் அபாயம் இருப்பதை மக்களும் உணர வேண்டும்.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif.gif)