Skip to main content

சேலம் மாநகராட்சி திவால்? ஊழியர்களின் 5 கோடி ரூபாய் பி.எப். மாயம்!

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

சேலம் மாநகராட்சி ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 5 கோடி ரூபாய் வரையிலான பி.எப். தொகை பல மாதங்களாகியும் பி.எப். கணக்கில் செலுத்தப்படாமல் உள்ளது, பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் மாநகராட்சியில் அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய நான்கு மண்டல அலுவலகங்களும், முதன்மை அலுவலகமும் இயங்கி வருகிறது. துப்புரவு பணியாளர்கள் முதல் முதன்மை ஊழியரான ஆணையர் வரை ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். ஊழியர்கள் சம்பளம், வாகன எரிபொருள், அலுவலக பராமரிப்பு, மின்கட்டணம் என மாதம் 21 கோடி ரூபாய் வரை அடிப்படை செலவினங்களுக்காக நிதி தேவைப்படுகிறது.

salem corporation corruption pf amount employees shock



ஆனால், இன்றைய நிலவரப்படி ஊழியர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் சம்பளம் கொடுக்கவே சம்பள கணக்கில் போதிய நிதி இல்லை என கைகளை அகல விரித்துள்ளது சேலம் மாநகராட்சி நிர்வாகம். மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் தத்தளித்து வரும் தமிழக அரசைக் காட்டிலும், சேலம் மாநகராட்சி நிர்வாகம் கடன் சுமையால் தடுமாறிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் நிர்வாகத்தின் வரவு செலவு விவகாரங்களைக் கவனிக்கும் ஊழியர்கள்.


அப்படி என்னதான் நிதி நெருக்கடி பிரச்னை? என்று நிர்வாகத்தில் சிலரிடம் கேட்டோம். 


''சார்... கடந்த 2011 முதல் 2016 வரை அதிமுக ஆட்சியின்போது, உள்ளாட்சி அமைப்பில் இருந்த மேயர் முதல் கவுன்சிலர்கள் வரை எல்லோரும் தங்கள் இஷ்டத்திற்கு பொதுக்குடிநீர்க் குழாய்களை பதிக்க வற்புறுத்தி, குழாய்களை பதித்தனர். இதனால் வீடுகளுக்கு பல புதிய குடிநீர்க்குழாய் இணைப்பு மூலம் கிடைக்க வேண்டிய  வருவாய் கணிசமாக குறைந்தது. மாநகராட்சி அங்காடிகள், சந்தைக்கூடங்களை ஏலம் எடுப்பதில் ஆளுங்கட்சியினர் சிண்டிகேட் அமைத்துக் கொண்டதால் குறிப்பிட்ட தொகைக்கு மேல் எந்த ஒரு கடையும் ஏலம் போகவில்லை. அதனாலும் வருவாய் குறைந்தது.


எல்லாவற்றுக்கும் மேல், வரி வருவாய்தான் முதன்மை வருவாய் மூலமாக இருந்து வந்த நிலையில், வரி குறைப்பு பற்றி உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டதால், வரி வசூலிப்பிலும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. மாதத்தில் இரண்டு மூன்று முறை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் வந்து விடுவதால், அவர்களுடன் வரும் அதிகாரிகள் முதல் ஆளுங்கட்சிக்காரர்களின் உணவு உபசரிப்பு, போக்குவரத்துச் செலவினங்கள் வரை எல்லாமே எங்கள் தலையில்தான் கட்டி விடுகின்றனர். இதற்கெல்லாம் எந்த கணக்கு வழக்குகளும் கிடையாது. 


இது மட்டுமின்றி, அம்மா உணவகங்களால் மாநகராட்சிக்கு நிகர நட்டம் ஏற்படுகிறது. யாரோ சிலர் அதிகார மையத்திடம் நல்ல பெயர் எடுக்க இப்படி ஒரு திட்டத்தை அறிவித்து விட்டனரே தவிர, அதற்கென தனியாக நிதி ஒதுக்கீடு எதுவும் வழங்காததால், மாநகராட்சி நிர்வாகம் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. பல்வேறு திட்டங்களுக்காக சேலம் மாநகராட்சி பெற்ற கடன்களுக்காக மாதந்தோறும் வட்டி மட்டுமே 3.50 கோடி ரூபாய் செலுத்தி வருகிறோம். அதனால்தான், ஊழியர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் சம்பளம் கொடுக்க முடியவில்லை. செப். 28ம் தேதி ஆகியும் ஆகஸ்ட் மாத ஊதியம் வழங்கப்படாததற்கும் அதுதான் காரணம்,'' என புலம்பித் தள்ளினர் ஊழியர்கள்.


இது ஒருபுறம் இருக்க, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, ஊழியர்களிடம் அவர்களின் சம்பளத் தொகையில் இருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்யப்பட்ட பிஎப் தொகையும் இன்னும் அவர்களின் பிஎப் கணக்கில் செலுத்தப்படாமல் உள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வகையில் மட்டும் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் பிஎப் தொகை பிடித்தம் செய்யப்பட்டு கணக்கில் செலுத்தப்படாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.


சேலத்தைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலரும், பாஜக முன்னாள் கிளைத்தலைவருமான தாதை சிவராமன், ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல்களின்படி, அம்மா உணவகம், கொசு ஒழிப்புப்பிரிவு, திடக்கழிவு மேலாண்மை ஆகிய பிரிவுகளில் பணியாற்றி வரும் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 3.36 கோடி ரூபாய் பிஎப் தொகை, இதுவரை பிஎப் கணக்கில் செலுத்தாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. சூரமங்கலம் மண்டல ஊழியர்கள் நீங்கலாக மட்டுமே இவ்வளவு தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் சூரமங்கலம் மண்டலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையையும் சேர்த்தால் 5 கோடி ரூபாய்க்கு மேல் பிஎப் தொகையை ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்காமல் ஏமாற்றி வருவது தெரிய வந்துள்ளது.

salem corporation corruption pf amount employees shock


''சேலம் மாநகராட்சி நிர்வாகம் ஊழியர்களிடம் பிடித்தம் செய்த 5 கோடி ரூபாய் பிஎப் தொகையை, பல ஆண்டுகளாக ஊழியர்களின் பிஎப் கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்திருக்கிறது. அந்தத் தொகை என்ன ஆனது? அதிகாரிகள் சுருட்டி விட்டார்களா? என்ற விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இது மட்டுமின்றி, 2014 முதல் 2018 வரை துப்புரவு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வந்த சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம், கொசு ஒழிப்புப் பணிகளை ஒப்பந்தம் எடுத்திருந்த ஐலேக் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனமும் ஊழியர்களிடம் பிடித்த செய்த பிஎப் தொகையை முறையாக அவர்களின் கணக்கில் செலுத்தாமல் ஸ்வாகா செய்திருக்கின்றன. 


எனது புகார்களின்பேரில் இந்த மூன்று நிறுவனங்கள் மீதும் இபிஎப் அலுவலகத்தில் விசாரணை நடந்து வருகிறது. மாநகராட்சியின் அலட்சியத்தால் பணியின்போது இறந்த தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள் பிஎப் பணத்தை எடுக்க முடியாமலும், பென்ஷன் பலன்களைப் பெற முடியாமலும் அல்லல் படுகின்றனர். இப்படி செயல் திறனற்ற மாநகராட்சிக்குதான் சிறந்த மாநகராட்சி விருது என்று தமி-ழக அரசு விருது கொடுத்துள்ளது வெட்கக்கேடு,'' என்று கொதித்தார் தாதை சிவராமன். 


நம்முடைய கள விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்களும் கிடைத்துள்ளன.


அதாவது, 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வரும் தொழிலகங்களில் ஊழியர்களின் சம்பளத் தொகையில் இருந்து பிஎப் (தொழிலாளர் வருங்கால வைப்புநிதி) கணக்கில் மாதந்தோறும் 12 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படும். அத்தொகைக்கு நிகராக வேலை அளிப்பவரும் (இங்கே சேலம் மாகராட்சி நிர்வாகம்) 12 சதவீதம் அந்த ஊழியரின் கணக்கில் செலுத்த வேண்டும். வேலை அளிப்பவர் செலுத்தும் 12 சதவீத தொகையில் 8.33 சதவீதம், ஊழியர்களின் பென்ஷன் கணக்கில் தனியாக வரவு வைக்கப்படும். இவ்வாறு செலுத்தப்படும் பிஎப் தொகைக்கு தற்போது 8.50 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த கணக்கில் இருந்து தொழிலாளர்கள் கடன் பெறும் வசதியும் உண்டு.


சேலம் மாநகராட்சி நிர்வாகம் பிஎப் தொகை செலுத்தாமல் உள்ளதை சுட்டிக்காட்டி, பலமுறை நினைவூட்டல் கடிதங்களை அனுப்பியும் கண்டும்காணாமலும் இருந்துள்ளது. இதனால் வெறுத்துப்போன சேலம் மண்டல பிஎப் அலுவலக அதிகாரிகள், நேரடியாக மாநகராட்சி அலுவலகத்தில் சென்று அங்குள்ள கணக்குவழக்கு ஆவணங்களை ஆய்வுக்காக கேட்டபோது அவர்களை உள்ளே விடாமல் மாநகராட்சி ஊழியர்கள் தகராறிலும் ஈடுபட்டுள்ள சம்பவமும் நடந்துள்ளது. 


இது தொடர்பாக சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸிடம் விளக்கம் பெற முயன்றோம். அவர் நம் செல்போன் அழைப்பை எடுப்பதை தவிர்த்தார். அவருக்கு அடுத்த நிலையில் இருந்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''மாநகராட்சி நிர்வாகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் பிஎப் தொகையை உரியவர்களின் கணக்கில் செலுத்த முடியாமல் தடுமாறி வருகிறோம். இப்போது பலவகையிலும் செலவினங்களைக் குறைத்தும், வரி வசூலை தீவிரப்படுத்தியதாலும்தான் தாமதம் ஆனாலும் ஊழியர்களுக்கு சம்பளமாவது கொடுக்க முடிகிறது,'' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார். 

salem corporation corruption pf amount employees shock


இதையடுத்து நாம் சேலம் மண்டல இபிஎப் அலுவலக அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம்.


''ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பிஎப் தொகையை, பிரதி மாதம் 15ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட ஊழியரின் பிஎப் கணக்கில் செலுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் மீது, இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் மோசடி செய்ததாக புகார் அளிக்க முடியும். சேலம் மாநகராட்சி நிர்வாகம் பிஎப் தொகை செலுத்தாமல் இருப்பது குறித்து பலமுறை அறிவுறுத்தப்பட்டும் கண்டுகொள்ளவில்லை. பிஎப் சட்டப்பிரிவு 7 (ஏ)-ன் கீழ் மாநகராட்சி அதிகாரிகளிடம் இப்போது விசாரணை நடந்து வருகிறது. 


கடைசியாக செப். 24ம் தேதி மாநகராட்சி உதவி ஆணையர் ரமேஷ்பாபு என்பவர் விசாரணைக்கு ஆஜரானார். அவரோ, மாநகராட்சி செலுத்த வேண்டிய பிஎப் தொகையை தள்ளுபடி செய்யும்படி கடிதம் அளித்தார். பிஎப் தொகை என்பது ஊழியர்களின் பணம். அதை எந்தக்காரணம் கொண்டும் தள்ளுபடி செய்ய முடியாது. அவர்கள் அடிப்படை புரிதல்கூட இல்லாமல் நடந்து கொள்கின்றனர். விசாரணை முடிவில், மாநகராட்சியின் வங்கிக் கணக்கு, பிஎப் அலுவலக கணக்குடன் இணைத்துக் கொள்ளவும் சட்டத்தில் இடமிருக்கிறது. இப்படி பிஎப் பணத்தைச் செலுத்தாமல் இருப்பதும் மோசடி குற்றமே,'' என்றார்.


பிஎப் நிதி என்பது ஊழியர்களின் செங்குருதி என்பதை சேலம் மாநகராட்சி உணர வேண்டும். குருதியையே உணவாகக் கொள்வோரால் மட்டுமே பிஎப் தொகையிலும் மோசடி முடியும்.




 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.