Skip to main content

8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு:விவசாயிகளை கோர்ட்டுக்கு இழுத்த எடப்பாடி! 'விவசாயி மகன் என்பதெல்லாம் ஏமாற்று முழக்கம்'

Published on 09/01/2020 | Edited on 09/01/2020

பொது மேடைகளில், 'நானும் ஒரு விவசாயியின் மகன்தான்' என்று முழங்கி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சொந்த மண்ணின் உரிமைக்காக போராடி வரும் அப்பாவி விவசாயிகள் மீது சமூக விரோத கும்பலுடன் தொடர்பு இருப்பதாக, பொய் வழக்குகளை புனைந்து நீதிமன்ற படிக்கட்டுகளை ஏற விட்டிருப்பது, உள்ளூர் விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 


சேலம்- சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கான நில எடுப்புப் பணிகள் என்றைக்கு தொடங்கியதோ, அன்று முதல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின் தூக்கம் தொலைந்து போனது. சொந்த மண்ணான சேலத்திலேயே எடப்பாடிக்கும், மோடிக்கும் எதிராக விவசாயிகளிடையே கிளம்பிய கடும் அதிருப்திதான், அவர்களை மக்களவை தேர்தலில் மண்ணைக் கவ்வ வைத்தது. 

salem- chennai 8 roads chennai high court farmers


கடந்த 2018 மற்றும் 2019- ஆம் ஆண்டு முழுக்கவே எட்டு வழிச்சாலைக்காக எதிராக தொடர் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என கடும் மன உளைச்சலில் சிக்கிக்கிடந்த விவசாயிகளை, ஆண்டு இறுதியில் அவர்கள் மீது நான்கு முக்கிய பிரிவுகளில் பொய் வழக்கை பதிந்து, நீதிமன்ற படிக்கட்டுகளை ஏற விட்டிருக்கிறது எடப்பாடியின் ஏவல்துறையான காவல்துறை.


சேலம் முதல் சென்னை வரையிலான எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்திய முறையே தவறு என்றும், அதற்கான அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்கூட, விவசாயிகளை நசுக்குவதில் குறியாக இருந்து வருகிறது எடப்பாடி மற்றும் மோடி கூட்டணி. 


இந்த நிலையில்தான், எட்டுவழிச்சாலைக்கான நில எடுப்பு வருவாய் அலுவலர் குழந்தைவேலு தலைமையில், கடந்த 23.1.2019ம் தேதியன்று, சேலத்தை அடுத்த மாசிநாயக்கன்பட்டியில் கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாற்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலையில் அமர்ந்து அறவழியில் போராட்டம் நடத்தினர். 

salem- chennai 8 roads chennai high court farmers


அப்போது யார் கொடுத்த யோசனையோ தெரியவில்லை, முன்னெப்போதும் இல்லாத வகையில் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டிருந்தனர். மெட்டல் டிடெக்டர் வைத்து விவசாயிகளை சோதனை செய்தனர். ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களின் போது குறிப்பாக விவசாயிகளின் போராட்டங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் எல்லாம் நுழைந்ததை அப்போது வரை பத்திரிகையாளர்கள் கூட அறிந்திடாத நடைமுறை. கியூ பிரிவு காவல்துறையினரும் போராட்டங்களை செல்போனில் பதிவு செய்தனர்.


காலையில் தொடங்கி மாலை வரை நடந்த போராட்டத்தில் காவல்துறைக்கும், விவசாயிகளுக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் விவசாயிகள் சிவகாமி, கவிதா, வடிவேல் ஆகியோர் மயக்கமடைந்தனர். மூவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

salem- chennai 8 roads chennai high court farmers


இது ஒருபுறம் இருக்க, 2019 ஆகஸ்ட் 4- ஆம் தேதியன்று, சேலத்தில் அரசுப் பொருட்காட்சியைத் தொடங்கி வைக்க விவசாயி மகனான எடப்பாடி பழனிசாமி வந்திருந்தார். அவரிடம் நேரில் மனு அளிப்பதற்காக எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். ஆனால் அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை, நான்கு மணி நேரமாக வெட்டவெளியில் மண் தரையில் அமர வைத்தனர். நிகழ்ச்சி முடிந்து முதல்வர் சென்ற பிறகு, விவசாயிகளும் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றுவிட்டனர்.

 

இவ்விரு சம்பவங்கள் முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில், மாசிநாயக்கன்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டதாக திடீரென்று மோகனசுந்தரம் (59), ரவி (47), கலா (43), நாராயணன் (43), மூர்த்தி (40), சிவகாமி (39), கவிதா (35), வடிவேல் (57), பன்னீர்செல்வம் (53), வீரமணி (36) ஆகிய 10 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு  செய்துள்ளது காவல்துறை. இவர்கள் மீது இ.த.ச. பிரிவு 143 (சட்ட விரோத கும்பலின் உறுப்பினராக இருத்தல்), பிரிவு 341 (சட்ட விரோதமாக தடுத்து வைத்தல்), பிரிவு 353 (பொது ஊழியரை கடமையைச் செய்ய விடாமல் தடுத்தல்), பிரிவு 332 (பொது ஊழியரை கடமையைச் செய்ய விடாமல் தடுக்கும் நோக்கில் தம்மிச்சையாக காயம் விளைவித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

salem- chennai 8 roads chennai high court farmers


இது தவிர, அரசுப் பொருட்காட்சி துவக்க விழாவன்று போராட்டம் நடத்தியதாக 12 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் என்ன வேடிக்கை என்றால், வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் சின்னதம்பி மகன் பழனிசாமி, கலா மற்றொரு கலா என மூன்று போலியான நபர்களின் பெயர்களையும் இணைத்திருக்கிறார்கள் காவல்துறையினர். 


இந்த பொய் வழக்குகள் தொடர்பாக, சேலம் மாவட்டம் பூலாவரி கூமாங்காட்டில் வசிக்கும் எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த விவசாயி மோகனசுந்தரத்தை சந்தித்துப் பேசினோம்.


''சேலத்தில் அரசுப் பொருட்காட்சியைத் துவக்கி வைக்க முதல்வர் வருகிறார் என்று கேள்விப்பட்டு, எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுக்க விருப்பம் இல்லை என்று கோரிக்கை மனுக்களை அவரிடம் நேரில் கொடுப்பதற்காக சென்றிருந்தோம். காவல்துறையினர் எங்களை நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் செல்ல விடாமல் நுழைவுப் பகுதியிலேயே ரவுண்டு கட்டி அமர வைத்துவிட்டனர். அவர்கள் எங்களை தடுத்து நிறுத்திவிட்டு, நாங்கள் என்னவோ காவல்துறையை தடுத்து வைத்ததுபோல் வழக்கு ஜோடித்துள்ளனர். 


நீதிமன்றத்தில் ஆஜராகச் சொல்லி சம்மன் வந்தபோதுதான் பொருட்காட்சி துவக்க விழாவன்று மனு கொடுக்கப் போனதற்காக எங்கள் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதே தெரிய வந்தது. எடப்பாடி பழனிசாமியின மோசமான, சர்வாதிகாரமான ஆட்சிக்கு இதுதான் உதாரணம். காவல்துறை மூலம் வழக்குப்போட்டு பயமுறுத்த நினைக்கிறார்கள். இத்தனைக்கும் எங்கள் மீது வழக்கு எதுவும் பதியக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக நீதிமன்றத்தில் தடையாணையும் பெற்றிருக்கிறோம். அப்படியிருந்தும் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.


நாடு போகும் போக்கே சரியில்லீங்க. நாங்க எப்படியோ இந்த எடப்பாடிக்கிட்டயும், மோடி அரசாங்கத்துக்கிட்டயும் ஓரியாடிக்கிட்டுப் போறோம். ஆனா எங்க புள்ளைங்கள இந்த நாட்டுல எந்த நம்பிக்கையில் விட்டுட்டுப் போகப் போறோம்னு தெரியலைங்க. அவர்கள் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ முடியும்கிற நம்பிக்கையை மாநில அரசும் சரி; மத்திய அரசும் சரி, இதுவரைக்கும் கொடுக்கலைங்க. எத்தனை வழக்குப் போட்டாலும் எட்டுவழிச்சாலைக்காக ஒரு பிடி மண்ணைக் கூட விட்டுத்தரப் போறதில்ல. இந்த வழக்கில் போலியான சிலரையும் காவல்துறையினர் சேர்த்து இருக்கிறார்கள். அவர்களை எப்படித்தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்களோ?,'' என்றார் மோகனசுந்தரம்.


குள்ளம்பட்டி பன்னீர்செல்வம் நம்மிடம், ''எட்டுவழிச்சாலை வந்தால் எங்களுக்குச் சொந்தமான நாலே முக்கால் ஏக்கர் விவசாய நிலம் பறிபோய் விடும். விவசாயிகளோ, பொதுமக்களோ யாருமே கேட்காதபோதும், அதற்கான தேவை இல்லாத நிலையிலும் எட்டுவழிச்சாலையைக் கொண்டு வரத் துடிக்கிறார்கள். இந்த சாலைக்கான அவசியத்தைச் சொல்லிவிட்டு கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்துங்கள் என்றுதான் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கடந்த 23.1.2019ம் தேதி முறையிட்டோம். அதில் என்ன தவறு இருக்கிறது? 


இத்தனைக்கும் எங்கள் தரப்பில் அன்றைக்கு 40 முதல் 50 பேர்தான் இருந்தோம். ஆனால், 300- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இருந்தார்கள். மறியலில் ஈடுபட்ட ஒவ்வொரு விவசாயியையும் நாலைந்து போலீசார் தூக்கிச்சென்று அப்புறப்படுத்தினர். அப்படி இருக்கும்போது நாங்கள் எப்படி அவர்களுக்கு காயத்தை விளைவிக்க முடியும்? எங்கள் சொந்த மண்ணுக்காக போராடுவதைக்கூட குற்றம் என்று வழக்குப் போடுகிறார்கள். எங்கள் தரப்பில் போராட்டம் நடத்திய சிலர் மூர்ச்சையாகி மயங்கி விழுந்தனர். போராடும் விவசாயிகளை அடக்கி, ஒடுக்கப் பார்க்கிறார்கள். 


எதற்கெடுத்தாலும் நானும் விவசாயியின் மகன்தான் என்று சொல்லி வரும் முதல்வர் எடப்பாடி, கார்ப்பரேட் நலனுக்காகத்தான் செயல்படுகிறார். மத்திய அரசும் அப்படித்தான் இருக்கிறது. உண்மையான சுதந்திர போராட்டம் என்பது கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக போராடுவதுதான். அதை நோக்கி எங்களை தள்ளுகிறார்கள் மோடியும் எடப்பாடியும்,'' என கொந்தளித்தார் பன்னீர்செல்வம்.


குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள சின்னகவுண்டாபுரம் விவசாயி சிவகாமியிடம் கேட்டபோது, ''இப்போது பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்கு விவரங்களைப் பார்க்கும்போது, எங்களை சமூக விரோதிகள் போல சித்தரிக்க வேண்டும் என்று காவல்துறை முன்பே திட்டமிட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதனால்தான் வெடிகுண்டு தடுப்புப் பிரிவையும் மாசிநாயக்கன்பட்டியில் நடந்த மறியல் போராட்டத்திற்கு வரவழைத்து இருக்கிறார்கள். 


அப்பாவி விவசாயிகள் மீது பொய் வழக்குப்போட்டு பயமுறுத்திப் பார்ப்பதுதான் எடப்பாடியின் ஆளுமையா? ஊருக்கு சோறு போடும் விவசாயிகளான நாங்கள் யாரையும் பார்த்து பயந்துவிட மாட்டோம். பாலியல் குற்றவாளிகள், கொள்ளையர்கள், கொலைகாரர்களை எல்லாம் இந்த அரசாங்கம் தப்ப விட்டு வேடிக்கைப் பார்க்கிறது. 


ஏற்கனவே சேலம் - உளுந்தூர்பேட்டை நான்கு வழிச்சாலைத் திட்டத்தால் எங்களுக்குச் சொந்தமான 2 ஏக்கர் விளை நிலத்தை இழந்தோம். பத்து ஆண்டுகள் ஆகியும், இன்னும் அதற்கே இழப்பீடு தொகை வந்தபாடில்லை. இது ஒரு நேர்மையற்ற அரசு. இப்போது எட்டுவழிச்சாலை வந்தால், இன்னும் 2 ஏக்கர் நிலத்தை பறிகொடுக்கும் நிலை உள்ளது. நாங்கள் எங்கள் உரிமைக்காகப் போராடினால் தூக்கி உள்ளே வைக்க துடிக்கிறார்கள். எத்தனை வழக்குப் போட்டாலும் நாங்கள் போராடுவதை நிறுத்தப் போவதில்லை,'' என்றார்.


ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக நீதிமன்றங்களில் தொடர்ந்து முழங்கி, நீதியைப் பெற்றுக் கொடுத்துவரும் மூத்த வழக்கறிஞர் தோழர் பவானி பா.மோகனிடம் பேசினோம். அறவழியில் போராடி வரும் விவசாயிகள் மீதான காவல்துறை நடவடிக்கை சரியானதுதானா? என்று கேட்டோம்.

salem- chennai 8 roads chennai high court farmers


''இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19 (1) (ஏ)- ன் படி, எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை, ஆயுதமின்றி கூடும் உரிமை ஆகியவை நமது அடிப்படை உரிமை. அரசாங்கம் என்பது வேறு. அரசு என்பது வேறு. மோடி அரசாங்கத்தின் என்ஆர்சி எதிர்த்துப் போராடுவதும், எடப்பாடியின் எட்டு வழிச்சாலையை எதிர்த்துப் போராடுவதும் மக்களின் அடிப்படை உரிமை ஆகும். இந்த அரசாங்கத்தின் தவறான கொள்கையை எதிர்த்து போராடலாம். தப்பில்லை.


பிரிவு 21, வாழ்வுரிமை பற்றி பேசுகிறது. நல்ல தண்ணீர், நல்ல காற்று, நல்ல உணவு, நல்ல வேலை கொடுப்பது அரசின் பொறுப்பு. அதைக் கேட்டுப் போராடுவது நமது உரிமை. அதைத் தர வேண்டியது அரசின் கடமை. ஆகையால் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறபோது போராடுவதில் தவறில்லை. மக்கள் உரிமைகளுக்காக அரசாங்கத்தைப் பற்றி கடுமையான வார்த்தைகளால் பேசினால்கூட தவறில்லை என்று நீதிமன்றம் சொல்கிறது,'' என்கிறார் தோழர் பவானி பா.மோகன். 


மண்டியிட்டு ஆட்சிக்கு வந்தவர்களுக்கு, விவசாயிகளின் மானத்தைக் காப்பாற்ற வக்கிருக்காதுதான்!


 

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.