Skip to main content

ஏழைகள் வயித்துல அடிச்சு இப்படி ஒரு ரோடு எடப்பாடி அரசுக்கு தேவையா? குள்ளம்பட்டி விவசாயிகள் கொந்தளிப்பு!! 

Published on 13/06/2018 | Edited on 13/06/2018
salem chennai 8 lane road


சேலம் - சென்னை இடையே அமைய உள்ள எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்காக நிலத்தை அளக்க வரும் அதிகாரிகளை விரட்டுவோம் என குள்ளம்பட்டி கிராம விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 
 

நக்கீரன் இணைய ஊடகத்திடம் குள்ளம்பட்டி கிராம மக்கள் கூறியது: 
 

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்தான்னு சொல்றாங்க. எட்டு வழிச்சாலையால் இனி இந்த விவசாய நிலம் பூராவுமே அழிஞ்சு போய்டும். அப்புறம் முதுகெலும்பு இல்லாம எப்படி இந்தியா இருக்கும்? எடப்பாடி அரசுக்கிட்ட நான் கேட்கிறேன். 

 

 

 

எட்டு வழிச்சாலை வேண்டாம் என்று இங்கே இத்தனை விவசாயிகள் மனு கொடுத்திருக்கிறோம். இந்த சாலை வேண்டும் என்று யாராவது மனு கொடுத்திருக்கிறார்களா? எட்டு வழிச்சாலை வேண்டும் என்பவர்கள், அவர்களின் சொந்த நிலத்தை கொடுக்க தயாராக இருக்கிறார்களா? 
 

எடப்பாடி அரசாங்கத்தை கண்டிக்கிறோம். நாங்க அவருக்கு ஓட்டுப் போடல. நாங்க ரெட்டலைக்குதான் ஓட்டு போட்டோம். இந்த ரோட்டை போட்டால், கண்டிப்பாக இந்த ஆட்சி கலைந்து விடும். தூத்துக்குடி சம்பவத்தை விட பெரிய சம்பவம் சேலத்தில் நடக்கும். எங்களுக்கு ரேஷன் கார்டு வேணாம், ஆதார் கார்டு வேணாம். அரசாங்கம் எங்களுக்கு என்னென்ன ஆவணங்கள் கொடுத்திருக்கிறார்களோ அத்தனையும் கொடுத்து விடுகிறோம். 
 

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை போட்டால் மூனு மணி நேரத்தில் சென்னைக்குப் போலாம்னு சொல்றாங்க. அதனால் இந்தப் பகுதியில் என்ன தொழில் வளம் பெருகும்? விவசாயிகள் இல்லாமல், விளை பொருள் இல்லாமல் வெறும் பணத்தை மட்டும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சாப்பிட்டு விடுவார்களா? 
 

தரிசு நிலங்களை மட்டும்தான் இந்த திட்டத்துக்காக எடுப்போம்னு எடப்பாடி சொன்னாரு. வாரத்துக்கு ரெண்டு நாள் எடப்பாடி சேலத்துக்கு வர்றாரு. அவர் ஒருமுறையாவது இந்த இடத்தில் நேரில் வந்து பார்க்கணும். இங்கு உள்ளதெல்லாம் தரிசு நிலமா? விவசாய நிலத்தை அழிச்சு அப்படி என்ன ரோடு போடப்போறாங்க? 

 

 

 

மோடி நான்காண்டு சாதனை அறிக்கையில், விவசாயத்துக்குதான் முன்னுரிமை என்று கூறுகிறார். ஆனால், அவரேதான் இப்போது விவசாயத்தை அழிக்கப் பார்க்கிறார். கனிம வளங்களை திருடிச் செல்வதற்கான திட்டம்தான் இந்த எட்டுவழிச்சாலை திட்டம். பெரு முதலாளி ஒருவர் சம்பாதிக்கிறதுக்காக இத்தனை விவசாயிகளை வதைக்க வேண்டுமா? 
 

ஏழைகள் வயித்துல அடிச்சு இப்படி ஒரு ரோடு எடப்பாடி அரசுக்கு தேவையா? சேலத்துக்கு எடப்பாடி நல்லது செய்வாருனுதான் நினைச்சேன். ஆனால் இப்படி பண்ணுவாருனு நினைக்கவே இல்லை. 

 

 

 

கல்லூரி மாணவர்களை ஒன்று திரட்டி போராடுவோம். நிலத்தை அளப்பதற்கு யார் வந்தாலும் அவர்களை விரட்டுவோம். அதையும் மீறி நிலத்தை அளந்தால், விஷம் குடித்து தற்கொலை செய்வோம். எங்கள் மீது ரோடு போட்டுக் கொள்ளட்டும். 

இவ்வாறு குள்ளம்பட்டி விவசாயிகள் ஆவேசமாகக் கூறினர்.