Skip to main content

பட்டியல் சமூக பெண் ஊராட்சி தலைவரை மிரட்டிய அதிமுக பிரமுகர்! முதல்வர் மாவட்டத்தில் பரவும் சாதீய வன்மம்!

Published on 30/04/2020 | Edited on 01/05/2020
am

                                                     அம்சவள்ளி                                    சதீஸ்குமார்


''ரெண்டே மாசத்துல முடிச்சிருப்பேன்!" பட்டியல் சமூக பெண் ஊராட்சி தலைவரை மிரட்டிய அதிமுக பிரமுகர்! முதல்வர் மாவட்டத்தில் பரவும் சாதிய வன்மம்!


சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள அத்திக்காட்டானூர் காட்டு வலவை சேர்ந்தவர் சதீஸ்குமார் (38). தாரமங்கலம் ஒன்றிய திமுக துணை செயலாளராக இருக்கிறார். இவருடைய மனைவி அம்சவள்ளி (33). இவர், டி.கோணகாபாடி ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். அதே ஊரை சேர்ந்த மோகன், சேலம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவராகவும், டி.கோணகாபாடி ஊராட்சியில் 5வது வார்டு உறுப்பினராகவும் உள்ளார். இவருடைய மனைவி நிரஞ்சனா, இந்த ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர்.

இதுவரை பொது தொகுதியாக இருந்து வந்த டி.கோணகாபாடி ஊராட்சி, சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது பட்டியல் சமூகத்திற்கான ரிசர்வ் தொகுதியாக மாற்றப்பட்டது. அதையடுத்தே, வரலாற்றில் முதல்முறையாக பட்டியல் சமூகத்தை சேர்ந்த அம்சவள்ளி இந்த ஊராட்சி மன்றத்தின் தலைவராக வெற்றி பெற முடிந்திருக்கிறது.


அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் இருந்தே மோகன், அம்சவள்ளி - சதீஸ்குமார் தம்பதியிடம் சாதிய வன்மத்துடன் நடந்து கொள்ள தொடங்கியிருக்கிறார். பலர் முன்னிலையிலும் சாதி பெயரை சொல்லி அழைப்பதும், ஆபாச சொற்களால் அர்ச்சனை செய்வதுமாக இருந்திருக்கிறார். 

இந்நிலையில்தான், அருகில் உள்ள இலங்கை அகதிகள் குடியிருப்புக்கு குடிநீர் குழாய் பதிப்பது தொடர்பான பணியின்போது, அம்சவள்ளியை பணிகளை செய்ய விடாமல் தடுத்ததோடு, அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் எல்லாம் திட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார். இதுகுறித்து அம்சவள்ளி கையெடுத்து கும்பிட்டபடி, காவல்துறை மோகன் மீது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதாக கண்ணீர் மல்க கூறிய காணொலிப்பதிவும் சமூக ஊடகங்களில் பரபரப்பை கூட்டியது.


அம்சவள்ளி நம்மிடம் விரிவாக பேசினார். 


''கடந்த 6.1.2020ம் தேதி நான் டி.கோணகாபாடி ஊராட்சி மன்றத் தலைவராக பதவியேற்றுக் கொண்டேன். ஜன. 10ம் தேதி, என்னுடைய அலுவலகத்திற்குச் சென்று தலைவருக்கான நாற்காலியில் அமர்ந்தேன். 5வது வார்டு உறுப்பினரான மோகன், எடுத்த எடுப்பிலேயே ஆவேசமாக என் சாதி பெயரைக் குறிப்பிட்டு, ஆபாசமாக திட்டியும் சீட்டில் உட்காரக் கூடாது, எழுந்துருடி என்றும் மிரட்டினார். அந்த இருக்கை, அதற்கு முன்பு அவருடைய மனைவி நிரஞ்சனா தலைவராக இருந்தபோது உட்கார்ந்ததாம். அதனால் அதில் பிற சாதிக்காரர்கள் அமரக் கூடாது என்று கத்தினார். 

மோகன் தரக்குறைவாக திட்டியதால் நான் அழுதுகொண்டே அந்த அறையை விட்டு வெளியே வந்துவிட்டேன். மறுபடியும், பஞ்சாயத்து ஆபீஸ் பக்கம் வந்தால் குடும்பத்தோட கொளுத்திடுவேன்னு மிரட்டினார். ரெண்டே மாசத்துல முடிச்சிருப்பேன். கரோனா வந்துட்டதால தப்பிச்சிட்டீங்கனு கொலை மிரட்டல் விடுத்தார். 


எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட இலங்கை அகதிகள் குடியிருப்பில் குடிநீர் பிரச்சனை இருப்பதால், அதற்காக புதிதாக குடிநீர் குழாய் பதிக்க ஏற்பாடு செய்திருந்தோம். ஏப். 22ம் தேதியன்று, மோகனுக்கு சொந்தமான தேங்காய் நார் மில் அருகில் இருந்து குழாய் பதிக்கும் பணிகளுக்காக ஊராட்சி செயலாளர், டேங்க் ஆபரேட்டர் முனியன் ஆகியோருடன் நானும் கணவரும் சென்றிருந்தோம். அங்கு வந்த மோகன், எங்களை மேற்கொண்டு பணிகளை செய்ய விடாமல் தடுத்ததோடு, மீண்டும் என்னையும், கணவரையும் சாதி பெயரை சொல்லியும், ஆபாசமாகவும் திட்டினார். அப்போது தாரமங்கலம் போலீஸ்காரர் ஒருவரும் அங்கே இருந்தார். ஆனால் அவர் எதையும் கண்டுக்கவே இல்லை. அதன்பிறகுதான் மோகன் மீது ஏப். 23ம் தேதி தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்,'' என்றார் அம்சவள்ளி.

அம்சவள்ளியின் கணவர் அளித்த புகாரின்பேரில், மோகன் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு உள்பட 5 பிரிவுகளில் தாரமங்கலம் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இந்த எப்ஐஆர், அன்று இரவு 8 மணிக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நாள் இரவு 8.45 மணிக்கு, ஏளங்காடு காலனியில் வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மோகனின் ஆதரவாளரும், அதிமுகவை சேர்ந்தவருமான தனபால் ஒரு புகாரை அளித்திருக்கிறார். அதன்பேரில், டி.கோணகாபாடி ஊராட்சி மன்றத் துணைத்தலைவரான பிரபு மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டப்பிரிவு உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் எப்ஐஆர் போடப்பட்டிருக்கிறது. 


இது தொடர்பாக அம்சவள்ளியின் கணவர் சதீஸ்குமார் பேசினார்.


''தனபால் என்பவர் அத்திக்காட்டானூர் கூட்டுறவு சங்கத்தின் இயக்குநராக இருக்கிறார். அவரும் எங்கள் சாதியை சேர்ந்தவர்தான். ரேஷன் கடையில் ஆயிரம் ரூபாய் கரோனா நிவாரண நிதி வழங்கினர். அப்போது தனபால் உள்ளிட்ட அதிமுகவினர் நிவாரண நிதி வழங்கியபோது, எங்கள் ஊராட்சியின் துணைத்தலைவர் பிரபுவும், நானும் சேர்ந்து கொண்டு தனபாலை தாக்கியதாகவும், அவரை சாதி பெயரைச் சொல்லி திட்டியதாகவும் பொய்யான புகார் அளித்திருக்கிறார். பிரபு என் நண்பர் என்பதால், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் அளித்தால், அவருக்காக நான் மோகன் மீதான புகாரை வாபஸ் பெற்று விடுவேன் என்று கருதி மோகனின் தூண்டுதலால் இவ்வாறு புகார் அளித்துள்ளார். 

நான் ஒரு ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவனோ, அராஜகம் செய்பவனோ இல்லீங்க. ஊருக்குள் இப்போதும் அடங்கி ஒடுங்கித்தான் இருக்கிறோம். அம்பேத்கர், பெரியார், கலைஞர் எல்லாம் எங்கள் சமூகம் மேன்மை அடைய வேண்டும் என்பதற்காக இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்தனர். அதன்மூலம்தான் என் மனைவி பஞ்சாயத்து தலைவரானாரே தவிர, பொதுத்தொகுதியில் போட்டியிட்டு யாருடைய கவுரவத்தையும் இழக்கச் செய்யவில்லை.


மோகன் என்ற ஆதிக்க மனப்பான்மையுள்ள ஆளிடம் சிக்கிக்கொண்டு என் குடும்பமே சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. என் குடும்பம் மட்டுமின்றி, அவரைப் பார்த்தாலே எங்க ஊரு பொம்பளைங்க அப்படியே மூத்திரம் போய்டுவாங்க. அந்தளவுக்கு மிரட்டி வெச்சிருக்காரு. நாளைக்கு ஏதாவது அரசாங்க உதவிகிதவி கிடைக்காமல் போய் விடுமோ என்பதால் அவருக்கு எதிராக யாரும் புகார் கொடுப்பதில்லை. இந்த ஊரே அடங்கிக் கிடக்கும்போது, நான் மட்டும் தேர்தலில் ஜெயிச்சிட்டேன்கிற வன்மத்தினால்தான் மோகன் அப்படி நடந்து கொள்கிறார். அவருக்கும் எங்களுக்கும் எந்த ஒரு தனிப்பட்ட பகையும் கிடையாது. 

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் என் மனைவிக்கு எதிராக மோகன், அவருடைய தோட்டத்தில் வேலை செய்து வரும் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த பேபி என்பவரை நிறுத்தினார். தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். அதன்பிறகு துணைத்தலைவர் பதவிக்கு மோகனே நேரடியாக போட்டியிட்டும்கூட வெற்றி பெற முடியவில்லை. எங்கள் நண்பர் பிரபு துணைத்தலைவராக ஆனார். 

இந்த ஊரில் உள்ள அவர்கள் சமூகத்தை சேர்ந்த மற்றவர்கள் நல்லாதான் பழகுறாங்க சார். அந்த சமூகத்தில் மோகன் ஒருவர்தான் தப்பானவர். இவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தனது சொந்தக்காரர் என்று சொல்லி அதிகாரிகளையும் மிரட்டி வருகிறார். மக்கள் மட்டுமின்றி அரசு அதிகாரிகளும் அவரிடம் அடங்கிக் கிடக்கின்றனர். எங்கள் குடும்பத்திற்கு மோகனால் அச்சுறுத்தல் இருக்கிறது. எங்கள் புகாரில் உரிய நடவடிக்கை எடுப்பதோடு, குடும்பத்திற்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்க வேண்டும்,'' என்கிறார் சதீஸ்குமார்.

இது ஒருபுறம் இருக்க, ஓராண்டுக்கு முன்பு தாரமங்கலத்தில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில் பெண் ஊழியர் ஒருவரை, போலீசார் முன்னிலையிலேயே மோகன் ஒருமையில் ஆபாசமாக திட்டித்தீர்க்கும் காணொலிப்பதிவும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. 

  amjjj

                                                                      மோகன்


இப்பிரச்சனை தொடர்பாக மோகனிடம் விளக்கம் கேட்டோம். ''நான் யாரையும் சாதி பெயரை சொல்லி திட்டவில்லை. பஞ்சாயத்து தலைவர் பொறுப்பில் இருந்து கொண்டு அம்சவள்ளியும், அவருடைய கணவரும் போலி பில் போட்டு ஊழல் செய்கின்றனர். அவர்கள் ஊழல் செய்வதற்கு நான் இடைஞ்சலாக இருப்பதால், என் மீது கெட்டப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் சாதி பெயரை சொல்லி திட்டியதாக ஒரு புகாரை ஜோடித்துள்ளனர். அவர்களது புகாரின்பேரில் போலீசார் எப்படி எப்ஐஆர் போட்டார்கள் என்று தெரியவில்லை. மேலும், அகதிகள் குடியிருப்பு பகுதி எங்கள் பஞ்சாயத்து எல்லைக்குள் வராது. அங்கே குடிநீர் குழாய் பதிப்பேன் என்று சொன்னால் எப்படி ஏற்க முடியும்? எங்களிடையே நேரடி மோட்டிவ் எதுவும் இல்லை. அதனால் அரசியல் பழிவாங்கல் இருக்கலாம் என நினைக்கிறேன்,'' என்றார் மோகன்.


  am

                                                                  டிஎஸ்பி பாஸ்கரன்


இது தொடர்பாக ஓமலூர் டிஎஸ்பி பாஸ்கரனிடம் கேட்டதற்கு, ''இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட மேலும் சில  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் கொடுத்தவர்களிடம் வலுவான ஆதாரங்கள் இதுவரை எதுவும் இல்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவில்தான் தெரிய வரும்,'' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.


கடந்த பிப்ரவரி மாதம் தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் தேர்த்திருவிழாவின்போது இரு சமூகத்தினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதேபோல், கடந்த 2015ல், திருமலைகிரி சைலகிரீஸ்வர் கோயில் வழிபாட்டின்போதும் குறிப்பிட்ட சமூகத்தினர் மற்றும் பட்டியல் சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட, தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளுக்கு திருமலைகிரி, சிவதாபுரம் கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அவலமும் அரங்கேறியது.


  amhhh


சில மாதங்களுக்கு முன்பு, மோகனின் மகள் திருமணத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து ஆசீர்வதித்துச் சென்றார். அதனால் காவல்துறை அவர் மீது மென்மையை கடைப்பிடிக்கிறதோ என்ற ஐயமும் எழுந்துள்ளது. இதற்கிடையே, பெண் ஊராட்சி மன்றத் தலைவி மீதான சாதிய வன்கொடுமை தாக்குதலுக்கு விசிக, ஆதித்தமிழர் பேரவை கடும் கண்டனங்களையும் பதிவு செய்திருக்கின்றன.


முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாதத்தில் நான்கு நாட்கள் சொந்த ஊர் வந்து சென்றாலும், இந்த மண்ணிலிருந்து எந்தவித சமூக அவலங்களும் களையப்படவே இல்லை. ஆனாலும் கட்சியினர் அவரை மண்ணின் மைந்தர் என்று மேடைக்கு மேடை முழங்குவது ஆகப்பெரும் நகைமுரண். சேலத்தில் சாதிய மோதல் விஸ்வரூபம் எடுக்கும் முன்பு காவல்துறையை முடுக்கி விடுவது, அத்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரின் கடமையும்கூட.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.