கட்டுரை- சாக்லா

Sakla unmasks Na. Muthukumar's  Pookal Pookkum Tharunam

Advertisment

தசாப்தங்களைக் கடந்தாலும் நம்மை நொடி பொழுதில் கரைய வைக்கும் ஆற்றலும்அலாதியும் பாடல்களுக்கு இருக்கிறது என்றால் மிகையல்ல. பாடல்கள் என்றாலே ஓர் பரவசம்தான். அதில், மூழ்கித் திளைத்து முத்துக்களை எடுக்கிறோமோ இல்லையோ, மூச்சுத் திணறும்படியான நினைவுகளையும், உணர்ச்சிப் பெருக்குகளையும் அள்ளிச்சென்று வருகிறோம். கவிதை என்பது குடிக்கக் குடிக்க அதன் போதையில் தள்ளாட முடியும். அந்த துணிகரமான அனுபவம் வாய்க்க வரம் பெற்றவர்களே நாம். ஆனால், பாடலும் இசையும் சுண்டி இழுக்கும் ஐந்து நிமிட போதை. அப்படியே, ஆயிரம் முறை கேட்டாலும் அதே சுவை, அதே காதல், அதே சுகம், அதே இன்பம், அதே போதை என கொஞ்சம் கூட உருமாறாமல் நம்மை தொந்தரவு செய்யும் பாடல் நா. முத்துக்குமாரின் ‘பூக்கள் பூக்கும் தருணம்...’ பாடல்.

Advertisment

அதிகாலை நேரங்களில் பக்திப் பாடல்களைவிட இன்று காதல் பாடல்கள் புலறாத வீடுகள் இல்லை. அந்த விடியலை இந்த நூற்றாண்டுகளில்நா முத்துக்குமார்,

“பூக்கள் பூக்கும் தருணம்

ஆருயிரே

பார்த்தது யாரும் இல்லையே”

என்று பூக்கள் பூக்கும் தருணத்தை, அந்தக் கணத்தைப் பார்க்கச் சொல்லிவிடுகிறார். பூக்கள் என்றாலே ஓர் அழகுதான். அழகு என்ற சொல்லே பூக்களில் இருந்துதான் உருவானது என்று கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்லிச் சொல்லி சிலாகிக்க வைத்துள்ளார். ஒரு மனிதன் பிறப்பதற்கு முன்பே பூ பூத்துவிடுகிறது. ஒரு மனிதன் இறந்த பின்பும் பூ அவன் மேல் பூத்துவிடுகிறது. பூக்கள் மட்டுமே மனிதர்களுக்கு எல்லா நேரங்களிலும் அழகு சேர்க்கிறது. அந்த பூ பூக்கும் நேரத்தை யார்தான் பார்திருக்கிறார்கள் என்றால், அதன் மர்மத்தை நா. முத்துக்குமார் பாடலில் முடிச்சவிழ்க்கிறார். இயற்கையின் மர்மங்களை தேடிச் செல்வது ஆத்மார்த்த அழகல்லவா!

Sakla unmasks Na. Muthukumar's  Pookal Pookkum Tharunam

“இரவும் விடியவில்லையே

அது முடிந்தால்

பகலும் முடியவில்லையே

பூந்தளிரே!!!”

என்று இசையின் ஆரோகணத்தில் சொல்லிச் செல்லும் முத்துக்குமார், எத்தனை எத்தனை மேலதிக சிந்தனைக்கு இட்டுச் செல்கிறார். ஒரு பூ பூக்கும் நேரம் என்பது இரவு பகலைப் பிரசவிக்கும் நேரம். நிலவு சூரியனுக்கு வாசல் திறந்துகொண்டிருக்கும் நேரம். அப்படியென்றால் அது இரவா? பகலா? ஆனால், இந்த வரிகளில் பகலும் முடியவில்லை, இரவும் விடியவில்லை, ஆனால் பூக்கள் புன்னகைத்துவிட்டதே அவர் சொல்லியது போலவே! என்ன புதுமை.

ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. வார்த்தைகள் இல்லாத ஒரு மொழியைப் பாருங்கள்,

“வார்த்தை தேவையில்லை

வாழும் காலம்வரை

பாவை பார்வை மொழி

பேசுமே...

நேற்று தேவையில்லை

நாளை தேவையில்லை

இன்று

இந்த நொடி போதுமே”

Sakla unmasks Na. Muthukumar's 'Pookal Pookkum Tharunam...' song

பெண் என்பவள் பேசினாள்தான் மொழி விளங்குமா?பெண்களின் வசீகரத்தை, அழகியலை பல்வேறு கோணங்களில் ரசித்திருந்தாலும், பேசவே வேண்டாம் என்பதும், அதைக் காலத்தோடு ஒப்பிட்டு நொடிகளின் விளிம்பில் கசியும் கால இறப்பின் ஏக்கத்தை எவ்வளவு ஆத்மார்த்தமாய் ‘இந்த நொடி போதுமே’ என்றாலும் கேட்க கேட்க போதை போதவில்லையே. பார்வையின் மொழியை, மொழியின் அகழ்வாய்வை கவிஞர்கள் ஆராய்ச்சி செய்வது நாகரிகம் பிறந்த காலத்தைவிட நம்மை பின்னோக்கி கூட்டிச் சென்றுவிடுவர்.

மேகம் என்பது ஒரு நிலையாமை. மனித வாழ்வே நிலையாமைதான். ஆனாலும், ஏதோ ஒரு நிலையான உறவு வேண்டும் என்ற மனிதனின் பயணம் முடிவதில்லை. அதற்காக மனிதன் படும் பாடு பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையே மேற்கொள்ளும் மூர்ச்சைகொண்டிருக்கும் தவம் என்பதே எதார்த்தம். அப்படியே, நீளும் ஒரு உறவை முத்துக்குமார்

“எந்த மேகம் இது

எந்தன் வாசல் வந்து

எங்கும் ஈரமழை தூவுதே

எந்த உறவு இது

எதுவும் புரியவில்லை

என்ற போதும் இது நீளுதே...”

கேட்கும்போது நீண்டுகொண்டுதானல்லவா இருக்கிறது.

“பாதை முடிந்த பிறகும்

இந்த உலகில்

பயணம் முடிவதில்லையே

காற்றில் பறந்தே

பறவை மறைந்த பிறகும்

இலை தொடங்கும் நடனம்

முடிவதில்லையே”

Sakla unmasks Na. Muthukumar's 'Pookal Pookkum Tharunam...' song

ஒரு ஜென் தத்துவ பார்வையை விதைத்துச் சென்றுள்ளார். பாதை, பயணம் இரண்டிற்கும் இடையே உள்ளே உறவு என்பது பூக்களுக்கும் கொடிகளுக்கும் இடையே உள்ள தொடர்பாகவே கருதுகிறேன். ஒரு கொடியில் பூ பூத்து உதிர்ந்தாலும் கொடிகள் பூப்பதை நிறுத்திக்கொள்வதில்லை. பயணமும் அப்படியே...

காற்றில் பறக்கும் இலையை நடனம் என்பவர், அது சருகுகளான பின்பும் காற்றில் சலங்கை கட்டி ஆடுவதை நிறுத்திக்கொள்வதில்லை. வாழ்வில் உயிர் ஆடும் ஆட்டம் ஒருநாள் மரணத்தில் முற்றுப்பெறுகிறது. இலைகளின் நடனத்திற்கு மரணம் உண்டா?

“மரணத்தில் அழுகிறீர்கள்.

பூக்களை மட்டும்

ஏன்

புன்னகையுடன் சூட்டுகிறீர்கள்.”

என்று எனது ‘உயிராடல்’ கவிதைத் தொகுப்பில் சொன்னதும், நா. முத்துக்குமார் மரணத்தில் தமிழ் உலகம் அழுதாலும், அவர் சொல்லிச் சென்ற பூக்கள் பூக்கும் தருணத்தை நாம் புன்னகையுடன் சூட்டிக்கொண்டுதானே இருக்கிறோம்.