ADVERTISEMENT

சைதை காந்தி!!!

10:57 PM Dec 06, 2017 | Anonymous (not verified)

சைதை காந்தி!!!

இவரைப் போன்றவர்களால்தான் மழை பொழிகிறது...






"சைதை காந்தி" சைதைக்கும் காந்திக்கும் என்ன சம்மந்தம் எனும் கேள்வி உங்களுக்கு வரலாம் எனக்கும் முதலில் வந்தது. எங்கு வந்தது என்றால் ஒரு மாலைவேளையில் நான் அவசரமாக ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. நான் அந்த விழா மேடையை கடந்து செல்லும் போது தான் "சைதை காந்தி " திரு.கு. மகாலிங்கம் என்று ஒருவரின் பெயர் பேனர்ல பார்த்தேன். அந்த அவசர நிலையிலும் அவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என ஆர்வம் ஏற்பட்டது. அங்கு உள்ளவர்களிடம் விசாரித்தேன். அப்போது தான் அங்கு உள்ள ஒருவரை காட்டி, "இவர் பெயர் மகாலிங்கம், இவரு இந்த காந்தி நூலகத்த அறுவத்தஞ்சு வருசமா நடத்திட்டு வராரு' என்று சொன்னார். அப்பொழுதுதான் தான் எனக்கு புரிந்தது, இவரை ஏன் "சைதை காந்தி" என அழைக்கிறார்கள் என்று. எனக்கு அப்பொழுதே இவரை சந்திக்க வேண்டும் எனும் எண்ணம். மறுநாளே அவரின் நூலகத்திற்கு சென்று கேட்டவுடன் மகாலிங்கம் ஐயா, 'சரி' என்றார் ஒரு உற்சாகத்தோடு . மறுநாள் சில கேள்விகளோடு அங்கு சென்றேன். கேட்கும் முன்பே என் கேள்விகளுக்கான பதிலை அவரே தந்தார்.

"என் பெயர் கு.மகாலிங்கம். எனக்கு மூணு பசங்க, என் துணைவியார் இறந்துட்டாங்க. எனக்கு இப்ப எம்பத்தேழு வயசாச்சு. அறுபத்தஞ்சு வருஷமா இந்த காந்தி நூலகத்த நடத்திட்டுவரேன். ஆனா நான் அஞ்சாங்கிளாஸ் வரைக்கும் தான் படிச்சிருக்கேன். இந்த மாந்தோப்பு ஸ்கூல்ல தான் படிச்சேன். அப்புறம் தி .நகர் வெங்கட்ராமன் ரோட்ல இருக்குற தக்கர் பாபாக்கு மகாத்மா காந்தி வந்தாங்க. நானும் ஒரு பத்து பசங்களும் போனோம். ஒரு ஆறு நாள் பஜன நடந்துச்சு. நாங்க கலந்துக்கிட்டோம். அப்ப தான் எல்லாரும் யோசன பண்ணி கொஞ்சம் கொஞ்சமா புத்தகம் சேகரிச்சோம். ஒரு அம்பது, அறுபது புத்தகமா இருந்தது. இப்ப இருபதாயிரம் புத்தகமா இருக்கு. நூலகம் 2.11.1952ல அப்போதைய எம்.எல்.ஏ ராஜம் ராமஸ்வாமி தலைமையில பாரதியோட தம்பினு சொல்லப்பட்ட பரலி சு.நெல்லையப்பரால ஞான விநாயகர் ஆலயத்துல திறந்து வைக்கப்பட்டுச்சு.






எனக்கு உறுதுணையா இருந்தது சக்தி. டி .கே. கிருஷ்ணசாமிதான். இனொருத்தரு இந்த நூலகத்துக்கு இடம் கொடுத்த ராஜரத்தினம். சக்தி. டி .கே. கிருஷ்ணசாமி சொன்னாரு, 'மகாலிங்கம் நீ காமராஜரோட தொண்டனென்று சொல்றாங்க. நான் உனக்கு உதவி பண்றேன்'னு சொன்னாரு. அதே போல வருஷா வருஷம் ஒரு சினிமா படம் வந்தா ஒரு ஷோ வாங்கிக்கொடுத்துவிடுவார். அதுல வரும் காச வச்சு புத்தகம் வாங்குவேன். அதுமட்டுமில்லாம நூலகத்தோட ஆண்டு விழா நடக்கும். அதுக்கு நடிகர்கள கூப்பிட்டு வருவாரு. நாகேஷ் ,சிவாஜி ,கே.ஆர்.விஜயா எல்லாம் வந்திருக்காங்க . கிருஷ்ணசாமி இறந்த பிற்பாடு நடிகர்களையெல்லாம் கூப்பிடல . எழுத்தாளர்களை கூப்பிட்டு ஆண்டு விழாவில் 'சக்தி.டி.கே.கிருஷ்ணசாமி விருது'னு கொடுத்து வருகிறேன். இதுவரைக்கும் ஐநூறு பேருக்கு கொடுத்திருக்கேன். அவர் பெயரில் கொடுப்பதால் அவர்களின் குடும்பத்தாரும் வருவாங்க.

இந்த நூலகத்தை பொறுத்தவரை ஆண்களை விட பெண் உறுப்பினர்கள் தான் அதிகம். இந்த நூலகத்தில் உள்ள புத்தகம் எல்லாம் ஒவ்வொருத்தரா வாங்கித்தந்தது. அதனால புத்தகத்துல அவுங்க பெயர் எழுதி வைப்பேன். இங்கு பல எழுத்தாளர்கள் வந்திருக்காங்க. அவுங்க புத்தகங்கள் எல்லாம் இருக்கு. இங்க நூறு ஆண்டு பழமையான புத்தகமெல்லாம் இருக்கு. இங்கு இருக்குற காந்தி சிலைய காமராஜர் தான் திறந்து வச்சாரு" என்று தான் செய்யும் பெரிய சமூக பணியை சாதாரணமாக சொன்னார்.

"எனக்குக் கூட விருதெல்லாம் கொடுத்திருக்காங்க"னு சொல்லி சுற்றி இருந்த புகைப்படத்தையெல்லாம் சிறு புன்னகையுடன் காண்பித்தார். நான் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே மீண்டும் பேசத் தொடங்கினார் . "வருஷா வருஷம், படிக்குற பசங்களுக்கு ஊக்கத்தொகை கொடுப்போம். அதுவும் இங்க உள்ளவுங்கள்ட்டதான் வாங்கிக் கொடுப்பேன். ஸ்கூல் பசங்களுக்கு ஆயிரம் ரூபாய், காலேஜ் பசங்களுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாயும் கொடுப்போம். இந்த வருஷம் கூட ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கொடுத்தோம் . நான் நெசவு செய்ற குடும்பத்தில பொறந்தவன். அவுங்கள ஆதரிக்கிறதுக்காகவும் காந்திக்காகவும் நான் எப்பவுமே கதர் துணி தான் போடுவேன். அதுமாதிரி செருப்பும் போடமாட்டேன். முடிஞ்ச வரைக்கும் எங்க போனாலும் நடந்தே போவேன்" என்றவர், சந்திப்பு முடியும் தருணம், என்னுடன் சிறிது தூரம் நடந்து வந்தபோது சொன்னார், "நாம் இருக்குற வரைக்கும் எல்லாரிடமும் மனிதாபிமானத்துடனும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும்".






அறுபத்தைந்து ஆண்டுகளாக அந்த நூலகத்தை நடத்திவரும் மகாலிங்கம் ஐயா அவர்களை " சைதை காந்தி" என்று அழைக்கிறார்கள். நான் எந்த ஒரு கேள்வியையும் கேட்காமலேயே, என் மனதிலிருந்த கேள்விகளுக்கு பதில் சொல்லியிருந்தார் அந்த எம்பத்தி ஏழு வயது இளைஞர். இத்தனை வருடங்களாக நேர்காணல்கள் பழகிவிட்டன போல. வந்து சென்றவர்கள் யாரும் அவரைப் போல நூலகம் அமைத்தார்களா தெரியவில்லை, நூல்கள் அளித்தார்களா தெரியவில்லை. சற்று நேரத்தில் மழை வந்தது. "மழை நல்லவர்களால் தான் பொழிகிறது" என்று யார் (வள்ளுவரும் தான்) சொன்னாலும் சிரிப்பவன் நான். ஆனால், அப்பொழுது நம்பினேன், மழை இவரைப் போன்றவர்களால் தான் பொழிகிறது.

ஹரிஹரசுதன்

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT