ADVERTISEMENT

சைதைதுரைசாமி வீட்டில் ‘மின்சார’ வேலி! -ஷாக் ரிப்போர்ட்!

05:48 PM Nov 16, 2018 | manosoundar

ADVERTISEMENT

“முன்னாள் மேயர் சைதைதுரைசாமியின் மனிதநேயம் ஆஃபிஸிலேயே மனித உரிமை மீறல் நடக்குதுங்க” என்று குற்றம்சாட்டி நக்கீரனில் புகார் கொடுத்தார் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சிக்கு படிக்கும் மாணவர் ஒருவரே!

ADVERTISEMENT

அப்படியென்ன மனித உரிமை மீறல் நடக்கிறது? என்று நாம் கேட்டபோது, பாதுகாப்பு கருதி பெயர் வெளியிட விரும்பாத அந்த சிவில் சர்வீஸ் பயிற்சியாளர் நம்மிடம், “ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். பயிற்சிகொடுக்கும் மனிதநேயம் அறக்கட்டளை இருக்கும் இடத்தில்தான் சைதை துரைசாமியின் வீடும் இருக்கு. வன விலங்குகள் உலாவக்கூடிய ஃபாரஸ்ட் ஏரியாக்களில்கூட எலக்ட்ரிக்கல் காம்பவுண்ட்(Electrical Compound) எனப்படும் ‘மின்சார வேலி’ அமைப்பது மனித உரிமை மீறல்னு பெரும்பாலும் அனுமதி கொடுக்கிறதில்ல. ஆனா, சென்னை மாநகரத்துல தன்னோட வீட்டைச்சுற்றி மின்சார வேலி அமைச்சிருக்காரு சைதை துரைசாமி. இது, எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்.

ஏதோ ஒருச்சூழலில் யாராவது அந்த கம்பியில விழுந்து இறந்துபோனா என்ன ஆகும்? காக்கா, புறா, குருவி உள்ளிட்ட பறவைகளோ அல்லது எலி, பூனை போன்ற உயிரினங்களோ அந்த மின்வேலியில் மாட்டிக்கொண்டால் எவ்வளவு துடி துடிக்கும்? அவ்வளவு அதிகாரம் படைத்த போயஸ்கார்டனில்கூட ஜெயலலிதா இப்படிப்பட்ட எலக்ட்ரிக்கல் காம்பவுண்ட் சுவரை வைக்கல. ஆனா, சைதைதுரைசாமி வெச்சிருக்கார்ன்னா எவ்வளவு அதிகாரம் படைத்தவரா இருப்பார்ன்னு நீங்களே புரிஞ்சுக்கோங்க”என்றார் அந்த மாணவர் வேதனையோடு.

‘இலவசமா ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி கொடுத்தாலும் ஒரு சமூக அவலத்தை தோலுரிக்கணும்னு நினைச்சீங்களே… உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. படிச்சு பெரிய அதிகாரியா வரணும்’ என்று வாழ்த்திவிட்டு சைதைதுரைசாமியின் வீடு மற்றும் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். அகாடமி அமைந்துள்ள சென்னை சைதாப்பேட்டை சி.ஐ.டி.நகர் முகவரிக்கு சென்று பார்த்தபோது மின்சார வேலி அமைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்.

இதுகுறித்து, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை பொறியாளர் ஈஸ்வர சுப்ரமணியத்திடம் கேட்டபோது, “மின்சார வேலி எங்குமே அமைக்கக்கூடாது. அது, சட்டப்படி குற்றம். இதுகுறித்து, அந்த ஏரியாவின் ஏ.இ.யிடம் (உதவி பொறியாளர்) புகார் கொடுத்தாலே நடவடிக்கை எடுப்பார். அப்படியில்லையென்றால் மின் திருட்டு தடுப்புப்படை என்றே உள்ளது. அவர்களிடமும் புகார் கொடுக்கலாம்”என்றார் ஆலோசனையாக.

அப்படியென்றால், எந்த அடிப்படையில் மின்சார வேலி அமைத்திருக்கிறார்கள்? என்பதை அறிய மனிதநேயம் ஐ.ஏ.எஸ். அகாடெமி அலுவலகத்துக்கு சமூக ஆர்வலர் என்கிற பெயரில் தொடர்புகொண்டு பேசினோம்.


“மின்வேலி வைத்திருக்கிறீர்களே ஏன்? தப்பில்லையா?” என்று நாம் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு கேட்டபோது, “ஏன் கேட்குறீங்க? எதுக்கு கேட்குறீங்க?” என்று பதறிய பெண்மனியின் குரல் வேறோருவரிடம் பேசச்சொன்னது. அட்மினிஸ்ட்ரேஷனிலுள்ள ரமேஷ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டவரோ, “எங்களோட சேஃப்டிக்காக வெச்சிருக்கோம். உங்களுக்கு யார் சார் தகவல் சொன்னது?” என்று கேட்டவர், வேறொருவரிடம் பேசச்சொன்னார். அவரோ, மின்சாரம் மூலம் இந்த மின்வேலி வைக்கல. சோலார் மூலமா வெச்சிருக்கோம். எலி வேற எதுவும் வராம இருக்கத்தான் சார் வெச்சிருக்கோம். கை வெச்சா ஷாக்கே வராது. இதுக்கு, யார்க்கிட்டேயும் பர்மிஷன் வாங்க தேவையில்ல. குளோபலாவே எல்லோரும் வெச்சுக்கலாம் சார். நேர்ல வாங்க சார்” என்றபடி ஃபோனை துண்டித்தார் பிரேம் என்றவர்.

சோலார் மின்சாரத்தின் மூலம் மின்சார வேலி வைத்துக்கொள்ளலாமா? என்று தமிழக அரசின் மின் ஆய்வுத்துறையின் தலைமை இன்ஸ்பெக்டர் (Chief Electrical Inspector to Government (A/C)) மனோகரனை பலமுறை தொடர்புகொண்டு கேட்டபோதும், “சார்… மீட்டிங்கில் இருக்கிறார். ஆனால், சோலாரில்கூட மின்சார வேலி அமைக்க அனுமதியில்லை என்று சொல்லச்சொன்னார்” என்றார் டெலிஃபோன் ஆபரேட்டர்.

சோலார் மின்சாரத்துக்கு அனுமதி வழங்கும் டெடா (Tamil Nadu Energy Development Agency) எனப்படும் தமிழக எரிசக்தி துறை எம்.டி. ஜெகன்மோகன்சிங் ராஜு ஐ.ஏ.எஸ்ஸை தொடர்புகொண்டபோது, அவருக்கு கீழுள்ள வேறொரு அதிகாரி அப்துல் காதர் நம்மிடம், “சோலார் மின்சாரத்தின்மூலம் மின்சார வேலி அமைக்க எங்களால் எந்த அனுமதியும் கொடுக்கப்படவில்லை. அப்படி வைக்கவும் கூடாது. சோலார் மின்சாரத்தில் வைத்தால்கூட அதற்கான பாதுகாப்பு சான்றிதழ் வழங்குவது அந்தந்த பகுதியின் அஸிஸ்டெண்ட் எக்ஸிக்யூட்டிவ் எஞ்சினியர்தான் (உதவி செயற்பொறியாளர்) பொறுப்பு. அவர்தான், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

அதனால், தி.நகர் ஏ.இ. ஹரியை தொடர்புகொண்டு முகவரியை சொல்லாமலேயே அவரே “ஆமாம் சார்… மின்வேலி இருக்கிறது. எனக்கு மேலுள்ள எக்ஸியூக்யூட்டிவ் எஞ்சினியரிடம் பேசியுள்ளேன்” என்றார். பிறகு, அஸிஸ்டெண்ட் எக்ஸிக்யூட்டிவ் எஞ்சினியர் செல்வராஜிடம் பேசியபோது, “மேயரோட வீட்டுல இருக்குன்னு கேள்விப்பட்டேன் சார். என்னன்னு பார்க்குறேன் சார்” மறுநாள், “அவர் ஜெனரேட்டரின் மூலம் மின்சார வேலி வைத்துள்ளார். மின்சாரத்தின்மூலம் மின்சாரவேலி அமைத்தால்தான் நாங்கள் பொறுப்பு” என்றார் நழுவலாக.

இதுகுறித்து, சைதை துரைசாமியிடம் நாம் விளக்கம் கேட்டபோது, “அது மின்சாரவேலியே இல்லீங்க. அது, மின்வேலி மாதிரி தோற்றத்தில் வெச்சிருக்கிறோம். அது, சும்மா மிரட்டலுக்காக வெச்சிருக்கிறது. காம்பவுண்ட் வாலில் வெக்கிற ஒரு டிசைன். மின்சாரவேலியை சிட்டிக்குள்ள வைக்கமுடியுமாங்க? எங்க வீட்டுல புறா இருக்கு. ஒண்ணு ஆகலையே. வெளியில இருக்கிறவங்களுக்கு ஒரு அச்சத்தை உண்டாக்கதாங்க” என்று தனது ட்ரேட்மார்க் சிரிப்பை உதிர்த்தார்.

க்யாரே செட்டிங்கா? இப்படி, ஒவ்வொரும் அச்சத்தை ஏற்படுத்த இப்படிப்பட்ட காம்பவுண்ட் வாலை வைக்க ஆரம்பித்தால் என்ன ஆவது? மின்சாரத்தின் மூலம் இயங்குகிறதா? சோலார் மூலம் இயங்குகிறதா? டம்மி வேலியா? ஒரு சாதாரண மனிதன் தொட்டுப்பார்த்தா தெரிந்துகொள்ளமுடியும்?

மனோசௌந்தர்
படங்கள்: அசோக்குமார்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT