Advertisment

சச்சினுக்கு கிரிக்கெட்டின் ABCD சொல்லி தந்தவர்!

achrekar

Advertisment

உலக கிரிக்கெட் வரலாற்றில் பேட்டிங் சாதனைகளை புரட்டிப் பார்த்தால் அதில்சச்சின்.. சச்சின்.. சச்சின்.. என்ற மந்திரப் பெயரே ஆதிக்கம் செலுத்தும். இன்று விராத் கோலி பல சாதனைகளை படைக்கலாம். அதற்கான விதைகளை விதைத்தவர் சச்சின்தான். அன்றைய காலகட்டங்களில் ஒரு அணி 300 ரன்கள் எடுப்பதும்,வீரர்கள் சதம் அடிப்பதும் அரிதான நிகழ்வுகள். ஆனால் அப்படிப்பட்ட காலங்களில் ஒரு வீரர் மட்டும் சர்வ சாதாரணமாக சதங்களை விளாசுவார். அவர் கிரிக்கெட் விளையாட்டை உலகம் முழுவதும் அதிகம் பிரபலபடுத்தியவர். ஆம், சந்தேகத்திற்கு இடமில்லாமல் சச்சின் டெண்டுல்கர்தான் கிரிக்கெட் விளையாடியவர்களில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். இது பலராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. ஆனால் அவருடைய அதிசய, மாய திறமையைப் பற்றி பலரும் அறியப்படாமல் இருந்தபோது, அதை வெளிக்கொண்டு வந்த பெருமை ராமாகந்த் அச்ரேகரையே சேரும்.

சச்சினின் சகோதரர் அஜித் டெண்டுல்கர் 11 வயதில் மும்பையைச் சேர்ந்த அச்ரேகரிடம் அழைத்து சென்றார். அது அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனை என்று சச்சின் கூறியுள்ளார். சிவாஜி பார்க் மைதானத்தில் அச்ரேகரின் கிரிக்கெட் பயிற்சியின் மூலம் தன் கிரிக்கெட் வாழ்வை உருவாக்கிக் கொண்டார் சச்சின். 1980-களில் அச்ரேகர், டெண்டுல்கருக்கு பயிற்சி அளித்தார். பள்ளி முடிந்த பிறகு, அச்சிரேக்கரின் ஸ்கூட்டரில் சச்சின் செல்வார். இந்த ஜோடி முடிந்தவரை பல போட்டிகளில் விளையாடுவதற்கு மும்பை முழுவதும் பயணம் செய்யும்.

Advertisment

அச்சரேகர், சச்சின் டெண்டுல்கரின் திறமையை அடையாளம் கண்டு, வரலாற்றில் மிக பிரபலமான கிரிக்கெட் விளையாட்டு நட்சத்திரத்தை இந்தியாவுக்குக் கொடுத்தார். சச்சின் டெண்டுல்கர் என்ன செய்ய முடியும் என்பதை அறிந்த அச்ரேகர், 1993-ல் வினோத் காம்ப்ளி மற்றும் பிரவீன் அம்ரே ஆகியோரை விட சச்சின் மிகவும் திறமை வாய்ந்தவர் என்று கூறினார்.

டெண்டுல்கர் எப்போதுமே தனது பயிற்சியாளருக்கு மிகுந்த மரியாதை காட்டியுள்ளார். அவரை புகழ்வதற்கு கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் மிகவும் சரியாக பயன்படுத்திக் கொள்வார். அச்சரேகர் சார் சில நேரங்களில் கடுமையானவராகவும், மிகவும் கண்டிப்பானவராகவும் இருந்தார். ஆனால் அக்கறையுடனும், அன்புடனும் இருந்தார்.

sachin achrekar

பயிற்சியாளர்கள் பெற்றோரைப் போலவே இருக்கிறார்கள். ஏனெனில் அவர்களுடன் அதிக நேரம் செலவழிப்பதால், அவர்களிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறோம். அச்சரேகர் சார் நான் நன்றாக விளையாடினேன் என்று சொல்லியது இல்லை. ஆனால், சார் எப்போதெல்லாம் என்னை பாணிப்பூரி சாப்பிட அழைத்து செல்கிறாரோ, அப்போது அன்று நான் நன்றாக விளையாடி இருக்கிறேன் என்று அர்த்தம் என இந்த வருடம் நடந்த ஒரு விழாவில் சச்சின் தனது பயிற்சியாளரை பற்றி பெருமையாக கூறியிருந்தார்.

"சொர்க்கத்தில் கிரிக்கெட் தனது இருப்பைச் செம்மைப்படுத்தி, அச்ரேகர் சாரின் முன்னிலையில் கிரிக்கெட் தன்னை செதுக்கிக் கொள்ளும். அவரது பல மாணவர்களைப் போலவே, கிரிக்கெட்டின் ABCD-களைநான் அவரிடம் கற்றுக் கொண்டேன். என் வாழ்வில் அவரது பங்களிப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அவர் ஏற்படுத்திகொடுத்த அடித்தளத்தில்தான் இன்று நான் நிற்கிறேன்." என்று சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

பத்ம ஸ்ரீ மற்றும் துரோணாச்சார்யா விருதுகளை ராமாகந்த் அச்ரேகர் பெற்றுள்ளார்.டெண்டுல்கர் தவிர, வினோத் காம்ப்ளி, அஜித் அகர்கர், பிரவின் அம்ரே, சமீர் டிஹே, பல்விந்தர் சிங் சந்து உள்ளிட்ட முக்கிய இந்திய வீரர்களுக்கு பயிற்சியளித்துள்ளார் ராமாகந்த் அச்ரேகர்.

அவரின் மறைவு பெரிய இழப்பாக கருதப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடி வருகின்றனர். நேரிலும், சமூகவலைதளங்களிலும் பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

bcci Sachin Tendulkar
இதையும் படியுங்கள்
Subscribe