Skip to main content

என் தனிப்பட்ட ரன்கள் எனக்கு தேவையற்றதே - "கிரிக்கெட் கடவுள்" சச்சின் டெண்டுல்கர்

Published on 24/04/2019 | Edited on 24/04/2019

ஆகஸ்ட் 24, 2007 ஆம் ஆண்டு இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்துகொண்டிருந்தது. கங்குலியும், சச்சினும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய காலம் அது. தொடக்கமே பவுண்டரிகளும் ஓட்டங்களுமாகவே ஆரம்பித்து சிறப்பாக போய்க்கொண்டிருந்தது. சச்சின் ஆடிய ஆட்டம் சென்ச்சூரி நிச்சயம் என்று ரசிகர்கள் கொண்டாட ஆயத்தமாகினர். 90 ரன்கள் அடிப்பதற்கு முன்னர்வரை சச்சின் அடிக்க முடிந்த பந்துகளை அல்வா சாப்பிடுவது போன்று லாவகமாகவும், சூச்சமமான பந்துகளை டொக் வைத்தும் அதாவது நிறுத்தியும் விளையாடினார். சச்சின் எப்பொழுதும் 90 ரன்களை கடந்து விட்டால் மட்டும், அவரது கால்களும் பேட்டிங்கும் எதோ ஒரு மாதிரியாக மாறிவிடும். சொல் பேச்சு கேட்காத குழந்தையை போன்றாகிவிடும். அதை பார்க்கும் போது எப்படியாவது சச்சின் நூறை கடந்துவிட  வேண்டும் என்று மனதிற்குள் ரசிகர்களின் பூஜை தொடங்க ஆரம்பிக்கும், அதேபோல அன்றும் நடந்தது.
 

sachin

 

 

சச்சின் ஏதேதோ விளையாண்டு 99 ரன்களில் வந்து நின்றார். அப்போது இந்தியா 31.2 ஓவரில் 180 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருந்தது. சச்சின் எம்ஆர்எஃப் பேட்டுடன் அந்த பந்திற்காக ஆயத்தமாக, எதிரே யுவராஜ் சிங் நான் ஸ்ட்ரைக்கர் முனையில் நிற்க, அரக்கனை போல நெஞ்சை விரித்து கொண்டு பிளிண்டாப் பவுலிங் போட ஓடிவந்து, அரைக்குழி பந்து என்று சொல்லப்படும் பவுன்சரை சச்சினின் இடப்பக்கம் போவது போல் போட, அதை விடுவதா, வேணாமா என்ற இருமனதோடு அதைவிடும்பொழுது முழங்கை பேடில் பட்டு பந்து கொஞ்சம் நகர, அதை இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பறந்துபோய் பிடித்து அவுட் என்று கேட்க, சச்சின் இல்லை என்று தனக்கு தானே தலை ஆட்டிக்கொண்டிருக்கும் போது, நடுவர் அவுட் என்று அறிவித்துவிடுவார். சச்சின் ஒன்றும் சொல்லமுடியாமல் சிரித்துக்கொண்டே பெவிலியன் திரும்புவார். அவ்வளவுதான் ரசிகர்களின் வேண்டுதல் எல்லாம் அன்று  பலித்திருக்காது. சிலர் அழுதிருக்கக் கூடும், சிலர் டிவியை ஆப் செய்திருக்க கூடும், சிலர் பிக்சிங் என்று திட்டியிருக்க கூடும். இவ்வாறு பல விஷயங்கள் நேர்ந்திருக்கும்.
 

இந்த இங்கிலாந்து தொடருக்கு முன் ஜூன் மாதம்  நடந்த சவுத் ஆப்ரிக்கா தொடரின் முதல் ஒரு நாள் போட்டியிலும் சச்சின் 99 ரன்கள் எடுத்து சென்சூரியை சுவைக்க நேரிடும் போது  ரன் அவுட்டாகி வெளியேறிவிடுவார். இங்கிலாந்து தொடருக்கு பின் நடந்த நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு உடனான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இதே போன்று சச்சின் 99 ரன்களில் இருக்கும்போது உமர் குல் வீசிய பந்தை கவர் டிரைவ் அடிக்க சென்று, பந்து பேட்டில் டிப்பாகி பின்னே நிற்கும் விக்கெட் கீப்பராக நின்ற கம்ரான் அக்மல் கையில் மாட்டிக்கொள்ளும். அந்த வருடத்தில் மட்டும் மூன்று முறை 99 ரன்களில் இருக்கும்போது சென்ச்சூரி மிஸ் செய்து ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் சச்சின். கிரிக்கெட்டின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர் என்று எல்லாம் சொல்லப்பட்டு வந்த சச்சினுக்கு இந்த 90 ரன்களில் இருந்து 100 ஐ கடப்பது பெரும் சவாலாகவே இருந்துள்ளது. நாம் கிரிக்கெட் விளையாடும் போது கூட, ஐம்பது என்பது நமக்கு அபூர்வமான ஒன்றுதான் இருந்தபோதிலும் அதை கடக்க சச்சினை போன்று சிரமம்படுகிறோம் என்று பீத்தி கொள்வதும் உண்டு. எல்லாவற்றையும் நமக்கு கற்பித்தவர் இதையும் விட்டுவைக்கவில்லை. "சச்சின் மட்டும் நூறு போட்றட்டும் அப்பறம் பாரு எப்படி நாலா பக்கமும் அடிக்கிறார்னு" இப்படியெல்லாம் நாம் பேசமாட்டோம். இந்த 90 முதல் 99 ரன்களுக்குள் அந்தளவிற்கு அது அனைவருக்கும் நெருக்கடியாக இருக்கும்.
 

sachin ten

 

 

கிரிக்கெட்டில் இது சச்சினுக்கு மட்டுமல்ல, பெரிய தலைகள் பலருக்கும் இந்த கஷ்டம் நேர்ந்திருக்கிறது. இதை ஒரு நோயாகவே பார்த்தனர். இதற்கு ஒரு பெயரும் உண்டு அதுதான் "நெர்வஸ் நைன்டீஸ்". அதாவது தொண்ணுறு ரன்களில் இருந்து நூறை கடக்கமுடியாமல், அவுட்டாகி வெளியேறுவதை கிரிக்கெட் வட்டாரத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். பேட்ஸ்மேன் ஒருவர் சரளமாக அடித்து தொம்சம் செய்து 90 ரன்களை கடந்த பிறகு எப்படியாவது நூறை தொட்டுவிட வேண்டும் என்கிற பயத்திலேயே கோட்டை விட்டுவிடுகின்றனர். சில சமயங்களில் அதிர்ஷ்டம் இன்மையும் என்றும் கூட அதை சொல்லலாம். சச்சின் கிரிக்கெட்டில் தொடாத சாதனைகளே அல்ல, தற்போது யாரேனும் சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்று நினைத்தால் முக்கால்வாசி சாதனைகள் அவருடையதாகவே இருக்கக்கூடும். "டெஸ்ட் மற்றும் ஒண்டே மேட்சுகளை சேர்த்து 100  சதங்கள், 30,000 க்கும் மேற்பட்ட ரன்கள், முதன் முதலில் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் தொட்டவர்." என்று சாதனைகளை பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். அதை போலவே "நெர்வஸ் நைன்டீஸ்" என்று சொல்லப்படும் இந்த 90 முதல் 99 ரன்களுக்குள் சதத்தை மிஸ் செய்தவர்கள் பட்டியலிலும் சச்சின்தான் முதல் இடத்தில் இருக்கிறார். அனைத்து விதமான போட்டிகளிலும் நெர்வஸ் நைன்டீஸ் கட்டத்தில் 27 முறை அவுட்டாகி இருந்திருக்கிறார். அப்படி என்றால் அத்தனை முறை ரசிகர்களின் பிராத்தனைகள் நிறைவேறாமல் இருந்திருக்கிறதா? இருக்கலாம். 
 

ஒருமுறை சச்சினின் மகன் அர்ஜுன் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொன்னாராம், " அப்பா நீங்க ஏன் 94 ரன்ஸ் இருக்கும்போது சிக்ஸ் அடிச்சு சென்சூரி அடிக்க கூடாது? என்று, சச்சின் சிரித்தாராம். அதேபோல இந்த நெர்வஸ் நைன்டீஸ் பற்றி ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு " எனக்கு எனது சென்ச்சூரி முக்கியமல்ல, என் தேசம் நான் பெற்ற ரன்களால் வெற்றியடைந்ததா அதுதான் எனக்கு தேவை, மற்றபடி என் தனிப்பட்ட ரன்கள் எனக்கு தேவையற்றதே " என்று கூறியிருக்கிறார் இந்த கிரிக்கெட் கடவுள். ஹாப்பி பர்த்டே சச்சின் டெல்டுல்கர்....

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.

Next Story

WPL : சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூரு அணி!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
WPL : Bengaluru team won the title

இந்த ஆண்டுக்கான பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி (W.P.L.) கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி (23.02.2024) தொடங்கியது. இது பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசன் ஆகும். இதற்கான இறுதிப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (17.03.2024 நடைபெற்றது.

இந்த இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களுரூ அணி சார்பில் ஷ்ரேயங்கா பாட்டில் 4 விக்கெட்களையும், மொலினஷ் 3 விக்கெட்களையும் எடுத்து அசத்தினர்.

அதன் பின்னர் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி  களமிறங்கியது. இதனையடுத்து சிறப்பாக ஆடிய பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப் போட்டியில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசனில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்ம்ரிதி மந்தனாவுக்கு, கிரிக்கெட் வீரர் விராட் கோலி வீடியோ காலில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதேபோன்று கோப்பை வென்ற பெங்களூரு மகளிர் அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.