Advertisment

'ஷாக்'கான சச்சின் பைலட்! அமித்ஷா திட்டத்தை முறியடித்த பிரியங்கா! - ராஜஸ்தானை தக்கவைத்த காங்கிரஸ்!

5674

Advertisment

கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேச ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானை குறிவைத்து கடந்த ஏப்ரலில் ஆபரேஷன் தாமரையைத் துவக்கியது பாஜக. இதற்காக, அமித்ஷாவால் குறி வைக்கப்பட்டவர் ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட். 2018ல் ஆட்சி அமைந்ததிலிருந்தே கெலாட்டுக்கும், பைலட்டுக்கும் நடந்த மோதல்களால் காங்கிரஸ் விமானம் அந்தரத்தில் தள்ளாடியது.

இந்த நிலையில், சச்சின் பைலட்டும் அவரது ஆதரவாளர்கள் 18 பேரும் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தினர். இதனால் அவரிடமிருந்த துணை முதல்வர் பதவியையும் கட்சி பதவியையும் அதிரடியாக பறித்தார் சோனியாகாந்தி. இதனால் ஆட்சி கவிழும் சூழல் பரபரப்பானது. தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க ஆளும் ஹரியானாவில் பதுக்கி வைத்தார் சச்சின். அவர்களுக்கு மறைமுக பாதுகாப்பை கொடுத்து வந்தது பாஜக தலைமை.

எனினும், தனது ஆட்சிக்கான பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கத் தயாராக இருப்பதாக சொன்ன அசோக் கெலாட், சட்டமன்றத்தை கூட்டுமாறும் கவர்னர் கல்ராஜ்மிஸ்ராவுக்கு நான்கு முறை கோரிக்கை வைத்தார். ஆனால், கவர்னர் அக்கறை காட்டவில்லை. இதனால், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களே கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு அவருக்கு எதிராக போராட்டம் நடத்தும் நிலை உருவானது. முதல்வரும் கவர்னரும் அறிக்கைபோர் நடத்தினர். சட்டபேரவையை கடந்த 14-ந்தேதி கூட்டுவதற்கு அனுமதித்தார் கவர்னர் கல்ராஜ்மிஸ்ரா.

Advertisment

பேரவையில் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டு தங்களது எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது பாஜக தலைமை. இதற் கிடையே, சச்சின் பைலட்டை அழைத்து ராகுல்காந்தியும் பிரியங்கா காந்தியும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டதில் அதிர்ச்சியடைந்தனர் பாஜக தலைவர்கள். இந்த நிலையில், 14-ந்தேதி பேரவை கூடியதும், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு மீது நம்பிக்கைத் தீர்மானத்தை தாக்கல் செய்துவிட்டு பேசிய அமைச்சர் சாந்திதாரிவால், "அதிகாரம் மற்றும் பணம் ஆகியவைகளை பயன்படுத்தி கர்நாடகா, மத்திய பிரதேச மாநில எதிர்க்கட்சிகளின் ஆட்சியை பாஜக கவிழ்த்தது. அங்கு ஜனநாயகத்துக்கு விரோதமாக ஆட்சியை பிடித்திருக்கிறது பாஜக. அத்தகைய, முயற்சியை ராஜஸ் தானிலும் எடுத்தனர். ஆனால், பலனளிக்கவில்லை'' என்றார்.

அதேசமயம், பேரவையின் எதிர்க்கட்சி தலைவரான பாஜக ராஜேந்திர ரத்தோர், "ராஜஸ்தான் காங்கிரசில் நடக்கும் உள்கட்சி மோதல்கள் அக்கட்சி மிக கடுமையாகபாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக முதல்வர் குற்றம் சாட்டியிருப்பது தவறு. முதல்வர்-துணை முதல்வர் இருவருக்குமிடையே நடந்த மோதல்கள் எல்லோருக்கும் தெரியும். அவர்கள் நாடகமாடுகின்றனர்'' என்றார்.

அப்போது,"எதிர்க்கட்சி தலைவர் என்னைப் பற்றி ஏன் பேசுகிறார் என தெரியவில்லை. காங்கிரசின் போர் வீரனாகத்தான் எப்போதும் இருந்து வருகிறேன்,இனியும் இருப்பேன். எங்களுக்குள் சில குறைகள் இருந்தன. அதனை மருத்துவ ரிடம் (கட்சி தலைமை) தெரிவித்தோம். சிகிச்சைக்கு பிறகு குணமாகி விட்டோம். கட்சியும் ஆட்சியும் பாதுகாப்பாக உள்ளது'' என்றார் சச்சின் பைலட். இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பின் மூலம் நடந்த வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி பெற்றதாக அறிவித் தார் சபாநாயகர் ஜோஷி.

ராஜஸ்தான் எம்.எல்.ஏ.க்கள் சிலருடன் நெருங்கிய நட்பு கொண்டுள்ள தமிழக காங்கிரஸின் செயல்தலைவர் டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்.பி.யிடம் நாம் பேசியபோது, "என்ன விலை கொடுத்தாலும் எதிர்க்கட்சிகளின் அரசை கவிழ்த்து அங்கு பாஜக அரசை நிர்மாணிக்கதிட்டமிடுகின்றனர் பாஜக தலைவர்கள். இதற்கு, தனது அதிகாரத்தை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. மத்திய பிரதேசத்தின் துணை முதல்வராக இருந்த காங்கிரஸ் ஜோதிராத்திய சிந்தியாவை வளைத்து எப்படி ஆட்சியை கவிழ்த்ததோ அதே பாணியை ராஜஸ்தானிலிலும் அரங்கேற்ற முயற்சித்தனர்.

இதற்காக, முதல்வர் பதவிமீது தீராத மோகம் கொண்ட சச்சினை வளைத்தனர். ஜோதிராத்திய சிந்தியாவுக்கு ராஜ்யசபா எம்.பி. மற்றும் மத்திய அமைச்சர் பதவி என்கிற தூண்டிலை வீசி காரியத்தை சாதித்த பாஜக தலைமை, "உங்களை முதலமைச்சராக்குகிறோம்; பாஜக ஆதரவுடன் நீங்கள் ஆட்சி அமைக்கலாம்' என்கிற தூண்டிலை சச்சினிடம் வீசியது. அதில் மயங்கியிருக்கிறார் சச்சின். ஆனால், பிரியங்கா காந்தி எடுத்த அஸ்திரம், சச்சினின் ஆசையையும் பாஜகவின் ஆபரேஷன் தாமரையையும் வீழ்த்தியிருக்கிறது'' என்கிறார். ஆபரேஷன் தாமரை வீழ்த்தப்பட்டது குறித்து ராகுல் காந்தியின் அதிகார மையத்தோடு நெருக்கமான தமிழக எம்.பி.க்களிடம் விசாரித்தபோது, "பேரவையில் காங்கிரசுக்கு 100 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள 101 எம்.எல்.ஏ.க்கள் போதும் என்கிற நிலையில், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 7 பேரின் ஆதரவில் காங்கிரசின் பலம் 107 இருக்கிறது. காங்கிரசிடமிருந்து சச்சின் உள்ளிட்ட 19 பேரை வெளியே இழுத்தால் ஆட்சி கவிழும். பிறகு மற்ற சுயேட்சைகளின் ஆதரவில் சச்சினை முன்னிறுத்தி ஆட்சியை அமைக்கலாம் என்பது பாஜக போட்ட ஸ்கெட்ச்.

கரோனா நெருக்கடிகளால் சில சந்திப்புகள் நடக்கவில்லையே தவிர மத்திய உளவுத்துறையினரை வைத்து அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்தார் அமித்ஷா. மேலும், பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் காங்கிரசுக்கு ஆதரவாக இருப்பதால் அவர்களுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு விரைவில் வரவிருக்கிறது. அதனை மையப்படுத்தியும் சில முடிவுகளை எடுத்திருந்தார். இப்படிப்பட்ட சூழலில், கர்நாடக, ம.பி.யில் நடந்ததுபோல ராஜஸ்தானின் பாஜகவின் அரசியல் ஜெயித்துவிடக்கூடாது என ராகுல் மற்றும் பிரியங்காவிடம் ராஜஸ்தான் அரசை பாதுகாக்கும் அசைன் மெண்டை ஒப்படைத்திருந்தார் சோனியா காந்தி. இதனை ஒரு சேலஞ்சாக கையிலெடுத்துகொண்டார் பிரியங்கா.

54342

சச்சின் உள்ளிட்ட 19 பேர் கிளர்ச்சியில் இருக்கும் நிலையில், அதனை சரிக்கட்டுவது குறித்து அசோக் கெலாட்டிடம் பிரியங்காவும் ராகுலும் ஆலோசித்தனர். அதன்படி, சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 13 பேர், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.க்கள் 2, பாரதிய பழங்குடி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2 , ராஷ்டிரிய லோக் தள் எம்.எல்.ஏ.1 ஆகியோர்களின் ஆதரவை பெறுவது என திட்டமிட்டு, அவர்களிடம், ஜனநாயகத்திற்கு எதிரான பாஜகவின் கோர முகத்தை சொல்லி, பிரியங்கா பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் 90 சதவீதம் வெற்றி கிடைத்தது. இந்த நிலையில், சச்சினை வைத்துதானே பாஜக தலைமை ஆடுகிறது; அதே சச்சினை வைத்து நாம் ஒரு ஆட்டத்தை ஆடுவோம் என பிரியங்காவும் ராகுலும் சில யுக்திகளை எடுத்தனர்.

அதன்படி, ஒரு முறை தங்களை சந்திக்க வேண்டும் என சச்சின் பைலட்டை அழைத்தார் பிரியங்கா. அந்த சந்திப்பும் நடந்தது. அதில் ராகுலும் கலந்துகொள்ள, "பாஜகவின் முதல்வர் தூண்டிலில் நீங்கள் மயங்கியிருக்கிறீர்கள். உங்களை வைத்து ஆட்சியை கவிழ்ப்பது மட்டுமே பாஜகவின் திட்டமே தவிர, உங்களை முதல்வராக்குவது அவர்களின் விருப்பம் அல்ல'' என சொல்லி, சிலரின் ஆடியோக்களை போட்டுக் காட்டினார் பிரியங்கா. ராஜஸ்தான் முன்னாள் முதல்வரான பா.ஜ.கவின் வசுந்தராராஜே சிந்தியாவும் பைலட்டுக்கு முதல்வர் பதவி தருவதை விரும்பவில்லை என்பதற்கான காய் நகர்த்தலையும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், உங்கள் 19 பேரையும் தகுதி நீக்கம் செய்வதன் மூலம் பெரும்பான்மைக்கு தேவையான பலத்தை குறைத்து அதில் பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸால் முடியும்.

தவிர, உங்களால் ஏற்படும் இழப்பை சுயேட்சைகள் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடனும் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸால் ஜெயிக்க முடியும். அதனால், எந்த சூழலிலும் ஆட்சியும் கவிழாது; நீங்களும் முதல்வராக முடியாது என சற்று குரலை உயர்த்தி எடுத்து சொன்னதுடன், காங்கிரசை ஆதரிக்க யார் யார் முன் வந்துள்ளனர் என்பதையும் விவரித்தார் பிரியங்கா. சச்சின் பைலட்டும் தவறை உயர்ந்து சமாதானமானார். அவரது மனக்குறைகளை தீர்ப்பதற்கு மூவர் கொண்ட குழுவும் அமைத்துள்ளார் சோனியாகாந்தி'' என்று விவரித்தனர். பைலட்டை வைத்து பா.ஜ.க நடத்த நினைத்த ஆபரேஷனை அதே பைலட் மூலமாகவே முறியடித்துள்ளார் பிரியங்காகாந்தி!

congress Rajasthan priyanka gandhi Amit shah
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe