Skip to main content

மோடியின் உரை பொய்களின் கோர்வை... எஸ்.எஸ்.சிவசங்கர் கடும் கண்டனம்

 

ddd

 

 

மத்திய பாஜக அரசு கொண்டுவந்த புதிய வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் ஏழாவது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் ஆதரவு குரல் கொடுப்பதுடன் ஆங்காங்கே போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். 

 

இதுதொடர்பாக அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.எஸ்.சிவசங்கர் நக்கீரன் இணையதளத்திடம் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

 

ஏழாவது நாளாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நீடிக்கிறதே?  

இந்தப் போராட்டமே தாமதமாக நடக்கிறது என்பது தான் என் கருத்து. வேளாண் சட்டங்களை எதிர்த்து ஏற்கனவே விவசாயிகள் துவங்கியப் போராட்டம் கரோனா போன்ற காரணங்களால் தள்ளிப்போனது. அதனால் இப்போதைய போராட்டம் வலுப்பெற்றுள்ளது. அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைப்பு இல்லாமல், விவசாயிகளே திட்டமிட்டு களம் இறங்கியுள்ளது தான் இந்தப் போராட்டத்தின் சிறப்பு. 

 

மூன்று புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது என்பது எல்லோரும் அறிந்ததே, பிரதமர் மோடி உட்பட. ஆர்.எஸ்.எஸ் மற்றும் கார்ப்பரேட்களின் கைப்பாவை தான் பிரதமர் மோடி. கார்ப்பரேட்கள் தங்களுக்காக வகுத்துக் கொடுத்த திட்டங்களை தான் சட்டம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்த துடிக்கிறார் மோடி. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கக் கூடியது என கோயபல்ஸ் போல தொடர் பிரச்சாரம் செய்கிறார்.

 

ஆனால், விவசாயிகள் இந்த சட்டங்களின் உண்மைத் தன்மையை அறிந்த காரணத்தால் தான் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர். விவசாயிகளுக்கு முற்றிலும் விரோதமானவை இந்த சட்டங்கள். விவசாயிகள் விளைவிக்கிற பொருட்களுக்கு விவசாயிகளோ, அரசோ விலை நிர்ணயம் செய்ய முடியாத நிலையை இந்த சட்டங்கள் ஏற்படுத்துகின்றன. விவசாயிகள் விளைவிப்பவற்றை அரசு கொள்முதல் செய்வதையும் இந்த சட்டங்கள் தடை செய்கின்றன. உயிரை கொடுத்து விவசாயம் செய்து விளைவிக்கின்ற பொருட்களை கார்ப்பரேட்கள் நிர்ணயிக்கிற விலைக்கு அவர்களிடம் விற்க வேண்டிய நிலை தான் விவசாயிகளுக்கு ஏற்படும். உழைத்தற்கு உரிய பலன் கிடைக்காது. இவற்றை எல்லாம் உணர்ந்த காரணத்தால் தான், தங்கள் வாழ்வை பாதுகாக்க போராட்டக் களத்தில் குதித்துள்ளனர் விவசாயிகள். 

 

மாநில அளவில் போராடினால், மக்கள் கவனத்தை பெற முடியாமல் மத்திய மோடி அரசு தடுக்கிறது என்ற காரணத்தால் தான் டெல்லியில் குவிந்து விட்டனர். உரிய அளவில் முக்கியத்துவம் தராவிட்டாலும் போராட்டத்தை மறைக்க முடியவில்லை மத்திய அரசால்.

 

ஆறு மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களுடனே டெல்லி போராட்ட களத்திற்கு விவசாயப் பெருங்குடி மக்கள் வந்துள்ளதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே போராட்டம் ஆறாவது நாளாக நீடிப்பது வியப்பில்லை.

 

ddd

 

டிசம்பர் 3 முன்னரே பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதே..?

பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தாலும், அதற்கு நிபந்தனை வைத்தார். விவசாயிகள் தங்கள் போராட்டக் களங்களை மாற்ற வேண்டும், அரசு சொல்லும் இடத்தில் தான் நடத்த வேண்டும் என்று அமித்ஷா கூறினார்.

 

ஆனால் பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ஜக்ஜித் சிங்  திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்து விட்டார். அரசு எந்த நிபந்தனையும் விதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். பேச்சுவார்த்தைக்கு முன் நிபந்தனை விதிப்பது தங்களை அவமானப்படுத்தும் செயல் என விவசாயிகள் தெளிவாக கூறி விட்டனர். 

 

அதனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் விடுக்கும் பேச்சுவார்த்தை வேண்டுகோளை நம்பவோ, ஏற்கவோ விவசாயிகள் தயாராக இல்லை என்பதே தெளிவான செய்தி.

 

மன் கி பாத்தில் சில விவசாயிகளின் பெயரை குறிப்பிட்டு, புதிய வேளாண் சட்டத்தால் அவர்கள் பயனடைந்திருப்பதாக மோடி பேசியிருக்கிறாரே..?

மோடி ஆற்றும் உரைகள் வெற்றுச் சவடால்கள் என்பதை பல முறை எதிர்கட்சிகள் வலுவாக சொன்னாலும், சிலர் மோடிக்கு முட்டுக் கொடுத்து தாங்கி பிடித்து வந்தனர். 

 

இந்த முறை, மோடியின் 'மன் கி பாத் உரை' அவரது வேடத்தை பொது வெளியில் கலைத்திருக்கிறது. ஒரு கோடி விவசாயிகள் டெல்லியில் திரண்டு, மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகிற வேளையில், 'வேளாண் சட்டங்களால் விவசாயிகள் வாழ்வு சுபிட்சம் பெறுகிறது' என மோடி பேசி இருப்பது அவரது உரை பொய்களின் கோர்வை என்பதை வெளிப்படுத்தி விட்டது.

 

ஒரு சில விவசாயிகளின் வெற்றிக் கதையை சொல்லி, இந்த வேளாண் சட்டங்களின் விளைவு அது என்கிறார் மோடி. ஒரு கோடி விவசாயிகள், இந்த சட்டத்தால் பலன் இல்லை, ஆபத்து தான் என்று போராடும் போது, அதை கண் கொண்டு பாராமல், ஒரு சிலரின் வெற்றிக் கதையை சொல்லி திசை திருப்பப் பார்க்கிறார். ஒரு சிலருக்கு பலன் தரும் சட்டங்களை விட போராடும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு விருப்பமான சட்டத்தை கொண்டு வருவதே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை.

 

மோடி, தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்பதையே மறந்து, தன்னை மகா மன்னராக நினைத்துக் கொண்டு தான் நினைத்ததை மக்கள் மீது திணிக்க முயற்சிக்கிறார்.

 

மன் கி பாத் என்றால் 'மனதின் குரல்' என்கிறார்கள். மோடி பேசுவது 'கார்ப்பரேட்களின் மன் கி பாத்' ஆக இருக்கிறது, 'விவசாயிகளின் பான் கி பாத்' ஆக இருந்தால் தான் நலம் பயக்கும்.

 

DDD

 

விவசாயிகள் என்ற போர்வையில் அரசியல் ஆதாயத்துக்காக சில கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்று பாஜக குற்றம் சாட்டுகிறதே?

வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட போது, பஞ்சாப் மாநிலத்தில் பெரும் போராட்டம் வெடித்தது. அதை பஞ்சாபின் ஆளும் காங்கிரஸ் கட்சியின் வேலை என்று பா.ஜ.க முதலில் குற்றம் சாட்டியது. 


 
பஞ்சாபை பொறுத்தவரை அங்கே ஆளும் காங்கிரஸ் மட்டும் பா.ஜ.கவின் வேளாண் சட்டங்களை எதிர்க்கவில்லை. காங்கிரஸின் எதிர்கட்சியும், பா.ஜ.கவின் தோழமைக் கட்சியுமான அகாலிதளமும் வேளாண் சட்டங்களை எதிர்த்தது. மோடியின் அமைச்சரவையில் இருந்து அகாலிதள அமைச்சர் பதவி விலகி, வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.  அதனால், பஞ்சாபில் போராட்டம் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நீடித்தது. 


 
இப்போது, பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில் நுழைந்து போராட்டத்தை துவங்கிய போது, ஹரியானா மாநில பா.ஜ.க முதல்வர் மனோகர் லால் கட்டார்," போராடுபவர்கள் பஞ்சாப் விவசாயிகள்தான். அவர்களை தூண்டி விடுபவர் பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் அம்ரிந்தர் சிங். போராடும் பஞ்சாப் விவசாயிகள் காலிஸ்தான் தீவிரவாதிகள்", என குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அடுத்த நாள் ஹரியானா விவசாயிகளும் டெல்லியில் குவிந்தனர், போராட்டத்தில் பங்கேற்றனர். அடுத்து உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தர்காண்ட் என பல மாநில விவசாயிகளும் போராட்டத்தில் குவிந்து வருகின்றனர். 

 

இனியும் இதை அரசியல் கட்சிகளின் போராட்டம் என்று சொன்னால், அதை விட கேவலம் இல்லை. அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டம் இத்தனை நாட்கள் தொடர்ந்து நடத்த இயலாது, இத்தனை உத்வேகத்துடன் நடத்த இயலாது. 

 

நேரடியாக இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், உத்வேகத்துடன், பெருங்கோபத்துடன் களம் இறங்கியுள்ளனர். டெல்லியில் தற்போது நிலவும் கடும் குளிரிலும், வெட்ட வெளியில் தங்கி போராடுகிறார்கள் என்றால் அது போராட்டத்தின் வீரியத்தை காட்டுகிறது. இது விவசாயிகளின் நலனுக்காக, ஆதாயத்திற்காக விவசாயிகளே நடத்தும் போராட்டம்.

 

DDD

 

தற்போது என்ன செய்தால் விவசாயிகள் போராட்டத்தை கைவிடுவார்கள் என்று நினைக்கிறீர்கள்?

மாநில வித்தியாசங்களை கடந்து, சாதி, மத வித்தியாசங்களை கடந்து, கட்சி அடையாளங்களை கடந்து,  விவசாயிகள் என்ற ஒற்றை அடையாளத்துடன்  இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர் விவசாயிகள். சிறுவர், சிறுமிகள் முதல் வயதான பாட்டி வரை போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். சாலையில் காவல்துறை ஏற்படுத்திய தடைகளை தாண்டி, கடும் குளிரை பொறுத்துக் கொண்டு, எந்தவிதமான வசதிகளும் இன்றி, எத்தனை நாட்கள் தொடரும் என்று தெரியாமல் போராட்டத்தில் விவசாயிகள் குதித்துள்ளார்கள் என்றால் அவர்களது நோக்கம் ஒன்றே ஒன்று தான். 'மோடி அரசு கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்' என்பது மாத்திரமே போராடும் விவசாயிகளின் குறிக்கோளாக இருக்கும். பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சில சமரசங்களை செய்து கொண்டு சட்டத்தை காப்பாற்ற மோடி அரசு முயலும். ஆனால், அதற்கு விவசாயிகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதே தற்போதைய போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளோரின் உணர்வுகள் வெளிப்படுத்துகின்றன.

 

மூன்று வேளாண் சட்டங்களையும் மோடி 'வாபஸ்' பெற்றால் மட்டுமே, விவசாயிகள் போராட்டத்தை கைவிடுவார்கள் என எண்ணுகிறேன்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்