ADVERTISEMENT

ஆளுங்கட்சி எம்.எல்.ஏவின் கட்டப்பஞ்சாயத்து!

10:26 PM Sep 28, 2017 | Anonymous (not verified)

ஆளுங்கட்சி எம்.எல்.ஏவின் கட்டப்பஞ்சாயத்து -
கதிகலங்கும் கடலூர் காவல்துறை!



கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்றத்தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பாண்டியன் தொடர்ந்து
கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு காவல்துறையை மிரட்டி வருவதாக சமூக ஆர்வலர்களிடமிருந்து தகவல்கள் கிடைக்க விசாரிக்கத் தொடங்கினோம்.

கட்டப்பஞ்சாயத்து-1

சிதம்பரம் அதிமுக பொதுக்குழு உறுப்பினரும் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவருமான மில்லர் தினகரன் அணிக்கு தாவிவிட்டதால் எடப்பாடி அணியை சேர்ந்த எம்.எல்.ஏ. பாண்டியனுக்கும் உரசல் ஆரம்பித்தது. இந்நிலையில், மில்லர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எம்.எல்.ஏ. பாண்டியன் குறித்து கடுமையாக விமர்சித்து எழுத காவல்துறையில் புகார் கொடுத்தார் பாண்டியன். ஆனால், “அரசியல்வாதிகள் குறித்து ஃபேஸ்புக்கில் எழுதுவதற்கெல்லாம் கைது செய்யவேண்டும் என்றால் ஃபேஸ்புக்கில் இருக்கும் அனைவரையுமே கைது செய்யவேண்டியிருக்கும். கைது செய்யவும் சட்டத்தில் வழியில்லை”என்பதால் மில்லர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் எச்சரித்தது சிதம்பரம் நகர காவல்துறை. ஆனால், சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் வரை பிரச்சனையை கொண்டுசென்று காவல்துறைக்கு நெருக்கடி கொடுத்தார் பாண்டியன். இதனால், ஆளுங்கட்சி மேலிடமிருந்து நெருக்கடி வர, மில்லர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர்களது, கோஷ்டி பூசலுக்கெல்லாம் காவல்துறையை பலிகெடாவாக்குகிறார்களே என்று புலம்பினார்கள் காக்கிகள்.

கட்டப்பஞ்சாயத்து-2


கடந்த 20-ந்தேதி சிதம்பரம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் வளர்மதியின் கார் கட்டுப்பாட்டை இழந்து தள்ளுவண்டி தொழிலாளியின் மீது மோதிவிட்டது. படுகாயம் அடைந்தவர் ஆபத்தான நிலையில் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. தகவலறிந்த, சிதம்பரம் நகர காக்கிகள் விபத்தில் காயமடைந்த திருஞானத்திடம் வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்ய இருந்த நிலையில்… ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. பாண்டியன் தலையிட்டு
வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என்று போலீஸாருக்கு நெருக்கடிகொடுக்க இன்றுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. விபத்து குறித்த தகவலையும் மறைத்துவிட்டார்கள். வழக்குப்பதிவு செய்திருந்தால் காயமடைந்த திருஞானத்துக்கு சட்ட ரீதியான இழப்பீடாவது கிடைத்திருக்கும். ஆனால், எம்.எல்.ஏவின் தலையீட்டால் அரசு மருத்துவமனையின் சிகிச்சை மட்டும்தான் கிடைத்தது என்று புலம்பிவருகிறது விபத்துக்குள்ளான திருஞானத்தின் குடும்பத்தினர்.



விபத்தை ஏற்படுத்தியவரின் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? சிதம்பரம் அண்ணாமலை காவல்நிலைய இன்ஸ்பெக்டரும் சிதம்பரம் நகர காவல்நிலையை இன்சார்ஜ் இன்ஸ்பெக்டருமான ஏழுமலையை தொடர்புகொண்டு கேட்டபோது, “விபத்துக்குள்ளானவர் விபத்தை ஏற்படுத்தியவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எழுதி கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டதால் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை”என்றவரிடம் விபத்தை ஏற்படுத்தியவர் முன்னாள் அமைச்சர் என்பதாலும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வின் தலையீட்டாலும்தான் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று குற்றம்சாட்டுகிறார்களே?” என்று நாம் கேட்டபோது, “இப்போதுகூட வந்து புகார் கொடுக்கச்சொல்லுங்கள். நிச்சயமாக, வழக்கப்பதிவு செய்கிறேன்”என்றார்.

எம்.எல்.ஏ. பாண்டியன் மீது காவல்துறைக்கு நெருக்கடி கொடுக்கும் கட்டப்பஞ்சாயத்து குற்றச்சாட்டு மட்டுமல்ல, மணல் குவாரிகளில் லாரி அள்ளுவதிலும் வசூல் வேட்டையை தொடர்ந்துகொண்டிருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள். “கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம், குமராட்சி போன்ற இடங்களில் சட்டத்துக்குப்புறம்பாக மணல் அள்ளும் லாரிகளிடம் ஒரு லாரிக்கு 1500 ரூபாயிலிருந்து 3500 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. ஒருநாளைக்கு 600 க்குமேற்பட்ட லாரிகளில் மணல் அள்ளுகிறார்கள் என்றால் எவ்வளவு வசூல் ஆகிறது? என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். கடந்தவாரம், குமராட்சியில் சட்டத்துக்குப்புறம்பாக மணல் அள்ளிய லாரியை மடக்கி ஸ்டேஷனுக்கு கொண்டுவந்தார் இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டின். ஆனால், எம்.எல்.ஏவின் நெருக்கடியால் அதுவும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை”என்று குற்றச்சாட்டுகளை அடுக்கிறார்கள்.

குற்றச்சாட்டுகள் குறித்து, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. பாண்டியனையே தொடர்புகொண்டு கேட்டோம், குற்றச்சாட்டுகளை மறுத்தவர் “நான் எந்த ப்ரஷரும் யாருக்கும் கொடுக்கல. ஹாஸ்பிட்டலில் போயி அடிபட்டவரைப்பார்த்து ஆறுதல் சொல்லிட்டு வந்தேன் அவ்வளவுதாங்க. நம்ம எக்ஸ் கவுன்சிலர் வீரமணிதான் கூட இருந்து கவனிச்சுக்கிட்டாரு. என்னுடைய தலையீடு இதுல கிடையாது. நான் எந்த அதிகாரிக்கும் தொடர்புகொண்டு பேசவுமில்லை. 15 வருடமா நான் ஒன்றிய செயலாளரா இருக்கேன். அவரும் 15 வருடமா என்னை எதிர்த்து ஒன்றியச்செயலாளர் பதவிக்கு போட்டிப்போட்டுக்கிட்டிருக்காரு. தேர்தலிலும் எனக்கு எதிராக வேலை செய்தார். அதனாலதான், அவருக்கும் எனக்குமான பிரச்சனை. மணல் குவாரிக்கும் எனக்கு எந்த தொடர்புமில்லை. குமராட்சி இன்ஸ்பெக்டர் செபஸ்டின் விஷயத்திலும் நான் எதுவும் பேசவில்லை”என்றார் மறுப்பாக.

எம்.எல்.ஏ. புகார் மீது ஆட்சிமேலிடமும் காவல்துறையும் தீர விசாரித்தால்தான் எது உண்மை? எது பொய்? என்பது வெளிவரும்.

- மனோசெளந்தர்

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT