Skip to main content

தோட்டாவால் என்னை போலீஸ் மிரட்ட முடியாது! - ராக்கெட் ராஜா EXCLUSIVE பேட்டி

Published on 07/05/2018 | Edited on 07/05/2018


 

Rocket Raja

 
 

சாதிய மோதல்களும், சாதிய கொலைகளும் தென்மாவட்டங்கள் இன்றளவும் சந்திக்கும் கொடூரங்களில் ஒன்று. தங்களுடைய கொலைகளுக்கு, "இதற்காகத்தான் கொன்றேன்" என்று தங்கள் சாதியை காரணம் காட்டுவதும்  அங்கு அதிகம். கடந்த சில நாட்களுக்கு முன் நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த பேராசிரியர் செந்தில்குமார் படுகொலைக்குப் பின்னர் மீண்டும் தலை தூக்கியுள்ளது இந்தப் பிரச்சனை. இந்தக் கொலையின் சூத்ரதாரி என சுமார் 12 வழக்குகளில் சம்பந்தப்பட்ட "நாடார் மக்கள் சக்தி இயக்கத்தின்" நிறுவனரான ராக்கெட் ராஜாவினை வழக்கினுள் சேர்த்த நெல்லை மாநகரக் காவல்துறை, அவரைத் தேடி வருகின்றது. எனினும், பழிக்குப்  பழி வாங்க இருதரப்பும் காத்துக்கொண்டிருக்கின்றது என்பதுதான் நிதர்சனம். இந்நிலையில், நெல்லையில் பேராசிரியர் செந்தில்குமார் கொலை வழக்கிலும், ராமநாதபுரம் மன்னர் குடும்பப் பஞ்சாயத்தில் மிரட்டிப் பணம் பறித்த வழக்கிலும் சென்னை தேனாம்பேட்டையில் கைது செய்யப்பட்டுள்ளார் ராக்கெட் ராஜா. கைதிற்கு முன் நக்கீரனுக்காக  மனம் திறந்து பேசலானார் ராக்கெட் ராஜா.
 

உரையாடலுக்கு போகும் முன், யார் இந்த ராக்கெட் ராஜா?

ராக்கெட் ராஜாவின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகில் உள்ள ஆனைகுடி. அவருடைய தந்தை ஜெகதீசன் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. ஏழு சகோதரர்கள், நான்கு சகோதரிகள் கொண்ட மிகப்பெரிய குடும்பத்தில் அவருடைய இரு சகோதரர்கள் வழக்கறிஞர்கள். அதில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு சகோதரரான பாலகணேஷ் பாளையங்கோட்டை பேராசிரியரைக் கொன்ற வழக்கினுள் சேர்க்கப்பட்டவர். ஆரம்பத்தில் "காமராஜர் ஆதித்தனார் கழகத்தின்" கராத்தே செல்வினுடன் இயங்கினார். பின்னொரு நாளில் கராத்தே செல்வின் கொலையாக, காரணமாக எண்ணப்பட்ட கட்டத்துரை கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ராக்கெட் ராஜா அந்த வழக்கிலிருந்து விடுதலையாக பின் வெங்கடேச பண்ணையாரின் தளபதியாகவும், சுபாஷ் பண்ணையாருடனும் இணைந்து இயங்கினார். 24-2-2009 அன்று திசையன்விளை ஆனைகுடி கிராமத்தில் உள்ள ராக்கெட் ராஜாவின் வீட்டினை காவல்துறை சோதனை போட்டு, அங்கு ஒரு பம்ப் ஆக்ஷன் ரைபிள்,  ஏ.கே.47 துப்பாக்கிக்கு உரிய காலி தோட்டாக்கள் 4 மற்றும் 59 ரவுண்டு தோட்டாக்கள், ஒரு கோடாரி ஆகியவற்றை கைப்பற்றியது. இதிலிருந்துதான் ராஜா, ராக்கெட் ராஜாவானாராம் என்கின்றனர் விபரமறிந்தவர்கள். மும்பையில் மார்வாடி ஒருவரின் மகளைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆனார். கராத்தே செல்வின் நினைவு தினம், ஊர்க்கொடை திருவிழா என முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அவ்வப்போது நெல்லைக்கு வருவது உண்டு.

 

"போலீஸ்  என்கவுண்டரிலிருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்ள உங்க மூலமாக பேசுறோமுன்னு நினைக்க வேண்டாம். எனக்கு யாரிடமும் பயம் கிடையாது. என்னைக் கண்டு யார் பயப்படுறாங்க என்பதும் இங்க தேவையில்லாத ஒன்று" என அந்த நள்ளிரவு நேரத்தில் நம்மிடம் அதிரடியாகவே பேசத் தொடங்கினார் ராக்கெட் ராஜா. 
 

"1993ம் வருடம் நான் படித்துக்கொண்டிருக்கும் போது முதன்முதலில் சாதாரண சாதி ரீதியான அடிதடி வழக்கில், அதுவும் நான் ஈடுபடாத விஷயத்தில் என்னை சேர்த்து என்னை இப்படி மாற்றியதே இந்த காவல்துறைதான். அதன் பின் ஒரு வழக்கறிஞரின் கொலை வழக்கில் என்னை சேர்த்தனர். இப்பொழுது கூட செந்தில்குமார் கொலை வழக்கில் என்னை வேண்டுமென்றே சேர்த்துள்ளது இந்தக் காவல்துறை. முதலில் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். 'பேராசிரியர் கொல்லப்பட்டார், பேராசிரியர் கொல்லப்பட்டார்' என ஏதோ அப்பாவியைக் கொன்றது போல் செய்தி பரவ விடுகிறார்கள். யார் இந்த பேராசிரியர்? பேராசிரியரின் வீட்டில் அவர் சார்ந்த சமூகக் கட்சித் தலைவரின் படம் இருந்ததை கவனிக்கவில்லையா? அது போல் இந்த வழக்கினைக் கொடுத்த நபரின் நடத்தை தெரியாதா காவல்துறைக்கு? சரி, சாதி ரீதியாகத்தான்  இந்தக் கொலை நடந்திருக்கின்றது என்றால் ஏன் திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்றோர் இவருக்கு சப்போர்ட் செய்யவில்லை?

இந்தக் கொலையினைப் பொறுத்தவரை, இட விவகாரம் என்பது முற்றிலும் உண்மை. கொலை செய்தவர்களுக்கும், புகார்தாரருக்கும் முன்னரே இருந்த பகைதான் இந்தக் கொலைக்குக் காரணம். ஆனால் அந்தக் கொலையை வைத்து அந்த இடவிவகாரத்தையும், என்னையும் இணைப்பது எந்த வகையில் நியாயம்? இந்தக் கொலையை நான் செய்திருந்தேன் என்றால் ஆமாம் என ஒத்துக்கொண்டிருப்பேன். இப்பொழுது இல்லை என்று சொல்வதால் நான் பலகீனமானவன் அல்ல! கொலையில் சரண்டரானவர்கள் கொலைக்கான முன்பகைக் காரணத்தைக் கூறியும், அதை செவி மடுக்காமல் என்னை சேர்த்துள்ளார் சாதிவெறி பிடித்த விஜயகுமார் எனும் அதிகாரி. அந்த மாதிரி அதிகாரி இருப்பதனால்தான் சாதிக் கொலைகள் இன்னும் நடக்கின்றது" என்று கூறிவிட்டு சற்று அமைதி காத்தவர் தொடர்ந்து பேசலானார். 
 

ஒட்டுமொத்த நெல்லை மாவட்டக் காவல்துறையை நான் குறை கூறவிரும்பவில்லை. விஜயகுமார் போன்ற குறிப்பிட்ட சில சாதி வெறி கொண்ட அதிகாரிகளால்தான் பிரச்சனையே... இப்பொழுது என் மீது என்கவுண்டர் பாயலாம் என்கிறார்கள். எந்தவொரு தோட்டாவாலும் என்னை மிரட்ட முடியாது. என்னை என்கவுண்டர் செய்துட்டா பிரச்சனை தீர்ந்துடுமா என்ன? நல்ல, படித்த குடும்பத்தில் வந்த என்னை இந்த திசைக்கு மாற்றியது போலீஸ்தான். இந்த ஊரே வேண்டாமென பத்து வருஷமாக ஒதுங்கியே இருக்கேன் நான். அதே வேளையில், எனக்கோ, என்னைச் சார்ந்த என் சமூக மக்களுக்கோ பிரச்சனை என்றால் நான் சும்மா இருக்க முடியாது. கண்டிப்பாக யார் எதிர்த்தாலும் கொலை விழத்தான் செய்யும். இப்பொழுது எனக்கு எதிரி என்பதே கிடையாது. அதாவது கண்ணுக்குத் தெரிந்த எந்த எதிரிகளும் இப்பொழுது இல்லை. ஆனாலும், இவங்ககிட்ட மோதினால், " யப்பா.!! அவங்க கிட்ட மோதின ஆளாமே..! ஆரம்பக் காலத்தில் நடந்தது எதனையுமோ தெரியாமல் தங்களுடைய சுயவிளம்பரத்துக்காக எங்களிடம் மோத வார்றாங்க.. அப்படி வந்தவங்க தான் பண்ணையாரிடம் மோதிப்பார்த்தாங்க.. இவங்களுக்கு என்ன தெரியும்.. இப்பவும் அமைதியாக இருக்கேன். ஆனால் பிரச்சனை என்றால் கண்டிப்பாக வருவேன்.

 

 

 

Rocket Raja


 

 

ஏன்னா, நெல்லை மாவட்டத்துல நடக்குற கொலைகள் மானத்துக்காகத்தான் நடக்குது. மானம் போயி வாழ முடியுமா? அன்னைக்கு வயதான முதியவர் எனப் பார்க்காமல் ஒரு கொலை செய்தாங்க. அதனால்தான் நான், வெங்கடேச பண்ணையார், சுபாஷ் பண்ணையார் எல்லாம் ஒன்னா இணைந்தோம். வேற வேற மாவட்டமாக இருந்தாலும் நானும் அவரும் ஒரு விதத்தில் சொந்தக்காரங்கதான். அப்படித்தான் கோழி அருள் உள்ளிட்ட நண்பர்களும். இது ஒரு பக்கம் என்றால், கராத்தே செல்வின் நினைவு நாளுக்கு செல்லக்கூடாது என செட்டிக்குளம் ராஜை கைது செய்து கையை உடைத்துள்ளது காவல்துறை. இது நாள் வரை எந்த அரசும் எங்களுக்கு பகையும் இல்லை, ஆதரவும் இல்லை. ஆனால் இந்த வழக்குகள், கையை உடைப்பதெல்லாம் பார்க்கும் போது 'அரசியல் அமைப்பாக ஒன்று சேர்ந்திடும் நாடார்களை முடக்கத்தான் ஆளும் அரசு பாடுபடுகின்றது' என்று எண்ணத் தோன்றுகிறது. இது உண்மையாகக் கூட இருக்கலாம்.
 

அமைதியாக இருக்கும் எங்களை திசை திருப்புவது ஒரு சில அதிகாரிகள் என்பதை ஆரம்பத்திலேயே சொன்னேன். இப்ப இரு தரப்பிலும் யாருக்கும் பகை கிடையாது. தனிப்பட்ட ஆதாயத்திற்காக மோத நினைக்கின்றார்கள். இதற்கு அஞ்சுபவன் கிடையாது நான். காவல்துறை அதிகாரிகள், வழக்குகள் உள்ள  அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைத்து அமைதிக் கூட்டம் நடத்தலாமே? நான் வரத் தயார். இதனை நடத்தினால் சாதிய மோதல்கள் வராதே? ஆனால் காவல்துறை செய்யாது. எங்களுடைய சமூக மக்கள் ஒன்றிணைந்து இங்கு, இந்த நெல்லை மண்ணில் எங்களுக்காகக் குரல் கொடுக்கும் என்னுடைய சமூகத்தை சேர்ந்த ஒருவரையே பிரதிநிதி ஆக்கும் நாள்  விரைவில் வரும்" என்றவர், "இப்பொழுதும் சொல்றேன். என்னுடைய சமூகத்துக்காத்தான் நான், யாருக்கும் பயந்தவன் இல்லை" என்றார். 

சார்ந்த செய்திகள்

Next Story

ராக்கெட் ராஜா மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

Published on 12/10/2022 | Edited on 12/10/2022

 

KUNDAR Act on Rocket King

 

அண்மையில் கைது செய்யப்பட்ட ராக்கெட் ராஜா மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்துள்ள மஞ்சங்குலத்தை சேர்ந்த சாமிதுரை என்பவர் கடந்த ஜூலை 29 ஆம் தேதி மர்ம நபர்கள் சிலரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வந்த நிலையில் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து பனங்காட்டுப் படை கட்சியின் நிறுவன தலைவர் ராக்கெட் ராஜா என்பவரை திருவனந்தபுரத்தில் வைத்து நெல்லை போலீசார் கைது செய்தனர். 6 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். இந்த கைது நடவடிக்கை காரணமாக நெல்லை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ராக்கெட் ராஜா மீது குண்டர் சட்ட நடவடிக்கை பாய்ந்துள்ளது. தற்பொழுது ராக்கெட் ராஜா குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

 

Next Story

மினி பேருந்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... ராக்கெட் ராஜா கைதுக்கு எதிர்ப்பா?-போலீசார் விசாரணை  

Published on 08/10/2022 | Edited on 08/10/2022

 

Petrol attack on mini bus... Is it opposition to the arrest of Rocket Raja?-Police investigation

 

ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மினி பேருந்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தகவல் வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Petrol attack on mini bus... Is it opposition to the arrest of Rocket Raja?-Police investigation

 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்துள்ள மஞ்சங்குலத்தை சேர்ந்த சாமிதுரை என்பவர் கடந்த ஜூலை 29 ஆம் தேதி மர்ம நபர்கள் சிலரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வந்த நிலையில் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து பனங்காட்டுப் படை கட்சியின் நிறுவன தலைவர் ராக்கெட் ராஜா என்பவரை திருவனந்தபுரத்தில் வைத்து நெல்லை போலீசார் கைது செய்தனர். 6 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். இந்த கைது நடவடிக்கை காரணமாக நெல்லை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் திசையன்விளை பகுதியில் மினி பேருந்து மீது மர்ம நபர்கள் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதனால் மினி பேருந்தின் இருக்கைகள் எரிந்து நாசமாகின. ராக்கெட் ராஜாவின் கைதிற்கு எதிராக அவரது ஆதரவாளர்களால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.