கர்நாடக மாநிலம், மங்களூரை அருகிலுள்ள கொடுரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் - கீதா தம்பதியினர். இவர்களது மகள், 20 வயதான ரிதுபர்ணா கே.எஸ். பள்ளிப் படிப்பை மங்களூரில் உள்ள செயின்ட் ஆக்னஸ் பள்ளியில் முடித்த ரிதுபர்ணா, சிறுவயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு இருந்துள்ளார். அதற்காக 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று, நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். ஆனால், நீட் தேர்வில் வெற்றிபெறாததால், ரிதுபர்ணா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.
சிறுவயது கனவு கலைந்து போனதாக வருந்திய ரிதுபர்ணா, யு.பி.எஸ்.சி தேர்வு எழுதலாமா என்று யோசித்தார். ஆனால், அவரது பெற்றோர் ஆறுதல் கூறி, பொறியியல் படிப்பைத் தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தினர். அதனை ஏற்று, மங்களூரில் உள்ள சஹ்யாத்ரி பொறியியல் கல்லூரியில் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் பொறியியல் பயின்றார். ரோபோ இயந்திர வடிவமைப்பு, ஆட்டோமேஷன் பயன்பாடு, மற்றும் இயந்திர வடிவமைப்பு ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்ட ரிதுபர்ணா, கல்லூரி நண்பர்களுடன் இணைந்து, பாக்கு மரங்களுக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கும் கருவி, பாக்கு அறுவடை மற்றும் தரம் பிரிக்கும் ரோபோ ஆகியவற்றை வடிவமைத்து அசத்தினார்.
இந்தச் சூழலில், உலகப் புகழ்பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் கோரி ரிதுபர்ணா விண்ணப்பித்தார். அப்போது, ரோல்ஸ் ராய்ஸ் தரப்பில், "எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய உங்களுக்கு தகுதி உள்ளதா?" என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "ஒரு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள்," என்று ரிதுபர்ணா கேட்டுக்கொண்டார். பின்னர், அந்த நிறுவனம் ஒரு மாத கால அவகாசத்துடன் ஒரு பணியை ரிதுபர்ணாவுக்கு ஒதுக்கியது. ஆனால், அவரது தீவிர ஆராய்ச்சி மற்றும் உழைப்பின் மூலம், அந்தப் பணியை ஒரு வாரத்தில் முடித்துக் காட்டினார். இதனால் ஈர்க்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், தனது ஜெட் இன்ஜின் தயாரிப்புப் பிரிவில் ஒரு ஆண்டு இன்டர்ன்ஷிப் பணியாற்றும் வாய்ப்பை ரிதுபர்ணாவுக்கு வழங்கியது. மேலும், அதற்கான ஊதியமாக ஆண்டுக்கு ரூ.39.58 லட்சம் சம்பளம் வழங்கியது.
இதைத் தொடர்ந்து, ரிதுபர்ணா 2025 ஜனவரி மாதம் தொடக்கத்தில் இருந்து இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை (இந்திய நேரப்படி) அயராது உழைத்து வந்தார். ஜெட் விமான இன்ஜின் தயாரிப்புப் பிரிவில் அவரது பரிந்துரைகள் பெரிதும் ஏற்கப்பட்டன. இதற்கிடையே, தனது கல்லூரிப் படிப்பிலும் முழு கவனம் செலுத்தி வந்தார்.
இந்த நிலையில், ரிதுபர்ணாவுக்கு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.72.3 லட்சம் சம்பளத்துடன் முழுநேரப் பணியாற்றும் வாய்ப்பை வழங்கியுள்ளது. ஆறாவது செமஸ்டர் பயிலும் ரிதுபர்ணா, தனது ஏழாவது செமஸ்டர் தேர்வை முடித்த பிறகு, அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் பிரிவில் பணியில் சேர உள்ளார்.
சிறுவயதில் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு நிறைவேறாததால் துவண்டு போகாமல், தனது அயராத உழைப்பாலும், விடாமுயற்சியாலும், இன்று 20 வயதில் சாதனை படைத்துள்ள ரிதுபர்ணா, இளைய தலைமுறையினருக்கு பெரும் உத்வேகமாக அமைந்துள்ளார்.