Skip to main content

கோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்! -அதிரவைக்கும் மெடிக்கல் க்ரைம்!

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

கோடீஸ்வரனாக கொடிகட்டிப் பறந்த தொழிலதிபர் குமாரசாமி, தற்போது சென்னையிலுள்ள பிரபல கோயில் வாசலில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். இதற்குக் காரணமாக, அவர் குற்றஞ்சாட்டுவது பிரபல டாக்டரைத்தான்.  1999 செப்டம்பர் 29-ந் தேதி காரில் செல்லும்போது கடுமையான விபத்துக்குள்ளான மதுரையைச் சேர்ந்த குமாரசாமிக்கு இடதுபக்கம் இடுப்புஎலும்பு முறிவு ஏற்பட்டது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு…சென்னை நண்பர்களான ஸ்ரீராம், மெடிக்கல் எக்யூப்மெண்ட்களை விற்கும் சண்முகவேல் ஆகியோர் மூலம் அறிமுகமானார் இராயப்பேட்டை அரசு மருத்துவமனை சீஃப் டாக்டராக இருந்த சென்னை மந்தைவெளியிலுள்ள பிரபல எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுப்பிரமணியன். தனியார் மருத்துவமனையில் வைத்து 2001 ஜூலை 23-ந் தேதி டாக்டர் சுப்பிரமணியன் ஆபரேஷன் செய்தும் இடுப்பு எலும்பை ரீ-ப்ளேஸ்மெண்ட் செய்ய முடியவில்லை. அதிலிருந்து தொழிலதிபர் குமாரசாமியிடம் "மகனே... மகனே' என்று பழக ஆரம்பித்தார் டாக்டர் சுப்பிரமணியன்.  

அதற்குப்பிறகு என்ன நடந்தது? 

ஆறுமாதம் கழித்து எனக்கு போன் பண்ணின டாக்டர் சுப்பிரமணியன், "ஜெர்மன்லேர்ந்து உனக்கு ஆபரேஷன் பண்ண ஸ்பெஷலா ரெண்டு டாக்டர்களை இன்வைட் பண்ணியிருக்கேன். ஃப்ளைட் டிக்கெட்  புக்பண்ணிக் கொடுக்கமுடியுமா?'ன்னு கேட்டார். உடனே, ஒரு டிக்கெட் 1 1/4 லட்சரூபாய், இரண்டு டிக்கெட் 2 லட்ச ரூபாய் + அவருக்கு ஃபீஸ் 50,000 ரூபாய் என  3 லட்ச ரூபாய் அனுப்பிவிட்டு சென்னை வந்தேன். ஆபரேஷனுக்காக ஸ்ட்ரெக்சரில் செல்லும்போது டாக்டர் சுப்பிரமணியனின் காதில் ஜெர்மன் டாக்டர் ஏதோ சொல்ல திடீர்னு ஆபரேஷனை கேன்சல் பண்ணிட்டார்.
 

patient



அவ்வளவு பணம் செலவு செய்தும் எனக்கு ஆபரேஷன் செய்து குணப்படுத்தாததால் நடக்க முடியாமல் முடங்கிப்போக... இந்த நேரத்தில், என் மனைவி சொத்துகளை எல்லாம் தன் பெயருக்கு மாற்றிக்கொண்டு மதுரையிலுள்ள பிரபல நகைக்கடை ஓனருடன் சென்றுவிட்டாள். இதனால், தங்குவதற்குக்கூட வீடு இல்லாமல்  மதுரை மாட்டுத்தாவணி பேருந்துநிலையத்தில் படுத்துக்கிடந்தபோது 2016 ஜனவரி-1 காலை 5:30  மணியளவில் ஒன்பாத்ரூம் வருவதுபோல் இருந்தது. ஓரமாக ஒதுங்கியபோது திடீரென்று சிறுநீர் வருவதற்குப் பதில் ஏதோ ஒரு ‘ப்ளாஸ்டிக் நாப்’ வெளியில் வர ஆரம்பித்ததைப் பார்த்து ஷாக் ஆனேன்' என்று அவர் சொன்னது வேதனையின் உச்சம். 

அதை பிடிச்சு லேசா இழுத்ததும்... தலையில் ஆணி அடித்தது போன்று சுர்ர்ர்ரீரீர்ன்னு வலி, மூளைவரைக்கும் அப்படியே இறங்கியது. உடம்பெல்லாம் சிலிர்த்துப்போனது. சாதாரண வலி இல்ல… மரண வலி. ரோஸ்கலர் ட்யூப் வெளியில் வந்து நின்றது. வலி பொறுக்கமுடியாமல் மதுரை மீனாட்சி மிஷனுக்கு ஓடினேன். அங்கு, எனது ஸ்கூல்மெட் நண்பன் டாக்டர் கண்ணன் மூலம் ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டிலுள்ள யூராலஜி டாக்டர் நாகராஜனிடம் காண்பித்தபோதுதான்... 2001-ல் பிரபல டாக்டர் சுப்பிரமணியன் ஆபரேஷன் செய்தாரே அப்போது கவனக்குறைவாக உடலுக்குள் வைத்து தைக்கப்பட்ட யூரினரி ட்யூப்தான் அது என்பது எக்ஸ்ரேவில் தெரிந்தது. அப்படின்னா, இவ்ளோநாளும் "மகனே... மகனே'ன்னு பேசினதெல்லாம் இந்த தப்பை மறைக்கத்தானா? என்று அதிர்ச்சிமேல் அதிர்ச்சியடைந்தேன்.   

 

medical crime



அதுமட்டுமல்ல, ஜெர்மனி டாக்டர்கள் ரெண்டுபேர் வழக்கமாத்தான் வந்திருக்காங்க. ஆனா, எனக்காக ஸ்பெஷலா வரவழைச்சதா 2 லட்சரூபாய் ஏமாற்றியிருக்காரு. மருத்துவமனை செலவைத் தவிர்த்து ரீ-ப்ளேஸ்மெண்டுக்கான ஹிப்போர்னுக்கு தனியா 2 லட்ச ரூபாய் பணம் கொடுத்தும் அதுவும் எனக்கு ஃபிக்ஸ் பண்ணல. என் காலையும் குணப்படுத்தாம,  என் உடம்புல யூரினரி ட்யூபையும் வெச்சு தச்சு என் வாழ்க்கையையே சூனியமாக்கினது மட்டுமில்லாம என்கிட்ட பணத்தையும் ஏமாற்றி இப்படி "மகனே... மகனே'ன்னு ஏமாற்றிக்கொண்டிருக்காரேன்னு கோபத்தோடு சென்னைக்கு வந்து நியாயம் கேட்டேன். அபிராமபுரம் போலீஸை வரவழைச்சு மிரட்டி அனுப்பிட்டார். பிச்சை எடுத்துக்கிட்டிருக்கேன். நக்கீரன் புத்தகத்தை வாங்கித்தான் உங்ககிட்ட புகார் கொடுத்துருக்கேன். எனக்கு நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டேன். எனக்கு நடந்த மாதிரி வேற எந்த நோயாளிக்கும் நடக்கக்கூடாது''’என்று கதறி அழுது கண்கலங்க வைக்கிறார். 

குற்றச்சாட்டு குறித்து, சென்னை மந்தவெளியைச் சேர்ந்த டாக்டர் சுப்பிரமணியனை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, அவருக்கு ஆபரேஷன் செய்யலாம் என்று முடிவுசெய்தோம். ஆனால், அதில் சிக்கல் இருக்கிறது என்று வெளிநாட்டு டாக்டர்கள் சொன்னதால் ஆபரேஷனை தவிர்த்துவிட்டோம். நான் ஆர்த்தோ டாக்டர். எனக்கும் யூரினரி ட்யூபுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அதனால், நான் அப்படிப்பட்ட ஒரு ஆபரேஷனை செய்யவில்லை. இதற்குமுன் விபத்து ஏற்பட்டபோது அப்படி வைக்கப்பட்டிருக்கலாம். அதேபோல், வெளிநாட்டு மருத்துவர்களுக்கு ஃப்ளைட் டிக்கெட் பணமெல்லாம் அவர் அனுப்பவில்லை. அவரும் நானும் அப்பா-மகன் என்று பழகவில்லை.  என்னைப் பற்றி தவறான குற்றச்சாட்டுகளை சொல்லிக்கொண்டு வந்தார். போலீஸை வைத்து பயமுறுத்தி அனுப்பிவிட்டேன். அதையெல்லாம் நம்பாதீர்கள்''என்றார் கேஷுவலாக.

மெடிக்கல் நெக்லிஜென்ஸ் என்பது மருத்துவ அலட்சியம். எவ்வளவு  சிறந்த மருத்துவர்களாலும் மருத்துவ அலட்சியத்தின் மூலம் நோயாளிக்கு ஆபத்து ஏற்படலாம். அது, நிரூபிக்கப்பட்டால் அதற்கான இழப்பீட்டை மருத்துவர் கொடுக்க வேண்டும். குமாரசாமியின் குற்றச்சாட்டுகள் குறித்து, சுகாதாரத்துறையும் மருத்துவக் கவுன்சிலும் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்கிறார் மக்கள் மருத்துவர் டாக்டர் கருணாநிதி.  

Next Story

சோதனை மேல் சோதனை; ஹர்திக் பாண்டியாவுக்கு விபூதி அடித்த சகோதரர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Police action Hardik Pandya's brother for Money laundering case

முன்னணி இந்திய கிரிக்கெட் அணி வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் பொறுப்பு வகித்து வருபவர் ஹர்திக் பாண்டியா. முன்னதாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்த ஹர்திக் பாண்டியா அந்த அணியிலும் கேப்டனாகத் தொடர்ந்தார். ஆனால், மும்பை அணியின் நட்சத்திர வீரர், ரோகித் ஷர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியாவிற்கு சென்றதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த ஆண்டு கேப்டன் ஹர்திக் பாண்டியா செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு மோசமான வரவேற்பு கிடைக்கிறது. ஆனாலும், ரசிகர்கள் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு மத்தியில் ஹர்திக் பாண்டியா மும்பை அணியை கேப்டனாக வழி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா தன் சகோதரர் ஒருவரால் மேலும் ஒரு பிரச்சனைக்கு ஆளாகி இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவின் உடன்பிறந்த சகோதரர் க்ருணால் பாண்டியா. இவரும் இந்திய அணியிலும், ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணிக்காகவும் விளையாடி வருகிறார். கிரிக்கெட் சகோதரர்கள் இருவரும் பிஸினஸிலும் காலூன்ற நினைத்துள்ளனர். அதற்கு பாண்டியா சகோதரர்களின், ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியா துணையாக வந்துள்ளார். மூவரும் சேர்ந்து, கடந்த 2021 ஆம் ஆண்டு ‘பாலிமர்’ என்ற நிறுவனத்தை தொடங்கினர். அதில், ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியா தலா 40 சதவீதம் என்றும், ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியா 20 சதவீதம் என்றும் முதலீடு செய்தனர். ஒப்பந்தத்தில் லாபத்தையும் இதே விகிதத்தில் பங்கிட்டுக் கொள்ள முடிவு செய்து கொண்டனர். இதில், ஹர்திக் மற்றும் க்ருணால் இருவருமே முழு நேர கிரிக்கெட் வீரர்கள் என்பதால் நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பை சகோதரர் வைபவ் பாண்டியா எடுத்துக்கொண்டுள்ளார்.

Police action Hardik Pandya's brother for Money laundering case

இதனையடுத்து வைபவ், தனது இரு சகோதரர்களுக்கும் தெரியாமல் அதே தொழிலில் ஈடுபடும் மற்றொரு நிறுவனத்தை ரகசியமாக துவக்கியுள்ளார். இது ஹர்திக், க்ருணால் பாண்டியாக்களுடன் செய்து கொண்ட ஒப்பந்த விதிகளுக்கு எதிரானது என்று தெரிந்தும் அவர் செய்ததாக கூறப்படுகிறது. மறுபுறம், சகோதரர்கள் மூவரும் இணைந்து கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கிய நிறுவனத்தின் லாபம் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. இதைக் கவனித்த ஹர்திக் பாண்டியா என்ன பிரச்சனை என நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்துள்ளார். அதில், ஹர்திக் பாண்டியாவிடம் சொல்லாமல் வைபவ் சொந்தமாக தனி நிறுவனத்தை தொடங்கி இருப்பது தெரிய வந்ததுள்ளது. தங்கள் குடும்பத்தில் ஒரு நபராக இருந்த வைபவ் பாண்டியாவை நம்பி, பாண்டியா சகோதரர்கள் புது நிறுவனத்தைத் தொடங்கிய நிலையில், அவரே இப்படி செய்தது பாண்டியா சகோதரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைபவ் பாண்டியா ரகசியமாக புதிய கம்பெனி தொடங்கியதால் பழைய கம்பெனிக்கு 3 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு ஹர்திக் பாண்டியாவிடம் சொல்லாமல் பழைய கம்பெனியில் தனக்கான லாபத்தின் சதவீதத்தை 20 சதவீதத்தில் இருந்து 33.3 சதவீதமாக வைபவ் அதிகரித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அத்துடன் முதலில் மூன்று பேர் சேர்ந்து தொடங்கிய கூட்டு நிறுவனத்தில் கிடைத்த பணத்தை அடிக்கடி தனது சொந்த நிறுவனத்திற்கு வைபவ் மாற்றிக் கொண்டுள்ளார். பாண்டியா சகோதரர்களுக்கு தெரியாமல் இதுவரை ஒரு கோடி ரூபாய் வரை வைபவ் மாற்றியதாக தகவல் சொல்லப்படுகிறது. ஒருகட்டத்தில் ஹர்திக் பாண்டியாவிற்கு நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வந்த அதிர்ச்சி பின்னணி முழுமையாக தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா தன்னை ஏமாற்றிய வைபவிடம் விளக்கம் கேட்டு வாக்குவாதம் செய்ததாகவும், உடனே உனது பெயரை களங்கப்படுத்திவிடுவேன் என்று ஹர்திக் பாண்டியாவை வைபவ் மிரட்டியதாக தகவல் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, ஒன்று விட்ட சகோதரரால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹர்திக் பாண்டியா, வைபவிற்கு எதிராக மும்பை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து வைபவை கைது செய்து 5 நாள்கள் போலீஸ் காவலில் விசாரித்து வருகின்றனர். வைபவ் மொத்தம் 4.3 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக ஹர்திக் பாண்டியா தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. விரிவான விசாரணைக்குப் பிறகே, மோசடி சம்பவம் குறித்து தகவல்கள் முழுமையாக தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். பிரபல கிரிக்கெட் வீரருக்கு சகோதரரால் நடந்த  மோசடி, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கொதிக்கும் சாம்பாரில் விழுந்தும் தப்பிய சிறுவன்; உயிரைப் பறித்த அறுவை சிகிச்சை 

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
The boy who fell into the boiling sambar and escaped; Surgery that took life

கொதிக்கும் சாம்பாரில் தவறுதலாக விழுந்த சிறுவன் தழும்பு நீக்க சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவரது மகன் மதன்(3). செல்வம் வீட்டுக்கு அருகிலேயே உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி கடையில் விளையாடிக் கொண்டிருந்த மகன் மதன், ஹோட்டலில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரில் தவறுதலாக விழுந்துள்ளார். அலறித்துடித்த மதனின் குரலைக் கேட்ட கடை ஊழியர்கள் உடனடியாக மதனை காப்பாற்றினர். இதில் சிறுவனின் வலது கை வெந்து போனது. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மதன் மருத்துவச் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தான்.

தொடர்ந்து மதனின் கை பகுதியிலிருந்த தீக்காய தழும்புகளை சரி செய்ய வேண்டும் என பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனை பெற்றோர் அனுமதித்துள்ளனர். தீக்காய தழும்பு நீக்குவதற்கான அறுவை சிகிச்சை செய்வதற்கு 35 ஆயிரம் ரூபாய் செலவாகும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதை ஒப்புக் கொண்ட பெற்றோர்  சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென சிகிச்சையின்போது சிறுவன் மதன் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பெற்றோர் தரப்பில் சங்கர் நகர் காவல் நிலையத்தில் மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முறையான சிகிச்சை அளிக்காததால் மகன் இறந்து விட்டதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் இறந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொதிக்கும் சாம்பாரில் விழுந்து பிழைத்த சிறுவன் அதனால் ஏற்பட்ட தீக்காய தழும்புகளை சரி செய்ய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.