Skip to main content

கோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்! -அதிரவைக்கும் மெடிக்கல் க்ரைம்!

கோடீஸ்வரனாக கொடிகட்டிப் பறந்த தொழிலதிபர் குமாரசாமி, தற்போது சென்னையிலுள்ள பிரபல கோயில் வாசலில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். இதற்குக் காரணமாக, அவர் குற்றஞ்சாட்டுவது பிரபல டாக்டரைத்தான்.  1999 செப்டம்பர் 29-ந் தேதி காரில் செல்லும்போது கடுமையான விபத்துக்குள்ளான மதுரையைச் சேர்ந்த குமாரசாமிக்கு இடதுபக்கம் இடுப்புஎலும்பு முறிவு ஏற்பட்டது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு…சென்னை நண்பர்களான ஸ்ரீராம், மெடிக்கல் எக்யூப்மெண்ட்களை விற்கும் சண்முகவேல் ஆகியோர் மூலம் அறிமுகமானார் இராயப்பேட்டை அரசு மருத்துவமனை சீஃப் டாக்டராக இருந்த சென்னை மந்தைவெளியிலுள்ள பிரபல எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுப்பிரமணியன். தனியார் மருத்துவமனையில் வைத்து 2001 ஜூலை 23-ந் தேதி டாக்டர் சுப்பிரமணியன் ஆபரேஷன் செய்தும் இடுப்பு எலும்பை ரீ-ப்ளேஸ்மெண்ட் செய்ய முடியவில்லை. அதிலிருந்து தொழிலதிபர் குமாரசாமியிடம் "மகனே... மகனே' என்று பழக ஆரம்பித்தார் டாக்டர் சுப்பிரமணியன்.  

அதற்குப்பிறகு என்ன நடந்தது? 

ஆறுமாதம் கழித்து எனக்கு போன் பண்ணின டாக்டர் சுப்பிரமணியன், "ஜெர்மன்லேர்ந்து உனக்கு ஆபரேஷன் பண்ண ஸ்பெஷலா ரெண்டு டாக்டர்களை இன்வைட் பண்ணியிருக்கேன். ஃப்ளைட் டிக்கெட்  புக்பண்ணிக் கொடுக்கமுடியுமா?'ன்னு கேட்டார். உடனே, ஒரு டிக்கெட் 1 1/4 லட்சரூபாய், இரண்டு டிக்கெட் 2 லட்ச ரூபாய் + அவருக்கு ஃபீஸ் 50,000 ரூபாய் என  3 லட்ச ரூபாய் அனுப்பிவிட்டு சென்னை வந்தேன். ஆபரேஷனுக்காக ஸ்ட்ரெக்சரில் செல்லும்போது டாக்டர் சுப்பிரமணியனின் காதில் ஜெர்மன் டாக்டர் ஏதோ சொல்ல திடீர்னு ஆபரேஷனை கேன்சல் பண்ணிட்டார்.
 

patientஅவ்வளவு பணம் செலவு செய்தும் எனக்கு ஆபரேஷன் செய்து குணப்படுத்தாததால் நடக்க முடியாமல் முடங்கிப்போக... இந்த நேரத்தில், என் மனைவி சொத்துகளை எல்லாம் தன் பெயருக்கு மாற்றிக்கொண்டு மதுரையிலுள்ள பிரபல நகைக்கடை ஓனருடன் சென்றுவிட்டாள். இதனால், தங்குவதற்குக்கூட வீடு இல்லாமல்  மதுரை மாட்டுத்தாவணி பேருந்துநிலையத்தில் படுத்துக்கிடந்தபோது 2016 ஜனவரி-1 காலை 5:30  மணியளவில் ஒன்பாத்ரூம் வருவதுபோல் இருந்தது. ஓரமாக ஒதுங்கியபோது திடீரென்று சிறுநீர் வருவதற்குப் பதில் ஏதோ ஒரு ‘ப்ளாஸ்டிக் நாப்’ வெளியில் வர ஆரம்பித்ததைப் பார்த்து ஷாக் ஆனேன்' என்று அவர் சொன்னது வேதனையின் உச்சம். 

அதை பிடிச்சு லேசா இழுத்ததும்... தலையில் ஆணி அடித்தது போன்று சுர்ர்ர்ரீரீர்ன்னு வலி, மூளைவரைக்கும் அப்படியே இறங்கியது. உடம்பெல்லாம் சிலிர்த்துப்போனது. சாதாரண வலி இல்ல… மரண வலி. ரோஸ்கலர் ட்யூப் வெளியில் வந்து நின்றது. வலி பொறுக்கமுடியாமல் மதுரை மீனாட்சி மிஷனுக்கு ஓடினேன். அங்கு, எனது ஸ்கூல்மெட் நண்பன் டாக்டர் கண்ணன் மூலம் ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டிலுள்ள யூராலஜி டாக்டர் நாகராஜனிடம் காண்பித்தபோதுதான்... 2001-ல் பிரபல டாக்டர் சுப்பிரமணியன் ஆபரேஷன் செய்தாரே அப்போது கவனக்குறைவாக உடலுக்குள் வைத்து தைக்கப்பட்ட யூரினரி ட்யூப்தான் அது என்பது எக்ஸ்ரேவில் தெரிந்தது. அப்படின்னா, இவ்ளோநாளும் "மகனே... மகனே'ன்னு பேசினதெல்லாம் இந்த தப்பை மறைக்கத்தானா? என்று அதிர்ச்சிமேல் அதிர்ச்சியடைந்தேன்.   

 

medical crimeஅதுமட்டுமல்ல, ஜெர்மனி டாக்டர்கள் ரெண்டுபேர் வழக்கமாத்தான் வந்திருக்காங்க. ஆனா, எனக்காக ஸ்பெஷலா வரவழைச்சதா 2 லட்சரூபாய் ஏமாற்றியிருக்காரு. மருத்துவமனை செலவைத் தவிர்த்து ரீ-ப்ளேஸ்மெண்டுக்கான ஹிப்போர்னுக்கு தனியா 2 லட்ச ரூபாய் பணம் கொடுத்தும் அதுவும் எனக்கு ஃபிக்ஸ் பண்ணல. என் காலையும் குணப்படுத்தாம,  என் உடம்புல யூரினரி ட்யூபையும் வெச்சு தச்சு என் வாழ்க்கையையே சூனியமாக்கினது மட்டுமில்லாம என்கிட்ட பணத்தையும் ஏமாற்றி இப்படி "மகனே... மகனே'ன்னு ஏமாற்றிக்கொண்டிருக்காரேன்னு கோபத்தோடு சென்னைக்கு வந்து நியாயம் கேட்டேன். அபிராமபுரம் போலீஸை வரவழைச்சு மிரட்டி அனுப்பிட்டார். பிச்சை எடுத்துக்கிட்டிருக்கேன். நக்கீரன் புத்தகத்தை வாங்கித்தான் உங்ககிட்ட புகார் கொடுத்துருக்கேன். எனக்கு நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டேன். எனக்கு நடந்த மாதிரி வேற எந்த நோயாளிக்கும் நடக்கக்கூடாது''’என்று கதறி அழுது கண்கலங்க வைக்கிறார். 

குற்றச்சாட்டு குறித்து, சென்னை மந்தவெளியைச் சேர்ந்த டாக்டர் சுப்பிரமணியனை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, அவருக்கு ஆபரேஷன் செய்யலாம் என்று முடிவுசெய்தோம். ஆனால், அதில் சிக்கல் இருக்கிறது என்று வெளிநாட்டு டாக்டர்கள் சொன்னதால் ஆபரேஷனை தவிர்த்துவிட்டோம். நான் ஆர்த்தோ டாக்டர். எனக்கும் யூரினரி ட்யூபுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அதனால், நான் அப்படிப்பட்ட ஒரு ஆபரேஷனை செய்யவில்லை. இதற்குமுன் விபத்து ஏற்பட்டபோது அப்படி வைக்கப்பட்டிருக்கலாம். அதேபோல், வெளிநாட்டு மருத்துவர்களுக்கு ஃப்ளைட் டிக்கெட் பணமெல்லாம் அவர் அனுப்பவில்லை. அவரும் நானும் அப்பா-மகன் என்று பழகவில்லை.  என்னைப் பற்றி தவறான குற்றச்சாட்டுகளை சொல்லிக்கொண்டு வந்தார். போலீஸை வைத்து பயமுறுத்தி அனுப்பிவிட்டேன். அதையெல்லாம் நம்பாதீர்கள்''என்றார் கேஷுவலாக.

மெடிக்கல் நெக்லிஜென்ஸ் என்பது மருத்துவ அலட்சியம். எவ்வளவு  சிறந்த மருத்துவர்களாலும் மருத்துவ அலட்சியத்தின் மூலம் நோயாளிக்கு ஆபத்து ஏற்படலாம். அது, நிரூபிக்கப்பட்டால் அதற்கான இழப்பீட்டை மருத்துவர் கொடுக்க வேண்டும். குமாரசாமியின் குற்றச்சாட்டுகள் குறித்து, சுகாதாரத்துறையும் மருத்துவக் கவுன்சிலும் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்கிறார் மக்கள் மருத்துவர் டாக்டர் கருணாநிதி.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்