Skip to main content

செவ்வாய் கோளில் இதுவரை...

Published on 28/11/2018 | Edited on 28/11/2018
mars
                          1960ல் அனுப்பப்பட்ட மார்ஸ் மெரைனர் 1 

 

செவ்வாயில் உயிரினம் இருக்கிறதா அல்லது உயிரினம் வாழ்வதற்கான சூழ்நிலை இருக்கிறதா என்ற மனிதனின் தேடல் முயற்சிகள் 1960களிலேயே துவங்கிவிட்டது. 40 ஆண்டுகள் கழித்து, எத்தனையோ தோல்விகளைச் சந்தித்த பிறகு இப்போதுதான் அவனது கனவு நனவாகும் சாத்தியம் உருவாகி இருக்கிறது.

 

கடந்த 40 ஆண்டுகால மனிதனின் முயற்சிகளை சுருக்கமாக தெரிந்து கொண்டால் இன்று அவன் பெற்றுள்ள வெற்றியின் பிரமாண்டம் நமக்கு புரியும்.

 

1965ம் ஆண்டு மார்ஸ் மெரைனர் 4 என்ற விண்கலத்தை அமெரிக்காவின் நாஸா அனுப்பியது. அதுதான் செவ்வாய் கோளை கடந்து 22 படங்களை அனுப்பியது.

 

அந்தப் படங்கள் அனைத்தும் செவ்வாயின் வெற்று நிலப் பகுதிகளின் பதிவுகளாக இருந்தன.


 

mars
1965ல் மார்ஸ் மெரைனர் 4 எடுத்து அனுப்பிய செவ்வாயின் தோற்றம்


 

அதே ஆண்டு சோவியத் யூனியனும் ஒரு விண்கலத்தை செலுத்தியது. ஆனால் சந்தி ரனை வேகமாக கடந்த அந்த விண்கலம் எங்கோ, போய் மறைந்து விட்டது.

 

1969ம் ஆண்டு மெரைனர் 6 மற்றும் 7 என்ற இரட்டை விண்கலங்களை அமெரிக்கா அனுப்பியது. இவை செவ்வாயின் தென்துருவப் பகுதியை அடைந்து 10 படங்களை அனுப்பின.

 

இதனிடையே சோவியத் யூனியன் அனுப்ப முயன்ற இரண்டு விண்கலங்கள் மேலெழும்பும் போதே வெடித்துச் சிதறின.

 

1971ம் ஆண்டு அமெரிக்கா அனுப்பிய மெரைனர் 8 என்ற விண்கலம் கடலில் விழுந்தது. அதே ஆண்டு அமெரிக்கா அனுப்பிய மெரைனர் 9 செவ்வாயை சுற்றிய முதல் விண்கலமாகியது.

 

mars
                       1972ல் படம்பிடிக்கப்பட்ட செவ்வாயின் எரிமலை


 

1972ம் ஆண்டு சோவியத் யூனியன் மார்ஸ் 2 - 3 என்ற விண்கலங்களை வெற்றிகரமாக செலுத்தியது. அவை செவ்வாயை சுற்றி அதன் கடுமையான சுற்றுச்சூழல் பற்றிய புள்ளி விபரங்களை அனுப்பின. செவ்வாயின் மிகப் பிரம்மாண்டமான எரிமலை அந்த ஆண்டுதான் படம் பிடிக்கப் பட்டது.

 

1973 மற்றும் 74ம் ஆண்டுகளில் சோவியத் யூனியன் மேலும் 4 விண்கலங்களை செலுத்தியது. மார்ஸ் 4, 5, 6, 7 எனப் பெயரிடப்பட்ட அவற்றில் மார்ஸ் 5 மட்டுமே வெற்றி பெற்றது. மார்ஸ் 6 செவ்வாயில் மோதி வெடித்துவிட்டது.

 

1976ம் ஆண்டு செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்த  ஆண்டாகும். நாஸா அனுப்பிய வைகிங் 1 மற்றும் 2 விண்கலங்கள் வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கின.

 

1993ம் ஆண்டு சோவியத் யூனியன் போபோஸ் 1 - 2 என்ற இரண்டு விண்கலங்களை அனுப் பியது. போபோஸ் 2 செவ்வாயின் சந்திரனை கண்டுபிடித்தது.

 

mars
                        1976ல் வைகிங் எடுத்த செவ்வாயின் மேற்பரப்பு


 

1993ம் ஆண்டு அமெரிக்கா அனுப்பிய மார்ஸ் அப்சர்வர் விண்கலம் என்னாயிற்று என்றே தெரியவில்லை.

 

1996ம் ஆண்டு நாஸா செலுத்திய மார்ஸ் குளோபல் சர்வேயர் ஒரு லட்சத்து 20 ஆயிரம் படங்களை அனுப்பியது.

 

அதே ஆண்டு மார்ஸ் 96 என்ற பெயரில் ரஷ்யா அனுப்பிய விண்கலம் பசிபிக் கடலில் விழுந்தது. 1997ம் ஆண்டு நாஸா அனுப்பிய மார்ஸ் பாத் பைண்டர் என்ற ரோபோ வெற்றிகரமாக செவ்வாயில் இறங்கியது. அது தன்னைச் சுற்றிய செவ்வாய் தரைப்பகுதியை 20 ஆயிரம் படங்கள் எடுத்து அனுப்பியது. 1999ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா அனுப்பிய மார்ஸ் கிளைமேட் ஆர்பிடர் தோல்வியடைந்தது. ஆனால் டிசம்பர் மாதம் அனுப்பிய மார்ஸ் போலார் லேண்டர் செவ்வாயின் வடதுருவத்தில் இறங்கியது.

 

2001ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்கா அனுப்பிய மார்ஸ் ஒடிஸி விண்கலம் செவ்வாயின் மிகப்பெரிய மேப் ஒன்றை அனுப்பியது.

 

mars
செவ்வாயில் நீர் இருந்ததற்கான ஆதாரங்களை  ஆப்பர்சூனிட்டி படம் எடுத்து அனுப்பியது.


 

2003ம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஐரோப்பிய யூனியன் பீகிள் 2 விண்கலத்தையும் நாஸா ஸ்பிரிட் ரோவர், ஆப்பர்சூனிட்டி என்ற இரண்டு ரோபோக்களையும் அனுப்பின. ஐரோப்பிய யூனியன் அனுப்பிய பீகிள் 2 ரோபோவை மார்ஸ் எக்ஸ்பிரஸ் விடுவித்தது.

 

ஆனால் அது எங்கே போனது என்றே தெரியவில்லை. ஜனவரி 4ம் தேதி அமெரிக்காவின் ஸ்பிரிட் ரோவர் ரோபோ செவ்வாயில் வெற்றிகரமாக இறங்கினாலும் அது இயங்கவில்லை.

 

எனினும் அடுத்து இறங்கிய ஆப்பர்சூனிட்டி ரோபோ மனிதன் விரும்பும் அனைத்து ஆய்வுகளையும் நடத்த துவங்கியது.

 

mars
                 செவ்வாயில் கடல் இருந்து வற்றியதற்கான ஆதாரம்


 

தண்ணீர் ஒளிந்திருக்கும் மணற் குன்றுகள்!

 

செவ்வாயில் தண்ணீர் இருக்கிறதா?

 

அங்கு உயிரினம் இருக்கிறதா?

 

ஏற்கெனவே அங்கு உயிரினம் வாழ்ந்து அழிந்து விட்டதா?

 

என்கிற கேள்விகளுக்கு இன்னமும் தெளிவான விடை கிடைக்கவில்லை.

 

ஆனால் செவ்வாயில் இறக்கி விடப்பட்டுள்ள ஆப்பர்சூனிட்டி மற்றும் ஸ்பிரிட் என்ற இரண்டு ரோபோக்கள் இதுகுறித்து ஆய்வுகளை நடத்துகின்றன.

 

செவ்வாயில் தண்ணீர் இருந்ததற்கான அடையாளங்கள் ஏராளமாக உள்ளன.

 

mars
                        செவ்வாயில் சோதனை நடத்திய ஸ்பிரிட் ரோபோ


 

அதுபோல பனிக்கட்டி ஏரி ஒன்று இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

 

மார்ஸ் ஒடிஸி விண்கலத்தின் கம்மாரேஸ் சாதனத்தின் மூலம் எடுக்கப்பட்ட படம் பெரிய பெரிய மணற்குன்றுகளை காட்டுகிறது.

 

இந்த மணற்குன்றுகளுக்குள் ஐஸ்கட்டி வடிவத்தில் தண்ணீர் மறைந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

சூரிய மண்டலத்திலேயே இந்த மணற்குன்றுதான் மிகப்பெரியது என்கிறார்கள். ஆறரை கிலோ மீட்டர் பரப்பளவில் 475 மீட்டர் உயரத்திற்கு இது உள்ளது கைஸெர் மணற்குன்று என இதற்கு பெயரிட்டுள்ளனர்.

 

எதிர்காலத்தில் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும்போது, இந்த மணற்குன்றுகளுக்கு அருகே இறங்குவது பாதுகாப்பாக இருக்கும். எரிபொருள் தயாரிக்கவும், மனிதன் உயிர்வாழவும் தேவையான தண்ணீர் கிடைக்கக் கூடும்.

 


 

செவ்வாயின் துருவப்பனி மற்றும் செவ்வாயின் மணற் பகுதியில் மட்டும் 70 சதவீத தண்ணீர் இருப்பதாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.

 

செவ்வாயின் மணற் குன்று பூமியின் அண்டார்டிகா பிரதேசத்தைப் போல தோற்றமளிக்கிறது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.


 

செவ்வாயின் பனிக்கட்டி ஏரி!

 

செவ்வாய் கோளின் மீது விஞ்ஞானிகளுக்கு ஈர்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

 

பூமிக்கு அடுத்தபடியாக உயிரினம் வாழ தகுதி வாய்ந்த கோளின் இதைத் தான் அவர்கள் குறி வைத்துள்ளனர்.

 

mars
                 செவ்வாயில் தண்ணீர் ஒளிந்திருக்கும் மணற்குன்றுகள்



வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் வெறும் வாயுக் கோளங்கள். அவற்றில் விண்கலங்கள் இறங்கவே முடியாது.

 

புதனும், வெள்ளியும் சூரியனுக்கு வெகு அருகில் உள்ளவை. எனவே அவை கொந்தளிப்பானவை. விண்கலங்கள் இறங்க பாதுகாப்பற்றவை.

 

பூமியின் துணைக் கோளான நிலவு, சூரிய ஒளியை பூமிக்கு பிரதிபலிக்கும் வெறும் கண்ணாடித் துண்டுதான்.

 

எனவேதான் சூரிய மண்டலத்தில் பூமிக்கு அடுத்தபடியாக செவ்வாய் கோளை ஆராய விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
 

செவ்வாயில் தண்ணீர் இருந்ததற்கான தடயங்கள் கூடுதலாக கிடைத்தபடி உள்ளன.

 

வெள்ளை அப்பம் போல 35 கிலோ மீட்டர் பரப்பும், இரண்டு கிலோ மீட்டர் ஆழமும் கொண்ட உறை நிலை ஏரி ஒன்றை மார்ஸ் எக்ஸ்பிரஸ் சமீபத்தில் படம் பிடித்து அனுப்பியது.

 

இந்த ஏரி செவ்வாய்க் கோளின் பெயரிடப்படாத மாபெரும் பள்ளத்தாக்கின் அடியில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

இந்தப் பள்ளத்தாக்கு செவ்வாயின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.
 

ஆண்டு முழுவதும் இந்த ஏரி உறைநிலையிலேயே இருக்கிறது.

 

அதன் உறைநிலையில் மாற்றம் ஏற்படுகிற அளவுக்கு அங்கு வெப்பம் இல்லை என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

 

இப்படிப்பட்ட சூழலில்தான் அமெரிக்காவின் நாஸா இன்னொரு விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியுள்ளது.
 

mars
செவ்வாயின் மணற்குன்றுகள் அண்டார்டிகா போல தோற்றமளிக்கும்.

 

மார்ஸ ரெக்கனாய்ஸன்ஸ் ஆர்பிட்டர் (செவ்வாயை வேவு பார்க்கும் விண்கலம்) என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது. எம்.ஆர்.ஓ. என சுருக்கமாக அழைக்கிறார்கள்.

 

செவ்வாய்க்கு இதுவரை அனுப்பப்பட்ட விண்கலங்களில் இதுதான் மிகப் பெரியது என்கிறார்கள். அதிநவீன சாதனங்களுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.

 

இந்த விண்கலம் 2006 மார்ச் மாதம் செவ்வாயைச் சுற்றத் துவங்கியது. 25 மாதங்கள் வரை செவ்வாயைச் சுற்றி அதன் அமைப்பை ஆய்வு செய்யும்.

 

தண்ணீர் இருப்பது உறுதியானால் அங்கு தற்போது உயிரினம் இருக்க வேண்டும். அல்லது முன்பு உயிரினம் இருந்ததற்கான தடயம் இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

 

எதிர்காலத்தில் செவ்வாய்க் கோளில் தரையிறங்க வசதியான இடங்களை இந்த விண்கலம் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

2007ம் ஆண்டு பீனிக்ஸ் என்ற விண்கலத்தையும், 2009ம் ஆண்டு மார்ஸ் சயின்ஸ் லேபரட்டரி என்ற விண்கலத்தையும் அனுப்ப நாஸா திட்டமிட்டுள்ளது.

 

எனவே, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் செவ்வாயைப் பற்றிய ஆச்சரியமான தகவல்கள் கிடைக்கக் கூடும்!

 

செவ்வாயின் துருவத்தில் ஐஸ்!

 

இதனிடையே, செவ்வாயை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய யூனியன் அனுப்பிய மார்ஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் மார்ஸ் குளோபல் சர்வேயர் விண்கலங்கள், ஏராளமான படங்களை எடுத்தனுப்பி வருகிறது. அவற்றைக் கொண்டு நாஸா விஞ்ஞானி ஜெப்ரி பிளாட் தலைமையிலான 12 விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் முடிவில் செவ்வாயின் வடதுருவத்தில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலம் அளவுக்கு உறைந்த நிலையில் பனிக்கட்டி இருப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர். கார்பன் டை ஆக்ஸைடும் தண்ணீரும் கலந்த நிலையில் பனிக்கட்டி இருக்கிறது. 2.3 மைல் அளவுக்கு அடர்த்திமிக்கதாக பரவியிருக்கிறது. பனிக்கட்டியின் அடிப்பரப்பில் திரவ வடிவத்தில் தண்ணீர் இருக்கிறது என்றெல்லாம் அவர்கள் கூறியிருக்கின்றனர்.

தண்ணீர் இருந்தால் அங்கு ஏதேனும் வடிவத்தில் உயிரினம் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டால் செவ்வாய்ப் பயணம் விரைவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

 

mars
                                           செவ்வாயில் பனிக்கட்டி ஏரி

 

செவ்வாய்க்கு பறந்தது பீனிக்ஸ்!

 

பீனிக்ஸ் பறவையை நாம் பார்த்ததில்லை.

ஆனால், அந்தப் பறவையை தீயில் எரித்தாலும் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்பெறும் என கூறுவார்கள்.

செவ்வாய் கோளில் இறங்கி ஆராய்வதற்காக அனுப்பிய விண்கலங்கள் அனைத்தும் தோல்வியில்தான் முடிந்துள்ளன.

நமது சூரியமண்டலத்தில் உள்ள கோள்களில் திடமாகவும் தண்ணீர் இருக்க வாய்ப்பு உள்ளதும் செவ்வாய் மட்டுமே என இதுவரை கருதப்படுகிறது.

இதுகுறித்து ஒரு முடிவுக்கு வராமல் விஞ்ஞானிகள் ஓயமாட்டார்கள் போல தெரிகிறது. செவ்வாயை ஆராய்வதற்கு மட்டும் எத்தனையோ விண்கலங்கள் அனுப்பப்பட்டு விட்டன. அவை செவ்வாயைப் பற்றி அவ்வப்போது புதுப்புதுத் தகவல்களை குவித்துக் கொண்டே இருக்கின்றன.


 

mars
                  செவ்வாயின் வடதுருவம் பனிபடர்ந்து இருக்கிறது


 

தொடக்க காலத்தில் செவ்வாய் கோள் தண்ணீரால் நிரம்பி யிருந்தது என்பதற்கான அடையாளங்கள் உறுதியாகி உள்ளன. இப்போதும் அதன் துருவங்களில் பணி உறைந்துகிடக்கிறது. பனிக்கட்டிக்கு அடியில் திரவவடிவில் தண்ணீர் நிரம்பியிருக்கலாம் என்றெல்லாம் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

தண்ணீர் இருந்திருந்தால் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடிய வாய்ப்பும் அதிகம். செவ்வாய் கோள் நமது பூமியைப் போல நிலத்தட்டுகளால் இணைக்கப்பட்டது அல்ல. அதன் மெல்பாதி நிலப்பகுதி இளக்கம் மிகுந்தும் தாழ்வாகவும் இருக்கிறது. கீழ்பாதி மேடாகவும் இறுக்கம் மிகுந்ததாகவும் இருக்கிறது.

நிலநடுக்கோடு நெடுகிலும் மிக ஆழமான மிக நீளமான பள்ளத்தாக்கு இருக்கிறது. கோளின் மேற்பரப்பில் மிகப்பெரிய வாயுடைய எரிமலைகள் நிரம்பியுள்ளன.

இதுவரை செவ்வாய் கோளுக்கு அனுப்பிய பாத்பைண்டர், ஆப்பர்சூனிட்டி போன்ற ரோபோக்கள்  தரையிறங்கி உள்ளன. பீகிள் என்ற ரோபோ என்னாயிற்று என்றே தெரியவில்லை. தரையிறங்கிய ரோபோக்கள்கூட வறண்ட பகுதியில்தான் இறங்கின.

மார்ஸ் எக்ஸ்பிரஸ், மார்ஸ் குளோபல் சர்வேயர் என்ற இரண்டு விண்கலங்கள் தற்போது செவ்வாயை சுற்றி வருகின்றன.

 

mars
                           செவ்வாயில் சோதனை நடத்தும் பீனிக்ஸ்


 

அவை செவ்வாயின் நிலப்பரப்பு, துருவங்களின் தன்மை, தட்பவெப்பநிலை ஆகியவை குறித்து புதிய தகவல்களை அனுப்பி யுள்ளன. எதிர்காலத்தில் மனிதர்களுடன் அனுப்பும் விண்கலங்களை எங்கே இறக்குவது என்பதை முடிவு செய்யும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதன் ஒரு கட்டமாக பீனிக்ஸ் என்ற விண்கலத்தை செவ்வாயின் வடதுருவத்தில் இறக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த விண்கலம் ஆகஸ்ட் 3ம் தேதி கேப் கேனவரல் நிலையத்திலிருந்து செலுத்தப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இது 2008ம் ஆண்டு மே மாதம் செவ்வாயின் வடதுருவத்தில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விண்கலம் நவீன வசதிகளைக் கொண்டது. செவ்வாயின் தரையில் இறங்கி துளையிடும். பனியையும், தண்ணீரையும் ஆராயும். படங்களை எடுத்து அனுப்பும். ரசாயனக் கூறுகளை பிரித்தாய்வு செய்யும். ஹைடிரஜன், ஆக்ஸிஜன் அளவுகளைக் கண்டறியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில் பீனிக்ஸின் பயணம் புதிய திருப்பத்தின் தொடக்கமாக இருக்கும் என கருதப்படுகிறது.

 

 

 

 

Next Story

கண்காணிப்பை தொடங்கியது ‘இன்சாட் 3டிஎஸ்’ செயற்கைக்கோள்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
'Insat 3DS' satellite started monitoring!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO - இஸ்ரோ), வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக ‘இன்சாட் - 3டிஎஸ்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்திருந்தது. இந்த செயற்கைக்கோள் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் கடந்த 17 ஆம் தேதி (17-02-2024) மாலை 5.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான வானிலை செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜி.எஸ்.எல்.வி. எப் -14 ராக்கெட் சுமார் 420 டன் எடை கொண்டதாகும். 2 ஆயிரத்து 274 கிலோ எடையுடன் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வுக் கருவிகளுடன் வடிவமைக்கப்பட்ட இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் மூலம் வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வானிலை ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்ட இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோள் தனது கண்காணிப்பை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 7 ஆம் தேதி இந்த செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில் நிலமேற்பரப்பு, வெப்பநிலை, மூடுபனி தீவிரம் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட தரவுகளை இந்த செயற்கைக்கோள் வழங்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

‘இன்சாட் - 3 டி.எஸ்.’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
'Insat - 3DS' satellite successfully launched

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக ‘இன்சாட் - 3டிஎஸ்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இதனை ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி எப்-14 ராக்கெட் விண்ணில் பாய்வதற்கான கவுண்ட் டவுன் நேற்று (16-02-24) பகல் 2 மணி 05 நிமிடத்தில் தொடங்கியது. மேலும், இந்த ராக்கெட் இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் செலுத்தவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், வானிலை ஆய்வுக்கான அதிநவீன இன்சாட்-3டிஎஸ் (INSAT-3DS) செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி - எப் 14 ராக்கெட் இன்று (17-02-24) மாலை 5:35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான வானிலை செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி எப் -14 ராக்கெட் சுமார் 420 டன் எடை கொண்டதாகும். 

2,274 கிலோ எடையுடன் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வுக் கருவிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் மூலம் வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.