ADVERTISEMENT

தினமும் 3 பக்கம் எழுதினால் மருத்துவ செலவு மிச்சம்!

09:16 PM Sep 13, 2017 | Anonymous (not verified)



மனம்விட்டுப் பேசுகிறவர்களும், மனம்விட்டு சிரிப்பவர்களும் ஆரோக்கியமான வாழ்வுக்கு சொந்தக்காரர்கள் என்று சொல்வார்கள். பேச நினைத்ததை பேச முடியாமல் உள்ளுக்குள் புழுங்கி, தானும் சிரிக்காமல் பிறரையும் சிரிக்கவிடாமல் வாழும் எத்தனையோ பேர் மன அழுத்தத்திற்கு ஆளாகி மருத்துவமனைக்கு செலவழிப்பதை பார்த்திருக்கிறோம்.

வாய்விட்டுச் சிரியுங்கள் நோய்விட்டுப் போகும் என்ற பொன்மொழி முன்னோரின் அனுபவ மொழியாகும். அதுபோல, தனது மனதில் நினைப்பதை பேசமுடியாத பலர் கோவில்களில் தனியாக அமர்ந்து முனுமுனுத்தபடி கண்ணீர் உகுப்பதை பார்த்திருக்கிறோம்.

பிறரிடம் பகிர்ந்துகொள்ள முடியாத பல விஷயங்கள் நமது மூளையை இயல்பாக செயல்பட விடாமல் திணறச்செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்தகைய அந்தரங்கமான விஷயங்களை ஏதேனும் ஒரு வகையில் வெளிப்படுத்துவதால் மன அழுத்தம் குறைந்து இயல்பாக செயல்படமுடியும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

இதற்காக, ஒரு எளிமையான வழியையும் தெரிவித்துள்ளார்கள். அதாவது தினமும் காலையில் எழுந்தவுடன் மூன்று பேப்பர்களில் பேனாவால் எழுதினால், பேனாவின் மை வழியாக உங்கள் வலிகள் அனைத்தும் பேப்பர்களில் வார்த்தைகளாக வடிந்துவிடும் என்கிறார்கள்.



மருத்துவர் ஊசிமூலம் ஏற்றும் மருந்தைக் காட்டிலும் பேனாவின் மை எளிதில் நோயைக் குணமாக்கும். அதிகாலையில் மேற்கொள்ளும் இந்த எளிய பயிற்சி உங்களுக்குள் நம்பிக்கையையும், தெளிவையும், அமைதியையும் நிலவச் செய்யும்.

இன்றைய சூழலில் எல்லோருமே டைப்பிங் பழக்கத்திற்கு சென்றுவிட்டதால், யார் காலையில் எழுந்து எழுதுவார்கள் என்ற சந்தேகம் எழும். எழுதுகிற விஷயங்களை ஏன் டைப் செய்யக்கூடாதா என்று கேட்கலாம். நிச்சயமாக அது பலன் தராது என்கிறார் இந்தக் கட்டுரையை எழுதிய டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆசிரியர் ஜேம்ஸ் டபிள்யு பென்னிபேக்கர்.

காகிதத்தில் பேனா வைத்து எழுதும்போது உங்களை அழுத்தும் விஷயங்கள் சில சமயம் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில்கூட வார்த்தைகளாக கொட்டலாம்.

ஏனென்றால், நம்மை அழுத்தும் விஷயங்கள் அனைத்தும் நமது சிந்தனையில் விளைந்தவைதான். அவற்றை வெளிப்படுத்தினால் எதிர்வரும் விளைவை நினைத்தே நாம் அவற்றை வெளிப்படுத்தாமல் பதுக்கி வைக்கிறோம். பதுக்கி வைக்கப்பட்டவை மூளைக்குள் சுமையாக அழுந்தத் தொடங்குகின்றன.



அந்தச் சுமையைத்தான் பேப்பரில் இறக்கிவைக்கச் சொல்கிறார்கள். ஒருவேளை அது சுகமான சுமையாகக்கூட இருக்கலாம். எதற்கும் எழுதத் தொடங்கும்போது தனிமையை நாடும்படி யோசனை சொல்கிறார்கள். உங்களை வாட்டும் விஷயங்கள் இன்னொருவருக்கு தெரியவந்து அவர்களுக்கு அது சுமையாகிவிடக் கூடாது அல்லவா?

-ஆதனூர் சோழன்

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT