Skip to main content

படிக்காத கிராமத்து மருத்துவச்சியின் சாதனை!

Published on 18/05/2018 | Edited on 21/05/2018
thangama

 

 


தங்கம்மா போன்ற கைமருத்துவம் தெரிந்த கிராமத்து பாட்டிகள் எல்லா குக்கிராமங்களிலும் உண்டு. எதுவும் தெரியாத கர்ப்பிணி பெண்களுக்கான ஆபத்துகால மருத்துவர்கள் இவர்கள். தற்போது சுகபிரசவம் என்பது கனவாகிப்போனது. கடந்த காலத்தில், மருத்துவம் வளராத காலத்தில் இந்த கைமருத்துவ பாட்டிகள் பார்த்ததுயெல்லாம்மே 99 சதவிதம் சுகபிரசவம் தான். இவர்கள் தங்களது வேலைக்கு பீஸ் வாங்கியிருந்தால் கார், பங்களா என செட்டிலாகியிருக்க முடியும். ஆனால் இவர்கள் செய்தது சேவை. அந்த சேவைக்கு கைமாறாக அவர்கள் பெற்றது அன்பாக தரும் உணவையும், எப்போதும் ஊரார் காட்டும் பாசமும் தான்.

வேலூர் மாவட்டம், ஆம்பூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது பைரப்பள்ளி கிராமம். தமிழக – ஆந்திரா எல்லையை ஒட்டிய கிராமம். இந்த கிராமத்தில் 300 வீடுகள் உள்ளன. இப்போதும் பேருந்து வசதியென்பது குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை தான்.

அந்த கிராமத்தில் நுழைந்து தங்கம்மா வீடு எங்கயென எதிர்பட்ட ஒருவரிடம் விசாரித்தபோது, நீங்கயென்ன ஊருக்கு புதுசா, இப்பத்தான் ஊருக்கு ஊர் பி.எச் சென்டர்ங்க ( ஆரம்ப சுகாதார நிலையம் ) வந்தபிறகு எல்லாம் அங்கப்போய் அறுத்து ( சிசேரியன் ) குழந்தையை எடுத்துக்கிட்டு வருதுங்களே. நீங்கயென்ன அந்தம்மாவ தேடி வந்துயிருக்கிங்க என கேள்வி கேட்டவரிடம், நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும், நக்கீரனா போய் பாருங்க என வீட்டை காட்டிவிட்டு சென்றார் அந்த நடுத்தர வயதுக்காரர்.

வீட்டில் வேலை செய்துக்கொண்டுயிருந்த தங்கம்மா பாட்டியிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசியபோது, குடியாத்தம் பக்கத்தலயிருக்கற கொட்டாரமடகு என்கிற கிராமத்தில் வாழ்ந்த இருளர் சாதியில பிறந்தவ நான். என்னை படிக்கவைக்கல. என்னை தருமபுரியில ஒருத்தருக்கு கல்யாணம் செய்துதந்தாங்க, அவர் கொஞ்ச நாள்ளயே என்னை விட்டுட்டு போய்ட்டார். நான் எங்க அம்மா வீட்டுக்கே வந்துட்டன். இங்க வந்து கூலி வேலைக்கு போய்க்கிட்டு இருந்தன்.

 

 


எங்கவூர்ப்பக்கம் அடிக்கடி வேலை விஷயமா வந்த ராமச்சந்திரன் என்னை பார்த்துட்டு விரும்பினார். அவர் நாயுடு சாதிக்காரர் இருந்தும் என்னை கல்யாணம் செய்துக்கிட்டார். அவருக்கு ஏற்கனவே கல்யாணம்மாகியிருந்தது. என்னை கல்யாணம் செய்து அவரோட ஊரான இங்க அழைச்சி வந்து குடிவச்சார். இப்பத்தான் ரோடு வசதி, பஸ் வசதியெல்லாம் 40 வருசத்துக்கு முன்னாடி முழுக்க விவசாய நிலம் தான். மண்ரோடு, இங்கயிருந்து ஆம்பூர் போகனும்ன்னா மாட்டு வண்டியில போகனும், இல்லைன்னா கால் நடையா நடந்து தான் போகனும்.

house

இப்பத்தான் மாசமா இருந்தா அந்த ஊசி, இந்த ஊசி, மாசாமாசம் செக்கப்புண்ணு சொல்றாங்க. நான் புள்ள பெத்துக்கறப்ப அப்படியெல்லாம் கிடையாது. மாசமாகிட்டா நல்லா சாப்பிட சொல்வாங்க, வேலை செய்ய சொல்லுவாங்க. இப்போ மாதிரி நாத்து நட போகாத, கல வெட்ட போகாத, படிக்கட்டு ஏறாத, தண்ணீர் பானை தூக்காதன்னு சொல்லமாட்டாங்க.

நல்லா வேலை செய், அப்பத்தான் அதிகமா வலியில்லாம குழந்தை பெத்துக்க முடியும்ன்னு சொல்லுவாங்க. எனக்கும் அப்படித்தான் சொன்னாங்க. ஒரு புள்ளைய பெத்தன். 36 வருஷத்துக்கு முந்தி இங்க ஊர்லயிருக்கற பூங்கொடி பிரசவ வலியால துடிக்க நான் ஓடிப்போய் உதவி செஞ்சேன். அதுதான் நான் பார்த்த முதல் பிரசவம். இத யார்க்கிட்டயும் போய் கத்துக்கல.

எனக்கு முன்னாடியிருந்த பெரியவங்க மாசமாயிருக்கற காலத்தல என்ன செய்யனும், பிரசவம் எப்போ சரியா நடக்கும், அது எப்படி கண்டுபிடிக்கறது, குழந்தை பெத்ததுக்கப்பறம் தாய்க்கு என்ன சாப்பாடு தர்றது, குழந்தை ஊனத்தோட பொறந்தா அதை எப்படி சரிச்செய்யறது, எந்த குழந்தைக்கு எத்தனை நாளில் முதல் தண்ணீர் ஊத்தறதுங்கறதை வேலை செய்யற இடத்தல சொல்லுவாங்க. அது வழியா தெரிஞ்சிக்கறது தான். அப்படித்தான் நானும் தெரிஞ்சிக்கிட்டன்.

இப்ப பூங்கொடி மருமகளுக்கும், மகளுக்கும் பிரசவம் பார்த்துட்டன். இப்போ எங்கயும் போய் பிரசவம் பாக்கறதில்ல. வலின்னு சொல்லி வந்தா அது சூட்டு வலியா?, பிரசவ வலியான்னு வயித்த பார்த்து கண்டுபிடிச்சி சொல்வன். அடுத்து எப்போ பிரசவம் ஆகும், எப்போ ஆஸ்பத்திரிக்கு போகனும்ன்னு சொல்லி அனுப்புறேன்.

நீ என்ன டாக்டரா பிரசவம் பாக்கறன்னு ஊருக்கு எப்போதவுது வர்ற நர்ஸம்மாங்க திட்டிட்டு போறதால விட்டுட்டன். இருந்தும் குழந்தை பொறந்ததும் கொண்டு வந்து காட்டுவாங்க, ஏதாவது கோளாறு இருந்தா சரிசெய்து அனுப்புவேன், பெத்தவளுக்கு பத்திய சாப்பாடு செய்து தர்றன், 9வது நாள் தண்ணீ ஊத்தறப்ப கூடயிருந்து எல்லாம் செய்யறன். ஊர்க்காரங்க வந்து பாசமா கூப்பிடும்போது போகாம இருக்க முடியல என்றார்.

முதல்ல என் வீட்டுக்காரர் பிரசவத்துக்கு உதவி செய்யறப்ப போகாதம்மா ஒன்னுக்கிடக்க ஒன்னாச்சின்னா உன்ன குத்தம் சொல்லுவாங்கன்னு சொன்னார். கடவுள் செயலா அந்த மாதிரி எதுவும் நடக்கல. என் கைராசிப்பத்தி ஊர்ல அவர் காதுபட நிறையப்பேர் பேசனதால அவரும், இங்கயே பாரும்மா வெளியூர்க்கெல்லாம் போகதாமான்னு சொன்னதால நான் வெளியூர்கள்ள போய் பிரசவம் பாக்கறதில்லை, அவர் இறந்து பல வருஷமாகியும் அவர் சொல்லை காப்பாத்திக்கிட்டு வர்றன் என்றார் நெகிழ்வாக.

vck

தங்கம்மா பாட்டி வசிக்கும் தெருவில் வசிக்கும் லட்சுமி வெத்தலையை கிள்ளி வாயில் போட்டபடி நம்மிடம், தங்கம்மா பிரசவம் பார்த்தது 400க்கும் மேலயிருக்கும். எனக்கும் அவுங்க தான் பிரசவம் பார்த்தாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி என் மகளுக்கு பிரசவம் பார்த்தாங்க. அவுங்க பிரசவம் பார்த்து இத்தனை வருஷசத்தல அசம்பாவிதம் எதுவும் நடந்ததில்லை.

 

 


தாயும் – புள்ளையும் நல்லாதான் இருக்காங்க. அதேமாதிரி குழந்தை முன்னாடியே பிறந்துட்டா தினமும் காலையில, சாயந்திரத்திர வெய்யில்ல வைப்பாங்க. அதைத்தான் ஆஸ்பத்திரிங்கள்ள பெட்டியில வச்சி காசு புடுங்கறாங்க, குழந்தையோட கண்ணு சின்னதா இருந்துச்சின்னா ஒன்னும் பண்ண முடியாதுன்னு டாக்டர்ங்க சொல்றாங்களாம், அதெல்லாம் தங்கம்மா சாதாரணமா சரி செய்துடும்.

குழந்தைக்கு காது, மூக்கு சிறுசு அப்படின்னு ஏதாவது பிரச்சனைன்னா காட்டு தழையை கொண்டே சரி செய்துடுவாங்க. டாக்டர்ங்க நிறைய படிச்சிட்டு வர்றாங்க, இதுக்கெல்லாம் அந்த ஆப்ரேஷன், இந்த ஆப்ரேஷன்னு சொல்லி காசப்புடுங்கறாங்க. தங்கம்மாவுக்கு காசு பணம் வாங்காது, அன்பா நாலு வார்த்தை பேசினா போதும் உசரயும் தரும் அது என உருகினார்.

தங்கம்மாவின் சேவையை அறிந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த மாதம் சேலத்தில் நடத்திய மாநாட்டில் தங்கம்மாவை அழைத்து கவுரவித்தனர். இது ஒவ்வொரு கிராமத்தில் உள்ள தங்கம்மாவுக்கும் கிடைக்க வேண்டிய கவுரவம்.

Next Story

தேர்தல் பணம் பங்கீடு தொடர்பாக பாஜகவினர் மோதல்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Clash between BJP members over distribution of election money

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதி ஆம்பூரில் பாஜகவினரிடையே வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லும் முகவர்கள் மற்றும் இதர செலவுகளுக்காக பணம் கொடுப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே கடந்த சில தினங்களாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை முதல் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்த பாஜகவினர், மாலை நேரத்தில் திடீரென இருதரப்பாக பிரிந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்கு வாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயமடைந்தக் கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீவர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் பாஜகவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.