Skip to main content

“இவர்களுக்கு பிரச்சனை உதயநிதி இல்லை; நூல் இல்லாம வந்துட்டானே என்பதுதான்..” - காந்தராஜ்

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

kl

 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் வெப்பம் அதிகரித்துக் காணப்படுகின்றது. நீண்டகாலமாக திமுகவினரால் எதிர்பார்க்கப்பட்டு வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. உதயநிதி அமைச்சர் ஆனதிலிருந்தே அவரை குறிவைத்துத் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுக மற்றும் பாஜகவின் விமர்சனங்கள் குறித்து மருத்துவர் காந்தராஜ் அவர்களிடம் கேட்டபோது, "தமிழக அரசியலில் உதயநிதி மட்டும்தான் வாரிசாக அரசியலுக்கு வந்துள்ளாரா? இந்திய அரசியலிலோ அல்லது தமிழக அரசியலிலோ வாரிசு என்று யாருமே இதுவரை இருந்தது இல்லையா? புதிதாக இவர் மட்டும்தான் அரசியலுக்கு வந்திருக்கிறாரா என்பதை, அவரை விமர்சனம் செய்பவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும். 

 

அதிமுகவை முதலில் யார் ஆரம்பித்தார்கள், எம்ஜிஆர் தானே. அவருக்குப் பிறகு தமிழக முதல்வராக யார் வந்தார்கள், ஜானகி. அவருக்குப் பிறகு அதிமுகவில் யார் முதல்வராக வந்தார்கள், ஜெயலலிதா. இவர்கள் இருவரும் யார்? அதிமுகவில் பல ஆண்டுக்காலம் உறுப்பினராக இருந்தவர்களா? ஜானகி அதிமுகவின் உறுப்பினராக இத்தனை ஆண்டுக்காலம் இருந்துள்ளார்; அதைப்போல ஜெயலலிதாவும் இத்தனை ஆண்டுக்காலம் அதிமுகவின் உறுப்பினராக இருந்த பிறகே முதல்வர் பதவிக்கு வந்ததாக ஏதாவது ஆதாரம் இருந்தால் கொடுக்கச் சொல்லுங்கள். கட்சிக்கு வந்த மூன்றே வருடத்தில் ஜெயலலிதா நாடாளுமன்றத்திற்குச் செல்கிறார். வீட்டிலிருந்த ஜானகி நாட்டின் முதலமைச்சர் ஆகிறார். அப்போது வராத வாரிசு அரசியல், உதயநிதி வந்தால் வருகிறதா? 

 

இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் வாரிசு அரசியல் உச்சத்திலிருந்து வருகிறது. ஆனால், அதைப்பற்றி அங்கே யாரும் விமர்சனம் செய்யவில்லை. தமிழ்நாட்டில் எந்தக் கட்சியில் வாரிசுகள் பதவியில் இல்லை என்று சொல்லச் சொல்லுங்கள். காங்கிரஸ், பாஜக, ஆந்திரா என இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் வாரிசு அரசியல் இருந்துள்ளது, தற்போதும் இருக்கிறது. அரசியலுக்கு வந்த பிறகு அவரின் திறமைகளின் அடிப்படையில் அவர்களை விமர்சனம் செய்தால் அதனை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், நீங்கள் வருவதே தவறு என்றால், அவர்களின் நோக்கம் தனிப்பட்ட வெறுப்பாக இருக்குமே தவிர அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. இவர்களின் நோக்கம் முழுவதும் உதயநிதி அமைச்சரானதில் இல்லை. நூல் இல்லாத ஒருவன் அரசியல் களத்திற்கு மீண்டும் வந்துவிட்டானே என்ற ஆற்றாமையே அவர்களை இப்படிப் பேச வைக்கிறது" என்றார்.

 

 

Next Story

'நீங்கள் எல்லோரும் கலைஞரின் பேரன்கள் தான்' - தயாநிதி மாறனை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'You are all grandsons of the artist'- Udayanidhi campaign supporting Dayanidhi Maran

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி எழும்பூர் டாணா தெரு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''தயாநிதி மாறனை உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற வாக்கு கேட்பதற்கு இங்கே வந்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது என்னைவிட அதிக ஆர்வத்தோடு, எழுச்சியோடு அவரை வெற்றி பெறச் செய்வதில் நீங்கள் முனைப்போடு இருக்கிறீர்கள் என்பது. நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு. கடந்த 2019 தேர்தலில் தயாநிதிமாறனை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். அதற்கு நான் பலமுறை  நன்றி தெரிவித்திருக்கிறேன். நான் இந்த பகுதிக்கு வருவது இது முதல் தடவையோ, இரண்டாவது தடவையோ அல்ல. இந்த மூன்று வருடத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட முறை குறையாமல் இங்கே வந்திருக்கிறேன்  கொரோனா காலத்திலும் சரி, மழை வெள்ள காலத்திலும் சரி அனைத்து பிரச்சனையின் போதும் இங்கே வந்திருக்கிறேன்.

அந்த உரிமையோடு கேட்கிறேன் குறைந்தது 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தயாநிதிமாறனை வெற்றி பெற வைக்க வேண்டும். எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் டெபாசிட் பெறக்கூடாது. நான் கலைஞர் பேரன் சொன்னதை கண்டிப்பாக செய்வேன். நீங்களும் நிறைவேற்ற வேண்டும். வேட்பாளரும் கலைஞர் பேரன் தான். கலைஞர் பேரனுக்கு கலைஞர் பேரன் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். இங்கு இருக்கும் அத்தனை பேரும் கலைஞரின் பேரன்கள் தான். நீங்கள் அத்தனை பேரும் பெரியாரின் பேரன்கள் தான், நீங்கள் அத்தனை பேரும் அண்ணாவின் பேரன்கள் தான். நாம் அனைவரும் கொள்கை பேரன்கள், லட்சிய பேரன்கள்'' என்றார்.

Next Story

மீன்வளப் பல்கலைக்கழகம்; ஜெயலலிதாவின் பெயரை நிராகரித்த குடியரசுத்தலைவர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
President rejects Jayalalitha name for Fisheries University

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று  சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுடன் ஜெயலலிதா பெயர்மாற்றம் தொடர்பான மசோதவையும் திருப்பி அனுப்பியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைகழகத்திற்கு ஜெயலலிதா பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.