Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

“காரணம் இல்லாமல் கட்சி தாவவில்லை!” -தலைமைகளின் தகிடுதத்தங்கள்!  

indiraprojects-large indiraprojects-mobile
Mike



வேறு கட்சிகளிலிருந்து தங்கள் கட்சிக்குத் தாவிய அரசியல் பிரபலங்கள், பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுவதற்காக தன் மாவட்டத்துக்கு வரும்போது, “அந்தக் கட்சியில் இருக்கிறப்ப அவ்வளவு செல்வாக்கா இருந்தீங்க.. அப்புறம் எதுக்கு எங்க கட்சிக்கு வந்தீங்க?” என்று கேட்பது அந்த அமைச்சரின் வழக்கம்.  ‘தோழமையாகத்தானே கேட்கிறார்? மனச்சுமையை இறக்கி வைப்போம்!’ என்று அந்த அமைச்சரிடம் அவர்களும் மனம்விட்டுப் பேசியிருக்கின்றனர். இருவர் அமரராகிவிட்ட நிலையில், அரசியல் பிரபலங்கள் மூவரின் புலம்பலை அமைச்சரே தன் வாயால் கூற,  அதை நீக்குபோக்காக இங்கே தந்திருக்கிறோம். 
 

பேச்சாளர் கையில் திணிக்கப்பட்ட லட்சங்கள்!
 

மேடைகளில் பொறி பறக்கப் பேசும் அந்தப் பேச்சாளர், தன் மகனுக்கு அரசு வேலை கேட்டு கட்சித் தலைமையைச் சந்தித்தார். தலைமையோ ‘பேசுறதுதானே உன்னோட வேலை? அதை மட்டும் பாருய்யா.’ என்று முகத்தில் அடித்தாற்போல் கூறியது. இத்தனை காலம் உழைத்தற்கு இதுவா பலன்? என்று  வெறுத்துப்போன அந்தப் பேச்சாளர், இன்னொரு கட்சித் தலைமையைச் சந்தித்தார். அப்போது ‘உங்களைப் பல மேடைகளில் பலவிதத்தில் திட்டியிருக்கிறேன். என் மீது  நீங்கள் போட்ட வழக்குகள் இன்றும் நிலுவையில் இருக்கிறது.’ என்று கூற, ‘எதற்காக எங்கள் கட்சியில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகின்றீர்கள்?’ என்று கேட்டிருக்கிறது தலைமை.  ‘தன்மானம்தான் என்னை இங்கே கொண்டுவந்து விட்டிருக்கிறது’ என்று பேச்சாளர் சொல்ல, ‘எங்கள் கட்சியிலும் உங்கள் தன்மானத்துக்கு சோதனை வராது என்பதற்கு உத்தரவாதம் இல்லையே?’ என்று தலைமை சொல்ல, ‘அவமானப்படுத்த மாட்டீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார் அந்தப் பேச்சாளர். 
 

Money



ஆட்டோவில் வந்த அவர் கையில் சில லட்சங்கள் திணிக்கப்பட, அவருக்குக் கையும் காலும் ஓடவில்லை. இந்தப் பணத்தைப் பத்திரமாக வீடு போய்ச் சேர்க்க வேண்டும் என்ற கவலை வாட்டியது. உடனே, தான் தங்கியிருந்த விடுதியிலிருந்து இன்னொரு விடுதிக்கு மாறினார். வாங்கிய பணத்துக்குக் கூடுதல் விசுவாசம் காட்டி, பழைய கட்சிக்கு எதிராகக் கடுமையாக வார்த்தைகளைவிட, ஒருநாள் இரவு, பொதுக்கூட்டத்துக்குக் கிளம்பிய பேச்சாளரை அள்ளிக்கொண்டு போன அவருடைய பழைய கட்சியினர், உயிர்பயத்தை ஏற்படுத்தி,  தலைமையின் வாரிசு ஒருவர் வீட்டுக்கு இழுத்துச் சென்றார்கள். அப்போது, அந்த வாரிசு காலில் விழுந்திருக்கிறார் பேச்சாளர். வாரிசோ, முதியவர் என்றும் பாராமல், மாறி மாறி காலால் மிதித்திருக்கிறது. கட்சியினர் முன்பாக,  அவமானத்தால் கூனிக்குறுகிப் போன பேச்சாளர், மிரட்டலால் மீண்டும் பழைய கட்சியிலேயே சேர்ந்தார். சாகும் வரையிலும் அந்த அவமானம் அவரைத் துரத்தியபடியே இருந்தது. 
 

தலைமையை அவமானப்படுத்த அணி மாறியவர்!
 

எம்.எல்.ஏ. மட்டுமல்ல, அதைக் காட்டிலும் உயர் பொறுப்பிலெல்லாம் அவரை அமரவைத்து அழகு பார்த்தது அந்தக் கட்சி. ஆனாலும், கட்சியை விட்டு வெளியேறும் நிலை அவருக்கு  ஏற்பட்டது. அவர் அந்த அமைச்சரிடம் “கட்சியால் நான் எவ்வளவோ பயன்பெற்றேன்.  கட்சிக்காக ஒத்தை ஆளாக நின்று போராடியும் இருக்கிறேன். காலம் மாறியது.  என்னைத் தொடர்ந்து அவமானப்படுத்தும் வேலையில் இறங்கினார்கள். நான் வேறு கட்சிக்குப் போக மாட்டேன் என்ற தைரியத்தில், டார்ச்சருக்கு மேல் டார்ச்சர் தந்தார்கள்.  என்னை அவமானப்படுத்திய கட்சித் தலைமையை அவமானப்படுத்தவே, கட்சி மாறினேன்.”  என்றாராம். 
 

“இது என் கட்சி; உன் கட்சி இல்ல!” – தலைமையின் கோபம்!


நாவன்மை படைத்த அந்தப் பேச்சாளர் அந்தக் கட்சித் தலைமைக்கு அடுத்த இடத்தில் கோலோச்சியவர். அந்த அமைச்சரிடம் அவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? “அங்கேயிருந்தா உருப்பட மாட்டோம்னு தெரிஞ்சும், ஊர் ஊருக்கு கட்சி மேடையில் முழங்கினேன். என் பேச்சைக் கேட்பதற்காவே கூட்டம் கூடியது. அந்த உரிமையில்தான், தலைமையிடம் தெளிவான ஒரு கருத்தை முன்வைத்தேன். அதற்குத் தலைமை, ‘இது என் கட்சி. உன் கட்சி இல்ல. போறதுன்னா போ.’ என்று பொசுக்கென்று சொல்லிவிட்டது. எங்கு செல்வதென்று தெரியாமல் தவித்த எனக்கு, உங்க கட்சித்தலைமைதான் ஆதரவுக்கரம் நீட்டியது. இப்போது, எனக்கு ஒருகுறையும் இல்லை.” என்றாராம்.  
 

ஏதோ ஒருவிதத்தில் கட்சித் தலைமையின் கோபத்துக்கு ஆளாகியிருப்பார்கள். ஆனாலும்,  கட்சி மாறியவர்களின் அதிருப்தியில் உண்மை வெளிப்பட்டிருக்கிறது. 

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...