Skip to main content

2.0 'பக்ஷிராஜன்' ஃபோனை பறக்கவிட்டார், நிஜ 'பேர்ட் மேன்' சலீம் அலி இப்போதிருந்தால் என்ன செய்திருப்பார்?   

Published on 30/11/2018 | Edited on 30/11/2018

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் 2.0 படத்தில் மனிதர்களுக்கு வில்லனாகவும் பறவைகளின் காதலனாகவும் வரும் 'பக்‌ஷிராஜன்' எனும் அக்‌ஷய் குமாரின் கதாப்பாத்திரம், வில்லன் என்பதைத் தாண்டி அவர் மேல் அன்பை வரவைக்கிறது. ரீலில் வரும் கதாப்பாத்திரமே இப்படி இருந்தால் ரியல் கதாப்பாத்திரம் எப்படி இருக்கும்?

 

akshay salim aliபக்‌ஷிராஜன் கதாப்பாத்திரம் பறவையியல் நிபுணர் சலீம் அலியை முன்மாதிரியாகக்  கொண்டுதான் வடிமைக்கப்பட்டுள்ளது. சலீம் அலி 92 வருடம் வாழ்ந்து இறந்தவர். இவரின் 92 வருட வாழ்வில் ஏறக்குறைய 65 ஆண்டுகாலத்தை  பறவைகளுக்காக அர்ப்பணித்தவர்.

சலீம் அலி 12 நவம்பர் மாதம் 1896-ம் ஆண்டு மும்பை, கேத்வாடியில் பிறந்தார். இவரின் இளம் வயதிலேயே இவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அதன் பின் சலீம் அலி அவரின் மாமா வீட்டில் வளர்ந்தார். இவர் பறவைகளின் மீது காதல் கொண்டதன் காரணமாக  மூன்று விதமான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் மையப்புள்ளி ஒன்றுதான், இவரின் தோட்டத்தில் சிட்டுக்குருவி ஒன்றை  இறக்கும் நிலையில் கண்டுள்ளார். அதன் வலியை நேரில் பார்த்தது அவருக்குப் பறவையின் மீது காதல் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

இறந்த சிட்டுக்குருவியின் கழுத்துப் பகுதியில் ஏதோ மஞ்சள் நிறத்தில் இருந்திருக்கிறது. அது என்ன என்று தெரிந்துகொள்வதில் ஆரம்பமாகிறது அவரின் பறவைகள் மீதான தேடலும் ஆய்வும். அந்தப் பறவையின் கழுத்தில் இருந்தது என்னவென்று தெரிந்துகொள்வதற்காக தன் சித்தப்பாவின் மூலம்  சலீம் அலி, மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தின் கௌரவச் செயலராக இருந்த டபிள்யு. எஸ். மில்லர்ட் என்பவரை அணுகினார். அவரின் மூலமாக பறவைகளை எவ்வாறு அறிந்துகொள்வது, எப்படி பாதுகாப்பது போன்றவற்றை அறிந்துகொண்டார்.

 

salim aliஒரு கட்டத்தில் சலீம் அலி அவரின் அண்ணனுக்கு உதவுவதற்காக பர்மா சென்றார். அதன் பின் 1920-ல் மீண்டும் மும்பை திரும்பிய சலீம் அலிக்கு விலங்கியல் படிக்க வாய்ப்பு கிடைத்து அதனை அவர் சிறப்பாக முடித்தார். அதன் மூலம் சலீம் அலிக்கு மும்பை தேசிய வரலாற்றுக் கழக அருங்காட்சியகத்தில் வழிகாட்டி (கைடு) வேலை கிடைத்தது. பறவைகளின் காதலரான சலீம் அலிக்கு அந்த வேலை இன்னும் உதவிகரமாகவும், நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் உதவுவதாகவும் இருந்தது. இன்னும் பறவையியலில் அறிவை வளர்த்துக்கொள்ள ஜெர்மனிக்குப் பயணித்து அங்கு இர்வின் ஸ்ட்ராஸ்மேன் என்பவரிடம் பயிற்சி பெற்று இந்தியா திரும்பினார் சலீம் அலி. அவரின் தினசரி வாழ்க்கைக்கே போதிய வருமானம் இல்லாமல் சில நேரங்களில் இருந்தாலும் அவருக்குக் கிடைத்த விருது, பரிசுப் பணத்தை இயற்கையைக் காப்பதற்கு அளித்துள்ளார்.

இவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார் அதில் மிக முக்கியமானது ’தி புக் ஆப் இந்தியன் பேர்ட்ஸ்’ மற்றும் தனக்கு பறவைகளின் மீது காதல் ஏற்பட காரணமாக இருந்த சம்பவத்திலிருந்து தொடங்கி தன் சுயசரிதையாக எழுதிய ‘ஃபால் ஆப் ஸ்பேரோ’ எனும் புத்தகமும்தான். இவரை  இந்திய அரசு பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷன் விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. இந்தியாவில் ஆர்ணித்தாலஜி (ornithology) எனும் பறவைகள் குறித்த படிப்பும் ஆய்வும் இவரால்தான் பிரபலமானது. நிஜ 'பேர்ட் மேன்' சலீம் அலி, இப்போது இருந்திருந்தால் இந்த அறிவியல் வளர்ச்சியிலும் ரியல் எஸ்டேட் வெறியிலும் பறவை சரணாலயங்கள் அழிவதைக் கண்டு கண்டிப்பாக விஸ்வரூபமெடுத்திருப்பார்.      

 

 

Next Story

இந்தியாவிற்கு பதில் ‘பாரதம்’ - ஒரு அடி மேலே பாய்ந்த அக்ஷய் குமார்

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

india bharat issue akshay kumar changed his movie title

 

பாலிவுட்டில் அக்ஷய் குமார் தற்போது சுரேஷ் தேசாய் இயக்கத்தில் பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டு வருகிறது. 1989 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் ராணிகஞ்ச் நிலக்கரி வயல் இடிந்து விழுந்ததில் 64 சுரங்கத் தொழிலாளர்கள் நிலக்கரிச் சுரங்கங்களில் சிக்கிக் கொண்டனர். அவர்களை சுரங்கப் பொறியாளர் ஜஸ்வந்த் சிங் தனது உயிரைப் பணயம் வைத்து சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்றியிருந்தார். இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. 

 

இப்படத்திற்கு முதலில் 'காப்ஸ்யூல் கில்' (Capsule Gill) என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. பின்பு 'தி கிரேட் இந்தியன் ரெஸ்க்யூ' (The Great Indian Rescue) என மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் தலைப்பு மாற்றப்பட்டள்ளது. 'மிஷன் ராணிகஞ்ச்; தி கிரேட் பாரத் ரெஸ்க்யூ' என வைக்கப்பட்டுள்ளது. இதனை அக்ஷய் குமார் அவரது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்து படத்தின் டீசர் நாளை (07.09.2023) வெளியாகும் என தெரிவித்துள்ளார். மேலும் அக்டோபர் 6 அன்று திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என பகிர்ந்துள்ளார். 

 

கடந்த சில நாட்களாக, பாஜக அரசு வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும் இதன் முன்னோட்டமாக ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையின் ராஷ்ட்ரபதி சார்பில் இரவு விருந்துக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி (President Of India) என்பதற்குப் பதிலாக பாரதத்தின் ஜனாதிபதி (President Of Bharat) என இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து எக்ஸ் தளப் பக்கத்தில் இந்தியா என்ற சொல்லிற்குப் பதில் பாரதம் என்று அசாம் முதல்வர், தமிழக ஆளுநர் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

 

இந்த விவகாரம் தொடர்பாக  மத்திய அமைச்சர் அனுராக் “இந்த வதந்திகளை நம்ப வேண்டாம். பாரத் என்ற பெயர் மீது எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் எதிர்ப்பு மனநிலை தற்போது வெளிப்பட்டுள்ளது.இதற்கு முன்பு பாரத் சர்க்கார் என்று அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே" என முற்றுப்புள்ளி வைத்தார். இந்த சூழலில் சமூக வலைத்தளங்களில் திரை பிரபலங்கள் அமிதாப்பச்சன், கங்கனா ரணாவத் பாரதம் என்பதற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் அவர்களை விட ஒரு படி மேலே போய் அக்ஷய் குமார் தனது படத்தின் தலைப்பில் இந்தியா என்ற சொல்லிற்கு பதில் பாரதம் என மாற்றியிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் திரைப்படங்கள் மற்றும் பிரமுகர்கள் குறித்து பாஜக தலைவர்கள் தேவையற்ற கருத்துகளை கூற வேண்டாம் என பிரதமர் மோடி அவரது கட்சி நிர்வாகிகளை எச்சரித்திருந்ததாக கூறப்பட்டது. அவரது கருத்தை அக்ஷய் குமார் ஆதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


 

Next Story

"யாரும் நினைக்காத அளவுக்கு தண்டனை கொடுக்கணும்" - மணிப்பூர் சம்பவம் குறித்து அக்ஷய் குமார்

Published on 20/07/2023 | Edited on 20/07/2023

 

akshay kumar about manipur issue

 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

 

அதனை எதிர்த்து பழங்குடியினப் பட்டியலில் இருக்கும் சமூகத்தினர் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரில் பாதயாத்திரை மேற்கொண்ட போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்து கலவரமாக மாறியது. இதில் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த கலவரத்தால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

 

இதனிடையே கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளை களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் கொலை கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

இந்த சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக, "மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இதுபோன்ற கொடூரமான செயலை இனி யாரும் செய்ய நினைக்காத அளவுக்கு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என நம்புகிறேன்" என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

 

இதே போல் நடிகரும் நடிகை ஜெனிலியாவின் கணவருமான ரிதேஷ், "பெண்ணின் கண்ணியம் மீதான தாக்குதல் மனித இனத்தின் மீதான தாக்குதல், "பெண்ணின் கண்ணியம் மீதான தாக்குதல் மனித இனத்தின் மீதான தாக்குதல்" என குறிப்பிட்டு குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.