ADVERTISEMENT

நீட் தேர்வை ஆதரித்து புத்தகம் போட்டவர்கள் அதனை எதிர்த்து பிட் நோட்டீஸாவது கொடுத்தார்களா..? - ரவிசங்கர் அய்யாகண்ணு கேள்வி!

11:30 AM Sep 25, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்த ஒரு டேக் "இந்தி தெரியாது போடா" என்ற வாக்கியம். மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக இளைஞர்களால் இந்த கருத்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது ஒருபுறம் என்றால், அதையே டீ சர்ட்டில் ப்ரிண்ட் செய்து பிரபலங்கள் அணிந்து வந்தது அந்த வாக்கியத்துக்கு மேலும் வலுசேர்த்தது.

ADVERTISEMENT

இதுஒருபுறம் இந்திய அளவில் விவாதம் ஆன நிலையில் நீட் தொடர்பான அழுத்தத்தில் தமிழக மாணவர்கள் மூவர் கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டனர். இது தமிழகத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தன. இதுஒருபுறம் அனலாக எரிந்துகொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா அனல் கக்கும் வார்த்தைகளை கொண்ட இரண்டு பக்க அறிக்கையை வெளியிட்டார். அரசியல் கட்சிகளையும் தாண்டி நடிகர் சூர்யாவின் அறிக்கை இந்திய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனால் அதிருப்தி அடைந்த பாஜக அவரை கண்டித்தது. முக்கிய தலைவர்கள் எல்லாம் சூர்யா சினிமாவில் வசனம் பேசுவதைபோல் பேசக்கூடாது என்று கடுமையான வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தி பேசினார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை திராவிட இயக்க சிந்தனையாளர் ரவிசங்கர் அய்யாகண்ணு அவர்களிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

நீட் தேர்வு தொடர்பான அழுத்தம் காரணமாக சில தினங்களுக்கு முன்பு மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். இதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு இருந்தும், அதனை தவறவிட்டுவிட்டார்கள் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றன. ஜல்லிக்கட்டு பிரச்சனையில் சட்டம் இயற்றியதை போல் நீட் தேர்வுக்கும் சட்டம் இயற்றி அதனை தடுக்க வேண்டும் என்று பலர் தற்போதும் வலியுறுத்துகிறார்கள். ஆனால் ஜல்லிக்கட்டு தமிழகத்தில் மட்டும் நடைபெறுகின்ற ஒன்று, நீட் இந்தியா முழுவதும் நடைபெறுகின்ற தேர்வு என்று ஆளும்கட்சியை சேர்ந்த அமைச்சர் பெருமக்கள் அதற்கு விளக்கம் கூறுகிறார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

ஆட்சியாளர் புதிதாக சட்டம் இயற்ற வேண்டிய அவசியமே இல்லை. தமிழ்நாட்டில் ஏற்கனவே நுழைவுத்தேர்வு ரத்து சட்டம் இருக்கின்றது. 2006ஆம் ஆண்டே சட்டமன்றத்தில் அத்தகைய சட்டம் இயற்றி குடியரசுத்தலைவர் ஒப்புதல் வாங்கி வைத்துள்ளோம். அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று பார்த்தார்கள். ஆனால் தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்று கூறினார்கள். முன்னாள் நீதிபதிகளே இந்த சட்டத்தை காட்டி நீதிமன்றத்தில் வாதிட்டாலே நீட் தேர்வுக்கு விலக்கு வாங்க முடியும் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்கள். எனவே அரசாங்கம் கூறுவதில் எள் முனையளவு கூட உண்மையல்ல.

நீட் தேர்வை நீக்க சீக்ரெட் சொல்லுங்கள் என்று அமைச்சர் கேட்கிறாரே, அவருக்கு சொல்ல கடைமைப்பட்டுள்ளோம், இதுவும் ஒரு சீக்ரெட் தான். எனவே இவர்கள் புதிய சட்டம் எல்லாம் இயற்ற வேவையில்லை. ஜல்லிக்கட்டு நிகழ்வும் இதுவும் ஒன்றா என்று கேட்கிறார்கள். நிச்சயமாக ஒன்றுதான் என்று சொல்ல வேண்டும், ஏனென்றால், தமிழகத்திற்கு வாங்கப்பட்ட விலக்கை காரணம் காட்டி அண்டை மாநிலங்களும் விலக்கு பெற்றன. எனவே இந்த வாதமே அடிப்பட்டு போகிவிடுகிறது. இந்தியா முழுமைக்கும் ஆங்கிலம், இந்தி அலுவல்மொழி என்று கூறுகிறார்கள், தமிழநாட்டுக்கு மட்டும் எப்படி விலக்கு வந்தது? எனவே இந்த விவகாரம் எல்லாம் மொக்கத்தனமான வாதமாகவே நான் பார்க்கிறேன்.

நீட் தேர்வு தொடர்பாக திமுக மாணவர்களை திசை திருப்புகின்றது, அவர்களை தேர்வுக்கு தயார் செய்ய முயற்சிக்காமல் குழப்புவதிலேயே குறியாக இருக்கிறது என்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் திமுக மீது வைக்கப்படுகின்றதே?

நீட் வந்துவிட்டு விட்டது, எனவே அதற்கு தயாராகிக்கொள்ளுங்கள் என்று சொல்வதெல்லாம் ஒரு கையாளாகாதத்தனம். கிராமத்தில் பாலியல் வன்கொடுமை நடந்தால் பாதிக்கப்பட்டவரிடம் பஞ்சாயத்து வைத்து சமாதானம் பேசுவதை போல் இருக்கிறது. இதை எல்லாம் ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சரியான தீர்வை முன்வைத்து போராடுபவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே விரைவில் அதற்கான வழிபிறந்து நீட் தேர்வு முற்றிலும் அழிக்கப்பட்டு விடும் என்று அனைவரும் நம்புகிறோம். மாணவர்களை அவர்கள் வேண்டுமானால் தயார்படுத்தட்டும், அதனை எதிர்க்க வேண்டிய கடமை தார்மீக ரீதியாக எதிர்க்கட்சிகளுக்கு உண்டு.

நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா கொடுத்த அறிக்கை தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இதை பற்றிய தங்களின் பார்வை என்ன?

நீட் தேர்வு தொடர்பாக அவர் தற்போது வரை தெளிவாக விளக்கவில்லை. நீட் தேர்வை ஆதரித்து புத்தகம் போட்ட அவர்கள், அதனை எதிர்த்து பிட் நோட்டீஸாவது கொடுத்தார்களா என்றால் அப்படி எதுவும் தெரியவில்லை. கடந்த வாரம் நீட் தேர்வு தொடர்பாக ஏற்பட்ட அதிர்வலைகள் மக்கள் ஆதரவாக மாறி திமுக பக்கம் சென்றுவிடக்கூடாது என்பதற்காக கூட இந்த மாதிரியான சம்பவங்கள் அரசால் உருவாக்கப்படும். ஏனென்றால் சூரியா தனி ஆள் இல்லை. நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும் என்று சொல்லப்பட்ட சில நிமிடங்களில், ஆறு நீதிபதிகள் அவர் பேசியதில் தவறில்லை என்று நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதுகிறார்கள். எனவே அவரை தனிமனிதராக பார்க்க வேண்டிய அவசியமில்லை. 2017ம் ஆண்டு அனிதா இறந்தபோது இவர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லையே, பெரும்பான்மையானவர்கள் ஓவியாவுக்கு ஆதரவு கொடுத்த நிகழ்வைத்தானே நாம் பார்த்தோம். நிலைபாடுகள் மாறலாம், நாட்கள் ஆக ஆக அறிவு வளரலாம், தெளிவு பிறக்கலாம், ஆனால் தீர்க்கமாக முடிவு எடுத்துவிட்டு அவர் பேச வேண்டும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT