Advertisment

"அய்யய்யோ... ஆளை விடுப்பா" - செல்வராகவனிடம் கெஞ்சினேன்! ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #8  

rameshkanna camera

இன்று தமிழ் சினிமாவில் உயரத்தில் இருக்கும் பலரை ஆரம்ப காலத்தில் பார்த்த யாரும் அவர்கள் இப்படி வருவார்கள் என்று எண்ணியிருக்கமாட்டார்கள். 'ஆசை' படத்தில் ஆட்டோ ஓட்டிய, 'கிழக்குச் சீமையிலே' படத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நின்ற எஸ்.ஜே.சூர்யா 'வாலி', 'குஷி' இயக்குவார் என்று யாருக்கும் அப்போது தெரியவில்லை. அஜித்திற்கு தெரிந்திருந்தது, அதுவும் அவரை நன்கு கவனித்தபின்.

Advertisment

ஏன், பாக்யராஜ்...? முதலில் ஒரு ஸீன், பிறகு ஒரு கதாப்பாத்திரம், பிறகு ஹீரோ, பின்னர் வரிசையாக வெள்ளிவிழா படங்கள்... யாருக்குத் தெரியும், அவர் இப்படி வருவாரென்று? பாரதிராஜா சாரே எதிர்பார்த்திருக்கமாட்டார். என்னை எடுத்துக்கங்க, 'நேரா பாரதிராஜா அல்லது பாலச்சந்தர்கிட்ட அசிஸ்டன்ட்டா சேர்றோம், படம் இயக்குறோம், அப்படியே ஹீரோ ஆகுறோம்'னு நினைச்சுகிட்டுதான் வந்தேன். எத்தனை வருஷம் ஆச்சு, எங்கெங்கோ சுத்தியாச்சு ஒரு படம் எடுப்பதற்குள். விக்ரம், விஜய் சேதுபதி எல்லாம் சிறந்த எடுத்துக்காட்டுகள்... யாருக்குத் தெரியும் அவுங்க இவ்வளவு பெருசா வருவாங்க ஒரு நாள் என்று. இப்படி எதையும் கணிக்க முடியாதது சினிமா வாழ்க்கை. ஆனால், உள்ளுக்குள் ஒரு நெருப்பு, விடாம, எத்தனை கஷ்டத்திலும், அவமானத்திலும், நிராகரிப்பிலும், காத்திருப்பிலும், பசியிலும், வலியிலும் அணையாம எரிந்தால்... நடக்கும். நமக்குள் நெருப்பு இருக்கணும். சில பேருக்கு சீக்கிரம் நடக்கும், சிலருக்கு லேட்டா நடக்கும், ஆனால் உள்ளே அந்த நெருப்பு இருந்தால்தான் நடக்கும்.

Advertisment

அப்படி நெருப்புடன் வந்து சினிமா உலகில் ஒளிர்பவர்கள் ரெண்டு பேரைத்தான் இன்னைக்கு உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போறேன். உங்களுக்கு அறிமுகமானவங்கதான், நல்லா தெரிஞ்சவங்கதான். ஆனா, எனக்குத் தெரிஞ்ச அவங்களை, அந்தப் பக்கத்தைஉங்களுக்குத் தெரியாதல்லவா? அதைத்தான் அறிமுகப்படுத்துறேன். ஃப்ரண்ட்ஸ் படம் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தப்போ ஒரு நாள்... என்னைப் பார்க்க புது டைரக்டர் ஒரு பையன் வந்திருந்தார். கஸ்தூரி ராஜா பையன் என தெரிந்தது. "சொல்லுப்பா..." என்று அவருடன் பேச அமர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக நல்ல கேரக்டர்கள் செய்துகொண்டிருந்த நேரம். கதாபாத்திரங்கள் குறித்து எனக்கே ஒரு எதிர்பார்ப்பு மனதில் உருவாகியிருந்தது. கொஞ்சமாவது கவனிக்கப்படும் பாத்திரம், முக்கியமான பாத்திரங்களாக மட்டும்தான் அப்போ நடிச்சுக்கிட்டுருந்தேன். அந்த மைண்ட் செட்டோட உட்கார்ந்து பேச ஆரம்பித்தேன்.

கதை சொல்லும் முன், நேரே என் கேரக்டரை சொன்னார். நான் ஒரு நிமிஷம் ஷாக் ஆயிட்டேன். "என்னது ஸ்கூல் வாசல்ல செக்ஸ் புக் விக்கணுமா?" என்றேன். "ஆமா சார், ஆனா முக்கியமான ரோல் சார். ஆரம்பம்தான் இப்படி, பின்னாடி நல்லா மாறிடும் சார் கேரக்டர்" என்றார். "நானே இப்போதான் நல்ல நல்ல கேரக்டரா நடிச்சுக்கிட்டு இருக்கேன். இப்போ போய் இப்படி ஒன்னு சொல்றியே... அய்யயோ... ஆளை விடுப்பா" என்று கொஞ்சம் இறங்கி கெஞ்சியேவிட்டேன். செல்வராகவன் விடவில்லை. 'இன்னும் டெவலப் பண்றேன் சார், முழு கதை கேளுங்க' என்று அவரும் கெஞ்ச, பின்னர் "சரிப்பா... பண்றேன். ஆனா, சொன்னது குறையாம படம் எடுக்கணும்" என்று அந்தப் படத்தில் இறங்கத் துணிந்தேன்.

முதல் நாள் ஷூட்டிங்... ஸ்கூல் வாசலில் உட்கார்ந்து புத்தகங்கள் விக்கும் காட்சி. 'அந்த' மாதிரி புத்தகங்கள்தான் மெயின். "படம் பாத்துட்டு தந்தர்றேன்"னு ஒரு பையன் புக்கை எடுப்பான். "படத்துக்குதான்டா காசே, படம் இல்லாட்டி எவன் வாங்குவான், குட்றா" என அவனை அதட்டி புத்தகத்தைப் பிடுங்குவேன். இப்படி போனது அந்தக் காட்சி. கூட நடிச்சதெல்லாம் சின்னச் சின்ன பசங்க. எனக்கு சுத்தமா நம்பிக்கையே வரல. குழப்பமாவே இருந்தேன். 'இது நல்ல படம்தானா? தேவையில்லாம வந்து மாட்டிகிட்டோமா'னு யோசிச்சுகிட்டே ப்ரேக்ல உட்கார்ந்துருக்கேன். எதிர்ல ஒல்லியா, வெட வெடன்னு ஒரு பையன் வந்து உட்கார்ந்தான். "சார்... எப்படி சார் இப்படியெல்லாம் நடிக்கிறீங்க?" என்று கேட்ட அந்தப் பையன் தனுஷ். "டேய்... இதெல்லாம் பெரிய நடிப்பா? அடப்போப்பா, நானே என்ன குழப்பத்துல இருக்கேன்னு தெரியாம நீ வேற" என்று சலிப்போடு பதில் சொன்னேன்.

thulluvadho ilamai team

கஸ்தூரிராஜாவின் இன்னொரு மகனான இவரும் படத்தில் நடிக்கிறார் என்பது அப்புறம் தெரிந்தது. ஏதோ 'அந்த ஒரு படத்துக்கு ஏற்ற சின்ன பசங்களையா கூப்பிட்டுருக்கார். அதுல தனுஷும் ஒருத்தர்' என்னும் அளவிலேயே அப்போது தனுஷைப் பற்றி நான் நினைத்தேன். செல்வராகவனுக்கு தனுஷை வைத்து பெரிய திட்டங்கள் இருந்தது எனக்குத் தெரியாது. ஆனால், அந்தப் படத்தில், முன்பு என்னிடம் சொன்னது போலவே என் கேரக்டரை நல்லா டெவலப் பண்ணியிருந்தார் செல்வராகவன். ஊட்டியில் இரவு இரண்டு மணிக்கெல்லாம் ஷூட்டிங் நடக்கும், கடுமையா உழைச்சது அந்த டீம். இறுதிக் காட்சியில் சென்டிமென்ட்டா வருவது போல வைத்து என் கேரக்டரை நல்லா உருவாக்கியிருந்தார். எனக்கு அதெல்லாம் பார்த்துதான் நிம்மதியே வந்துச்சு.

thulluvadho ilamai team1

படம் வெளிவந்தது... 'இயக்கம் - கஸ்தூரிராஜா' என்ற டைட்டிலுடன். முதலில் போஸ்டர்கள், விளம்பரங்களையெல்லாம் பார்த்து வேற மாதிரி நினைச்சு ரசிகர்கள் வந்தாலும், படத்தைப் பார்த்த பின் அவர்கள் எண்ணம் மாறியது. 'மணி' என்ற அந்த கேரக்டரையும் அதில் என் நடிப்பையும்பலரும் பாராட்டினார்கள். பாடல்களும் சூப்பர் ஹிட், படமும் சூப்பர் ஹிட். உடனே 'காதல் கொண்டேன்' ஆரம்பிச்சு, படமும் வெளிவந்து, தமிழ்நாடே அந்த ரெண்டு பேரையும் திரும்பிப் பார்த்தது. சினிமா வட்டத்துல எங்க பார்த்தாலும் அவுங்களைப் பற்றியும், 'காதல் கொண்டேன்' படம் பற்றியும்தான் ஒரே பேச்சு. தனுஷ் நடிப்பில் கலக்கிட்டார். தனுஷைப் பார்த்தபோது சொன்னேன், "தனுஷு... நீ என்கிட்ட கேட்டீல, எப்படி சார் நடிக்கிறீங்கன்னு, நான் நடிச்சதெல்லாம் நடிப்பில்லை. எதுவுமே தெரியாத மாதிரி இருந்து இப்படி நடிச்சு இருக்கீல நீ, இதுதான்யா நடிப்பு" என்று. சிரித்தார், அடக்கத்தோடு.

thulluvadho ilamai song

அதன் பின் தனுஷுக்கு நானே ஒரு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணினேன். 'ஓடிப்போலாமா'னு டைட்டில். கதை தனுஷுக்கு ரொம்பப் பிடிச்சு ஓகே பண்ணிட்டார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், பிரமிட் நடராஜன் தயாரிப்பதாக முடிவு பண்ணி வேலைகளெல்லாம் தொடங்கின. நம்ம பழைய ராசி சும்மா இருக்குமா? என்னதான் வெற்றிகளைப் பார்த்தாலும் பழைய எஃபக்ட்ல இந்தப் படமும் நின்றுவிட்டது. பிரமிட் நடராஜனுக்கு திடீரென சில பிரச்சனைகள். அப்படியே கைவிடப்பட்டது 'ஓடிப்போலாமா' படம். அதன் பின்னர் தனுஷ் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவே இல்லை. அந்தப் படத்தையும் நாங்க வேற யாரையும் வச்சு எடுக்கல. இப்பவும்கூட தனுஷுக்கு ஏற்ற கதைதான் அது. அந்தக் கதை, தனுஷுக்காகக் காத்திருக்கு. சரியென்று சொன்னால் பண்ணிடலாம்.

dhanush selva

இன்றைக்கு தனுஷ் இருக்கும் உயரம் மிகப்பெரியது. அன்று, ஒல்லியா, சாதாரணமா, யாருமே கவனிக்காத ஒரு பையனா உள்ள வந்த தனுஷ் இன்றும் கிட்டத்தட்ட அதே உடம்போடுதான் இருக்கார். ஆனா, உலகையே தன்னை கவனிக்க வைக்கிறார். பாடுவது, எழுதுவது, இயக்கம் என எல்லாவற்றிலும் வெற்றி. செல்வராகவனும் அப்படித்தான். 'துள்ளுவதோ இளமை' எடுத்தவர் '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்' எல்லாம் எடுப்பாரென்று பலர் நினைத்திருக்கமாட்டார்கள்.

இந்த ரெண்டு பேருக்குள்ளயுமே அந்த நெருப்பு இருந்துருக்கு. அது இன்னும் அணையாம இருக்கு. பெரிய வெளிச்சமா அவ்வப்போது ஒளிருது. எனக்கு ஒரே சந்தோஷம் என்னன்னா, அவங்களோட முதல் படத்தில் நான் இருந்தேன் என்பதுதான்.

முந்தைய பகுதி:

சிவாஜி மரணத்தில் சிரித்த கதை... ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #7

அடுத்த பகுதி:

"என்னங்க... நான் லவ் பண்ண பொண்ணையே ராஜகுமாரனும் லவ் பண்ணிருக்காரு" புலம்பிய விக்ரம்! - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #9

surya selvaragavan DHANUSH thiraiyidadhaninaivugal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe