Advertisment

தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வமற்ற தலைவர் ஆளுநர் ரவி - அரசியல் விமர்சகர் ராம சுப்ரமணியன்

 Ramasubramanian Interview

செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியில் இருந்து விலக்குவதாகவும் பின்பு அதற்கு பின்வாங்குவதாகவும் ஆளுநர் கூறிய அறிவிப்பு தொடர்பாக அரசியல் விமர்சகர் ராமசுப்ரமணியனை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு.

Advertisment

செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி குறித்து ஆளுநர் கடிதம் எழுதினார் பின்பு பின்வாங்கினார். இதை மத்திய அரசின் ஒப்புதலோடு தான் செய்கிறாரா? அல்லது தனித்து செயல்படுகிறாரா?

Advertisment

தமிழக ஆளுநர் பாஜகவின் ஏஜண்டாக செயல்பட்டு வருகிறார். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் அண்ணாமலை பாஜகவின் அதிகாரப்பூர்வமான தலைவர். ஆனால், தமிழக ஆளுநர் அதிகாரப்பூர்வம்அல்லாத தலைவராகத்தான் இருக்கிறார். ஏனென்றால், அவர் எடுக்கும் அரசியல் முடிவுகள் அனைத்துமே தமிழக அரசுக்கு ஏதாவது பிரச்சனை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறது. தமிழகத்தை சார்ந்த ஏதாவது அதிகாரிகளை சந்திக்க நேரம் இல்லாத ஆளுநர் அண்ணாமலை போன்றோரைமட்டும் சந்திக்கிறார். இதன் மூலம் ஆளுநர் இருக்கும் ராஜ் பவன் பாஜகவின் இன்னொரு கமலாலயமாகத்தான் இருக்கிறது.

மேலும் செந்தில் பாலாஜி விசயத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யட்டும் என்று விடுவதுதான் நல்லது. 31 மே அன்று செந்தில் பாலாஜி மீது வழக்கு இருப்பதால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முதல்வருக்கு ஆளுநர் கடிதம் எழுதி அனுப்புகிறார்.அதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் குற்றம் நிரூபிக்கப்படாததால் அவரை அமைச்சர் பதவியில் இருந்துநீக்க வேண்டும் என்பது எந்த அவசியமும் இல்லை என்று முதல்வர் ஆளுநருக்கு பதில் கடிதம் எழுதுகிறார். இந்த கடிதங்களை அரசு சார்பாக பொது வெளியில் வெளியிட்டிருந்தால் இன்றைக்கு ஆளுநருக்கு எதிராக பல கருத்துகள் வந்திருக்கும். ஆனால் அதை முதல்வர் செய்யவில்லை. இந்த நிலையில், 4 நாள்களுக்கு முன் ஆளுநர் டெல்லி செல்கிறார். அங்கு செந்தில் பாலாஜி வழக்கு மற்றும் அமைச்சர் பதவி தொடர்பாக பல விசயங்கள் பேசி இருப்பார். அந்த பேச்சுவார்த்தையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி குறித்து பேசினால் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்படட்டும் என்று கூறியிருப்பார்கள் என்று நம்புகின்றேன்.

அமைச்சர் பதவியில் இருந்து ஆளுநரால் விலக்க முடியாது என்று டெல்லியில் இருப்பவர்களுக்கு தெரியும்தானே?

செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்க முடியாது என்று ஆளுநரே சொன்னபோது, அது சரியாகத்தான் இருக்க முடியும் என்ற எண்ணத்தில் பொதுமக்கள் இருப்பார்கள். மேலும் இது போன்ற செயலை செய்து திமுகவிற்கு நெருக்கடியை கொடுத்தால் அது பாஜகவுக்கு ஆதரவாக மக்கள் செயல்படுவார்கள் என்றுகணக்கு போட்டிருப்பார்கள். அதனால், ஆளுநர் இதை தன்னிச்சையாக செய்திருக்கமாட்டார். ஆனால், இதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக பல விசயங்களை எடுத்து வைக்கிறார் முதல்வர்.

மத்திய அரசின் கீழ் இருக்கும் பல பேர் மீது கடுமையான குற்றம் சாட்டப்பட்டு இன்னமும் பதவியில் இருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார் முதல்வர். மேலும், அதில் குஜராத் மாநிலத்தில் அமைச்சராக இருந்தபோது அமித்ஷா மீது குற்றம் சாட்டப்பட்டு கைது ஆன பிறகும் அவர் இலாகா இல்லாத அமைச்சராகப் பணி புரிந்தார் என்பதையும் குறிப்பிடுகிறார். இப்படி பல அமைச்சர்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் பதவியில் இருக்கிறார்கள். ஆனால், செந்தில் பாலாஜியை மட்டும் பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்று சொல்வதே பெரிய முரணாக இருக்கிறது. இதைப் பார்க்கும் போது அவர்களுக்கு ஒரு நீதி இவர்களுக்கு ஒரு நீதியா?

அமித்ஷா பதவி குறித்தும் எழுதிய முதல்வரின் கடிதத்தைபார்த்த ஆளுநருக்கு நிறைய சட்ட நிபுணர்கள், செந்தில் பாலாஜியைபதவியில் இருந்து விலக்குவதற்கு ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த விவகாரம் தேசிய அளவிற்கு சென்றுவிட்டது. அதனால் அதிக பிரச்சனை ஏற்படும் என்று கூறிய பிறகு உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவுறுத்தலின் படி அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவியில் இருந்து விலக்குவதை தற்காலிமாக தள்ளி வைக்கிறேன் என்று அறிவிப்பு வெளியிடுகிறார் ஆளுநர்.

மேலும் ஆளுநர் எழுதிய கடிதத்தில், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக இந்த அரசாங்கம் நடந்து கொண்டிருக்கின்றது என்று குறிப்பிடுகிறார். இதை வைத்தே அரசியலமைப்பு சட்டம் 356இன் விதிகளின் படி ஆளுநர் இந்த அரசை கவிழ்த்துவிட முடியும்என்ற நோக்கத்தில் எழுதுகிறார். ஆக, இவ்வளவு செய்தும் அவரால் வெற்றி பெற முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. ஒரு தலைமை பொறுப்பில் இருந்து கொண்டு இந்த அரசாங்கத்தை தவறான வழியில் நடத்தி செல்கிறார் ஆளுநர். மேலும் ஒரு உயரிய பொறுப்பை தவறாக பயன்படுத்துவது என்பது மிகப்பெரிய தவறு.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோர் வீட்டில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை இன்னும் நிலுவையில் வைத்திருக்கிறார் ஆளுநர். செந்தில் பாலாஜியை உடனடியாக பதவியில் விலக்க வேண்டும் என்று கூறிவிட்டு தனக்கு சாதகமான நபர்கள் மீது எந்த வித விசாரணையும்நடத்தாமல் சனாதனம், அரசியல் போன்று மற்றவர்களுக்கு உபதேசம் நடத்துவது மிகவும் அபத்தமாக இருக்கிறது. மேலும், தமிழக முதல்வரும் விஜயபாஸ்கர் மீது வழக்கு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்தும் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றுமுன்னதாகவே வெளிப்படையாக கூறியிருந்தால் இந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் பிரமாதமான வாக்குவாதங்களாக அமைந்திருக்கும்.

செந்தில் பாலாஜி விவகாரத்தில் பதவி விலக்குவதை தள்ளி வைக்கிறேன் என்று கூறுகிறார் ஆளுநர். மீண்டும் இந்த விவகாரத்தை ஆளுநர் வெளிப்படுத்துவாரா?

அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநர் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியை விலக்க முடியாது. இது ஆளுநர் செய்யும் அரசியல். மேலும் அண்ணாமலை சமீபத்தில்நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது மிக மோசமாக பேசி வருகிறார். அரசியல் ரீதியாக முதல்வர் பெயரை குறிப்பிடலாம். ஆனால் இதற்கு சம்பந்தமே இல்லாத முதல்வரின் மனைவியை பற்றி பேசி வருகிறார். இதே போல் பாஜக கட்சியை சார்ந்த காயத்ரி ரகுராமை மிகவும் தரக்குறைவாக பேசினார். அது மட்டுமல்லாமல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தார் அண்ணாமலை. இதனால், அதிமுகவில் உள்ள கடைத்தொண்டர்கள் வரை அனைவரும் அண்ணாமலை மீது கடும் கோபத்தோடு இருக்கிறார்கள். அதனால், அதிமுகவில் இருக்கும் ஒரு தொண்டர் கூட பாஜகவுக்கு ஆதரவு தரமாட்டார்கள் என்பதுதான் உண்மை.

Annamalai ramasubramanian
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe