Skip to main content

தேர்தல் நேரத்தில் ராமர்கோயில்!

Published on 02/02/2019 | Edited on 04/03/2019

தேர்தல் நெருங்கும் போதெல்லாம் ராமரைத் தூக்கிக்கொண்டு பிரச்சாரத்துக்கு வருவது பா.ஜ.க.வின் வாடிக்கையாகிவிட்டது.

வாஜ்பாய் தலைமையில் கூட்டணி ஆட்சி என்றார்கள். இந்தமுறை "தனி மெஜாரிட்டியுடன் ஏன் கோவில் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை' என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும், வி.எச்.பி. அமைப்பின் சாமியார்களும், சிவசேனாவும் குற்றம்சாட்டுகின்றன.

babarmajidbabarmajid


அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவது என்பது பா.ஜ.க. மற்றும் காவிப் பரிவாரங்களின் நோக்கம். ஆனால், இந்த விவகாரத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சம்பந்தமான வழக்கு, அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு என்று உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து தடைக்கல்லாக நீடிக்கிறது.

2014 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் மோடி கொடுத்த வாக்குறுதியில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்பதும் ஒன்று. ஆனால், பிரதமரானவுடன் அயோத்தி விவகாரத்தை காங்கிரஸ் கட்சிதான் நீதிமன்றம் மூலமாக இழுத்தடிக்கிறது என்றும், நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நீதிமன்ற நடவடிக்கை மூலமாகத்தான் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும் என்றும் கூறிவிட்டார்.

இந்நிலையில்தான், கடந்தமுறை உ.பி.யில் 70 மக்களவைத் தொகுதிகளை வென்ற பா.ஜ.க., இந்தமுறை ஜீரோவாகும் என்ற கருத்துக் கணிப்பு வெளியாகி பா.ஜ.க.வை பதற்றமடையச் செய்துள்ளது. ஏற்கெனவே, இந்தி பேசும் மைய மாநிலங்களான மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் ஏற்பட்ட தோல்விக்கு ராமர் கோவில் பிரச்சனைதான் காரணம் என்று பா.ஜ.க. தலைவர்கள் கருதுகிறார்கள்.

இந்நிலையில், 2019 தேர்தலில் படுதோல்வி என்ற நிலையைத் தவிர்க்க ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஜனவரி 29-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

"பாபர் மசூதியைச் சுற்றிலும் அரசு கையகப்படுத்திய, சர்ச்சைக்கு அப்பாற்பட்ட 67 ஏக்கர் நிலத்தை சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும்'’என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்குமா? என்கிற கேள்வி எழும் அதேநேரத்தில், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு குறித்து அறிந்துகொள்வது நல்லது.

ராமர் அயோத்தியில்தான் பிறந்தார். அந்த இடத்தில் இருந்த கோவிலை இடித்துவிட்டு அங்கு பாபரை அடக்கம் செய்து பாபர் மஸ்ஜித்தை கட்டிவிட்டார்கள் என்று ஆர்.எஸ்.எஸ்.சும் அதன் பரிவாரங்களும் பிரச்சாரம் செய்தன. சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவோம் என்று தேர்தலில் பிரச்சாரம் செய்தனர். அதன் ஒரு கட்டமாகத்தான், 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி இந்திய மக்கள் கண்ணெதிரே பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கினர்.

அதையடுத்து, பாபர் மசூதி மற்றும் அதைச்சுற்றி அமைந்துள்ள 67 ஏக்கர் நிலத்தை சர்ச்சைக்குரிய இடமாக மத்திய அரசு கையகப்படுத்தியது. இந்த 67 ஏக்கரில் 42 ஏக்கர் நிலம் ராம்ஜென்மபூமி நியாஸ் என்ற வி.எச்.பி.யின் அறக்கட்டளையின் குத்தகை நிலம் ஆகும். அதுபோக மசூதி இடமான 2.77 ஏக்கரிலும் இந்த அறக்கட்டளைக்கு 1 ஏக்கர் சொந்தம் என்று கூறப்படுகிறது.

"பாபர் மசூதி அமைந்துள்ள 2.77 ஏக்கர் நிலத்தை மசூதி வளாகத்தில் வைக்கப்பட்ட ராமர் சிலைக்கும், சன்னி வக்ஃப்போர்டுக்கும், நிர்மோஹி அகாராவுக்கும் சொந்தம்' என அலகாபாத் உயர்நீதிமன்றம் ஏற்கெனவே பிரித்திருக்கிறது. ஆனால் மத்திய அரசு இப்போது, "பாபர் மசூதி அமைந்துள்ள 0.313 ஏக்கர் நிலம்தான் சர்ச்சைக்குரிய இடம்' என்று குறிப்பிட்டு மனு செய்துள்ளது.
babarmajid
இந்த நிலம் தொடர்பான வழக்கில் 1993-ஆம் ஆண்டு டாக்டர் எம்.இஸ்மாயில் ஃபரூக்கியும் மற்றவர்களும் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் சர்ச்சைக்குரிய நிலம் என்ற நிலை தொடரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 1996-ஆம் ஆண்டு தங்களிடம் கைப்பற்றிய நிலத்தை கோவில் கட்ட தரும்படி ராம்ஜென்மபூமி நியாஸ் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு நிலத்தை தர மறுத்துவிட்டது. 2004 மற்றும் 2011-ஆம் ஆண்டு தீர்ப்புகளிலும் உச்சநீதிமன்றம் இதை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில்தான் சர்ச்சைக்குரிய நிலத்தை உரிமையாளர்களான ராமஜென்ம பூமி நியாஸ் உள்ளிட்டோருக்கு வழங்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தனது முடிவுக்கு தகுந்தபடி உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்புகளில் உரிய மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது.

இதுகுறித்து பேசிய மனிதநேய ஜனநாயகக் கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, “""சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக மக்களவைத் தேர்தல் முடியும்வரை உச்சநீதிமன்றம் எந்த முடிவுக்கும் வரக்கூடாது''’என்றார்.

"2002-ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசின் கடைசி காலகட்டத்தில் வி.எச்.பி. சார்பில் நிலத்தைக் கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டது. நிலத்தை வழங்க ஏற்பாடு செய்யும்படி அன்றைய சட்ட அமைச்சர் அருண்ஜெட்லியிடம், வாஜ்பாய் கூறினார். இன்றைய மத்திய அரசின் நாடகத்திற்கும் அதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. தனது தேர்தல் ஆதாயத்துக்காக இந்துக்களையும் ஏமாற்ற பா.ஜ.க. தயங்காது' என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.


 

Next Story

முடிவுக்கு வந்த அயோத்தியா மசூதி நில சர்ச்சை!

Published on 09/02/2021 | Edited on 09/02/2021

 

ayodhya masjid

 

பாபர் மசூதி இருந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அந்த நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதியளித்து உத்தரவிட்டது. இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கும்படியும் ஆணையிட்டது. இதனையடுத்து ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டடப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி மசூதிக்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. தற்போது மசூதி கட்டுவதற்கான பணிகள் நடந்துவருகின்றன. கட்டப்படவிருக்கும் மசூதியின் மாதிரி வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அயோத்தியில் மசூதி கட்ட ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு உரிமைக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

டெல்லியைச் சேர்ந்த சகோதரிகளான ராணி பலூஜா மற்றும் ராம ராணி பஞ்சாபி ஆகியோர், அயோத்தியில் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட நிலம் தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று (08.02.2021) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான உத்தரப்பிரதேச அரசின் தலைமை வழக்கறிஞர், வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள நில எண்களும், மசூதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நில எண்களும் வேறானவை எனத் தெரிவித்தார். மனுதாரர்கள் தரப்பும் வழக்கை வாபஸ் பெற விரும்புவதாக தெரிவித்தது.

 

இதனையடுத்து, தகவல்களை சரிபார்க்காமல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதைக் கண்டித்த நீதிபதிகள், வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

Next Story

மசூதிக்கான நிலம் யாருக்குச் சொந்தம்? - அயோத்தியில் மீண்டும் நில சர்ச்சை!

Published on 04/02/2021 | Edited on 04/02/2021

 

ayodhya masjid

 

பாபர் மசூதி இருந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அந்த நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதியளித்து உத்தரவிட்டது. இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கும்படியும் ஆணையிட்டது. இதனையடுத்து ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டடப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி மசூதிக்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. தற்போது மசூதி கட்டுவதற்கான பணிகள் நடந்துவருகின்றன. கட்டப்படவிருக்கும் மசூதியின் மாதிரி வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், அயோத்தியில் மசூதி கட்ட ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு உரிமைகோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

 

டெல்லியைச் சேர்ந்த சகோதரிகளான ராணி பலூஜா மற்றும் ராம ராணி பஞ்சாபி ஆகியோர், அயோத்தியில் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட நிலம் தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், எங்களது தந்தை 1947 இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது அயோத்தியில் வந்து தங்கினார். அப்போது அவருக்கு 28 ஏக்கர் நிலம் ஐந்து வருடங்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஐந்து வருடங்களுக்குப் பிறகும், அந்த நிலம் தங்களது தந்தையிடமே இருந்தது. பின்னர் நில வருவாய்ப் பதிவுகளில், தங்களது தந்தையின் பெயர் சேர்க்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் அந்த மனுவில், மீண்டும் எங்களது தந்தையின் பெயர் நில வருவாய்ப் பதிவுகளிலிருந்து நீக்கப்பட்டது. மேல்முறையீடு செய்த பிறகு அவரது பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டது. தற்போது மீண்டும் அதிகாரிகளால் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராகச் செய்யப்பட்ட மேல்முறையீடு அதிகாரிகளின் முன்னிலையில் உள்ளது. ஆனால், அதிகாரிகள் அதைப் பரிசீலிக்காமல் எங்களின் 28 ஏக்கர் நிலத்தில் இருந்து ஐந்து ஏக்கரை மசூதி கட்ட ஒதுக்கியுள்ளனர். எங்களின், மேல்முறையீட்டின் மீது முடிவெடுக்காமல் மசூதிக்கு நிலம் வழங்குவதற்குத் தடை விதிக்கவேண்டும் எனக் கோரியுள்ளனர். இந்த மனு வரும் 8 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.