Advertisment

“ராமநாதபுரம் வறட்சியான பகுதி அல்ல; வணிகத்தால் செழித்த பகுதி..” - தொல்லியல் ஆய்வாளர் பேச்சு 

“Ramanathapuram is not a dry region; An area that thrived on trade..” - Archaeologist speaking

Advertisment

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியர் முனைவர் சு. தாமரைப்பாண்டியன் ஒருங்கிணைப்பில் கோடைக்காலச் சுவடியியல் மற்றும் கல்வெட்டியல் பயிற்சிப் பட்டறை 28.06.2023 முதல் நடைபெற்று வருகிறது. இது 18.07.2023 வரை நடைபெறும். இதில் கல்வெட்டியல் பயிற்சியில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ‘ராமநாதபுரம் வணிகக்குழு கல்வெட்டுகள்’ எனும் தலைப்பில் பயிற்றுரை வழங்கி பேசியதாவது,

ராமநாதபுரத்தில் அஞ்சு வண்ணத்தார், ஐநூற்றுவர், நானாதேசி, பதினெண் விசயத்தார் உள்ளிட்ட பல வெளிநாட்டு, உள்நாட்டு வணிகக் குழுக்கள் இருந்துள்ளனர். ராமநாதபுரம் வறட்சியான பகுதி அல்ல. முல்லை, நெய்தல் நிலப் பகுதிகளைக் கொண்ட வளமான பகுதி. முற்காலப் பாண்டியர்கள் வைகை நதியை அடிப்படையாக வைத்து நீர்ப்பாசனக் கால்வாய்களையும், கண்மாய்களையும் உருவாக்கி மருத நிலமாகக் கட்டமைத்தனர். இதில் ராசசிம்மமங்கலம், ராமநாதபுரம், களரி, செழுவனூர் போன்ற பெரிய கண்மாய்களையும் வைகையில் இருந்து கால்வாய்களையும் உருவாக்கினர். இதனால் மழைக் காலத்தில் பெய்யும் நீரை முழுமையாகத்தேக்கி வைத்து விவசாயம் செழிக்கச் செய்தனர்.

தமிழ்நாட்டின் கால்பகுதி கடற்கரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளதால் இயற்கை துறைமுகங்களும் உப்பங்கழிகளும் நிறைந்த இங்கு கி.பி.9-ம் நூற்றாண்டு முதல் கி.பி.16-ம் நூற்றாண்டு வரை திசையாயிரத்து ஐந்நூற்றுவர், நானாதேசி, அஞ்சுவண்ணம், மணிக்கிராமம், பதிணென் விஷயத்தார் உள்ளிட்ட தெற்காசியா முழுவதும் இயங்கிய வணிகக் குழுக்கள் ராமநாதபுரம் பகுதியில் வணிகம் செய்துள்ளனர்.

Advertisment

வணிகக் குழுக்கள், பௌத்தம், சமணம் ஆகியவற்றின் காரணமாக இலங்கைக்கும் ராமநாதபுரத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகமான புத்த மத எச்சங்கள் இங்குதான் காணப்படுகின்றன. அஞ்சுவண்ணம் எனும் இஸ்லாமியர் தலைமையிலான வணிகக் குழுவினர் தீர்த்தாண்டதானம் கோயில் மண்டபத்தை பராமரித்த கல்வெட்டு செய்தி உள்ளது. இன்று அம்மண்டபமும் கல்வெட்டும் அழிந்துள்ளன. தொண்டியும், பெரியபட்டினமும் பிற்காலப் பாண்டியர் காலத்தில் பவித்திரமாணிக்கப்பட்டினம் என அழைக்கப்பட்டுள்ளன. இது நவரத்தின வணிகர்களால் இப்பெயர் பெற்றுள்ளன. தேவிபட்டினத்தில் உள்ள சிவன் கோயிலில் நானாதேசி வாசலும், திருஞானசம்மந்தன் தளம் என்ற வணிகர் தளமும் இருந்துள்ளது.

தனுஷ்கோடியில் கிடைத்த வட்டெழுத்து கல்வெட்டில் கி.பி.8-ம் நூற்றாண்டில் திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர், வளஞ்சியர், முன்னூற்றுவர் ஆகியோர் ராமேசுவரத்தில் செய்த தர்மத்தைப் பற்றிச் சொல்கிறது. வாலாந்தரவையில் கிடைத்த கல்வெட்டு, பெரியபட்டினத்தில் யூதர்களுக்கு ஐந்நூற்றுவர் கட்டிய சூதப்பள்ளியான ஐந்நூற்றுவன் பெரும்பள்ளியைக் குறிப்பிடுகிறது. கமுதியில் கிடைத்த 10-ம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டு ஐந்நூற்றுவர் எனும் வணிகக் குழுவின் புகழ் பாடுகிறது.

திருவாடானைப் பகுதியில் அறுநூற்றுவர், தனுஷ்கோடி பகுதியில் முன்னூற்றுவர், சாயல்குடி பகுதியில் முனைவீரர் ஆகிய வணிகக்குழு பாதுகாவல் வீரர்கள் இருந்ததை கல்வெட்டுகள் சுட்டுகின்றன. உப்பங்கழிகளால் உருவான இயற்கைத் துறைமுகங்கள், நெல் விளைச்சல், பெரிய ஆறுகள் குறுக்கிடாமை, இயற்கைத் தடைகள் இல்லாமை, அதிகளவிலான வணிகப் பாதைகள், பாதுகாப்பு ஆகிய பல காரணங்களால் 2000 ஆண்டுகளாக வெளிநாட்டு, உள்நாட்டு வணிகர் குழுக்கள் ராமநாதபுரம் பகுதிக்கு வந்திருக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

Ramanathapuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe