Skip to main content

ஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்! 

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

"பா.ம.க.வும் ரஜினியும் கூட்டணி சேர வாய்ப்பு இருக்கிறது; அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்திருக்கிறது' என தமிழருவி மணியன் வீசிய குண்டு அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்திய சூழலில், சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினி தொடர்பான கேள்விகளுக்கு பூடகமாகவே பதிலளித்தார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். அவருடைய பதிலால் அதிர்ச்சியடைந்திருக்கிறது அ.தி.மு.க. தலைமை.

"சினிமாக்காரர்களை கூத்தாடிகள்' என விமர்சிப்பவர் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். குறிப்பாக, ரஜினியின் "பாபா' பட விவகாரத்தின்போது ரஜினிக்கு எதிராக முன்வைத்த விமர்சனம் இது. அந்த விமர்சனத்தின் மீது அழுத்தமான நம்பிக்கையை ஆழமாக வைத்திருக்கும் ராமதாஸ், தற்போது ரஜினிக்கு எதிராக எந்த விமர்சனத்தையும் வைப்பதில்லை.

 

rajini



"பத்திரிகையாளர்கள் கேட்கும் எப்படிப்பட்ட கேள்விகளுக்கும் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என நேரடியாகவே பதில் சொல்லிப் பழக்கப்பட்ட ராமதாசிடம் ஏற்பட்டிருக்கும் அண்மைக்கால மாற்றங்களுக்கு ரஜினியுடனான அன்புமணியின் நெருக்கமும் கூட்டணி முயற்சிகளும்தான் காரணம்' என்கிறார்கள் பா.ம.க.வினர்.

ராமதாஸ், ரஜினி, எடப்பாடியைச் சுற்றி அரசியலில் என்ன நடக்கிறது என மூன்று தரப்பிலும் விசாரித்தோம். பா.ம.க. வின் உள்வட்டங்களில் விசாரித்தபோது, ""நேரடி அரசியலுக்கு ரஜினி வராமல் போனால் அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும்தான் சட்டமன்றத் தேர்தலில் பிரதானமாக களத்தில் நிற்கும். அப்படிப்பட்ட சூழல் உருவானால் ஆட்சியை தி.மு.க. கைப்பற்ற வாய்ப்பு உண்டு என சில கணக்குகளை ராமதாசிடம் சிலர் சொல்லியிருக்கிறார்கள்.

 

pmk



தி.மு.க.வை தனது எதிரியாக நினைக்கும் ராமதாஸ், என்ன விலை கொடுத்தாலும் மு.க.ஸ்டாலின் முதல்வராவதை தடுக்க வேண்டும் என்பதில் உறுதி காட்டி வருகிறார். அதற்குப் பல கணக்குகளும் காரணங்களும் இருக்கின்றன. குறிப்பாக, ஆட்சி அதிகாரத்தில் இந்தமுறை பா.ம.க. பங்குபெறாமல் போனால் அப்படி ஒரு வாய்ப்பு எப்போது வாய்க்கும் என தெரியாது. அதனாலேயே, அதிகாரத்தை கைப்பற்ற பல்வேறு காய்களை நகர்த்தியபடி இருக்கிறது பா.ம.க. தலைமை. அதில் ஒன்றுதான் ரஜினி.

அரசியலுக்கு ரஜினி வருவது உறுதி என ராமதாசுக்கும் அன்புமணிக்கும் சொல்லப்பட்டுள்ளது. ரஜினியுடன் கூட்டணி வைப்பதை விரும்பும் அன்புமணி, பா.ம.க. -ரஜினி -பா.ஜ.க. என ஒரு கூட்டணியை உருவாக்கத் திட்டமிடுகிறார். அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ரஜினியை சந்தித்து விவாதித்திருக்கிறார் அன்புமணி. அந்த வகையில்தான், ரஜினிக்கு எதிரான விமர்சனங்களை ராமதாஸ் தவிர்ப்பதுடன் பா.ம.க. தரப்பிலிருந்து பாசிட்டிவ் சிக்னலும் ரகசியமாக ரஜினிக்கு கொடுக்கப்பட்டு வருகிறது'' என்கிறார்கள் நம்மிடம் பேசிய பா.ம.க.வின் வடதமிழக மூத்த நிர்வாகிகள்.

 

pmk



ரஜினிக்கு நெருக்கமான நட்பு வட்டாரங்களில் விசாரித்தபோது,’ சென்னை -கேளம்பாக்கத்திலுள்ள ரஜினியின் பண்ணை வீட்டில் அவரை சந்தித்திருக்கிறார் அன்புமணி. அந்த சந்திப்பில், "நேரடி அரசியலுக்கு நீங்கள் வருவதன் மூலம் தமிழகத்தில் ஒரு மாற்றம் நடக்கும். நாங்களும் நீங்களும் கூட்டணியாக இணைந்தால் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை தர முடியும்' என அன்புமணி சொல்ல, அதனை ஆமோதித்த ரஜினி, "அய்யா ராமதாசின் போராட்டங்களை நிறைய படித்திருக்கிறேன். சமூக நீதிக்கான போராட்டங்களில் அவரது பங்களிப்பு பிரமிக்கத்தக்கது. அவரை விட்டால் இப்போது தமிழகத்தில் மூத்த சமூகப் போராளி யாருமில்லை. தமிழக அரசியலில் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அது பற்றி நிறைய விவாதிக்கலாம்' என சொல்லியிருக்கிறார்.

இந்த சந்திப்பையடுத்து ரஜினி-அன்புமணி யின் நட்பு இறுகியிருக்கிறது. பா.ம.க.வுடன் கூட்டணி வைப்பதில் ரஜினியும் விருப்ப மாகத்தான் இருக்கிறார். காரணம், பா.ஜ.க.வின் செயல் திட்டங்களுக்கேற்ப தி.மு.க.வை எதிரியாக கருதும் ரஜினி, தி.மு.க.வுக்கு எதிராக அரசியல் செய்யும் பெரும்பான்மை சமூகத்தை உள்ளடக்கிய பா.ம.க.வுடன் கூட்டணி வைப்பது தனக்கு சாதகமாக இருக்கும் என கணக்குப் போடு வதுதான். இதற்கான பல புள்ளிவிபரங்கள் ரஜினியிடம் தரப்பட்டிருக்கின்றன'' என்கிறார்கள் அழுத்தமாக.


இந்த நிலையில், ரஜினி-பா.ம.க. உறவு குறித்து விசாரிக்க உளவுத்துறைக்கு உத்தர விட்டிருந்தார் முதல்வர் எடப்பாடி. உளவுத் துறை உறுதி செய்தது. இது குறித்து தனது தரப்பிலிருந்து ராமதாசிடம் பேச, "அ.தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறோம். நமது கூட்டணி தொடரும். பா.ம.க.வை சந்தேகப் பட வேண்டாம்' என தெரிவித்திருக்கிறார். இருப்பினும் பா.ம.க. மீதான தனது சந்தேகத்தை எடப்பாடி விலக்கிக்கொள்ள வில்லை'' என்கிறார்கள் மூத்த அமைச்சர் களுக்கு நெருக்கமானவர்கள்.


பா.ஜ.க.வின் அரசியல் ஆலோசகர்களி டம் இது குறித்து விசாரித்தபோது, ""பா.ம.க.வில் அதிகரித்துவரும் அதிருப்தி யாளர்கள் அங்கிருந்து வெளியேற தருணம் பார்க்கிறார்கள். இத்தகைய அதிருப்தியாளர் கள் அ.தி.மு.க., தி.மு.க.வுக்குள் போக விரும்பு வதில்லை. ரஜினி போன்ற மாஸ் ஹீரோக்கள் கட்சி ஆரம்பிக்கும்போது அங்கு சென்றால் நல்ல பதவிகள் வாங்க முடியும் என எதிர் பார்த்திருக்கிறார்கள். அதனைத் தடுப்பதற்காக வும், அ.தி.மு.க.விடம் சீட் சேரிங்கை அதிகரித்துக்கொள்ளவும்தான் ரஜினியும் பா.ம.க.வும் நெருங்குவது போல தோற்றத்தை உருவாக்குகிறது பா.ம.க. தலைமை''‘என சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால், தி.மு.க.வை வீழ்த்த ரஜினியை வைத்து ஒரு மெகா கூட்டணியை உருவாக்க பலே பலே திட்டங்களைப் போடத் துவங்கியிருக்கிறது பா.ஜ.க.வின் தேசியத் தலைமை.

 

 

Next Story

அனைத்து அரசியல் கட்சிகளும் களமாடிய சிதம்பரம் தொகுதி; ஒரு பார்வை!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 view of Chidambaram Parliamentary Constituency

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தனி தொகுதியாகும். இந்த தொகுதியில் கடலூர் மாவட்டத்தில் இருந்து  சிதம்பரம். காட்டுமன்னார்கோவில்(தனி). புவனகிரி. அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம். அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. முதன் முதலில் 1957 ஆம் ஆண்டு பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சியை சார்ந்த கனகசபைப்பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த தொகுதியில் 6  முறை காங்கிரஸ் கட்சியும், 4  முறை திமுக,  2 முறை அதிமுக, 3 முறை பாமக, 2 முறை விசிக சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி தொகுதி காவிரி டெல்டா பகுதியின் கடைமடையாக உள்ளது. இதனால் இங்கு பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாய கூலி தொழிலை நம்பியே பொதுமக்கள் அதிகளவில் உள்ளனர். முக்கிய பிரதான சின்னங்களாக சிதம்பர நடராஜர் கோயில், பிச்சவரம் சதுப்பு நிலக்காடுகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், புவனகிரி சட்டமன்ற தொகுதியில் பெட்ரோல் எடுக்கப்படுகிறது, ராகவேந்திரர் மற்றும் ராமலிங்க அடிகளார் பிறந்த இடமாகவும் உள்ளது.  காட்டுமன்னார்கோயில் தொகுதியில் தமிழகத்தின்  மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியால் 47 ஆயிரம்  ஏக்கர் விலை நிலங்கள் பாசனம் வசதி பெறுகின்றன. சென்னை குடிநீருக்கு இதன் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

 view of Chidambaram Parliamentary Constituency

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழன் கட்டிய  கங்கைகொண்ட சோழபுரம் கோயில், அரியலூர் தொகுதியில் கலியுக வரதராஜ பெருமாள் கோயில், கரைவெட்டி பறைவைகள் சரணாலயம் உள்ளது. அரியலூர் ஜெயங்கொண்டம் பகுதியில் ஏராளமான சுண்ணாம்பு படிவுகள்  உள்ளதால் சிமெண்ட் தொழிற்சாலைகள் மாவட்டத்தில் அமைந்துள்ளன.  ஜெயங்கொண்டம் மற்றும் அருகில் உள்ள இடங்களில் பழுப்பு நிலக்கரி கிடைப்பது இயற்கையாக உள்ளது.

இந்தப் பகுதியில் சாதாரண சிமெண்ட் முதல் தரம் மிகுந்த சிமெண்ட் வரை சுண்ணாம்பு கற்கள் மூலம் சிமெண்ட் ஆலைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது.  தீ களிமண், தரையோடுகள், சுடு மண் குழாய்கள், செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அரியலூர் கனிம வளங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. குன்னம் சட்டமன்ற தொகுதி பெரும்பாலும் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. குன்னம் பகுதிகளில் பருத்தி, மக்காச்சோளம், மஞ்சள், முந்திரி, உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன.  கல் குவாரிகளும் அதிக அளவு செயல்பட்டு வருகிறது.  தமிழ் தாத்தா உ.வே சாமிநாத ஐயர் தனது பெற்றோருடன் தங்கி கல்வி பயின்றதும் இந்த தொகுதியில் தான். அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சொந்த ஊரான அங்கனூர் இந்த தொகுதியில் தான் உள்ளது.

இப்படிப்பட்ட சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் பெண் வாக்காளர்கள் பெரிய வித்தியாசம் இல்லாமல் உள்ளனர். மாற்று பாலினத்தவரும் 100-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.  தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 2-வது முறையாக இந்த தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

இந்த தொகுதிக்கு 18-வது மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் போட்டியிடுவதால், இது நட்சத்திரத் தொகுதியாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் வரும் தேர்தலிலும் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் அவரே போட்டியிடுகிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் தொகுதியில் அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story

“கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை மதிக்கக் கூடிய ஒரே இயக்கம் திமுக தான்” - பாலகிருஷ்ணன்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 DMK is the only movement that can respect the candidates of the coalition party says Balakrishnan

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி சார்பாக போட்டியிடும் சி.பி.எம் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்யும் கூட்டம், மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் மாளிகையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளரும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சக்கரபாணி, சி.பி.எம்.கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, கனகராஜ், பாண்டி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் வரவேற்று பேசினார்.

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் சிபிஎம். கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அறிமுகம் செய்துவிட்டு அவரை வாழ்த்தி பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது வரலாறு காணாத வெற்றியை பெற்றோம். அதுபோல இம்முறையும் மாபெரும் வெற்றி பெறவேண்டும். கூட்டணி தர்மத்தை மதிக்க கூடிய கலைஞர் வழியில் வந்த கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் வழியில், திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் சிபிஎம் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை மாபெரும் வெற்றிபெற செய்வதன் மூலம் நாம் நம் கழகத்தலைவரின் பெருமைக்கு எடுத்துக்காட்டாக தேர்தல் பணியாற்ற வேண்டும். நாட்கள் குறைவாக இருக்கின்றன. கூட்டணி கட்சியின் சின்னத்தை ஒவ்வொரு இல்லம்தோறும் சென்றடையும் வண்ணம் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும். இங்கு போட்டியிடும் வேட்பாளரின் வெற்றி இந்திய அளவில் பேசும்படி செய்யும் வண்ணம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும்” என கூறினார்.

அடுத்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, “திண்டுக்கல்லில் சிபிஎம் கட்சி சார்பாக சச்சிதானந்தம் போட்டியிடவில்லை. தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்தான் போட்டியிடுகிறார். அதுபோல் அண்ணன் அமைச்சர் ஐ.பெரியசாமி தான் போட்டியிடுகிறார் என நினைத்து நீங்கள் ஒவ்வொருவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும். நாட்கள் குறைவாகத்தான் இருக்கின்றன. சின்னம் வரைவதில் முக்கியமில்லை. அந்த சின்னத்தை மக்கள் மனதில் நிறுத்துவதில்தான் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். எப்படி ஸ்டாலின குரல் திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து இல்லங்களிலும் ஒலித்ததோ, அதுபோல சிபிஎம் கட்சியின் சின்னமும் அனைத்து இல்லங்களிலும் தெரியும் வண்ணம் தேர்தல் பணியாற்ற வேண்டும். மாபெரும் வெற்றியை நாம் நமது முதல்வருக்கு தெரிவிக்கும் வண்ணம் திமுக நிர்வாகிகள் இன்றே களப்பணியை தொடங்க வேண்டும்” என்று கூறினார்.

 DMK is the only movement that can respect the candidates of the coalition party says Balakrishnan

இறுதியாக சிபிஎம் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசும் போது, “கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை மதிக்கக்கூடிய ஒரே இயக்கம் திமுக. அதற்கு காரணம் எங்கள் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சச்சிதானந்தம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு கேட்க தொடங்கினால் காலநேரம் செலவாகும் என்பதை கருத்தில் கொண்டு தேர்தலில் வெற்றியை இலக்காக செயல்பட வைக்க வேண்டும் என்ற நோக்கில் அமைச்சர் அண்ணன் ஐ.பெரியசாமி அவர்களும், உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்களும் குறுகிய காலத்தில் இந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தின் மூலம், திமுக நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்துவைத்திருப்பது அவர்களின் தேர்தல் பணியின் சுறுசுறுப்பை எடுத்துக்காட்டுகிறது. திண்டுக்கல்லில் சிபிஎம் வேட்பாளர் பெறும் வெற்றி இந்திய கூட்டணியை ஆட்சி பீடத்தில் அமர வைக்கும் வெற்றியாக இருக்கும்.

தமிழக ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார். உச்சநீதிமன்றமே பொன்முடி தண்டனையை நிறுத்தி வைத்தபோது, ஆளுநர் ஏன் பதவி பிரமாணம் செய்து வைக்காமல் இருக்கிறார் என்றால், அதற்கு காரணம் மத்தியில் ஆளும் மோடி அரசின் ஜனநாயக விரோதப் போக்கே. இங்கு போட்டியிடும் வேட்பாளரின் வெற்றி தமிழக முதல்வருடைய வெற்றி. அமைச்சர் ஐ.பெரியசாமியின் வெற்றி;  அமைச்சர் சக்கரபாணியின் வெற்றி. பம்ரபமாய் சுழன்று தேர்தல் பணியாற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமாரின் வெற்றி என்று திமுக மற்றும் சிபிஎம். கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் நினைத்து வெற்றிக்காகப் பாடுபட வேண்டும்” என்று கூறினார்.